யோகி ஆதித்யநாத்துக்கு இனி நரேந்திர மோதி தேவையில்லையா?

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், ரஜ்னீஷ் குமார்
- பதவி, பிபிசி செய்தியாளர், டெல்லி
1998 ஆம் ஆண்டு கோரக்பூர் மக்களவைத் தொகுதியில் இருந்து யோகி ஆதித்யநாத் எம்.பியாக தேர்ந்தெடுக்கப்பட்டபோது அவருக்கு வயது 26 மட்டுமே.
யோகி இங்கிருந்து ஐந்து முறை எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்டார். 2017 மார்ச் மாதம் தனது 45வது வயதில் யோகி, மக்கள்தொகை அடிப்படையில் நாட்டின் மிகப்பெரிய மாநிலமான உத்தரப் பிரதேசத்தின் முதலமைச்சரானார்.
மறுபுறம், நரேந்திர மோதி 2001 இல் தனது 51வது வயதில் குஜராத்தின் முதலமைச்சரானார். 2002 இல் முதல் முறையாக ராஜ்கோட்-2 தொகுதியில் இருந்து எம்எல்ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
மோதியின் அரசியல் வாழ்க்கையில் இதுவே முதல் தேர்தல். இந்துத்துவ கொள்கையின் கொடிபிடிப்பவராக நரேந்திர மோதி அடையாளம் காணப்படுகிறார். இந்த விஷயத்தில் யோகியும் அதேபோலத்தான்.
குஜராத்தில் முஸ்லிம்களின் மக்கள் தொகை சுமார் 10%. ஆனால் அங்கு மோதி முதல்வராக இருந்தபோது, பாஜகவில் இருந்து எந்த முஸ்லிம் வேட்பாளருக்கும் டிக்கெட் கொடுக்கவில்லை.
உத்தரபிரதேசத்தில் முஸ்லிம்கள் 19% உள்ளனர். இங்கும் யோகி தலைமையிலான பாஜகவில் முஸ்லிம்கள் ஓரங்கட்டப்பட்டுள்ளனர்.
மோதியின் தலைமையில் குஜராத் இயங்கிய விதமும், உத்தரபிரதேசத்தை யோகி தனது தலைமையின் கீழ் நடத்தும் விதமும் பல கோணங்களில் ஒப்பிடப்படுகின்றன.
யோகி ஆட்சியில் உத்தரப் பிரதேசத்தில் போலீஸ் என்கவுன்டர் குறித்து கேள்விகள் எழுப்பப்படுவதைப் போலவே, குஜராத்திலும் மோதியின் ஆட்சியில் இதுபோன்ற பல சர்ச்சைக்குரிய போலீஸ் என்கவுன்டர்கள் நடந்தன, அது குறித்து நீதிமன்றம் மிகக் கடுமையான கருத்துக்களை வெளியிட்டன.
குஜராத்தில் 2002 மற்றும் 2007 க்கு இடையில் 17 சர்ச்சைக்குரிய என்கவுன்டர்கள் நடந்தன. இதில் காவல்துறை மற்றும் அரசின் பங்கு குறித்து கடுமையான கேள்விகள் எழுப்பப்பட்டன.
பத்திரிகையாளரும் எழுத்தாளருமான நீலாஞ்சன் முகோபாத்யாய் நரேந்திர மோதி குறித்து புத்தகம் ஒன்றை எழுதியுள்ளார். மோதி அரசியலின் நீட்டிப்புதான் யோகியின் அரசியல் என்று அவர் கூறுகிறார்.
மோதியின் குஜராத் vs யோகியின் உத்தரபிரதேசம்

பட மூலாதாரம், PMO
"மோதி முதல்வராக இருந்தபோது குஜராத்தில் இதுபோன்ற பல போலீஸ் என்கவுன்டர்கள் நடந்தன. அவை குறித்து கடுமையான கேள்விகள் எழுப்பப்பட்டன. ஆனால் விவகாரம் போலீஸ் என்கவுன்டர்கள் தொடர்பானது மட்டும் அல்ல. மோதியின் குஜராத் அமைச்சரவை அல்லது மோதியின் மத்திய அமைச்சரவையைப் பாருங்கள். இரண்டிலும் அவருக்கு சமமாக நிற்பவர்கள் முன்பும் இருந்ததில்லை. இப்போதும் இல்லை,” என்று நீலாஞ்சன் முகோபாத்யாய் கூறுகிறார்.
“அமித் ஷா நிச்சயமாக இரண்டு இடங்களிலும் சக்தி வாய்ந்தவராக இருக்கிறார். ஆனால் மோதியின் ஆளுமையின் எழுச்சியில் அவரது முக்கிய பங்கு இருந்ததே இதற்குக்காரணமாகும். அதேபோல உத்தரப்பிரதேசத்தின் யோகி அமைச்சரவையைப் பார்த்தால் எந்த அமைச்சரும் யோகிக்கு ஆலோசனை சொல்லமுடியாது. யோகிக்கு அமித் ஷா போன்ற ஒருவர் கூட கிடையாது.”
“2017 உத்தரபிரதேச சட்டப்பேரவை தேர்தல் வெற்றியின் பெருமை மோதியைத்தான் சேரும்.. 2022 தேர்தல் வெற்றியின் பெருமை, மோதி மற்றும் யோகி இருவரையும் சேரும். இப்போது யோகியும் மிகவும் பிரபலமான தலைவராகிவிட்டார். உத்தரபிரதேசத்தில் 2027ல் அடுத்த சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. 2027 பற்றி இப்போதே எதுவும் கூறுவது அவசரப்படுவதாக இருக்கும். ஆனால், தேர்தலில் வெற்றிபெற மோதி மீதான சார்பு குறைந்துவிட்டது என்று உறுதியாகச் சொல்லலாம்.” என்கிறார் அவர்.
“யோகி பிரபலமடைந்து வருவதால்தான் அவர் மோதியின் வாரிசாக பார்க்கப்படுகிறார் என்று நான் நினைக்கிறேன். கேசவ் மெளரியா, அரவிந்த் ஷர்மா, பிரஜேஷ் பாடக், தினேஷ் ஷர்மா ஆகியோரை யோகிக்கு இணையாக நிற்க வைக்க அமித்ஷா முயற்சித்தார். ஆனால் யோகி அதை நடக்கவிடவில்லை,” என்று நீலாஞ்சன் முகோபாத்யாய் குறிப்பிட்டுள்ளார்.
பிரவீன் நிஷாத், பிரயாக்ராஜ் சங்கமத்தில் படகு ஓட்டுகிறார். சமய பண்டிகை நாட்கள் தவிர தினமும் 700 முதல் 800 ரூபாய் வரை சம்பாதிக்கிறார். இவ்வளவு வருமானத்தில் குடும்பச் செலவுகளைச் சமாளிக்க முடிகிறதா என்று பிரவீனிடம் கேட்டோம்.
அதற்கு பதிலளித்த நிஷாத், “யோகி ஆட்சியில் எல்லாம் நன்றாக நடக்கிறது. உணவு தானியங்கள் இலவசமாக கிடைக்கிறது. குண்டர்கள் ஆதிக்கம் முடிவுக்கு வந்துள்ளது. எங்களுக்கு இப்போது எந்த பிரச்னையும் இல்லை. எல்லாம் சிறப்பாக நடக்கிறது,” என்றார்.
யோகியை பிடிக்குமா அல்லது மோதியை பிடிக்குமா என்று பிரவீன் நிஷாத்திடம் கேட்டபோது, "டெல்லியில் மோதியும், உ.பி.யில் யோகியும் சரியாக இருப்பார்கள்,” என்று அவர் பதிலளித்தார்.
சங்கமம் அருகே ஆட்டோவில் அமர்ந்து 18 வயது யோகேஷ் தனது மொபைலில் வீடியோ பார்த்துக்கொண்டிருந்தார்.
அந்த வீடியோவில், ஒரு மதகுரு கூறுகிறார்- "ஏ யோகி, நீங்கள் முஸ்லிம்களை பயமுறுத்த முயற்சி செய்கிறீர்களா, முஸ்லிம்கள் அல்லாஹ்வுக்கு மட்டுமே பயப்படுவார்கள்."
ஒருமுனைப்படுத்தும் அரசியல்

பட மூலாதாரம், Getty Images
இந்தக் காணொளிகளையெல்லாம் பார்த்துவிட்டு மனதில் என்ன பாதிப்பு ஏற்படுகிறது என்று யோகேஷிடம் கேட்டோம்.
“இது மிகவும் பாதிக்கிறது. ஆனால் உண்மையான விஷயம் என்னவென்றால், சண்டை சச்சரவு இருக்கக்கூடாது. யோகி ஆட்சிக்கு வந்த பிறகு குண்டர் கும்பல் முடிவுக்கு வந்துவிட்டது. முன்பெல்லாம் தைரியமாக துப்பாக்கி ஏந்தியபடி இன்ஸ்டாகிராமில் ஸ்டேட்டஸ் போடுவார்கள். இப்போது யாருக்கும் தைரியம் இல்லை.” என்று அவர் கூறினார்.
ஷாபாஸ் கான் அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞராக உள்ளார். உத்தரபிரதேசத்தில் உண்மையில் குண்டர்களின் ஆதிக்கம் குறைந்துவிட்டதா என்று அவரிடம் கேட்டோம்.
”யோகி முஸ்லிம் சமூகத்தில் மட்டுமே குண்டர்களை பார்க்கிறார் என்றும் முஸ்லிம்களுக்கு எதிராக அதிக கண்டிப்பானவராக நடக்கிறார் என்றும் முஸ்லிம்கள் நினைக்கிறார்கள். ஆனால் இந்தக்கண்டிப்பால் குண்டர்கள் மத்தியில் அச்சம் ஏற்பட்டுள்ளது. இந்த பயத்தின் பலனை சாதாரண இந்துக்கள் மற்றும் முஸ்லிம்கள் இருவருமே பெறுகிறார்கள்.,” என்று ஷாபாஸ் கூறினார்.
அதிக் அகமது மற்றும் அவரது சகோதரர் அஷ்ரஃப் அகமது கொல்லப்பட்ட பிறகு பெரும்பான்மை இந்துக்கள் மத்தியில் யோகியின் அந்தஸ்து அதிகரித்துள்ளதாக ஷாபாஸ் கான் கருதுகிறார்.
“உ.பி.யில் யோகியின் அந்தஸ்து பெரிதாகிவிட்டது. யோகிக்கு வாக்களிக்குமாறு மோதி சொல்வதற்கு இந்துக்கள் காத்திருக்க மாட்டார்கள். யோகிக்கு இனி உ.பி.யில் மோதி தேவையில்லை,” என்று அவர் குறிப்பிட்டார்.
அதிக் அகமது மற்றும் அவரது சகோதரர் அஷ்ரஃப் அகமது கொல்லப்பட்ட நான்கு நாட்களுக்குப் பிறகு பிரவீன் நிஷாத், யோகேஷ் மற்றும் ஷாபாஸ் இதைச் சொன்னார்கள்.
இது குறித்து கருத்துத்தெரிவித்த பிரவீன் மற்றும் யோகேஷ், "யோகி ஆட்சியில் குண்டர்களின் கதி இதுதான். குண்டர்கள் மத்தியில் அச்சம் இருப்பது நல்ல விஷயம்தான்,” என்றார்கள்..
மறுபுறம், கடுமையான வழக்குகள் இருந்தாலும்கூட யாரையும் இப்படி கொல்ல முடியாது என்று ஷாபாஸ் கான் கூறினார்.
யோகி இனி மோதியை சார்ந்து இல்லை

பட மூலாதாரம், ANI
சுனிதா ஆரோன் லக்னெளவில் உள்ள ஹிந்துஸ்தான் டைம்ஸின் ரெசிடென்ட் எடிட்டராக இருந்துள்ளார்.
"மோதிக்கு பிறகு பாஜகவில் யாரேனும் மிகவும் பிரபலமானவர் இருக்கிறார் என்றால் அது யோகி என்பது முற்றிலும் உண்மை. இனி யோகிக்கு மோதி தேவையில்லை என்று சொல்ல முடியாது. ஆனால் தேர்தலில் வெற்றி பெற யோகி மோதியை சார்ந்து இருக்கவில்லை. இப்போது மோதிக்கு யோகி தேவைப்படுவார். யோகி மக்கள் கும்பலைத் திரட்டுபவராக மாறிவிட்டார்,”என்று அவர் கூறுகிறார்.
“இந்த விவகாரத்தில் யோகிக்கு பாஜக நிறைய வாய்ப்பு கொடுத்துள்ளது. ஒவ்வொரு மாநிலத்திலும் யோகியின் பேரணிக்கு கோரிக்கை எழுந்துள்ளது. இதேபோன்ற கோரிக்கைதான் மோதிக்கும் இருந்தது. 2017 உத்தரப்பிரதேச சட்டப்பேரவைத்தேர்தல் மற்றும் 2019 மக்களவை தேர்தல்களில் பாஜகவின் முகமாக மோதி இருந்தார். ஆனால் 2022 தேர்தலில் யோகி அந்த முகமாக மாறினார். பின்னர் இரட்டை இஞ்சின் அரசு பற்றி பேசப்பட்டது,” என்று சுனிதா ஆரோன் குறிப்பிட்டார்.
பாஜக 10 ஆண்டுகள் ஆட்சியில் இருந்தபிறகும் மக்கள் மத்தியில் பிரபலமாக இருக்குமா என்பதைப் பொருத்தே யோகி மோதிக்கு போட்டியாக வருவாரா இல்லையா என்பது தெரியும் என்று சுனிதா ஆரோன் கூறுகிறார். 10 ஆண்டுகள் என்பது மிக நீண்ட காலம். தற்போது யோகி, மோதி இருவருமே பாஜகவின் பலம் என்று அவர் சொன்னார்.
2017ல் மோதிக்கு விருப்பம் இல்லாமல் இருந்திருந்தால் யோகி முதல்வராக வந்திருக்க மாட்டார் என்று பலர் கருதுகிறார்கள்.
ஆனால் மோதியின் தேர்வு மனோஜ் சின்ஹா என்றும் யோகி அல்ல என்றும் சொல்லப்படுகிறது.
மூத்த பத்திரிக்கையாளர் ஷரத் பிரதான் தனது ‘யோகி ஆதித்யநாத் ரிலிஜன், பொலிடிக்ஸ், அண்ட் பவர், தி அன்டோல்ட் ஸ்டோரி’ என்ற புத்தகத்தில் யாருடைய சம்மதத்துடன் யோகி முதலமைச்சரானார் என்ற கேள்விக்கு பதிலளித்துள்ளார்.
“மோதி மற்றும் அமித்ஷா இருவரின் ஒப்புதலுடன் இது நடந்தது என்று யோகியே கூறியிருந்தார். ஆனால், யோகி முதல்வர் ஆனதற்கு ஆர்எஸ்எஸ் தான் காரணம் என்றும் மோதி, ஷா அல்ல என்றும் ஆர்எஸ்எஸ் இன் மூத்த தலைவர் ஒருவர் கூறியுள்ளார். யோகி ஆதித்யநாத் முதல்வராக பதவியேற்றது மகாராஷ்டிராவில் தேவேந்திர ஃபட்னாவிஸ் மற்றும் ஹரியானாவில் மனோகர் லால் கட்டர் ஆகியோரிடமிருந்து மிகவும் வித்தியாசமானது. கட்டர் மற்றும் ஃபட்னாவிஸ் இருவருக்கும் வலுவான அரசியல் அடித்தளம் இல்லை.”என்று ஷரத் பிரதான் தனது புத்தகத்தில் எழுதியுள்ளார்.
உ.பி.யில் என்கவுன்டர்களை பொதுமக்கள் விரும்புகிறார்களா?

பட மூலாதாரம், Getty Images
அதிக் அகமது மற்றும் அஷ்ரஃப் அகமது கொல்லப்பட்ட பிறகு பிரயாக்ராஜ் மக்களின் எதிர்வினை கிட்டத்தட்ட மத அடிப்படையில் பிரிக்கப்பட்டுள்ளது.
குண்டர்களுக்கு எதிராக கடுமையாக இருப்பதில் எந்த பிரச்னையும் இருக்கக்கூடாது என்று இந்துக்கள் மத்தியில் பரவலான கருத்து நிலவுகிறது.
சாலையில் யாரையும் சுட்டுக் கொல்ல முடியாது என்றும் சட்டப்படி தண்டனை வழங்க வேண்டும் என்றும் முஸ்லிம்கள் கூறுகின்றனர்.
2017ஆம் ஆண்டு யோகி முதல்வராக பதவியேற்றதில் இருந்து உத்தரப் பிரதேசத்தில் இதுவரை 184 போலீஸ் என்கவுன்ட்டர்கள் நடந்துள்ளன.
இது தவிர டஜன் கணக்கான வீடுகளும் இடிக்கப்பட்டுள்ளன. சஞ்சய் பாரிக் உச்ச நீதிமன்றத்தில் வழக்கறிஞர். யோகி ஆட்சியில் நடந்த போலீஸ் என்கவுன்டர்கள் தொடர்பாக அவர் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனு இன்னும் நிலுவையில் உள்ளது.
உத்தரபிரதேசத்தில் இதுவரை நடந்த போலீஸ் என்கவுன்டர்களின் பட்டியல் தனக்கு கிடைத்துள்ளதாகவும், அதில் கொல்லப்பட்டவர்களில் பெரும்பாலானோர் முஸ்லிம்கள், தலித்துகள் மற்றும் பிற்படுத்தப்பட்ட சாதிகளை சேர்ந்தவர்கள் என்றும் சஞ்சய் பாரிக் கூறுகிறார்.
“நம்மால் ஒரு சரியான சிவில் சமூகத்தை கட்டியெழுப்ப முடியவில்லை. வன்முறை மற்றும் நீதிமன்றத்திற்கு வெளியிலான தண்டனையை ஏற்றுக்கொள்வது சமூகத்தில் ஏற்கனவே இருந்தது. இந்த ஏற்றுக்கொள்ளல் இப்போதைக்குள் முடிவுக்கு வந்திருக்க வேண்டும். ஆனால் தேர்தல் அரசியலில் இது மேலும் வலுப்பெற்று வருகிறது,” என்று சஞ்சய் பாரிக் குறிப்பிட்டார்.
என்கவுன்டரில் யார் கொல்லப்படுகிறார்கள்?

பட மூலாதாரம், Getty Images
2020 ஆகஸ்டில் ஆங்கில நாளிதழான எக்னாமிக் டைம்ஸில், 2017 மார்ச் முதல் 2020 ஆகஸ்ட் வரையில் யோகி ஆட்சியில் நடந்த போலீஸ் என்கவுன்டர்கள் குறித்து ஒரு அறிக்கை வெளியிடப்பட்டது.
இந்தக்காலகட்டத்தில் உத்தரபிரதேசத்தில் மொத்தம் 125 பேர் போலீஸ் என்கவுன்டர்களில் கொல்லப்பட்டனர். அவர்களில் 47 பேர் முஸ்லிம்கள் என்று இந்த அறிக்கை தெரிவிக்கிறது.
இந்த மூன்று ஆண்டுகளில் போலீஸ் என்கவுன்டரில் கொல்லப்பட்டவர்களில் 37 சதவிகிதம் பேர் முஸ்லிம்கள். உத்தரப்பிரதேசத்தில் முஸ்லிம்களின் மக்கள் தொகை 19%.
இந்த என்கவுன்ட்டர்களில் 13 போலீசாரும் கொல்லப்பட்டனர்.
யோகி ஆதித்யநாத் 2017ஆம் ஆண்டு உத்தரப்பிரதேச முதல்வராக பதவியேற்றபோது, ஒரு வருடத்தில் மொத்தம் 45 பேர் போலீஸ் என்கவுன்டரில் கொல்லப்பட்டனர். அதில் 16 பேர் முஸ்லிம்கள்.
பெரும்பாலான என்கவுன்டர்கள் மேற்கு உத்தரபிரதேசத்தில் நடந்தன.
அதிக் அகமதுவின் வீடு இருந்த பிரயாக்ராஜின் சாக்கியா பகுதியில், அவரது வீடு உட்பட பல வீடுகள் இடிக்கப்பட்டன.
அதிக்கின் உறவினர்கள் என்ற பெயரில் சாக்கியாவில் குறைந்தது ஏழு வீடுகள் இடிக்கப்பட்டுள்ளதாக அதிக் மற்றும் அஷ்ரஃப் அகமது கொல்லப்படும் வரை அவர்களின் வழக்கறிஞராக இருந்த விஜய் மிஷ்ரா கூறுகிறார்.
“அதிக்கின் உறவினர்கள் என்ற பெயரில் மற்ற கிராமங்களில் பல வீடுகள் இடிக்கப்பட்டுள்ளன. குற்றம் சாட்டப்பட்டவர்களின் உறவினர்களின் வீடுகள் கூட இடிக்கப்பட வேண்டும் என்ற சட்டம் எங்கே இருக்கிறது? வீட்டின் வரைபடத்திற்கு ஒப்புதல் இல்லை என்றும் ஆக்கிரமிக்கப்பட்ட நிலத்தில் வீடு இருந்ததால் வீடு இடிக்கப்பட்டது என்றும் யோகி நிர்வாகம் கூறுகிறது.” என்று விஜய் மிஷ்ரா தெரிவித்தார்.
“ஆனால் இந்தியாவின் எந்த கிராமத்தில் வரைபடத்திற்கு ஒப்புதல் பெறப்பட்ட பிறகு வீடு கட்டப்படுகிறது என்று நான் காவல்துறையிடம் கேட்கிறேன். ஹத்வா கிராமத்தில் அஷ்ரஃப்பின் மாமியார் வீடு இடிக்கப்பட்டது. இந்த வீடு சட்டவிரோதமானது என்று கூறி நிர்வாகம் அதை இடித்தது. ஆனால் அடுத்த வீடு சட்டப்படி கட்டப்பட்டதா? அது சாத்தியமா?''என்று அவர் வினவினார்.
நீரஜ் திரிபாதி மறைந்த பாஜக தலைவர் கேசரிநாத் திரிபாதியின் மகன் மற்றும் யோகி அரசில் கூடுதல் அட்வகேட் ஜெனரலாக உள்ளார்.
இந்தியாவின் எந்த கிராமத்தில் வரைபடத்திற்கு ஒப்புதல் பெறப்பட்ட பிறகு வீடு கட்டப்படுகிறது என்று நீரஜ் திரிபாதியிடம் கேட்டோம்.
புல்டோசர் அரசியல்

பட மூலாதாரம், Getty Images
“இடிக்கப்பட்ட எல்லா வீடுகளுக்கும் முன்பே நோட்டீஸ் அளிக்கப்பட்டிருந்தது. முன்பு எந்த அரசும் துணிச்சலாக செயல்படவில்லை, ஆனால் இந்த அரசு துணிச்சலுடன் செயல்படுகிறது. இதற்குப் பிறகும் தங்களுக்கு அநீதி இழைக்கப்பட்டதாக யாராவது உணர்ந்தால் அவர்கள் நீதிமன்றத்தை நாடலாம்,” என்று நீரஜ் கூறினார்.
“என்கவுன்டரைப் பொருத்தவரை, இதிலும் சட்டவிரோதமான முறையில் எதுவும் நடக்கவில்லை. கொல்லப்பட்டவர்கள் குற்றவாளிகள். நாங்கள் , குற்றவாளிகளின் சாதி, மதம் ஆகியவற்றை பார்ப்பதில்லை,” என்று நீரஜ் திரிபாதி குறிப்பிட்டார்.
கடந்த ஆண்டு ஜூன் மாதம் வெல்ஃபேர் பார்ட்டி ஆஃப் இந்தியாவின் தொண்டரான ஜாவேத் முகமதுவின் வீடு நிர்வாகத்தால் இடிக்கப்பட்டது.
பிரயாக்ராஜ் மேம்பாட்டு ஆணையம் இந்த வீட்டை சட்டவிரோதமானது என்று அறிவித்தது.
பிரயாக்ராஜில் நடந்த வன்முறைப் போராட்டம் தொடர்பாக ஜாவேத் முகமது போலீஸாரால் கைது செய்யப்பட்டார்.
பாரதிய ஜனதா கட்சியின் செய்தித் தொடர்பாளர்கள் இருவர், முகமது நபியைப் பற்றிக்கூறிய சர்ச்சைக்குரிய கருத்துக்களைக் கண்டித்து இந்தப் போராட்டம் நடைபெற்றது.
ஜாவேத் முகமது கைது செய்யப்பட்ட ஒரு நாள் கழித்து, பிரயாக்ராஜின் கரேலி பகுதியில் அவரது வீடு இடிக்கப்பட்டது.
ஜாவேத் முகமது இன்னும் தியோரியா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
”இந்த வீடு சட்டவிரோதமானது என்று ஒரு நாள் முன்பு நிர்வாகம் சுவரில் நோட்டீஸ் ஒட்டியது,” என்று அவரது இளைய மகள் சுமையா பாத்திமா ஜாவேத் கூறினார்.
“இந்த அரசு பெரும்பான்மை அரசியலை செய்து அதில் வெற்றியும் பெற்று வருகிறது. அப்பாவிகளின் வீடுகள் இடிக்கப்படுவது நாட்டின் பெரும்பான்மை மக்களுக்கு ஒரு பொருட்டல்ல,” என்றார் அவர்.
”உத்தரபிரதேசத்தை யோகி நடத்தும் விதத்தை பார்க்கும்போது மாநிலத்தின் எதிர்காலம் இருண்டதாக உள்ளது,” என்று ஜாவேத் முகமதுவின் வழக்கறிஞர் கே.கே.ராய் கூறினார்.
“யோகி அரசு முஸ்லிம்களை இரண்டாம் தர குடிமக்களாக ஆக்கியுள்ளது. வீட்டில் தொழுகை நடத்தினால் போலீசார் வருகிறார்கள். மகன் குற்றவாளி என்றால் தந்தை கட்டிய வீட்டை இடித்து தள்ளுங்கள் என்று இந்தியாவின் எந்த சட்டத்திலும் சொல்லவில்லை. புல்டோசர் மூலம் பெரும்பான்மை அரசியல் அலையை உருவாக்குகிறார்கள். இடிக்கப்பட்ட வீடுகளில் 99 சதவிகிதம் முஸ்லிம்களின் வீடுகள். உண்மையில், யோகி வீட்டை இடிக்கவில்லை, நாட்டின் அரசியலமைப்பு கட்டமைப்பை இடிக்கிறார். ஜாவேத் முகமதின் வீடு என்று கூறி இடிக்கப்பட்ட வீடு அவரது மனைவி பெயரில் இருந்தது,” என்றார் அவர்.
யோகி அரசில் மகிழ்ச்சியாக உள்ளார்களா?

பட மூலாதாரம், Getty Images
யோகி ஆதித்யநாத்தின் முதலாவது ஆட்சிக்காலத்தில் அமைச்சராக இருந்தவரும் இப்போது பிரயாக்ராஜின் மக்களவை எம்பியுமான ரீட்டா பகுகுணா ஜோஷி, யோகி மாநிலத்தை பிளவுபடுத்தும் பாதையில் கொண்டு செல்வதாக கருதவில்லை.
"எங்கள் அரசு திட்டமிட்ட குற்றங்களை கட்டுக்குள் கொண்டு வந்துள்ளது. தனிநபர் குற்றங்களைப் பற்றி அப்படிச்சொல்ல முடியாது. ஆனால் திட்டமிட்ட குற்றம் முடிவுக்கு வந்துவிட்டது. எங்கள் அரசு உள்கட்டமைப்பு வசதிகள் தொடர்பாக பல்வேறு பணிகளை செய்து வருகிறது. இலவச உணவு தானியங்களும் மத அடிப்படையில் வழங்கப்படுவதில்லை. குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்கும் தைரியம் எங்கள் அரசுக்கு உள்ளது. தங்களுக்கு அநீதி இழைக்கப்படுவதாக யாராவது உணர்ந்தால் அவர்கள் நீதிமன்றத்தை அணுகலாம்,” என்று ரீட்டா பகுகுணா ஜோஷி கூறினார்.
யோகி உத்தரபிரதேசத்தை எங்கு கொண்டு செல்ல விரும்புகிறார்? உத்தரபிரதேசத்தில் யோகி என்ன செய்தாலும், அது உத்தரப்பிரதேசத்துக்காக அல்ல, தனக்காகவே செய்கிறார் என்கிறார் அலகாபாத் பல்கலைக்கழகத்தின் வரலாற்றுப் பேராசிரியரான ஹேரம்ப் சதுர்வேதி.
"யோகி உத்தரபிரதேசத்தை எங்கும் கொண்டு செல்வதாக நான் உணரவில்லை. அவர் தன்னை எங்கு அழைத்துச் செல்ல விரும்புகிறார் என்பதுதான் கேள்வி. அவர் தனக்காக வேலை செய்கிறார், இது அவரது பிரபலத்தை அதிகரிப்பதாக அவர் உணர்கிறார். இந்து வாக்குகள் ஒருமுனைப்படுத்தப்பட்டால், அவர் தன்னை மோதியின் வாரிசாக முன்னிறுத்தலாம். இந்த சண்டை உத்தரபிரதேச மாடலுக்கும் குஜராத் மாடலுக்கும் இடையிலானது. 2014 க்குப் பிறகு இந்தியா எந்தப்பாதையில் இருக்கிறதோ அதே அணுகுமுறை மற்றும் வழிமுறையில் யோகி 2017 முதல் உத்தரபிரதேசத்தை முன்னெடுத்துச் செல்கிறார்,” என்று பேராசிரியர் சதுர்வேதி குறிப்பிட்டார்.
ஒருபுறம் யோகி முதலீட்டு மாநாடு நடத்துகிறார், மறுபுறம் அவரது ஆட்சியில் போலீஸ் என்கவுன்டர்கள் அதிகரித்து வருகின்றன.
அவரின் கொள்கைகளில் முரண்பாடு உள்ளதா? மோதி குஜராத்தில் முதலீட்டு உச்சி மாநாடுகளுக்கு ஏற்பாடு செய்தார். அங்கும் போலீஸ் என்கவுன்டர்கள் நடந்தன என்று நீலாஞ்சன் முகோபாத்யாய் சுட்டிக்காட்டினார்.
“2001ல், எல்.கே.அத்வானி, நரேந்திர மோதியை குஜராத் முதல்வராக்கினார், அவரும் ஆதித்யநாத் போலவே நிர்வாகத்தில் அனுபவம் பெற்றவர் அல்ல. ஆனால், மோதி ஆதித்யநாத்தை விட வேகமானவர் என்பது மட்டுமல்லாமல், விஷயங்களை விரைவாகக் கற்றுக் கொள்ளக்கூடியவராகவும் இருந்தார். 2002 கலவரத்தின் எல்லா எதிர்மறைகளையும் தனது பிரபலத்தை அதிகரிக்க அவர் பயன்படுத்தினார். இதை எல்லோராலும் செய்ய முடியாது,” என்று மூத்த பத்திரிக்கையாளர் ஷரத் பிரதான், யோகி ஆதித்யநாத் குறித்த தனது புத்தகத்தில் எழுதியுள்ளார்.
யோகி உத்தரபிரதேசத்தை ஆட்சி செய்யும் விதம் அமித்ஷாவுக்கு பிடிக்கவில்லை என்று ஷரத் பிரதான் கருதுகிறார். 2024க்குப் பிறகு உத்தரபிரதேசத்தில் பெரிய விளையாட்டு நடக்கக்கூடும் என்று பிரதான் குறிப்பிட்டார்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












