கோவாவில் பிலாவல் பூட்டோ: இவரது வருகையால் பாகிஸ்தான் உடனான இந்திய உறவு மேம்படுமா?

பிலாவல் பூட்டோ

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, பிலாவல் பூட்டோ, பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர்
    • எழுதியவர், சௌதிக் பிஸ்வாஸ்
    • பதவி, பிபிசி செய்தியாளர்

பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் பிலாவல் பூட்டோ சர்தாரி கோவாவில் நடைபெறும் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் வெளியுறவு அமைச்சர்கள் மாநாட்டில் பங்கேற்க இந்தியா வந்துள்ளார். 12 ஆண்டுகளுக்கு பிறகு ஒரு பாகிஸ்தான் அமைச்சர் இந்தியாவுக்கு வருகை தருவது இதுவே முதன்முறை ஆகும்.

2011-ம் ஆண்டு பாகிஸ்தான் அமைச்சர் ஹினா ரபானி கார், அப்போதைய இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணாவை டெல்லியில் சந்தித்தார். அதன் பிறகு இப்போது பிலாவல் பூட்டோ வருகிறார்.

அப்போது இரு நாடுகளும் தங்கள் வணிகத்தை மேம்படுத்த முயற்சித்து வந்தன. அப்போது அமெரிக்கா உடனான பாகிஸ்தானின் வணிக உறவு நெருக்கடியில் இருந்தது.

”அப்போது நிகழ்ந்தவையெல்லாம் நல்லிணக்க முயற்சிகளால் நிகழ்ந்தவை. ஆனால் இன்றைய நிலை வேறு” என்று கூறுகிறார் அமெரிக்காவின் ஒரு ஆராய்ச்சி நிறுவனமான தி வில்சன் சென்டரை சேர்ந்த மைக்கேல் கூகெல்மன்.

போரும் உறவும்

அமெரிக்க வெளியுறவுத்துறை முன்னாள் செயலாளர் மைக் போம்பேயோ கூறுகையில், “இரு நாடுகளும் சுதந்திரம் அடைந்த பின் 3 முறை போரிட்டு உள்ளன. 2019இல் காஷ்மிரில் இந்திய ராணுவத்தின் மீது பாகிஸ்தான் நடத்திய தாக்குதலுக்கு இந்தியா எதிர்வினையாற்றும் வகையில் தாக்குதல் நடத்தியது. அப்போது இரு நாடுகளுக்கும் இடையே ஒரு அணு ஆயுத போர் மூளக்கூடிய சூழல் உருவானது” என்றார்.

ஆனால் 2021இல் நடந்த எல்லை சண்டை நிறுத்தம், பிரச்னைகளை கட்டுக்குள் கொண்டு வந்தது. கடந்த ஆண்டு பாகிஸ்தானுக்குள் இந்தியா தவறுதலாக ஏவிய சூப்பர்சோனிக் ஏவுகணைக்கு இஸ்லமாபாத் கண்டனம் தெரிவித்தபோது கூட, அந்த நிகழ்வை பெரிதுபடுத்தாத வண்ணம் தெரிவித்திருந்தது.

“ஆனால் இதை வைத்து இரு நாடுகளும் நல்லுறவு கொண்டிருக்கிறது என்று சொல்ல முடியாது. இன்றளவும் இரு நாடுகளும் பழையபடி மாற ஒரேயொரு சீண்டலே போதும்” என்கிறார் மைக்கேல் கூகெல்மன்.

கோவா மாநாட்டுக்கும் பாகிஸ்தானுக்கும் என்ன தொடர்பு?

பிலாவல் பூட்டோ - கோவா விமான நிலையத்தில் இருந்து வருகை

பட மூலாதாரம், Getty Images

பாகிஸ்தானுக்கான முன்னாள் இந்திய தூதர் டிசிஏ ராகவன் கூறும்போது, ” இந்தியா, பாகிஸ்தான் இரு நாடுகளுமே ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்புடன் ஒரு நல்லுறவை கொண்டுள்ளதால் பிலாவல் பூட்டோவின் வருகை பெரிய ஆளவிலான எதிர்பார்ப்பை ஏற்படுத்தவில்லை” என்கிறார்.

"2001Fல் மத்திய ஆசியாவின் பாதுகாப்பு மற்றும் பொருளாதார விஷயங்களை விவாதிக்க உருவாக்கப்பட்ட ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு சீனா மற்றும் ரஷியாவின் தலைமையில் இயங்கி வருகிறது.

சீனா பாகிஸ்தானின் நட்பு நாடாகவும் ரஷ்யா பாகிஸ்தானுடன் சமீபகாலமாக நல்லுறவையும் பாராட்டியும் வருகிறது. இது தவிர வருங்காலத்தில் இஸ்லாமாபாத்துடன் வணிகத்தில் ஈடுபடக்கூடிய மத்திய ஆசியாவை சேர்ந்த மேலும் நான்கு உறுப்பு நாடுகளும் இந்த அமைப்பில் இருக்கின்றன. எனவே இப்படிப்பட்ட மாநாட்டை தவற விட பாகிஸ்தான் நிச்சயம் விரும்பாது," என்கிறார் மைக்கேல் கூகெல்மன்.

இந்தியா - பாகிஸ்தான் இடையே இரு தரப்பு சந்திப்பு நிகழுமா?

பிலாவல் பூட்டோ

பட மூலாதாரம், Getty Images

பிலாவல் பூட்டோ, இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கருடன் இரு தரப்பு சந்திப்பு நடத்த வாய்ப்புகள் ஏதுமில்லை.

நீண்ட காலத்திற்கு பிறகு ஒரு பாகிஸ்தான் அமைச்சர் இந்தியா வருகிறார் என்பதை தவிர, அவருடைய வருகையில் சிறப்பு ஏதுமில்லை என்கிறார் டெல்லியில் உள்ள ஜவாஹர் லால் நேரு பல்கலைகழகப் பேராசிரியர் ஹாப்பிமோன் ஜேகப். முன்னாள் பாகிஸ்தான் - அமெரிக்க தூதர் ஹுசேன் ஹக்கானி கூறும்போது, “இந்த வருகை எந்த உறவு தொடர்பானதும் அல்ல” என்று கூறினார்.

மைக்கேல் கூகெல்மன் கூறும்போது, “பிலாவல் பூட்டோவின் இந்த வருகையை இரு தரப்பு வட்டத்திற்குள் மட்டும் அடக்கக்கூடாது. அவர் பாகிஸ்தானுக்கு நன்மையளிக்க கூடிய ஒரு மாநாட்டில் கலந்து கொள்ள இந்தியா வந்திருக்கிறார். இந்தியாவுடன் வேறு எந்த சமரசத்திற்காகவும் அவர் வரவில்லை” என்கிறார்.

இந்த சந்திப்பில் மற்ற பிரச்னைகளைப் பற்றி பேச இருதரப்புக்கும் எந்த அவசியமும் இல்லை என்று கருதுகிறார் பேராசிரியர் ஹாப்பிமோன் ஜேகப்.

இரு நாடுகளுக்குள்ள தற்போதைய உறவு

பிலாவலுக்கு மரியாதை

கடந்த இரு ஆண்டுகளாக இரு நாடுகளுக்கும் இடையே அமைதி நீடித்து வந்தாலும் அதில் உறுதியில்லை என்கிறார் ராகவன். இரு நாடுகளின் உறவு பல ஏற்ற இறக்கங்களை கண்டு வருகிறது என்கிறார் ஹக்கானி.

இரு நாடுகளும் பிரச்னையை தவிர்க்கவே முயற்சித்து வருகின்றன.

காரணம், பாகிஸ்தானின் உள்நாட்டு அரசியலில் பல அமளிகள் நிலவுகின்றன. மேலும் தற்போது இந்தியாவிற்கு பாதுகாப்பு ரீதியாக, சீனாவுடன் சில சவால்கள் இருக்கின்றன.

எனவே பாகிஸ்தானையும் பகைத்து, மற்றுமொரு பிரச்னையை ஏற்படுத்திக் கொள்ள இந்தியா விரும்பாது. எனினும் இந்த மாநாட்டை சமரசத்திற்கான ஒரு வாய்ப்பாக பயன்படுத்திக் கொள்ள இரு நாடுகளின் அரசியல் தான் தடையாக இருக்கிறது என்கிறார் மைக்கேல் கூகெல்மன்.

இரு நாடுகளுமே காஷ்மீரை முழுவதுமாக அடைய முடியவில்லை. எனவே சமரசப் பேச்சுவார்த்தை இரு நாட்டின் அரசியலிலும் எதாவது ஒரு பின்னடைவை ஏற்படுத்தக்கூடும் என்று அவர் கருதுகிறார்.

வாஷிங்டன் டிசியில் உள்ள தேசிய பாதுகாப்பு பல்கலைகழகத்தை சேர்ந்த ஹசான் அபாஸ் கூறும்போது, “இரு நாடுகளின் அரசியல் பிளவுகளால் இன்றும் ஒரு ஆபத்தான சூழல் தான் நிலவி வருகிறது” என்கிறார்.

இரு நாடுகளின் பேச்சுவார்த்தை என ஊடகங்களில் வெளிவந்த சில உறுதிப்படுத்தப்படாத தகவல்கள், பிரச்னைகளுக்கான தீர்வில்லை என்று கூறுகிறார் பேராசிரியர் ஹாப்பிமோன் ஜேகப். கோவாவில் நடைபெறும்.

இதுபோன்ற சந்திப்புகள் பேச்சுவார்த்தைகளை தொடர வழிவகுக்கலாம் என்று நம்பிக்கை தெரிவிக்கிறார் ஹக்கானி. மேலும் நிலவி வந்த அசாதாரணமான சூழல்களை ஒப்பிடும்போது இது போன்ற சந்திப்புகள் வருங்காலத்தில் அமைதிக்கு வழிவகுக்கலாம் என கருதுகிறார் அபாஸ்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: