You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
தமிழ்நாட்டில் மாற்றத்தை எதிர்நோக்கி காத்திருக்கும் பா.ஜ.க.
- எழுதியவர், சஞ்சய் குமார்
- பதவி, பிபிசிக்காக
ஒரு நீண்ட கால இலக்கின் அடிப்படையில், தமிழகத்தில் ஏற்படும் அரசியல் மாற்றங்கள், மாநில அரசியலில் பா.ஜ.கவின் வளர்ச்சிக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கலாம்.
தற்போதைய சூழலில், இடங்கள் அடிப்படையில் ஒரு குறைந்தபட்ச பலனே அக்கட்சிக்கு கிடைத்துள்ளது.
மாநில அரசியல் இரு திராவிடக் கட்சிகள் கோலோச்சும் ஒரு மாநிலத்தில், பா.ஜ.க.வுக்கு கிடைத்துள்ள வாக்குகள் இந்த முறை ஒரு பெரிய மாற்றத்தை பிரதிபலிக்கின்றன.
2024 மக்களவைத் தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணி 39 இடங்களையும் கைப்பற்றியுள்ளது. இது மக்களவையில் பா.ஜ.க அறுதிப் பெரும்பான்மை கிடைக்காமல் இருப்பதை உறுதி செய்துள்ளது.
இது தேசிய அளவில் பாஜகவுக்கு முட்டுக்கட்டை போட்டிருக்கும் அதே சமயத்தில், தமிழகத்தில் அதன் வளர்ச்சிக்கான ஒரு வழியையும் திறந்து வைத்துள்ளது.
மாநிலத்தில் திமுக கூட்டணிக்கு எதிரான வலுவான கூட்டணி என்ற இடத்திலிருந்து அதிமுக விலகியதன் மூலமே பாஜகவுக்கு இது சாத்தியமாகியுள்ளது.
தமிழ்நாட்டின் இரு துருவ அரசியலை முறியடிப்பதற்காக, தமிழக பாஜக மீண்டும் மீண்டும் அவர்களது நட்சத்திர முகமான நரேந்திர மோதியை மாநிலத்திற்கு அழைத்து வந்து பிரசாரங்களை மேற்கொண்டது.
கடந்த இரண்டு ஆண்டுகளில், பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை நடத்திய "என் மண் என் மக்கள்" யாத்திரை அக்கட்சியை ஏறக்குறைய ஒவ்வொரு சட்டப்பேரவைத் தொகுதியிலும் கொண்டு சேர்த்துள்ளது.
லோக்நிதி-சிஎஸ்டிஎஸ் நடத்திய தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பின்படி, நாடாளுமன்றத் தேர்தலுக்கான பிரசாரத்தின் போது, மொபைல் போன் அழைப்புகள் மேற்கொள்வது, குறுஞ்செய்திகள் அனுப்புதல் மற்றும் சமூக ஊடகங்களைப் பயன்படுத்தும் முறைகளை பாஜக தீவிரமாக கையாண்டது.
கருத்துக்கணிப்பில் பேசியவர்கள் அளித்த பதிலின்படி, இதர கட்சிகளுடன் ஒப்பிடுகையில் சமூக வலைதளத்தின் மூலம் பாஜக ஏற்படுத்திய தாக்கம் மிகப்பெரியது. இதில் சமூக ஊடகங்கள் மூலம் பா.ஜ.கவால் தொடர்பு கொள்ளப்பட்டதாக 60 சதவிகிதத்திற்கும் அதிகமானோர் கூறியுள்ளனர். மேலும் 46 சதவிகிதத்தினர் தங்களை பா.ஜ.க வீடுவீடாக பிரசாரம் செய்ததன் வழியாக வந்தடைந்ததாக கூறியுள்ளனர்.
இருப்பினும், இதுவரை தமிழ்நாட்டின் எந்த ஒரு குறிப்பிட்ட சமூக பிரிவினரின் ஆதரவையும் பெற முடியாத நிலையில் பா.ஜ.க இருப்பதால், அதனால் அதன் எதிர்கால இலக்கை அடைய முடியுமா என்பது பெரும் கேள்வியாக இருக்கிறது.
தற்போதைய நிலவரப்படி, பா.ஜ.கவுக்கு தேர்தலில் கிடைத்திருக்கும் ஆதரவு உயர் சாதியினர், ஓபிசி பிரிவினர் மற்றும் தலித் மக்களிடையேயும் சமமாக பரவியிருப்பதாக எங்களின் பிந்தைய கருத்துக் கணிப்பு தெரிவிக்கிறது.
காங்கிரஸ் உள்ளிட்ட தோழமைக் கட்சிகளின் உதவியுடன் திமுகவால் அனைத்து சமூகத்தினரின் ஆதரவையும் கணிசமான அளவில் தக்க வைத்துக் கொள்ள முடிந்துள்ளது.
குறிப்பு: மீதமுள்ள வாக்குகள் இதர கட்சிகளுக்கு கிடைத்துள்ளன.
(லோக்நிதி-சிஎஸ்டிஎஸ் - இன் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு 191 நாடாளுமன்றத் தொகுதிகளில் உள்ள 776 இடங்களில் நடத்தப்பட்டது. கணக்கெடுப்பின் மாதிரிகள் தேசிய அளவில் இந்திய வாக்காளர்களின் சமூக சுயவிவரங்களை பிரதிநிதித்துவப்படுத்துகிறது. அனைத்து கணக்கெடுப்புகளும் நேர்காணல் முறையில், பெரும்பாலும் அவர்களது இல்லங்களில் எடுக்கப்பட்டது.)
மாற்றத்தை எதிர்நோக்கி காத்திருக்கும் பா.ஜ.க
இரட்டை இலக்க எண்ணிக்கையில் குறிப்பிடத்தகுந்த வாக்கு சதவீதத்தை பெற்ற போதிலும் கூட, பலதரப்பட்ட சமூக பிரிவுகளின் ஆதரவை பெறுவதில் பாஜக குறிப்பிடத்தகுந்த வகையில் எந்த ஒரு மாற்றத்தையும் ஏற்படுத்தவில்லை.
தமிழ்நாட்டில் நிலவி வரும் இருதுருவ அரசியலில் ஏற்பட்டிருக்கும் சிறிய தளர்வின் மூலம் வேண்டுமானால் பாஜக சற்று பலனடைந்திருக்கலாம்.
ஆனால், பாஜகவின் இந்த நுழைவு மாநிலத்தில் இருமுனைப் போட்டியை முடிவுக்குக் கொண்டு வருமா அல்லது பாஜக படிப்படியாக அ.தி.மு.க-வை தளர்த்தி, மாநில அரசியலில் இரண்டாவது துருவமாக தன்னை முன்னிலைப்படுத்திக் கொள்ளுமா என்பதைப் பொருத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)