3-ஆவது முறை பிரதமராகப் பதவியேற்றார் மோதி - விழாவில் என்ன நடந்தது? - முழு தகவல்கள்

டெல்லி குடியரசுத் தலைவர் மாளிகையில் இன்று (ஞாயிற்றுக்கிழமை, ஜூன் 9) மாலை 7:15 மணிக்கு, நரேந்திர மோதி, மூன்றாவது முறையாகப் பிரதமராகப் பதவியேற்றுக் கொண்டார்.

குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு அவருக்குப் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

நரேந்திர மோதியுடன், அமித் ஷா, ராஜ்நாத் சிங், நிதின் கட்கரி, உள்ளிட்ட பா.ஜ.க தலைவர்களும் அமைச்சர்களாகப் பதவியேற்றுக்கொண்டனர்.

விழாவில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கலந்துகொண்டார்.

இந்தப் பதவியேற்பு விழாவில் கலந்து கொள்வற்கு வெளிநாட்டுத் தலைவர்கள் பலர் டெல்லி வந்துள்ளனர். சார்க் நாடுகளின் (SAARC) தலைவர்களுக்கும் விழாவுக்கான அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

18-வது மக்களவைத் தேர்தலில் நரேந்திர மோதி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி 293 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. ஆனால், இந்த முறை பா.ஜ.க-வுக்கு தனிப்பெரும்பான்மை கிடைக்கவில்லை.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

பதவியேற்பு விழாவிற்கு வந்த பிரபலங்கள்

தொழிலதிபர்கள் முகேஷ் அம்பானி, மற்றும் கௌதம் அதானி, நடிகர் ரஜினிகாந்த், மற்றும் நடிகர்கள் ஷாருக்கான், அக்ஷய் குமார் ஆகியோர் பிரதமர் மோதியின் பதவியேற்பு விழாவில் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றுள்ளனர்.

பிரதமர் இல்லத்தில் நடந்த கூட்டம்

பிடிஐ செய்தி முகமையின் படி, இன்று நண்பகல் பிரதமர் இல்லத்தில் நடைபெற்ற கூட்டத்தில் பாஜக தலைவர்களான அமித் ஷா, ராஜ்நாத் சிங், நிதின் கட்கரி, பியூஷ் கோயல், அஸ்வினி வைஷ்ணவ், நிர்மலா சீதாராமன், மன்சுக் மாண்டவியா, எல். முருகன், ஜெய் ஷங்கர் மற்றும் கூட்டணி கட்சிகளைச் சேர்ந்த பிரமுகர்களும் கலந்துகொண்டனர்.

2014ஆம் ஆண்டு முதல், புதிய அமைச்சரவை பதவியேற்பு விழாவிற்கு முன்பாக இவ்வாறு கூட்டம் நடத்துவதை மோதி வழக்கமாக வைத்திருக்கிறார். இதில் கலந்துகொள்பவர்களே அமைச்சர்களாக நியமிக்கபப்டுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அப்போது பேசிய நரேந்திர மோதி, அமைச்சர்களாக நியமிக்கப்படுபவர்கள் எப்போதும் கண்ணியமாக இருக்க வேண்டும் என்றும், அரசு ஊழியர்கள் மற்றும் அதிகாரிகளை மதிக்க வேண்டும் என்றும் கூறினார்.

"உங்களுக்கு எந்த வேலை ஒதுக்கப்பட்டாலும், அதை நேர்மையாகச் செய்யுங்கள், தன்னடக்கம் உள்ளவர்களை மக்கள் நேசிப்பதால் பணிவாக நடந்துகொள்ளுங்கள்" என்று கூறினார் மோதி.

இந்தக் குழுவில், மனோகர் லால் கட்டார், சிவராஜ் சிங் சவுகான், பண்டி சஞ்சய் குமார் மற்றும் ரவ்னீத் சிங் பிட்டு ஆகிய புதிய முகங்களும் காணப்பட்டனர்.

டெல்லியில் செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள்

ஜவஹர்லால் நேருவுக்குப் பின்னர் தொடர்ந்து 3-வது முறையாக நாட்டின் பிரதமராகும் ஒரே நபர் என்ற அந்தஸ்த்தைப் பெறுகிறார் நரேந்திர மோதி. நேரு, 1952, 1957, 1962 தேர்தல்களில் வெற்றி பெற்று தொடர்ச்சியாக மூன்று முறை பிரதமராக இருந்தார். இந்நிலையில் தற்போது மோதி, 2014, 2019, 2024 என மூன்றாவது முறையாக பிரதமராகிறார்.

இந்த பதவியேற்பு விழாவிற்காக தலைநகர் டெல்லியில், குறிப்பாக குடியரசுத் தலைவர் மாளிகையைச் சுற்றி சிறப்பு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

டெல்லியில் 5 அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு, ராஷ்டிரபதி பவனைச் சுற்றியுள்ள பகுதிகளில் துணை ராணுவப் படைகள், என்எஸ்ஜி கமாண்டோக்கள் மற்றும் ஸ்னைப்பர்கள் நிறுத்தப்பட்டுள்ளனர்.

சுற்றுவட்டாரப் பகுதிகளை கண்காணிக்க ஆளில்லா விமானங்களும் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

இவை அனைத்தையும் தவிர, சுமார் 2,500 போலீசாரும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் என்று டெல்லி போலீஸ் அதிகாரி ஒருவர் செய்தி முகமையான பிடிஐயிடம் தெரிவித்தார்.

டெல்லி போக்குவரத்து காவல்துறையும் போக்குவரத்து தொடர்பான அறிவுரைகளை வெளியிட்டுள்ளது, "டெல்லியின் சில சாலைகளில் பிற்பகல் 2 மணி முதல் இரவு 11 மணி வரை வாகன போக்குவரத்து நிறுத்தப்படும். ராஷ்டிரபதி பவனைச் சுற்றியுள்ள சாலைகளில் அரசுப் பேருந்துகளும் அனுமதிக்கப்படவில்லை." என்று கூறியுள்ளது.

இந்தியா வந்தடைந்த வெளிநாட்டுத் தலைவர்கள்

நரேந்திர மோதியின் பதவியேற்பு விழாவில் பங்கேற்பதற்காக பூடான் பிரதமர் தஷோ ஷெரிங் டோப்கே மற்றும் இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கே ஆகியோர் இந்தியா வந்துள்ளனர் .

இந்த தகவலை வெளியுறவு அமைச்சக செய்தி தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் தெரிவித்துள்ளார்.

ரந்தீர் ஜெய்ஸ்வால் தனது எக்ஸ் (முன்னர் ட்விட்டர்) தள கணக்கில், "பிரதமர் தாஷோவின் இந்த பயணம் இந்தியாவிற்கும் பூடானுக்கும் இடையிலான உறவுகளை மேலும் வலுப்படுத்தும்." என்று தெரிவித்துள்ளார்.

மோதியின் பதவியேற்பு விழாவில் பங்கேற்பதற்காக இலங்கை அதிபர் ரணில் விக்கிரமசிங்கவும் இந்தியா வந்துள்ளதாக அரசாங்க ஒளிபரப்பு ஊடகமான டிடி நியூஸ் தெரிவித்துள்ளது.

டெல்லி வந்த மாலத்தீவு அதிபர்

வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா சனிக்கிழமை இந்தியா வந்ததை அடுத்து, மாலத்தீவு அதிபர் முகமது முய்சு இன்று டெல்லிக்கு வந்தார்.

இந்திய வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வாலின் சமூக ஊடகப் பதிவின் படி, "பிரதமர் மற்றும் அமைச்சரவையின் பதவியேற்பு விழாவில் பங்கேற்க புதுதில்லி மாலத்தீவு அதிபர் முகமது முய்ஸுவுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. அவரை விமான நிலையத்தில் செயலாளர் (மேற்கு) பவன் கபூர் வரவேற்றார். இந்தியாவும் மாலத்தீவுகளும் கடல்சார் நட்பு நாடுகள் மற்றும் நெருங்கிய உறவுகள் கொண்ட அண்டை நாடுகள்” எனப் பதிவிட்டுள்ளார்.

முகமது முய்ஸு மாலத்தீவு அதிபராக பதவியேற்றதில் இருந்து இந்தியாவுக்கும் மாலத்தீவுக்கும் இடையிலான உறவுகளில் பதற்றம் அதிகரித்தது. அவரது தேர்தல் பிரச்சாரமும் இந்தியாவுக்கு எதிரானதாகவே இருந்தது.

தற்போது அவர் இந்தியா வந்த பிறகு, இரு நாட்டு உறவில் புதிய பிணைப்பு ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)