இந்தியாவை தோற்கடிக்கும் உத்தி என்ன? பாகிஸ்தான் பயிற்சியாளர் பேட்டி

பட மூலாதாரம், Getty Images
வங்கதேசத்திற்கு எதிரான விறுவிறுப்பான வெற்றிக்குப் பிறகு, பாகிஸ்தான் கேப்டன் சல்மான் அலி ஆகா, இத்தகைய வெற்றி எங்கள் அணி 'சிறப்பானது' என்று நம்ப வைக்கிறது என்று கூறினார்.
இறுதிப் போட்டியில் இந்தியா உட்பட எந்த அணியையும் தோற்கடிக்கும் திறன் பாகிஸ்தானுக்கு இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
போட்டிக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், "இதுபோன்ற போட்டிகளில் நாங்கள் வெற்றி பெற்றதால், நாங்கள் நிச்சயமாக ஒரு சிறப்பான அணிதான். அனைவரும் சிறப்பாக செயல்பட்டனர். பேட்டிங்கில் சில முன்னேற்றங்கள் தேவை, ஆனால் நாங்கள் அதற்காக கடுமையாக உழைத்து வருகிறோம்" என்றார்.
41 ஆண்டுகால ஆசியக் கோப்பை வரலாற்றில் முதல் முறையாக, ஞாயிற்றுக்கிழமையன்று துபையில் நடைபெறும் இறுதிப் போட்டியில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன.
ஒரு முறை குரூப் போட்டியிலும், மற்றொரு முறை சூப்பர் 4 போட்டியிலும் என இந்த ஆசியக் கோப்பையில் இந்தியாவும் பாகிஸ்தானும் இரண்டு முறை நேருக்கு நேர் மோதியுள்ளன.
இரண்டு போட்டிகளிலும் இந்தியா, வெற்றி பெற்றது.
இந்தியாவுக்கு எதிரான இறுதிப் போட்டி குறித்து பாகிஸ்தான் கேப்டன் சல்மான் அலி ஆகா கூறுகையில், "நாங்கள் மிகவும் உற்சாகமாக இருக்கிறோம். என்ன செய்வது என்று எங்களுக்குத் தெரியும். எங்கள் அணி மிகவும் வலிமையானது, எங்களால் எந்த அணியையும் தோற்கடிக்க முடியும். அவர்களைத் தோற்கடிக்க ஞாயிற்றுக்கிழமை களத்தில் இறங்குவோம்'' என்றார்.
'நாங்கள் தயாராக இருக்கிறோம்'- பாகிஸ்தான் அணி

பட மூலாதாரம், AFP via Getty Images
தனது ஆல்ரவுண்ட் செயல்திறனுக்காக ஆட்ட நாயகன் விருதை வென்ற ஷாஹீன் ஷா அப்ரிடிக்கு சல்மான் அலி ஆகா சிறப்புப் பாராட்டு தெரிவித்தார்.
"ஷாஹீன் ஒரு சிறப்பு வீரர். அணிக்கு என்ன தேவையோ அதை அவர் செய்கிறார். நான் அவருக்காக மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். நாங்கள் 15 ரன்கள் பின் தங்கியிருந்தோம். ஆரம்பத்தில் எங்கள் பந்துவீச்சில் அழுத்தத்தை உருவாக்கினோம். புதிய பந்தில் நாங்கள் நன்றாக பந்து வீசினோம். இப்படி பந்து வீசும் போதெல்லாம், போட்டியில் வெற்றி பெற முடியும்" என்று ஆகா தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், "சிறப்பாக பீல்டிங் செய்கிறோம். இதற்காக கூடுதல் பயிற்சி எடுத்து வருகிறோம். உங்களால் பீல்டிங் செய்ய முடியாவிட்டால், உங்களுக்கு அணியில் இடமில்லை என்று மைக் ஹெசன் கூறியுள்ளார்" எனக் குறிப்பிட்டார்.
முன்னதாக அப்ரிடி 13 பந்துகளில் 19 ரன்கள் எடுத்திருந்தார், பின்னர் 17 ரன்களுக்கு மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
தனது ஆட்டத்தைப் பற்றி அப்ரிடி கூறுகையில், "ஆரம்ப விக்கெட்டுகள் விழுந்த பிறகு, அணி என்னை அனுப்ப முடிவு செய்தது. அந்த சிக்ஸர்கள் போட்டியை எங்களுக்கு சாதகமாக மாற்றின" என்றார்.
இந்தியாவுக்கு எதிரான இறுதிப் போட்டி குறித்து அவர் கூறுகையில், "நாங்கள் தயாராக இருக்கிறோம்" என்று தெரிவித்தார்.
போட்டிக்குப் பிறகு, பாகிஸ்தான் பயிற்சியாளர் மைக் ஹெசன் இந்தியாவுக்கு எதிரான உத்தி குறித்துப் பேசினார்.
இந்தியாவுக்கு எதிராக பாகிஸ்தான் ஏதேனும் 'மனத் தடையுடன்' விளையாடுகிறதா? என்ற கேள்விக்கு பதிலளித்த ஹெசன், "முற்றிலும் இல்லை" என்று கூறினார்.
மேலும், "முதல் போட்டியை விட இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது போட்டியில் நாங்கள் மிகவும் சிறப்பாக செயல்பட்டோம் என்று நான் நினைக்கிறேன். முதல் ஆட்டத்தில், நாங்கள் அவ்வளவு சுறுசுறுப்பாக இல்லை, மேலும் இந்தியா ஆட்டத்தை கட்டுப்படுத்த அனுமதித்தோம்.
ஆனால் கடைசி போட்டியில், நீண்ட நேரம் எங்கள் கட்டுப்பாட்டில் போட்டி இருந்தது. அபிஷேக் சர்மாவின் அற்புதமான இன்னிங்ஸ் போட்டியை எங்களிடமிருந்து பறித்தது."என்றார்.
பின்னர் இந்தியாவை தோற்கடிப்பதற்கான உத்தி குறித்து ஹெசன் கூறுகையில், "இந்தியாவை நீண்ட நேரம் அழுத்தத்தில் வைத்திருக்க, நாங்கள் ஒரு வழியைக் கண்டுபிடிக்க வேண்டும். கடந்த போட்டியில், பேட்டிங் செய்யும் போது 10 ஓவர்களுக்கு இதைச் செய்தோம்" என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், "நாங்கள் இதுவரை விளையாடிய அனைத்து போட்டிகளும் கோப்பையை வெல்லும் முயற்சியில் விளையாடியவை. இதைப் பற்றி நாங்கள் ஒவ்வொரு கணமும் பேசி வருகிறோம். இறுதிப் போட்டி மிக முக்கியமான போட்டி. எங்கள் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்த முயற்சிப்போம்"என்று தெரிவித்தார்.
சமீபத்திய போட்டிகளில் இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான பதற்றம் குறித்து ஹெசன் கூறுகையில், "கிரிக்கெட்டில் கவனம் செலுத்துவதே எனது செய்தி, அதைத்தான் நாங்கள் செய்யப் போகிறோம். என்ன நடந்தது என்பது பற்றி என்னை விட உங்களுக்கு அதிகம் தெரியும். நான் கிரிக்கெட்டை மட்டுமே கையாள்கிறேன்" என்றார்.
அப்ரிடியின் ஃபார்ம்

பட மூலாதாரம், AFP via Getty Images
"பாகிஸ்தானுக்கு மிகவும் கூர்மையான பந்துவீச்சு தேவைப்பட்டபோது ஷாஹீன் அப்ரிடி தனது சிறந்த ஃபார்முக்கு திரும்பியது மகிழ்ச்சியளிக்கிறது. அதிலும் குறிப்பிடத்தக்கது என்னவெனில், இப்போது விளையாடும் ஷாஹீன், அவரது ஆரம்பகாலத்தில் இருந்ததை விட இன்னும் ஆபத்தானவராகத் தோன்றுகிறார்" என பிபிசி உருதுவின் கிரிக்கெட் ஆய்வாளர் சமி செளத்ரி குறிப்பிட்டுள்ளார்.
"ஷாஹீனிடம் இப்போது அதிக 'ஆயுதங்கள்' உள்ளன. முன்னதாக, அவர் பொதுவாக ஒரு வகையான ஸ்விங் மற்றும் அவரது வேகத்தை நம்பியிருந்தார். ஆனால் இப்போது அவர் நல்ல வேகத்துடன் பலவிதமான ஸ்விங்களை முயற்சிக்கிறார்" என்றும் சமி பதிவு செய்துள்ளார்.
''இந்தப் போட்டியில் பாகிஸ்தான் வெளிப்படுத்திய கூட்டு முயற்சி 'அற்புதமான' வெற்றிக்கு வழிவகுத்தது மட்டுமல்லாமல், அணியின் நம்பிக்கையையும் அதிகரித்தது. இப்போது, இதுபோன்ற சவால்களைச் சமாளித்து வெற்றி பெறக் கற்றுக்கொண்டால், அவர்கள் சாம்பியன்களாக முடியும் என்று அவர்கள் நம்புகிறார்கள்'' என சமி கூறியுள்ளார்.
இந்தியாவின் செயல்திறன்

பட மூலாதாரம், AFP via Getty Images
இந்த ஆசியக் கோப்பையில் இந்தியா இதுவரை சாம்பியன்களைப் போலவே விளையாடியுள்ளது. இந்திய அணி மூன்று குழு (Group) போட்டிகளிலும், சூப்பர்-4 சுற்றில் இரண்டு போட்டிகளிலும் எளிதாக வெற்றி பெற்றுள்ளது.
இந்திய அணி தற்போது சிறந்த ஃபார்மில் உள்ளது. சில போட்டிகளில் பந்துவீச்சு எதிர்பார்த்தளவில் அமையாதபோது, பேட்ஸ்மேன்கள் அதைக் கையாண்டு அணியை காப்பாற்றினர்.
சில நேரங்களில் பந்துவீச்சாளர்கள் எதிரணியைப் பெரிதும் சிரமப்படுத்தினர். இந்திய அணியைப் பொறுத்தவரை, தொடக்க ஜோடியான அபிஷேக் சர்மாவும் சுப்மன் கில்லும் கிட்டத்தட்ட ஒவ்வொரு போட்டியிலும் இந்தியாவுக்கு நல்ல தொடக்கத்தை அளித்து வருகின்றனர்.
ஆசிய கோப்பையில், அபிஷேக் சர்மாவின் அபாரமான இன்னிங்ஸ் விவாதப் பொருளாக மாறியுள்ளது.
அதே போல், இந்தியாவின் சுழற்பந்து வீச்சாளர்களும் சிறப்பாக செயல்பட்டுள்ளனர். குல்தீப் யாதவ், வருண் சக்ரவர்த்தி மற்றும் அக்சர் படேல் ஆகிய மூவரும் இந்தியாவின் வெற்றியில் முக்கிய பங்கு வகித்துள்ளனர்.
பாகிஸ்தானுக்கு எதிரான சூப்பர்-4 போட்டியில் ஜஸ்பிரித் பும்ரா அதிக ரன்களை கொடுத்தார். ஆனால், வங்கதேசத்துக்கு எதிரான போட்டியில் தனது ஆட்டத்தால் அதனை ஈடு செய்தார். இந்தப் போட்டியில் இந்திய மிடில் ஆர்டர் தடுமாறியது, இது அணிக்கு கவலையை ஏற்படுத்தியிருக்கலாம். ஆனாலும், ஹர்திக் பாண்ட்யாவின் பேட்டிங் சரியான நேரத்தில் கைகொடுத்ததால், இந்தியா போட்டியை வென்றது.
இந்தியாவைப் பொறுத்தவரை, கேப்டன் சூர்யகுமாரின் பார்ம் சற்று கவலையளிக்கிறது.
பாகிஸ்தானுக்கு எதிரான குரூப் போட்டியில் அவர் 47 ரன்கள் எடுத்தார், ஆனால் அதைத் தாண்டி அவரால் அதிகம் செயல்பட முடியவில்லை.
இந்தியா vs பாகிஸ்தான் என்ற போட்டி உள்ளதா?

பட மூலாதாரம், Getty Images
ஐந்து அல்லது அதற்கு மேற்பட்ட அணிகள் பங்கேற்கும் போட்டிகளைப் பற்றிப் பேசினால், இந்தியாவும் பாகிஸ்தானும் ஐந்து முறை இறுதிப் போட்டியில் மோதியுள்ளன. இதில் இந்தியா இரண்டில் வென்றுள்ளது, பாகிஸ்தான் அணி மூன்றில் பட்டத்தை வென்றுள்ளது.
ஆனால் சமீப காலத்தைப் பார்த்தால், இந்திய அணி ஒருநாள் அல்லது டி-20 என இரு வடிவங்களிலும் சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது.
இந்தியா 2023 ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பையின் இறுதிப் போட்டியை எட்டியது, மேலும் 2024 டி20 உலகக் கோப்பையையும் வென்றது.
இதன் பிறகு, 2025-ஆம் ஆண்டு சாம்பியன்ஸ் டிராபியிலும் இந்தியா பட்டத்தை வென்றது.
இந்த ஆசியக் கோப்பையின் சூப்பர் 4 போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்திய பிறகு நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், இந்திய அணி கேப்டன் சூர்யகுமார், இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே எந்தப் போட்டியும் இல்லை என்றும், இப்போது அது குறித்து கேள்விகள் கேட்பதை நிறுத்த வேண்டும் என்றும் கூறியிருந்தார்.
பாகிஸ்தான் இந்தியாவுக்கு சவால் தரும் போட்டியாளர் அல்லர் என்று கூறிய சூர்யகுமார், "நீங்கள் இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே உள்ள போட்டி பற்றி கேள்வி கேட்பதை நிறுத்திக்கொள்ள வேண்டும். ஏனென்றால் என்னைப் பொருத்தவரை இரு அணிகள் 15-20 போட்டிகள் விளையாடி, ஒரு அணி 7-8 என்கிற கணக்கில் முடிவுகள் அமைந்தால் அதை நல்ல கிரிக்கெட் எனச் சொல்லலாம். ஆனால் 13-0, 10-1 (சரியான எண்கள் எனக்கு தெரியவில்லை) என இருந்தால் அது போட்டியல்ல." எனத் தெரிவித்தார்.

பாகிஸ்தான் அணி, இனி இந்தியாவுடன் போட்டி போடும் அளவுக்கு வலிமையானதாக இல்லை என பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் வாசிம் அக்ரம் ஒப்புக்கொண்டார்.
முன்னாள் இந்திய கேப்டன் சவுரவ் கங்குலியும் இதேபோன்ற கருத்தைக் கொண்டுள்ளார்.
சமீபத்தில் அவர், "இந்தியா-பாகிஸ்தான் போட்டிகள் மிகப் பெரிய அளவில் விளம்பரப்படுத்தப்படுகின்றன. ஆனால் கடந்த நான்கு-ஐந்து ஆண்டுகளில் எதுவும் பலனளிக்கவில்லை, முடிவுகள் எப்போதும் ஒரு சார்பாகவே இருந்து வருகின்றன" எனக் கூறியிருந்தார்.
ஆனால், பாகிஸ்தான் அணி இறுதிப் போட்டிக்கு முன் மீண்டும் தன்னம்பிக்கை பெற்ற விதத்தைப் பார்க்கும்போது, இறுதிப்போட்டியில் பலப்பரிட்சைக்கு வாய்ப்பு உள்ளதாகத் தெரிகிறது
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு












