கர்நாடக தேர்தல்: இலவசங்கள் குறித்த பாஜகவின் அணுகுமுறை மாறுகிறதா?

பட மூலாதாரம், twitter@BJP Karnataka
அரசியல் கட்சிகள் தேர்தலின்போது அறிவிக்கும் இலவசங்கள் குறித்த வாக்குறுதிகளை பிரதமர் நரேந்திர மோதி உட்பட பாஜகவினர் தொடர்ந்து விமர்சித்து வரும் நிலையில், தற்போது கர்நாடக சட்டப்பேரவை தேர்தலையொட்டி பாஜக சார்பில் இலவசம் தொடர்பாக பல்வேறு வாக்குறுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது அரசியல் வட்டாரத்தில் பேசுபொருள் ஆகியுள்ளது.
இந்தியாவில், தேர்தல் பிரசாரத்தின்போது அரசியல் கட்சிகள் இலவசங்கள் குறித்து அறிவிப்புகளை வெளியிடுவது தவிர்க்க முடியாத ஒன்றாக மாறியுள்ளது. அதே நேரத்தில் இலவசங்கள் நாட்டின் வளர்ச்சிக்கு தடையாக உள்ளது கருத்தும் நிலவுகிறது. இலவசங்களுக்கு தடை விதிக்க வேண்டும் என்று கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.
இந்நிலையில், கர்நாடக சட்டப்பேரவைக்கு மே 10ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறும் சூழலில் , ஆட்சியை கைப்பற்றும் நோக்கில் காங்கிரஸ், பாஜக ஆகிய கட்சிகள் வாக்காளர்களை கவரும் விதமாக இலவசங்கள் குறித்த பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டுள்ளனர்.
கடந்த மே 2ஆம் தேதி காங்கிரஸ் கட்சி, கர்நாடக தேர்தலுக்கான தங்களது வாக்குறுதிகளை அறிவித்தது. அதில் முக்கியமானவை:
- அன்ன பாக்கிய திட்டத்தின் கீழ், வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளவர்களுக்கு மாதம் 10 கிலோ அரிசி.
- குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.2,000 உதவித் தொகை
- மாதம் 200 யூனிட் மின்சாரம் இலவசம்
- பஜ்ரங் தளம், பி.எஃப்.ஐ அமைப்புகளுக்கு தடை
- டிகிரி படித்து முடித்து வேலையில்லாமல் இருப்பவர்களுக்கு மாதம் ரூ.3000 வீதம் 2 ஆண்டுகளுக்கும் டிப்ளமோ படித்துமுடித்து வேலையில்லாமல் இருப்பவர்களுக்கு மாதம் ரூ.1500 வீதம் 2 ஆண்டுகளுக்கும் உதவித் தொகை வழங்கப்படும்
- அரசு பேருந்துகளில் பெண்களுக்கு இலவச பயணம்
போன்ற அறிவிப்புகளை வெளியிட்டது.
பாஜக தேர்தல் அறிக்கையில் என்னென்ன அறிவிப்பு
பாஜக தேர்தல் அறிக்கையிலும் இலவசங்கள் குறித்த அறிவிப்புகள் இடம் பெற்றுள்ளன. அதில் குறிப்பாக;
- வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள குடும்பங்களுக்கு ஆண்டுக்கு (யுகாதி, விநாயகர் சதுர்த்தி, தீபாவளி ஆகிய பண்டிகைகளில்போது) 3 இலவச சமையல் எரிவாயு வழங்கப்படும்
- தினமும் அரை லிட்டர் பால் மற்றும் மாதம் 5 கிலோ சிறு தானியம் வழங்கப்படும்
- மாநிலத்தில் யூனிஃபார்ம் சிவில் சட்டம் அமல்படுத்தப்படும்
- பெண்களின் பாதுகாப்பிற்காக பெங்களூருவில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்துடன் கூடிய சிசிடிவி கேமராக்கள் அமைக்கப்படும்.
போன்ற வாக்குறுதிகளை வழங்கியுள்ளது.
பாஜக கூறுவது என்ன?
பாஜக தேர்தல் அறிவிப்பில் இலவசங்கள் இடம்பெற்றுள்ளது குறித்து அக்கட்சியின் தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா , நாங்கள் இலவசங்களை வழங்கவில்லை மக்களை முன்னேற்றுகின்றோம் என்றார். கடந்த திங்களன்று பெங்களூருவில் தேர்தல் அறிக்கையை வெளியிட்டு பேசிய அவர், நாங்கள், அத்தியாவசியமாக தேவைப்படுவதை பார்த்துக்கொள்கிறோம். ஏழை மக்களின் தேவை அறிந்து தேர்தல் அறிக்கை தயார் செய்யப்பட்டுள்ளது. இதை இலவசமாக பார்க்கக் கூடாது` என்றார்.
இலவசங்கள் குறித்து பாஜக முன்பு கூறி வந்தது என்ன?
அரசியல் கட்சிகளால் இலவசங்கள் வழங்கப்படுவதை பிரதமர் நரேந்திர மோதி கடந்த காலங்களில் தொடர்ந்து விமர்சித்தே வந்துள்ளார். கடந்த ஆண்டு ஜூலை 16ஆம் தேதி புந்தேல்கண்ட் அதிவேக விரைவுச் சாலையைத் துவக்கி வைத்துப் பேசிய மோதி, இளைஞர்கள் 'ரேவடி கலாசாரத்தில்' ஈர்க்கப்பட்டுவிடக்கூடாது என்றார். ரேவடி என்பது வட இந்தியாவில் விழாக்காலங்களில் மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளக்கூடிய ஒரு இனிப்பு வகை. "இப்போது நம்முடைய நாட்டில் ரேவடிகளைக் கொடுத்து வாக்குகளை வளைக்கும் கலாச்சாரத்தை கொண்டுவர முயற்சிகள் நடக்கின்றன. " என்று குறிப்பிட்டார். மக்களுக்கு இலவசமாக பொருட்களை வழங்குவது என்பதையே அவர் 'ரேவடி கலாசாரம்' என்று குறிப்பிட்டார். இலவசங்கள் வழங்கும் கலாச்சாரத்தை அரசியலில் இருந்து அப்புறப்படுத்த வேண்டும் என்றும் அவர் தெரிவித்திருந்தார்.
கர்நாடக தேர்தலையொட்டி அண்மையில், பிரதமர் நரேந்திர மோதி பாஜக நிர்வாகிகள், தொண்டர்கள் ஆகியோரிடம் காணொளி காட்சி மூலம் பேசினார். அப்போது, காங்கிரஸ் கட்சியின் வாரண்டி காலாவதியாகிவிட்டது. அப்படியிருக்கும்போது, அதன் உத்தரவாதங்களுக்கு எந்த அர்த்தமும் இல்லை` என்று தெரிவித்ததோடு இலவசங்கள் குறித்த தனது விமர்சனங்களை அவர் வைத்திருந்தார்.
பாஜக அணுகுமுறையில் மாற்றம் ஏன்?
இலவசங்களுக்கு எதிராக தொடர்ந்து பேசி வந்த பிரதமர் நரேந்திர மோதியும் பாஜகவும் தற்போது கர்நாடக தேர்தலையொட்டி இலவசங்கள் அறிவித்துள்ளதற்கு பின்னால், தேர்தலுக்கு முந்தைய கருத்து கணிப்புகளும் காரணமாக சொல்லப்படுகின்றன. என்.டி.டிவி. மற்றும் சி.எஸ்.டி.எஸ் இணைந்து நடத்திய கருத்துக்கணிப்பில், கர்நாடகாவின் அடுத்த முதலமைச்சராக பாஜகவின் பசவராஜ் பொம்மையைவிட காங்கிரஸின் சித்தராமையாவுக்கே அதிகம் பேர் ஆதரவு தெரிவித்துள்ளனர். இந்த சர்வேவில் காங்கிரஸுக்கு ஆதரவாக பல முடிவுகள் வந்துள்ளன.
இதேபோல், இந்தியா டுடே - சி வோட்டர் இணைந்து நடத்திய கருத்துக் கணிப்பில் காங்கிரஸ் வெற்றி பெற வாய்ப்பு உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. காங்கிரஸ், 107- 119 இடங்களையும், பாஜக 74- 86 இடங்களையும் பெறக் கூடும் என்று இந்த கருத்துக் கணிப்பு கூறுகிறது. ஏபிபி - சி வோட்டர் கருத்துக் கணிப்பும் காங்கிரஸ் வெற்றி பெறவே வாய்ப்பு உள்ளதாக கணித்துள்ளது.
கருத்துக் கணிப்புகள் காங்கிரஸுக்கு ஆதரவாக உள்ள நிலையில், வாக்காளர்களை கவரவே இலவச அறிவிப்புகளை பாஜக கையில் எடுத்துள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.

பட மூலாதாரம், FACEBOOK/NARAYANAN THIRUPATHY
"பாஜக இலவசங்களை அறிவிக்கவில்லை"
இதனை மறுக்கும் பாஜக மாநில துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி, இலவசங்கள் வேறு, மக்கள் நலத் திட்டங்கள் வேறு. கர்நாடகாவில் பாஜக அறிவித்துள்ளது மக்கள் நலத் திட்டங்கள் என்றார். தொடர்ந்து பேசிய அவர், ` பாஜக இலவசங்களை அறிவிக்கவில்லை. உணவு குறித்த விசயங்களை எப்படி இலவசம் என்று கூறமுடியும்? சத்துணவு வழங்கும் திட்டத்தை இலவசம் என்று யாராவது கூறுவார்கள்.
அதுபோல், வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ள மக்களுக்கு பால், அரிசி போன்றவற்றை வழங்குவது இலவசம் ஆகாது. இதை இலவசம் என்று சொல்பவர்கள் மக்களை கொச்சைப்படுத்துகின்றனர். மாணவர்களுக்கு சைக்கிள் கொடுப்பதையோ, லேப்டாப் கொடுப்பதையோ நாங்கள் இலவசம் என்று எதிர்க்கவில்லையே?" என்றார்.

"பாஜகவின் சொல்வேறு, செயல் வேறாக இருக்கிறது"
இந்த விவகாரத்தில் பாஜகவின் சொல் வேறு, செயல் வேறாக இருப்பதாக மூத்த செய்தியாளர் பிரியன் கூறுகிறார். `மக்களின் ஓட்டை பெற தான் அரசியல் கட்சிகள் இலவசங்களை அறிவிக்கின்றன, இலவசங்கள் வளர்ச்சிக்கு எதிரானது, இலவசங்கள் மக்களின் வரிப் பணத்தை வீணடிக்கின்றன என்று பிரதமர் மோதி தொடர்ந்து கூறி வருகிறார். கொள்கை முடிவாக இலவசங்களை எதிர்த்தால் அவர்களது கட்சி தேர்தலை சந்திக்கும் மாநிலங்களில் இலவசங்களை அறிவிக்கக் கூடாது. பால் கொடுப்பதாகவோ, சிலிண்டர் கொடுப்பதாகவோ கூறுவதற்கு தேவை இருக்காது.
ஒருபக்கம் இலவசங்களை எதிர்ப்பதாக கூறிகொண்டு மறுபக்கம் இலவசங்களை கொடுக்கின்றனர். மத்திய அரசே விவசாயிகளுக்கு ஆண்டுகள் 6 ஆயிரம் ரூபாய் கொடுத்து வருகிறது. இது எந்த கணக்கில் சேரும்? இலவசம், சமூக வளர்ச்சி திட்டம் என்று இரண்டு விதமாக நாம் பார்க்க வேண்டும். சமூகத்தில் கீழ்நிலையில் உள்ள மக்களை கைத்தூக்கி விடுவதற்காக உதவும் இலவசங்களை சமூக வளர்ச்சி திட்டங்களாக பார்க்கலாம்.
ஆனால், பாஜக கர்நாடக தேர்தலை மத ரீதியாக அணுகுகிற. இஸ்லாமிய வாக்குகள் தேவையில்லை என்கிறார்கள். தற்போது கூட 3 சமையல் எரிவாயு வழங்கப்படும் என்று அறிவித்துள்ள பாஜக, அவை உகாதி, விநாயகர் சதுர்த்தி, தீபாவளி போன்ற பண்டிகைகளின் போது வழங்கப்படும் என்று கூறியுள்ளது. இது எப்படி அனைவருக்குமான திட்டமாக இருக்கும்` என்று கேள்வி எழுப்புகிறார்.

பட மூலாதாரம், Twitter/ KS Alagiri
காங்கிரஸ் கூறுவது என்ன?
பாஜகவின் தேர்தல் அறிக்கையால் காங்கிரஸுக்கு எந்த பாதிப்பும் இல்லை என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் கே.எஸ். அழகிரி குறிப்பிடுகிறார். பிபிசி தமிழிடம் பேசிய அவர் , ` எந்த வாக்குறுதியையும் மோதி நிறைவேற்ற மாட்டார் என்ற எண்ணம் மக்களிடம் வந்துவிட்டது. 2 கோடி பேருக்கு வேலை வழங்கப்படும் என்று அவர் கூறினார். தற்போது இருந்த வேலைவாய்ப்பே காணாமல் போய்விட்டது. விவசாயிகளின் வருமானத்தை 2 மடங்கு உயர்த்துவதாக கூறினார். அதுவும் நடக்கவில்லை. மோதி எதை கூறினாலும் அரசியலுக்காகவே கூறுகிறார் என்று மக்கள் கருத தொடங்கிவிட்டனர். கர்நாடகத்தில் தங்களுக்கு வெற்றி வாய்ப்பு இல்லை என்றவுடன் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட தொடங்கிவிட்டனர். சில மாநிலங்கள் வேண்டுமானால் தேவையில்லாத திட்டங்களை செயல்படுத்தியிருக்கலாம். அதை வைத்து சமூக நலத் திட்டங்களே தேவையில்லை என்று சொல்ல முடியாது. இந்தியாவுக்கு சமூக நலத்திட்டங்கள் அவசியம்` என்றார்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












