மோதி அமைச்சரவையில் யாருக்கு எந்த இலாகா? சந்திரபாபு நாயுடு, நிதிஷ் கட்சிகள் பெற்றது என்ன?

பிரதமர் நரேந்திர மோதி தலைமையிலான மத்திய அமைச்சரவையில் யார் யாருக்கு என்னென்ன இலாகா என்ற விவரம் அறிவிக்கப்பட்டுள்ளது. முக்கிய துறைகள் எந்தெந்த அமைச்சர்களுக்கு வழங்கப்பட்டுள்ளன? சந்திரபாபு நாயுடு, நிதிஷ் குமார் கட்சிகள் உள்பட பாஜகவின் கூட்டணி கட்சிகளுக்கு என்னென்ன துறைகள் ஒதுக்கப்பட்டுள்ளன?

நரேந்திர மோதி, ஜுன் 9-ஆம் தேதி, ஞாயிற்றுக்கிழமை, மூன்றாவது முறையாக பிரதமராக பதவியேற்றுக்கொண்டார். ஜவஹர்லால் நேருவுக்கு அடுத்து தொடர்ச்சியாக மூன்று முறை பிரதமரானவர் என்ற சிறப்பை மோதி பெற்றிருக்கிறார்.

அவருடன் 71 அமைச்சர்களும் பதவியேற்றுக் கொண்டனர். இவர்களுள் 30 பேர் கேபினட் அமைச்சர்கள், 5 பேர் இணை அமைச்சர்கள் (தனி பொறுப்பு) மற்றும் 36 பேர் இணை அமைச்சர்கள் ஆவர்.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

ராஜ்நாத் சிங், அமித் ஷா, நிர்மலா சீதாராமன், எஸ். ஜெய்சங்கர், நிதின் கட்கரி, பியூஷ் கோயல் ஆகியோரும் மோதி தலைமையிலான மூன்றாவது அரசில் இடம்பெற்றுள்ளனர். இந்த முறை பாஜக தலைவர் ஜே.பி. நட்டாவும் கேபினட் அமைச்சராக பதவியேற்றுள்ளார்.

பாஜக தலைமையிலான கூட்டணி அரசில் தெலுங்கு தேசம் கட்சி, ஐக்கிய ஜனதா தளம், சிவசேனா (ஏக்நாத் ஷிண்டே பிரிவு), லோக் ஜனசக்தி கட்சி (ராம் விலாஸ்), மதச்சார்பற்ற ஜனதா தளம், ராஷ்டிரிய லோக்தளம், இந்துஸ்தானி அவாம் மோர்ச்சா (எச்ஏஎம்), இந்தியக் குடியரசு கட்சி உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகளை சேர்ந்த 11 பேர் அமைச்சரவையில் உள்ளனர்.

அமைச்சர்களுக்கான இலாகா ஒதுக்கீடு குறித்த அறிவிப்பு இந்திய அரசின் பத்திரிகை தகவல் பணியகத்தில் (PIB) வெளியிடப்பட்டது.

இதில், ராஜ்நாத் சிங், அமித் ஷா, நிதின் கட்கரி, நிர்மலா சீதாராமன், எஸ். ஜெய்சங்கர் ஆகியோர் முன்பு வகித்த துறைகளை அப்படியே தக்க வைத்துக் கொண்டுள்ளனர். அவர்களுக்கு முறையே பாதுகாப்பு, உள்துறை, சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை, நிதி, வெளியுறவு இலாகாக்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. இதன் மூலம், முக்கிய இலாகாக்களை பாஜக தன்னிடமே வைத்துக் கொண்டுள்ளது.

எந்தெந்த அமைச்சர்களுக்கு என்னென்ன துறைகள் ஒதுக்கப்பட்டுள்ளன? தமிழ்நாட்டைச் சேர்ந்த எல்.முருகனுக்கு இம்முறை எந்த இலாகா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது? கூட்டணி கட்சிகளின் அமைச்சர்களுக்கு என்னென்ன துறைகள் ஒதுக்கப்பட்டுள்ளன. முழு பட்டியல் இதோ:

கேபினட் அமைச்சர்கள் பட்டியல்

1) நரேந்திர மோதி - இந்திய அரசின் பணியாளர்கள், பொதுமக்கள் குறைகள் மற்றும் ஓய்வூதிய அமைச்சகம்; இந்திய அணுசக்தித் துறை; இந்திய விண்வெளி துறை; அனைத்து முக்கிய கொள்கை விவகாரங்கள்; வேறு எந்த அமைச்சர்களுக்கும் ஒதுக்கப்படாத மற்ற துறைகள்

2) ராஜ்நாத் சிங் - பாதுகாப்பு துறை

3) அமித் ஷா - உள்துறை; கூட்டுறவு துறை

4) நிதின் கட்கரி - சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை

5) ஜே.பி.நட்டா - சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை; ரசாயனங்கள் மற்றும் உரங்கள் துறை

6) சிவராஜ் சிங் சௌஹான் - வேளாண்மை மற்றும் விவசாயிகள் நலத்துறை; மற்றும் ஊரக வளர்ச்சித் துறை

7) நிர்மலா சீதாராமன் - நிதி மற்றும் பெருநிறுவன விவகாரங்கள் துறை

8) எஸ்.ஜெய்சங்கர் - வெளியுறவு

9) மனோகர் லால் - வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் துறை; மற்றும் மின்சாரம்

10) ஹெச்.டி.குமாரசாமி (மதச்சார்பற்ற ஜனதா தளம்) - கனரக தொழில்கள் அமைச்சகம்; இரும்பு மற்றும் எஃகு தொழில்துறை

11) பியூஷ் கோயல் - வர்த்தகம் மற்றும் தொழில்துறை

12) தர்மேந்திர பிரதான் - கல்வி

13) ஜிதன் ராம் மாஞ்சி (ஹிந்துஸ்தானி அவாம் மோர்ச்சா) - சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்கள்

14) லல்லன் சிங் (ராஜீவ் ரஞ்சன்) (ஐக்கிய ஜனதா தளம்) - பஞ்சாயத்து ராஜ் மற்றும் மீன்வளம், கால்நடை மற்றும் பால்வளத்துறை

15) சரபானந்த சோனோவால் - துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வழிகள் துறை

16) கிஞ்சரப்பு ராம் மோகன் (தெலுங்கு தேசம் கட்சி) - விமான போக்குவரத்து துறை

17) வீரேந்திர குமார் - சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை

18 ஜுவால் ஓரம் - பழங்குடி நலத்துறை

19) பிரகலாத் ஜோஷி - நுகர்வோர் நலன், உணவு மற்றும் பொது விநியோகம்; மற்றும் புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தித்துறை

20) கிரிராஜ் சிங் - ஜவுளித்துறை

21) அஷ்வினி வைஷ்ணவ் - ரயில்வே, இந்தியத் தகவல் மற்றும் ஒளிபரப்பு, மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை

22) ஜோதிராதித்ய சிந்தியா - இந்தியத் தொலைத்தொடர்பு துறை; மற்றும் வடகிழக்கு பிராந்திய மேம்பாட்டுத்துறை

23) பூபேந்தர் யாதவ் - சுற்றுச்சூழல் மற்றும் வனங்கள்

24) அன்னபூர்ணா தேவி - பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாடு

25) கஜேந்திர சிங் - கலாசாரம் மற்றும் சுற்றுலா அமைச்சகம்

26) கிரண் ரிஜிஜு - நாடாளுமன்ற விவகாரங்கள்; மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை

27) ஹர்தீப் சிங் புரி - பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு துறை

28) மன்சுக் மாண்டவியா - தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம்; மற்றும் இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டு அமைச்சகம்

29) ஜி கிஷன் ரெட்டி - நிலக்கரி அமைச்சகம்; மற்றும் சுரங்க அமைச்சகம்

30) சிராக் பாஸ்வான் - லோக் ஜனசக்தி கட்சி (ராம் விலாஸ்) - உணவு பதப்படுத்தும் தொழில்கள் அமைச்சகம்

31) சி.ஆர்.பட்டீல் - ஜல் சக்தி அமைச்சகம் (நீர் ஆதாரங்கள்)

இணை அமைச்சர்கள் (தனி பொறுப்பு)

1) இந்தர்ஜித் சிங் - புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகம் (தனி பொறுப்பு); திட்டமிடல் அமைச்சகம் (தனி பொறுப்பு); மற்றும் கலாசார அமைச்சகம்

2) ஜிதேந்திர சிங் - இந்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகம் (தனி பொறுப்பு); புவி அறிவியல் அமைச்சகம் (தனி பொறுப்பு); பிரதமர் அலுவலகம்; இந்திய அரசின் பணியாளர்கள், பொதுமக்கள் குறைகள் மற்றும் ஓய்வூதிய அமைச்சகம்; அணுசக்தித்துறை; மற்றும் இந்திய விண்வெளி துறை

3) அர்ஜுன் ராம் மேக்வால் - சட்டம் மற்றும் நீதி அமைச்சகம் (தனி பொறுப்பு); மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் அமைச்சகம்

4) பிரதாப்ராவ் கண்பத்ராவ் ஜாதவ் - சிவசேனா - ஆயுஷ் அமைச்சகம் (தனி பொறுப்பு); சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்

5) ஜெயந்த் சிங் சௌதரி - ராஷ்ட்ரிய லோக் தளம் - திறன் மேம்பாடு மற்றும் தொழில்முனைவோர் அமைச்சகம் (தனி பொறுப்பு); மற்றும் கல்வித்துறை அமைச்சகம்

இணை அமைச்சர்கள்

1) ஜிதின் பிரசாதா - வர்த்தகம் மற்றும் தொழில் அமைச்சகம்; மற்றும் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம்

2) நித்யானந்த் ராய் - உள்துறை அமைச்சகம்

3) ஸ்ரீபாத் யெஸ்ஸோ நாய்க் - மின்சக்தித்துறை அமைச்சகம்; மற்றும் புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகம்

4) பங்கஜ் சௌத்ரி - நிதித்துறை அமைச்சகம்

5) எஸ்.பி சிங் பாகேல் - மீன்வளம், கால்நடை வளர்ப்பு மற்றும் பால்வளத்துறை அமைச்சகம்; மற்றும் பஞ்சாயத்து ராஜ் அமைச்சகம்

6) கிருஷண் பால் - கூட்டுறவு அமைச்சகம்

7) ஷோபா கரண்ட்லாஜே - குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில்கள் அமைச்சகம்; மற்றும் தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம்

8) கீர்த்தி வர்தன் சிங் - சுற்றுச்சூழல் மற்றும் வனங்கள் அமைச்சகம்; மற்றும் வெளியுறவுத் துறை அமைச்சகம்

9) ராம்தாஸ் அத்வாலே - இந்தியக் குடியரசுக் கட்சி - சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம்

10) பி.எல்.வர்மா - நுகர்வோர் நலன், உணவு மற்றும் பொது விநியோக அமைச்சகம்; மற்றும் சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம்

11) ஷாந்தனு தாகூர் - துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வழிகள் அமைச்சகம்

12) அனுப்ரியா படேல் - சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்; மற்றும் ரசாயனங்கள் மற்றும் உரங்கள் அமைச்சகம்

13) சுரேஷ் கோபி - பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகம்; மற்றும் சுற்றுலாத் துறை அமைச்சகம்

14) வி.சோமண்ணா - ஜல் சக்தி அமைச்சகம்; மற்றும் ரயில்வே அமைச்சகம்

15) எல்.முருகன் - இந்தியத் தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம்; மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் அமைச்சகம்

16) அஜய் தம்தா - சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சகம்

17) பெம்மாசனி சந்திரசேகர் - தெலுங்கு தேசம் கட்சி - ஊரக மேம்பாட்டு அமைச்சகம்; மற்றும் இந்தியத் தொலைத்தொடர்பு அமைச்சகம்

18) பாகீரத் சௌத்ரி - விவசாயத் துறை அமைச்சகம்

19) சதீஷ் சந்திர தூபே - நிலக்கரி அமைச்சகம்; மற்றும் சுரங்க அமைச்சகம்

20) சஞ்சய் சேத் - பாதுகாப்புத் துறை அமைச்சகம்

21) ரவ்னீத் சிங் பிட்டு - உணவு பதப்படுத்தும் தொழில்கள் அமைச்சகம்; மற்றும் இந்திய ரயில்வே அமைச்சகம்

22) துர்கா தாஸ் உய்கே - பழங்குடியினர் விவகார அமைச்சகம்

23) ரக்ஷா நிகில் கட்ஸே - இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டு அமைச்சகம்

24) சுகந்தா மஜும்தார் - கல்வித்துறை; மற்றும் வடகிழக்கு பிராந்திய மேம்பாட்டு அமைச்சகம்

25) ராஜ்பூஷன் சௌதரி - ஜல் சக்தி அமைச்சகம்

26) பூபதிராஜு ஸ்ரீனிவாச வர்மா - கனரகத் தொழிலகள் அமைச்சகம்; மற்றும் இரும்பு மற்றும் எஃகு தொழில்துறை அமைச்சகம்

27) ஹர்ஷ் மல்ஹோத்ரா - பெருநிறுவன விவகாரங்கள் துறை அமைச்சகம்; மற்றும் சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சகம்

28) டோகன் சாஹு - வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சகம்

29) நிமுபென் பம்பானியா - நுகர்வோர் நலன், உணவு மற்றும் பொது விநியோக அமைச்சகம்

30) முரளிதர் மொஹோல் - கூட்டுறவு அமைச்சகம்; மற்றும் இந்திய விமானப் போக்குவரத்து அமைச்சகம்

31) ஜார்ஜ் குரியன் - சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சகம்; மற்றும் மீன்வளம், கால்நடை வளர்ப்பு மற்றும் பால்வளத்துறை அமைச்சகம்

32) பபித்ர மகெரிட்டா - வெளியுறவுத் துறை அமைச்சகம்; மற்றும் ஜவுளி அமைச்சகம்

33) சாவித்திரி தாக்குர் - பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம்

34) கமலேஷ் பாஸ்வான் - ஊரக மேம்பாட்டு அமைச்சகம்

35) ராம்நாத் தாகூர் - ஐக்கிய ஜனதா தளம் - விவசாயத் துறை அமைச்சகம்

36) பந்தி சஞ்சய் குமார் - உள்துறை அமைச்சகம்

சந்திரபாபு, நிதிஷ் கட்சிகள் பெற்றது என்ன?

பாஜகவின் முக்கிய கூட்டணி கட்சியான சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சியின் கிஞ்சரப்பு ராம் மோகனுக்கு விமான போக்குவரத்து துறை (கேபினட்) அமைச்சகம் வழங்கப்பட்டுள்ளது. அதேபோல், அக்கட்சியின் பெம்மாசனி சந்திரசேகருக்கு ஊரக மேம்பாட்டு அமைச்சகம்; மற்றும் இந்தியத் தொலைத்தொடர்பு துறை (இணையமைச்சர்) ஒதுக்கப்பட்டுள்ளது.

அதேபோன்று, நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளத்தை சேர்ந்த ராஜீவ் ரஞ்சன் சிங்குக்கு (கேபினட்) பஞ்சாயத்து ராஜ் அமைச்சகம்; மற்றும் மீன்வளம், கால்நடை மற்றும் பால்வளத்துறை ஒதுக்கப்பட்டுள்ளது. அதே கட்சியை சேர்ந்த ராம்நாத் தாக்கூருக்கு (இணையமைச்சர்) விவசாயத் துறை ஒதுக்கப்பட்டுள்ளது.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)