மோதியின் பதவியேற்பு விழாவில் கலந்துகொள்ளும் மாலத்தீவு அதிபர் - எந்தெந்த நாடுகளின் தலைவர்கள் வருகிறார்கள்?

மக்களவைத் தேர்தலில் 292 இடங்களில் தேசிய ஜனநாயகக் கூட்டணி வெற்றி பெற்று, மூன்றாவது முறையாகப் பிரதமராக பதவியேற்கத் தயாராகி விட்டார் நரேந்திர மோதி.

மோதி மற்றும் அவரது அமைச்சரவை உறுப்பினர்கள் ஜூன் 9-ஆம் தேதி மாலை பதவியேற்க உள்ளனர். வெள்ளிக்கிழமை நடைபெற்ற கூட்டத்தில், தேசிய ஜனநாயகக் கூட்டணியின் நாடாளுமன்றத் தலைவராக மோதி தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இதைத் தொடர்ந்து, வெள்ளிக்கிழமை மாலை பேசிய மோதி, “என்.டி.ஏ சகாக்கள் மீண்டும் இந்தப் பொறுப்பை எனக்கு அளிக்க விரும்பி, அதை குடியரசுத் தலைவரிடம் தெரிவித்திருக்கிறார்கள். குடியரசுத் தலைவர் என்னையும், புதிய அமைச்சர் குழு உறுப்பினர்களையும் பதவியேற்க அழைப்பு விடுத்துள்ளார்,” என்றார்.

புதிய அரசு ஜூன் 9-ஆம் தேதி மாலை பதவியேற்கவுள்ளது. பதவியேற்பு விழா ராஷ்டிரபதி பவனின் முன்புறத்தில் நடக்கிறது.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

விழாவுக்கு அழைக்கப்பட்டுள்ள தலைவர்கள் யார்?

18-வது மக்களவையின் பதவியேற்பு விழாவிற்கு பல நாடுகளின் தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், வங்கதேசப் பிரதமர் ஷேக் ஹசீனா, இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கே, பூட்டான் பிரதமர் ஷேரிங் டோப்கே, செஷல்ஸ் துணை அதிபர் அஹமத் அபிஃப், நேபாள பிரதமர் புஷ்ப கமல் தஹால், மொரிஷியஸ் பிரதமர் பிரவிந்த் ஜெகநாத் ஆகியோருக்கு இந்த விழாவில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

முக்கியமாக மாலத்தீவு அதிபர் முகமது முய்சுவுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருப்பதாகத் தெரிவிக்கப் பட்டிருக்கிறது.

இந்த அழைப்பை இந்தத் தலைவர்கள் ஏற்றுக்கொண்டதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும், அந்த அறிக்கையில், பாகிஸ்தான், சீனா, மற்றும் மியான்மர் ஆகிய அண்டை நாடுகளுக்கு இந்திய அரசு அழைப்பு விடுக்கவில்லை.

பதவியேற்பு விழாவில் பங்கேற்கும் வெளிநாட்டுத் தலைவர்களுக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு ராஷ்டிரபதி பவனில் இரவு விருந்து அளிக்கவுள்ளதாகவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இந்தியாவின் 'அண்டை நாடுகள் கொள்கை' மற்றும் 'சாகர்' (SAGAR Vision) தொலைநோக்குப் பார்வையின் கீழ் அண்டை நாடுகளின் தலைவர்கள் அழைக்கப்பட்டுள்ளதாக அந்தச் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தவிர, விழாவுக்காக 8,000-க்கும் மேற்பட்ட விருந்தினர்கள் அமர்வதற்கான இருக்கை ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அரசால் விருந்தினர் பட்டியல் தயாரிக்கப்பட்டு அழைப்பிதழ்கள் அனுப்பப்பட்டுள்ளன.

செய்தி முகமையான ஏ.என்.ஐ படி, இந்த விருந்தினர் பட்டியலில் வழக்கறிஞர்கள், மருத்துவர்கள், கலைஞர்கள், மற்றும் செல்வாக்கு மிக்கவர்கள் உள்ளனர்.

அழைப்பை ஏற்றுக்கொண்டாரா மாலத்தீவு அதிபர்?

பதவியேற்பு விழாவில் பங்கேற்குமாறு இந்திய அரசின் அழைப்பை மாலத்தீவு அதிபர் முகமது முய்சு ஏற்றுக்கொண்டுள்ளார்.

மாலத்தீவிற்கான இந்திய உயர் ஆணையர் முனு மஹவர், ஜனாதிபதி முய்சுவிடம் அழைப்புக் கடிதத்தை வழங்கியதாக மாலத்தீவு அதிபர் அலுவலகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

இந்நிகழ்ச்சியில் முய்சு கலந்து கொள்வார் என்று பிரதமர் மோதி நம்புவதாக முனு மஹவர் கூறினார். இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வில் கலந்துகொள்வது பெருமை என்று முய்சு கூறியுள்ளார்.

இந்தியாவுடனான மாலத்தீவின் நெருங்கிய உறவை மேலும் வலுப்படுத்த பிரதமருடன் நெருக்கமாக பணியாற்றுவதை எதிர்பார்த்துள்ளதாகவும், மாலத்தீவு-இந்தியா உறவுகள் நேர்மறையான திசையில் நகர்வதை இந்த பயணம் நிரூபிக்கும் என்றும் முய்சு கூறினார்.

மாலத்தீவு அதிபராக முகமது முய்சு பதவியேற்ற பிறகு இந்தியா மற்றும் மாலத்தீவு இடையேயான உறவில் பதற்றம் அதிகரித்துள்ளது. அதிபராகப் பதவியேற்றவுடன், மாலத்தீவில் இருந்து இந்தியா தனது படைகளை திரும்பப் பெற வேண்டுமென முய்சு கேட்டுக் கொண்டார்.

கடந்த ஆண்டு, ஐக்கிய அரபு எமிரேட்ஸின் துபாயில் நடந்த COP28 காலநிலை உச்சி மாநாட்டில் மோதியும் முய்சுவும் முதல்முறையாக சந்தித்தனர். இதன்போது, ​​இருதரப்பு உறவுகளை ஆழப்படுத்துவது மற்றும் அபிவிருத்தியில் ஒத்துழைப்பை அதிகரிப்பது குறித்தும் கலந்துரையாடப்பட்டது.

ஷேக் ஹசீனாவின் டெல்லி வருகை

வங்கதேசப் பிரதமர் ஷேக் ஹசீனா தான் பதவியேற்பு விழாவிற்கு இந்தியா வந்த முதல் வெளிநாட்டு பிரமுகர் என்று இந்திய வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் தெரிவித்துள்ளார்.

ஷேக் ஹசீனாவை வரவேற்ற போது எடுக்கப்பட்ட இரண்டு படங்களை சமூக ஊடகங்களில் பதிவிட்டு, "அவர் இந்தியாவின் மிக முக்கியமான நண்பர்களில் ஒருவர். அவரது வருகை இரு நாடுகளுக்கும் இடையிலான நெருக்கமான மற்றும் ஆழமான நட்புறவை மேலும் வலுப்படுத்தும்," என்று கூறியிருந்தார் ரந்தீர் ஜெய்ஸ்வால்.

முன்னதாக, ஷேக் ஹசீனா தலைநகர் டாக்காவில் இருந்து வங்கதேச ஏர்லைன்ஸ் விமானத்தில் சனிக்கிழமை டெல்லிக்கு புறப்பட்டதாக வங்கதேசத்தில் இருந்து வெளியாகும் 'தி டெய்லி ஸ்டார்' செய்தித்தாள் எழுதியிருந்தது.

நேபாள பிரதமரின் வருகை

டெல்லியில் நடைபெறும் நரேந்திர மோதியின் பதவியேற்பு விழாவில் நேபாள பிரதமர் புஷ்ப கமல் தஹல் கலந்து கொள்கிறார்.

நேபாள அமைச்சரவைக் கூட்டத்திற்குப் பிறகு நேபாள அரசின் செய்தித் தொடர்பாளரும், தகவல் மற்றும் தொடர்புத் துறை அமைச்சருமான ரேகா சர்மா இந்தத் தகவலைத் தெரிவித்ததாக இந்திய அரசின் ஒளிபரப்பு ஊடகம் தூர்தர்ஷன் செய்தி வெளியிட்டுள்ளது.

"ஞாயிற்றுக்கிழமை அன்று நேபாள பிரதமர் டெல்லி செல்கிறார்," என்று வியாழக்கிழமை நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்திற்குப் பிறகு கூறியிருந்தார் ரேகா சர்மா.

முன்னதாக, நேபாள பிரதமர் தஹால், மோதியுடன் தொலைபேசியில் பேசி வாழ்த்து தெரிவித்தார். நேபாள-இந்திய உறவுகளை மேலும் ஆழப்படுத்துவதற்காக இந்தியாவின் புதிய அரசாங்கத்துடன் இணைந்து பணியாற்ற ஆவலுடன் இருப்பதாகவும் அவர் கூறினார்.

இலங்கை அதிபரின் வருகை எப்போது?

மோதி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி வெற்றி பெற்றதையடுத்து, ரணில் விக்ரமசிங்கே தொலைபேசியில் மோதிக்கு வாழ்த்து தெரிவித்தார். இந்த தகவலை இலங்கை அதிபரின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இந்த உரையாடலின் போது, ​​பதவியேற்பு விழாவில் பங்கேற்குமாறு இலங்கை அதிபருக்கு, மோதி அழைப்பு விடுத்ததாகவும், அதனை அவர் ஏற்றுக்கொண்டதாகவும் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இந்த விழாவில் பங்கேற்பதற்காக இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கே ஜூன் 9-ஆம் தேதி டெல்லி சென்றடைவார் என ஏ.என்.ஐ செய்தி முகமை தெரிவித்துள்ளது.

செஷல்ஸ் துணை அதிபரின் டெல்லி வருகை

மோதி மற்றும் அவரது அரசாங்கத்தின் புதிய அமைச்சர்களின் பதவியேற்பு விழாவில் செஷல்ஸ் துணைத் தலைவர் அஹ்மத் அபிஃப் பங்கேற்பார் என்பதை செஷல்ஸில் உள்ள இந்திய தூதரகம் உறுதிப்படுத்தியுள்ளது.

தூதரகம் தனது அதிகாரப்பூர்வ சமூக ஊடகக் கணக்கில் ஒரு அறிக்கையை வெளியிட்டது. புதிய இந்திய அரசின் பதவியேற்பு விழாவில் துணை ஜனாதிபதி செஷல்ஸை பிரதிநிதித்துவப்படுத்துவார் என்றும், ஜூன் 9-ஆம் தேதி அவர் டெல்லி சென்றடைவார் என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)