போர்களை நிறுத்தும் டிரம்பின் அணுகுமுறைகள் புதினிடம் எடுபடாதது ஏன்?

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், அந்தோணி ஸுர்ச்சர்
- பதவி, வட அமெரிக்கச் செய்தியாளர்
அமெரிக்கா-ரஷ்யா தலைவர்கள் சந்திப்பு குறித்து வெளியான செய்திகள் மிகைப்படுத்தப்பட்டவை போல தெரிகிறது.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினை புடாபெஸ்ட்டில் "இரண்டு வாரங்களுக்குள்" சந்திக்க திட்டமிட்டதாகக் கூறிய சில நாட்களுக்குப் பிறகு, அந்த சந்திப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இரு நாடுகளின் முக்கிய ராஜ்ஜீய அதிகாரிகளின் முதற்கட்ட கூட்டமும் ரத்து செய்யப்பட்டுள்ளது.
"நான் வீணான சந்திப்பை விரும்பவில்லை. நேரத்தை வீணடிக்க விரும்பவில்லை. என்ன நடக்கிறது என்று பார்ப்போம்," என்று செவ்வாய்க்கிழமை பிற்பகல், வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களிடம் பேசியபோது டிரம்ப் கூறினார்.
இந்த சந்திப்பு ரத்து செய்யப்பட்டிருப்பது, யுக்ரேன் போரை முடிவுக்குக் கொண்டுவர டிரம்ப் எடுக்கும் முயற்சிகளில் புதிய திருப்பமாக உள்ளது. அவர் சமீபத்தில் காஸாவில் போர் நிறுத்த ஒப்பந்தத்திற்கும், பணயக்கைதிகள் விடுதலைக்கும் வித்திட்டிருந்தார்.
கடந்த வாரம் எகிப்தில் அந்த ஒப்பந்தத்தை கொண்டாடிய போது, டிரம்ப் தனது முக்கிய ராஜ்ஜீய பேச்சுவார்த்தை பிரதிநிதி ஸ்டீவ் விட்காஃபிடம், "இப்போது ரஷ்யா விவகாரத்தையும் முடிக்க வேண்டும்" என்று கூறினார்.
ஆனால், காஸாவில் விட்காஃப் குழுவுக்கு சாதகமாக இருந்த சூழ்நிலைகள், நான்கு ஆண்டுகளாக நீடிக்கும் யுக்ரேன் போரில் ஏற்படுவது கடினமாக இருக்கலாம்.

பட மூலாதாரம், EPA
வித்தியாசம் என்ன?
விட்காஃப் கூற்றுப்படி, காஸாவில் ஒப்பந்தம் ஏற்படுவதற்கான முக்கிய காரணம், கத்தாரில் ஹமாஸ் பேச்சுவார்த்தை பிரதிநிதிகளை இஸ்ரேல் தாக்கியதுதான்.
இது அமெரிக்காவுடன் நட்புறவில் உள்ள அரபு நாடுகளை கோபப்படுத்தியது, அதனால் , இஸ்ரேலிய பிரதமர் நெதன்யாகுவை ஒப்பந்தம் செய்யுமாறு டிரம்பால் அழுத்தம் கொடுக்க முடிந்தது.
டிரம்ப், தனது முதல் பதவிக்காலத்தில் இருந்தே இஸ்ரேலுக்கு ஆதரவாக செயல்பட்டுள்ளார்.
அமெரிக்க தூதரகத்தை ஜெருசலேமுக்கு மாற்றியது, மேற்கு கரையில் இஸ்ரேல் குடியேற்றங்களை சட்டப்படி ஏற்றுக்கொண்டது, சமீபத்தில் இரானுக்கு எதிரான இஸ்ரேல் ராணுவ நடவடிக்கைக்கு ஆதரவு அளித்தது போன்றவற்றை இதற்கான உதாரணங்களாகக் கூறலாம்.
இஸ்ரேலியர்களிடம் டிரம்ப், நெதன்யாகுவை விட பிரபலமானவர்.
இது அவருக்கு நெதன்யாகு மீது தனித்துவமான செல்வாக்கை அளித்தது. அரபு நாடுகளுடன் டிரம்ப் கொண்டிருந்த அரசியல்-பொருளாதார உறவுகள், ஒப்பந்தத்திற்கு அழுத்தம் கொடுக்கும் பலத்தை வழங்கின.
ஆனால்,யுக்ரேன் போரில் டிரம்புக்கு அதுபோன்ற செல்வாக்கு இல்லை.
கடந்த ஒன்பது மாதங்களாக, அவர் புதினுக்கும் ஜெலன்ஸ்கிக்கும் அழுத்தம் கொடுக்க முயன்றாலும், அதனால் பெரிய மாற்றம் எதுவும் ஏற்படவில்லை.
ரஷ்ய எரிசக்தி ஏற்றுமதிக்கு புதிய தடைகள் விதிப்பதாகவும், யுக்ரேனுக்கு நீண்ட தூர இலக்குகளை தாக்கும் ஆயுதங்களை வழங்குவதாகவும் டிரம்ப் கூறியுள்ளார். ஆனால் அவ்வாறு செய்வது, உலகப் பொருளாதாரத்தை பாதிக்கக் கூடும் என்பதையும் அவர் அறிந்திருக்கிறார்.
ஜெலன்ஸ்கியை கண்டித்து, யுக்ரேனுக்கு உளவுத்தகவல் பகிர்வை நிறுத்திய டிரம்ப், ஒரு கட்டத்தில் ஆயுத உதவியையும் தற்காலிகமாக நிறுத்தினார். ஆனால், யுக்ரேனின் வீழ்ச்சி பிராந்தியத்தில் கடும் விளைவுகளை ஏற்படுத்தும் என்று ஐரோப்பிய நாடுகள் எச்சரித்ததால் பின்வாங்கினார்.
டிரம்ப் நேரடி சந்திப்புகளில் ஒப்பந்தங்கள் செய்யும் திறமையைப் பற்றி பெருமையாகப் பேசுகிறார். ஆனால், புதினையும் ஜெலன்ஸ்கியையும் அவர் சந்தித்த பிறகும், போர் முடிவை நோக்கி நகர்வதற்கான எந்த அறிகுறியும் இல்லை.

பட மூலாதாரம், Getty Images
நேரடி சந்திப்புகள் மூலம் ஒப்பந்தங்கள் செய்ய விரும்பும் டொனால்ட் டிரம்பின் விருப்பத்தை , ரஷ்ய அதிபர் புதின் தனது செல்வாக்கிற்கு பயன்படுத்திக் கொண்டிருக்கலாம்.
ஜூலை மாதத்தில், அமெரிக்க நாடாளுமன்றத்தில் ரஷ்யாவுக்கு எதிராக புதிய தடைகள் கொண்டு வருவதற்கு வாய்ப்பு இருந்தபோது, புதின் அலாஸ்காவில் ஒரு சந்திப்பு நடத்த ஒப்புக்கொண்டார். இதையடுத்து, அந்த தடை தொடர்பான சட்டம் நிறுத்தி வைக்கப்பட்டது.
கடந்த வாரம், அமெரிக்கா யுக்ரேனுக்கு டொமஹாக் ஏவுகணைகள் மற்றும் பேட்ரியாட் வான் பாதுகாப்பு அமைப்புகளை அனுப்ப திட்டமிட்டதாக செய்திகள் வெளியாகின. அப்போது, புதின் டிரம்பை தொடர்பு கொண்டார். அதன் பிறகு, டிரம்ப் புடாபெஸ்டில் உச்சிமாநாடு நடக்கலாம் என்று அறிவித்தார்.
அதற்கு அடுத்த நாள், டிரம்ப் யுக்ரேன் அதிபர் ஜெலன்ஸ்கியை வெள்ளை மாளிகையில் சந்தித்தார். அந்த சந்திப்பு பதற்றமாக இருந்ததாகவும், எந்த முடிவும் எட்டப்படவில்லை என்றும் கூறப்படுகிறது.
புதின் தன்னை ஏமாற்றவில்லை என்று டிரம்ப் கூறினார். "என் வாழ்நாளில் சிலர் என்னை ஏமாற்ற முயன்றிருக்கிறார்கள், ஆனால் நான் எப்போதும் வெற்றியுடன் வெளியே வந்துள்ளேன்," என்று அவர் கூறினார்.

யுக்ரேன் அதிபர் ஜெலன்ஸ்கி, நிகழ்வுகளின் வரிசையை சுட்டிக்காட்டினார். "நீண்ட தூர இலக்குகளை தாக்கும் ஆயுதங்கள் யுக்ரேனுக்கு கிடைப்பதற்கு குறைவான வாய்ப்புகளே உள்ளன என்று தெரிந்தவுடன், ரஷ்யா பேச்சுவார்த்தை மீதான ஆர்வத்தை தானாகவே குறைத்துவிட்டது," என்று அவர் கூறினார்.
சில நாட்களில், டிரம்பின் திட்டங்கள் மாறின.
முதலில், யுக்ரேனுக்கு டொமாஹாக் ஏவுகணைகள் மற்றும் பேட்ரியாட் வான் பாதுகாப்பு அமைப்புகளை அனுப்புவது பற்றி யோசித்தார். பின்னர், புதினுடன் புடாபெஸ்டில் உச்சிமாநாடு நடத்துவது பற்றி பேசினார். டான்பாஸ் உள்ளிட்ட ரஷ்யாவால் இன்னும் கைப்பற்ற இயலாத பகுதிகளையும் விட்டுக்கொடுக்குமாறு ஜெலன்ஸ்கிக்கு தனிப்பட்ட முறையில் அழுத்தம் கொடுத்தார்.
தற்போது துருப்புகள் எங்கே நிலைகொண்டுள்ளதோ அந்த நிலையிலேயே போர் நிறுத்தம் அறிவிக்க வேண்டும் என்று இப்போது டிரம்ப் கூறுகிறார். ஆனால், ரஷ்யா இதை ஏற்க மறுக்கிறது.
கடந்த ஆண்டு தேர்தல் பிரசாரத்தில், டிரம்ப் யுக்ரேன் போரை சில மணி நேரத்தில் முடிவுக்கு கொண்டுவருவேன் என்று வாக்குறுதி அளித்திருந்தார். இப்போது அவர் அந்த வாக்குறுதியை கைவிட்டு, போரை முடிப்பது எதிர்பார்த்ததைவிட கடினம் என்பதை உணர்ந்துள்ளார்.
இது டிரம்ப் கொண்டிருக்கக் கூடிய அதிகாரத்தின் வரம்பை ஒப்புக்கொள்ளும் அரிய தருணம். இரு தரப்புகளும் சண்டையை நிறுத்த விரும்பாத போது அல்லது நிறுத்த முடியாத போது, அமைதிக்கான வழியை கண்டுபிடிப்பது மிகவும் சவாலானதாக உள்ளது.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு












