முதல் டெஸ்டில் இந்தியா தோல்வி: டெஸ்ட் சாம்பியன் புள்ளிப் பட்டியல் எவ்வாறு மாறியுள்ளது?

பட மூலாதாரம், Getty Images
தென் ஆப்ரிக்க கிரிக்கெட் அணி இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. கொல்கத்தாவில் நடைபெற்ற முதலாவது டெஸ்ட் போட்டியில் 30 ரன்கள் வித்தியாசத்தில் தென் ஆப்ரிக்க அணி வென்றுள்ளது. இரண்டாவது இன்னிங்ஸில் இந்திய அணி 93 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
கொல்கத்தா டெஸ்ட் போட்டி பவுலர்களுக்கு சாதகமாகவும் பேட்டர்களுக்கு சவாலாகவும் அமைந்தது. போட்டி தொடங்கிய மூன்றாவது நாளிலேயே முடிவுற்றது.
இரண்டாவது இன்னிங்ஸில் இந்திய அணியின் வெற்றிக்கு தென் ஆப்ரிக்க அணி 124 ரன்கள் இலக்கு நிர்ணயித்திருந்தது. ஆனால் 35 ஓவர்களுக்குள்ளாகவே இந்திய அணி சுருண்டுவிட்டது.
இரண்டாவது இன்னிங்ஸில் அரைசதம் அடித்த தென் ஆப்ரிக்க அணியின் தெம்பா பவுமாவும், அந்த அணியின் பவுலர் சைமன் ஹார்மரும் தான் இந்த வெற்றிக்கு அடித்தளமிட்டனர். இரண்டாவது இன்னிங்ஸில் இந்தியா சார்பாக வாஷிங்டன் சுந்தர் மட்டுமே அதிகபட்சமாக 29 ரன்கள் அடித்திருந்தார்.
முன்னதாக சிறப்பாக பந்துவீசிய இந்திய அணியின் பவுலர்கள் தென் ஆப்ரிக்க அணியை 153 ரன்களுக்குள் கட்டுப்படுத்தினர். ரவீந்திர ஜடேஜா அதிகபட்சமாக 4 விக்கெட்டுகள் எடுத்திருந்தார்.
ஆட்டத்தை மாற்றிய பவுமாவின் அரைசதம்
இரண்டாவது இன்னிங்ஸில் தென் ஆப்ரிக்க பேட்டர்கள் இந்திய அணியின் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் திணறினர். 60 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து அந்த அணி தடுமாறியது.
ஒருபுறம் விக்கெட்டுகள் தொடர்ந்து சரிந்தாலும் மறுமுனையில் பவுமா நிலைத்து ஆடினார். நிதானமாக ஆடி அவர் அரைசதம் அடித்த நிலையில் தென் ஆப்ரிக்க அணியின் ஸ்கோர் 150-ஐ தாண்டியது.
அந்த அணியில் பவுமா அதிகபட்சமாக 55 ரன்கள் எடுத்திருந்தார். அவருக்கு உறுதுணையாக ஆடிய கோர்பின் போஷ் 25 ரன்கள் எடுத்திருந்தார். இரண்டாவது இன்னிங்ஸில் தென் ஆப்ரிக்க அணி 153 ரன்களுக்கு ஆட்டமிழந்த நிலையில் இந்திய அணிக்கு வெற்றி இலக்காக 124 ரன்கள் நிர்ணயிக்கப்பட்டிருந்தது.

பட மூலாதாரம், Getty Images
மூன்று நாட்களில் 28 விக்கெட்டுகள்
கொல்கத்தா டெஸ்ட் போட்டி பேட்டர்களுக்கான சோதனைக் களமாக இருந்தது என்றே சொல்லலாம். ஏனென்றால் இரண்டரை நாட்களில் இந்தப் போட்டி முடிவுக்கு வந்துள்ளது. 38 விக்கெட்டுகள் வீழ்ந்துள்ளன. (முதல் இன்னிங்ஸ் பேட்டிங்கின் போது காயமடைந்து வெளியேறிய இந்திய கேப்டன் கில் இரண்டாவது இன்னிங்ஸில் பேட்டிங் ஆட வரவில்லை)
இந்தப் போட்டி முழுவதிலும் 220 ஓவர்கள் மட்டுமே வீசப்பட்டுள்ளன. இரண்டு அணிகளுமே ஒரு நாள் முழுக்க பேட்டிங்கில் நிலைத்து ஆடவில்லை. முதல் இன்னிங்ஸில் தென் ஆப்ரிக்க அணி முதல் நாளிலேயே 159 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய இந்திய அணி முதல் நாளில் ஒரு விக்கெட்டை மட்டுமே இழந்திருந்தது.

பட மூலாதாரம், Getty Images
இந்திய அணியாலும் ஒரு நாள் முழுக்க களத்தில் நிலைக்க முடியவில்லை. இரண்டாவது நாளில் இந்திய அணி 189 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அன்றே இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய தென் ஆப்ரிக்க அணி 7 விக்கெட்டுகள இழந்தது. மூன்றாவது நாளில் தென் ஆப்ரிக்க அணி மீதமுள்ள 3 விக்கெட்டுகளையும் இழந்தது.

பட மூலாதாரம், Getty Images
இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய இந்திய அணி அடுத்தடுத்து 9 விக்கெட்டுகளை இழந்தது. முதல் இன்னிங்ஸில் 4 ரன் எடுத்திருந்த போது காயத்தால் வெளியேறிய அணியின் கேப்டன் சுப்மன் கில் இரண்டாவது இன்னிங்ஸில் விளையாடவில்லை. அவர் பேட்டிங் ஆட முடியாத நிலை ஏற்பட்டது இந்திய அணிக்கு பெரிய இழப்பாக அமைந்தது.
இந்திய சுற்றுப்பயணத்தில் தென் ஆப்ரிக்க 2 டெஸ்ட், மூன்று ஒருநாள் மற்றும் ஐந்து டி20 போட்டிகளில் விளையாட உள்ளது. இரண்டாவது டெஸ்ட் போட்டி நவம்பர் 22-ஆம் தேதி கௌகாத்தியில் நடைபெறுகிறது.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப் பட்டியல்
இந்த தோல்வியால் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலில் இந்தியா நான்காவது இடத்திற்கு பின்தங்கியுள்ளது. இந்திய அணி 8 போட்டிகளில் விளையாடி 4 வெற்றி, 3 தோல்விகளைப் பெற்றுள்ளது, ஒரு போட்டியை டிரா செய்துள்ளது.
ஆஸ்திரேலிய அணி முதலிடத்தில் நீடிக்கிறது. நடப்புச் சாம்பியனான தென் ஆப்ரிக்கா இரண்டாவது இடத்திலும் இலங்கை அணி மூன்றாவது இடத்திலும் உள்ளன.
இந்த டெஸ்ட் தொடரில் இந்தியா 2-0 என்கிற கணக்கில் தென் ஆப்ரிக்க அணியை தோற்கடித்திருந்தால் புள்ளிப்பட்டியலில் முதல் 2 இடங்களுக்குள் முன்னேறும் வாய்ப்பு இருந்தது. அதற்கு இனிமேல் வாய்ப்பில்லாமல் போய்விட்டது.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு












