ஆர்எஸ்எஸ் - பாஜக இடையே என்ன நடக்கிறது? 75 வயதுக்கு மேல் ஓய்வு சர்ச்சை பற்றி மோகன் பகவத் பதில்

பட மூலாதாரம், Getty Images
இந்தியாவின் ஒவ்வொரு குடிமகனும் மூன்று குழந்தைகளைப் பெற்றுக்கொள்ள வேண்டும் என்று ராஷ்ட்ரிய ஸ்வயம்சேவக் சங்கத்தின் (ஆர்எஸ்எஸ்) தலைவர் மோகன் பகவத் கூறினார். மேலும், ஆர்எஸ்எஸ்-பாஜக இடையே சண்டை உள்ளதா என்பது குறித்த கேள்விக்கும் அவர் பதிலளித்தார்.
ஆர்எஸ்எஸ் நூற்றாண்டு விழாவில் பேசிய அவர், "நமது நாட்டின் கொள்கை ஒவ்வொரு குடிமகனும் 2.1 குழந்தைகளைப் பெற்றுக்கொள்ள பரிந்துரைக்கிறது. இது நாட்டின் சராசரி. குழந்தைகளின் எண்ணிக்கை 0.1 ஆக இருக்க முடியாது. எனவே, இந்தியாவின் ஒவ்வொரு குடிமகனும் தனது வீட்டில் மூன்று குழந்தைகளைப் பெற்றுக்கொள்ள வேண்டும்" என்றார்.
"நான் இதை நாட்டின் பார்வையில் இருந்து சொல்கிறேன். மக்கள் தொகை கட்டுப்படுத்தப்பட்டு போதுமானதாக இருக்க வேண்டும். இந்த விஷயத்தில், மூன்று குழந்தைகள் மட்டுமே இருக்க வேண்டும். மூன்றுக்கு மேல் இருக்கக்கூடாது. இதை அனைவரும் ஏற்றுக்கொள்ள வேண்டும்."
மேலும், "அனைவரின் பிறப்பு விகிதமும் குறைந்து வருகிறது. இந்துக்களின் பிறப்பு விகிதம் ஏற்கெனவே குறைவாக இருந்தது, தற்போது அது மேலும் குறைந்து வருகிறது, ஆனால் மற்ற சமூகங்களின் பிறப்பு விகிதம் அவ்வளவு குறைவாக இல்லை, ஆனால் இப்போது அவர்களின் விகிதமும் குறைந்து வருகிறது" என்றும் அவர் கூறினார்.
பாஜகவுடன் கருத்து வேறுபாடா?

பட மூலாதாரம், Getty Images
மேலும், பாஜகவுக்கும், ஆர்எஸ்எஸ்-க்கும் இடையே கருத்து வேறுபாடு உள்ளதா எனக் கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு பதிலளித்த அவர், "எங்களுக்குள் எந்த சண்டையும் இல்லை. நாங்கள் மத்திய மற்றும் மாநில அரசுடன் இணக்கமாகவே உள்ளோம். ஆனால், சில அமைப்புகளுக்குள் முரண்பாடுகள் இருக்கின்றன. மொத்தத்தில் அமைப்பு பொதுவாக ஒன்றுதான், அதுவும் பிரிட்டிஷ் ஆட்சி செய்யும் வகையில் உருவாக்கப்பட்டது. அதனால், நாமும் சில புதுமைகளை கொண்டு வர வேண்டும்" என்றார்.
மேலும், சில விஷயங்கள் சண்டை போல தோன்றலாம். ஆனால் அது சண்டையல்ல. சில வேறுபாடு இருக்கலாம், ஆனால் அது சண்டை இல்லை. இறுதியாக தேச நலனே எங்களின் குறிக்கோளாக உள்ளது" என்றார்.
பாஜக தேசிய தலைவரை தேர்தெடுப்பதில் ஆர்எஸ்எஸ்-ன் தலையீடு உள்ளதா என்ற கேள்விக்கு, "நாங்கள் அதை தீர்மானிப்பதில்லை. நாங்கள் முடிவுசெய்திருந்தால் இவ்வளவு காலம் எடுத்திருக்குமா? நாங்கள் முடிவெடுக்க வேண்டியதில்லை" என பதிலளித்தார்.
மேலும் "பதவியில் இருப்பவர் 100% நம்மைப் பின்பற்றுபவராக இருந்தாலும், அவர் அதைச் செய்ய வேண்டியிருக்கிறது. அவர் அதன் விளைவுகளையும் அறிந்திருப்பார். அவரால் அதைச் செய்ய முடியுமா, முடியாதா என்பது அவரின் நிலைமையைப் பொறுத்தது. நாம் அவருக்கு அந்தச் சுதந்திரத்தை வழங்க வேண்டும்." என்றார்.
"ஆர்.எஸ்.எஸ் அனைத்தையும் தீர்மானிக்கிறது என்பது முற்றிலும் தவறானது. அது ஒருபோதும் நடக்காது. பல ஆண்டுகளாக இந்த இயக்கத்தை நான் நடத்தி வருகிறேன். அவர்களும் அரசாங்கத்தை நடத்தி வருகிறார்கள். அதனால் நாங்கள் ஆலோசனைதான் வழங்குவோமே தவிர முடிவு எடுப்பதில்லை." எனவும் பேசினார்.

பட மூலாதாரம், ANI
பின்னர் சில கட்சிகள் ஆர்.எஸ்.எஸ்-க்கு எதிர்ப்பு தெரிவிப்பதைப் பற்றி கேட்டபோது, "மாற்றம் நிகழ்வதை நாம் பார்த்து வருகிறோம். 1948-ல் ஜெய் பிரகாஷ் பாபு, தனது கையில் தீப்பந்தத்துடன் ஆர்.எஸ்.எஸ் அலுவலகத்தை எரிக்கச் சென்றார். பின் அவசர நிலையின்போது, மாற்றத்திற்கான நம்பிக்கை உங்களிடம்தான் உள்ளது என்று அவர் கூறினார்." என்றார்.
மேலும் முன்னாள் குடியரசுத் தலைவர்கள் ஏ.பி.ஜே.அப்துல் கலாம் மற்றும் பிரணாப் முகர்ஜியை குறிப்பிட்டுப் பேசிய அவர், "அவர்கள் ஆர்.எஸ்.எஸ்.நிகழ்ச்சிக்கு வந்தார்கள். தங்கள் கருத்தை மாற்றவில்லை. ஆனால் ஆர்.எஸ்.எஸ் பற்றிய தவறான புரிதல்கள் நீங்கின" என்று அவர் கூறினார்.
மோகன் பகவத் ஓய்வு பெறுகிறாரா?
தனது ஓய்வு குறித்தும் அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டது. 75 வயதுக்குப் பிறகு அரசியலில் இருந்து ஒருவர் ஓய்வு பெற வேண்டுமா எனக் கேட்டதற்கு, "நான் இந்த கருத்தை மொரோபந்த்-ன் கூற்றை மேற்கோள் காட்டி தெரிவித்தேன். நான் ஓய்வு பெறுவேன் என்றோ அல்லது யாராவது ஓய்வு பெற வேண்டும் என்றோ நான் சொல்லவில்லை. வாழ்க்கையின் எந்த நேரத்திலும் நாம் ஓய்வு பெறத் தயாராக இருக்கிறோம். மேலும் ஆர்.எஸ்.எஸ் எவ்வளவு காலம் எங்களை செயல்பட செய்ய விரும்புகிறதோ, அவ்வளவு காலத்துக்கும் இந்த அமைப்புக்காக வேலை செய்யவும் நாங்கள் தயாராக இருக்கிறோம்." என பதில் அளித்தார்.
பண்டிகை நாட்களில் இறைச்சி கூடாதா?

பட மூலாதாரம், Getty Images
இஸ்லாமிய மதம் குறித்து அவர் பேசுகையில், "இந்தியாவுக்கு வந்த முதல் நாளில் இருந்தே இஸ்லாமிய மதம் இருக்கிறது. அது எப்போதும் இருக்கும். இதை நான் கடந்த முறையும் கூறியுள்ளேன். இஸ்லாமிய மதம் நிலைத்திருக்காது என்று நினைப்பவர் இந்து அல்ல. இந்துக்களின் சிந்தனை அப்படி இருக்காது. இரு தரப்பிலும் இந்த நம்பிக்கை உருவாகும்போதுதான் இந்த மோதல் முடிவுக்கு வரும். முதலில் நாம் அனைவரும் ஒன்று என நம்ப வேண்டும்." எனப் பேசினார்.
மேலும் பண்டிகையின்போது இறைச்சி சாப்பிடுவது குறித்து நீங்கள் என்ன சொல்ல நினைக்கிறீர்கள் என்று கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு, "விரத நாட்களில் மக்கள் சைவமாகவே இருக்க விரும்புகிறார்கள். அந்நாட்களில் அதற்கு மாறான காட்சிகள் தென்பட்டால், அது மக்களின் உணர்ச்சிகளை புண்படுத்தக்கூடும். இது 2, 3 நாட்கள் மட்டுமே. அந்த நேரங்களில் இந்த விஷயங்களை தவிர்ப்பது புத்திசாலித்தனம். அவர்கள் அப்படி செய்தால் சட்டம் இயற்ற வேண்டிய அவசியமே இருக்காது." என பதில் அளித்தார்.
இந்த ஆண்டு ஆர்எஸ்எஸ் நிறுவப்பட்டு 100 ஆண்டுகள் நிறைவடைகிறது. இந்த நிகழ்வை நினைவுகூரும் வகையில், ஆகஸ்ட் 26 முதல் 28 வரை தலைநகர் டெல்லியில் ஆர்எஸ்எஸ் அமைப்பு சார்பில் சிறப்பு விழா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு












