You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
12 இடங்களில் ஒரு லட்சம் வாக்கு: மாநிலக் கட்சி அந்தஸ்தை எட்டும் நாம் தமிழர் கட்சி - 7 முக்கிய அம்சங்கள்
- எழுதியவர், சிவகுமார் இராஜகுலம்
- பதவி, பிபிசி தமிழ்
"நீதிமன்றம் சென்றும் கிடைக்காத சின்னத்தை மக்கள் மன்றம் தந்த தீர்ப்பின் மூலம் பெறப் போகிறோம்" என்று உற்சாகத்துடன் கூறுகிறார் நாம் தமிழர் கட்சியின் இளைஞர் பாசறை ஒருங்கிணைப்பாளர் இடும்பாவனம் கார்த்தி.
ஆம். தேர்தலுக்குத் தேர்தல் தனது வாக்கு வங்கியைத் தொடர்ந்து உயர்த்திக்கொண்டே வரும் நாம் தமிழர் கட்சி இந்த நாடாளுமன்றத் தேர்தலிலும் அதைச் சாதித்துக் காட்டியுள்ளது.
இதன் மூலம் மாநிலக் கட்சி என்ற அந்தஸ்தை பெறும் அளவுக்கான வாக்குகளை அந்தக் கட்சி பெற்றுள்ளது. திமுக, அதிமுக ஆகிய இருபெரும் திராவிடக் கட்சிகள், தமிழ்நாட்டில் வேரூன்ற சகல வழிகளிலும் முயலும் பாஜக ஆகியவற்றின் சவால்களைத் தாண்டி நாம் தமிழர் கட்சி தனது வாக்கு வங்கியைத் தொடர்ந்து அதிகரித்தது எப்படி? நாம் தமிழர் கட்சி இந்த மைல்கல்லை எப்படி எட்டியது?
பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
பொதுத் தேர்தலில் நாம் தமிழர் கட்சி
நாம் தமிழர் கட்சி 2010இல் தொடங்கப்பட்டது. தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில் கடந்த 2016ஆம் ஆண்டு முதல் அக்கட்சி தேர்தலில் போட்டியிடத் தொடங்கியது. நாம் தமிழர் கட்சி அந்த ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில் 234 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிட்டு 1.1 சதவிகித வாக்குகளைப் பெற்றது. ஓரிடம்கூடக் கிடைக்கவில்லை.
கடந்த 2019ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் மொத்தமுள்ள 40 தொகுதிகளில் நாம் தமிழர் கட்சி ஆண், பெண் இரு பாலருக்கும் சரிபாதி தொகுதிகளை ஒதுக்கியது. அதாவது, அக்கட்சி சார்பில் 20 தொகுதிகளில் ஆண்களும், 20 தொகுதிகளில் பெண்களும் வேட்பாளர்களாகக் களமிறங்கினர்.
கடந்த 2019ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் நாம் தமிழர் கட்சிக்கு 3.9 சதவிகித வாக்குகள் கிடைத்தன. அந்தத் தேர்தலில் முதன் முறையாகக் களமிறங்கிய டிடிவி தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் 5.5 சதவிகித வாக்குகளையும், கமல்ஹாசன் தலைமையிலான மக்கள் நீதி மய்யம் 3.7 சதவிகித வாக்குகளையும் பெற்றன.
அடுத்து வந்த 2021ஆம் ஆண்டு சட்டப் பேரவைத் தேர்தலில் நாம் தமிழர் கட்சி 6.58 சதவிகித வாக்குகளைப் பெற்றது. 170க்கும் அதிகமான தொகுதிகளில் மூன்றாவது இடத்தைப் பிடிக்கும் அளவுக்கு வாக்குகளைப் பெற்றனர். திமுக, அதிமுக ஆகிய கட்சிகளுக்கு அடுத்தபடியாக அதிக வாக்குகளைப் பெற்ற மூன்றாவது பெரிய கட்சியாக நாம் தமிழர் உருவெடுத்தது.
2024 நாடாளுமன்றத் தேர்தலில் நாம் தமிழர் கட்சி
நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகளும் நாம் தமிழர் கட்சியினருக்கு உற்சாகம் தரும் வகையிலேயே அமைந்துள்ளன.
- தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் மொத்தமுள்ள 40 தொகுதிகளிலும் சேர்த்து மொத்தம் 32 லட்சத்திற்கும் அதிகமான வாக்குகளை நாம் தமிழர் கட்சி பெற்றுள்ளது.
- திருவள்ளூர், ஸ்ரீபெரும்புதூர், காஞ்சிபுரம், கிருஷ்ணகிரி, திருச்சிராப்பள்ளி, பெரம்பலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், தஞ்சாவூர், சிவகங்கை, தூத்துக்குடி, தென்காசி ஆகிய 12 தொகுதிகளில் நாம் தமிழர் கட்சி ஒரு லட்சத்திற்கும் அதிகமான வாக்குகளைப் பெற்றுள்ளது.
- திருச்சி, நாகப்பட்டினம், ஈரோடு, கள்ளக்குறிச்சி, கன்னியாகுமரி ஆகிய 5 தொகுதிகளில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் மூன்றாவது இடத்தைப் பிடித்தனர்.
- மற்ற 35 தொகுதிகளிலும் அக்கட்சி நான்காவது இடத்தைப் பிடித்துள்ளது. மத்திய மற்றும் டெல்டா பகுதிகளில் நாம் தமிழர் கட்சி கணிசமான வாக்குகளைப் பெற்றுள்ளது.
- நாம் தமிழர் கட்சியைப் பொருத்தவரை, சிவகங்கை தொகுதியில் அதிகபட்ச வாக்குகளைப் பெற்றுள்ளது. அக்கட்சி வேட்பாளர் எழிலரசி 1,63,412 வாக்குகளுடன் நான்காவது இடத்தைப் பிடித்துள்ளார்.
- கன்னியாகுமரி தொகுதியில் நாம் தமிழர் கட்சி குறைந்த அளவாக 52,721 வாக்குகள் பெற்றுள்ளது. ஆனாலும்கூட, அதிமுகவை பின்னுக்குத் தள்ளி அக்கட்சி வேட்பாளர் மரியா ஜெனிபர் கிளாரா மைக்கேல் மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளார்.
- சட்டமன்றத் தேர்தல், நாடாளுமன்றத் தேர்தல் வரிசையில் நாம் தமிழர் கட்சி சந்தித்த நான்காவது பொதுத் தேர்தல் இது. மாநிலக் கட்சி என்ற அங்கீகாரத்தைப் பெறுவதற்கான குறைந்தபட்ச வாக்கு சதவீதமான 8%-ஐ இந்தத் தேர்தலில் எட்டியுள்ளது.
தமிழ்நாட்டில் மொத்தமுள்ள 39 தொகுதிகளிலும் சேர்த்து நாம் தமிழர் கட்சிக்கு 8.1 சதவீத வாக்குகள் கிடைத்துள்ளன. இதன் மூலம் நாம் தமிழர் கட்சி மாநிலக் கட்சி என்று தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்படும் நிலையை எட்டியுள்ளது.
மாநிலக் கட்சி அங்கீகாரம் - தேர்தல் ஆணைய விதிகள் என்ன?
தேர்தல் ஆணையம் தேர்தல் சின்னங்கள்(ஒதுக்கீடு) 1968 ஆணையின் மூலம் அரசியல் கட்சிகளை அங்கீகரிக்கிறது. அதன்படி, மாநிலக் கட்சி, தேசியக் கட்சி என இரண்டு வகையாக கட்சிகளை தேர்தல் ஆணையம், அங்கீகரிக்கிறது. அரசியல் கட்சிகள் இந்த அங்கீகாரத்தைப் பெறவேண்டும் என்றால் சில நிபந்தனைகளைப் பூர்த்தி செய்ய வேன்டும். ஒரு கட்சி மாநில கட்சி அங்கீகாரத்தைப் பெற கீழுள்ள நிபந்தனைகளில் ஏதாவது ஒன்றைப் பூர்த்தி செய்ய வேண்டும்.
- மாநிலத்தில் நடைபெறும் நாடாளுமன்றத் தேர்தல் அல்லது சட்டப்பேரவைத் தேர்தலில் 8 சதவீத வாக்குகளைப் பெற வேண்டும்.
- மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் பதிவான வாக்குகளில் 6 சதவீதம் வாக்குகள் பெற்றிருக்க வேண்டும். அத்துடன் அந்தத் தேர்தலில் 2 இடங்களில் வெற்றி பெற்றிருக்க வேண்டும்.
- மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் மொத்த தொகுதிகளில் 3 சதவீத இடங்களில் வெற்றி பெற வேண்டும். தமிழகத்தைப் பொருத்தவரை 234 சட்டப்பேரவைத் தொகுதிகள் உள்ளன. இதில் 3 சதவீதம், அதாவது 8 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும்.
- அதேபோல அம்மாநிலத்தில் நடைபெறும் நாடாளுமன்றத் தேர்தலில் பதிவாகிய வாக்குகளில் 6 சதவீதம் வாக்குகள் பெற்றிருக்க வேண்டும். அத்துடன் அந்தத் தேர்தலில் ஒரு நாடாளுமன்றத் தொகுதியில் வெற்றி பெற்றிருக்க வேண்டும்.
- நாடாளுமன்றத் தேர்தலில், மாநிலத்தில் உள்ள எம்.பி. தொகுதிகளில் 25 இடங்களுக்கு ஒன்று வீதம் வெல்ல வேண்டும். அதன்படி, தமிழகத்தில் உள்ள 39 மக்களவைத் தொகுதிகளில் 2 தொகுதிகளில் வெல்ல வெண்டும்.
மேற்கூறிய விதிகளில் இந்த நாடாளுமன்றத் தேர்தலில் 8 சதவீத வாக்குகளைப் பெற்றதன் மூலம் நாம் தமிழர் கட்சி பூர்த்தி செய்துள்ளது.
சின்னம் ஒதுக்குவதில் சர்ச்சை
நாம் தமிழர் கட்சி முந்தைய தேர்தல்களில் போட்டியிட்ட கரும்பு விவசாயி சின்னம் இந்த நாடாளுமன்றத் தேர்தலில் கிடைக்கவில்லை. கடந்த ஆண்டு இறுதியில் அந்த சின்னத்தை கர்நாடகாவை சேர்ந்த ஒரு கட்சிக்கு ஒதுக்கிவிட்டதால் நாம் தமிழர் கட்சிக்கு அந்தச் சின்னத்தை ஒதுக்க முடியாது என்று தேர்தல் ஆணையம் கூறியது.
தேர்தல் ஆணையத்தின் முடிவை எதிர்த்து, நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் டெல்லி உயர்நீதிமன்றத்தை நாடினார்.
ஆனால், “தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கையில் என்ன தவறு இருக்கிறது. முதலில் வருபவருக்கு முன்னுரிமை என்ற ஆணையத்தின் நடைமுறையை எந்தக் கட்சிக்காகவும் மாற்ற முடியாது. நாம் தமிழர் கட்சி இன்னும் ஆணையத்தால் அங்கீகரிக்கப்படாத கட்சி. அப்படியிருக்கும்போது எப்படி ஒரு குறிப்பிட்ட சின்னத்தை உரிமை கோர முடியும்?" எனக் கேள்வி எழுப்பிய நீதிமன்றம் மனுவை தள்ளுபடி செய்தது.
நீதிமன்றத்தை நாடியும் விரும்பியது கிடைக்காததால் வேறுவழியின்றி மைக் (ஒலி வாங்கி) சின்னத்தில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளிலும் நாம் தமிழர் கட்சி போட்டியிட்டது. அப்போது பிபிசி தமிழிடம் பேசிய நாம் தமிழர் கட்சியின் இளைஞர் பாசறை ஒருங்கிணைப்பாளர் இடும்பாவனம் கார்த்தி, "கரும்பு விவசாயி சின்னத்தைக் கொடுத்தால் அதிக வாக்குகள் பெற்று நாம் தமிழர் கட்சி அங்கீகரிக்கப்பட்ட கட்சியாவதைத் தடுக்கவே, இப்படி சதி செய்துள்ளார்கள்,” என்று குற்றம் சாட்டியிருந்தார்.
'நீதிமன்றம் தராததை மக்கள் மன்றத்தின் மூலம் பெறுகிறோம்'
தேர்தல் முடிவுகள் வெளியானதற்குப் பின்னர் பிபிசி தமிழிடம் பேசிய இடும்பாவனம் கார்த்தி, "நாடாளுமன்றத் தேர்தலுக்கான சின்னங்கள் ஒதுக்கீட்டில் எங்களுக்கு அநீதி இழைக்கப்பட்டது," என்றார்.
"நாங்கள் தேர்தலில் சின்னங்கள் பயன்படுத்தப்படுவதை எதிர்க்கிறோம். அதற்குப் பதிலாக, மேற்கத்திய நாடுகளைப் போல் ஒவ்வொரு வேட்பாளருக்கு ஒரு எண்ணை ஒதுக்க வேண்டும். அல்லது ஒவ்வொரு தேர்தலின்போதும் கட்சிகளின் சின்னத்தை மாற்ற வேண்டும். அதுதான் தேர்தல் களத்தில் சரிசமமான போட்டிக்கு வழிவகுக்கும்."
சின்னங்கள் வேட்பாளர்களுக்கு சில சாதகங்களை அளிக்கின்றன என்பதை மறுக்க முடியாது என்கிறார் அவர். "விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வேட்பாளர்கள் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடும்போது வெற்றி எளிதாகக் கிடைக்கும். அதேநேரத்தில், பானை சின்னத்தில் களம் காணும் போது வெற்றி கடினமாவதைப் பார்க்க முடிகிறது."
இது, அதிமுகவின் இரட்டை இலை சின்னத்திற்கும் பொருந்துவதாகக் கூறும் அவர், சின்னங்கள் பயன்பாட்டிற்கு எதிரானவர்கள் என்ற போதிலும் நம் நாட்டு நடைமுறையைப் பின்பற்றி தங்கள் கொள்கைக்கு கரும்பு விவசாயி சின்னமே பொருத்தமானது என்று தீர்மானித்தே அதைத் தேர்வு செய்ததாகக் கூறினார்.
நாம் தமிழர் கட்சிக்கு தேர்தல் களம் எப்படி இருந்தது?
நாடாளுமன்றத் தேர்தல் களம் நாம் தமிழர் கட்சிக்கு எப்படி இருந்தது என்ற கேள்விக்கு, "இது நாடாளுமன்றத் தேர்தல் களம் என்பதால் சற்று சவாலானதாகவே இருக்கும் என்று கருதினோம். ஏனெனில், நாடாளுமன்றத் தேர்தலில் பிரதமர் வேட்பாளரே பிரதானம். நாங்களோ பாஜகவையோ, காங்கிரசை உள்ளடக்கிய இந்தியா கூட்டணியையோ ஆதரிக்கவில்லை. ஆகவே, மோதி, ராகுல் போன்ற யாரையும் எங்களால் பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்த முடியாது."
ஆனால், "எங்கள் எண்ணத்திற்கு மாறாக தேர்தல் களம் எங்களுக்கு மிகுந்த உற்சாகம் தருவதாக அமைந்திருந்தது. முன்பெல்லாம் இளைஞர் மத்தியில் எங்களுக்கு வரவேற்பு அதிகம் இருக்கும். இப்போது குடும்பம் குடும்பமாகப் பலரும் தாமாகவே விரும்பி வந்து கட்சியில் சேர்கின்றனர்."
"அவர்கள் அனைவரும் தேர்தலில் எங்களை ஆதரித்தனர். திமுக, அதிமுக, காங்கிரஸ், பாஜக போன்ற கட்சிகளைப் போல் எங்களிடம் இல்லாத ஒன்று பணம் மட்டும்தான். ஒவ்வொரு தொகுதியிலும் பெரிய கட்சிகளின் வேட்பாளர்கள் சர்வசாதாரணமாக கோடிகளில் பணத்தைச் செலவழிக்கும்போது எங்களால் லட்சங்களில்கூடச் செலவழிக்க முடியாது," என்றார்.
நாம் தமிழர் கட்சியின் வளர்ச்சி சாத்தியமானது எப்படி?
நாம் தமிழர் கட்சி சந்தித்த 4 பொதுத் தேர்தல்களிலும் தொடர்ச்சியாகத் தனது வாக்கு சதவீதத்தை உயர்த்தி வந்துள்ளது. இது எப்படி சாத்தியமானது என்று தமிழ்நாட்டின் அரசியல் நகர்வுகளை உன்னிப்பாகக் கவனிக்கும் மூத்த பத்திரிகையாளர் சிகாமணியிடம் கேட்டபோது, "மதவாதம் போல் இனவாதமும் உணர்ச்சி ரீதியாக மக்களை ஈர்க்கக் கூடியது. வளர்ந்த நாடுகளில்கூட இந்தப் போக்கு உள்ளது. அமெரிக்காவில் டிரம்பை கூட நீங்கள் இதற்கு உதாரணமாக எடுத்துக் கொள்ளலாம். அது போலவே தமிழ்நாட்டிலும் இனவாதம் பேசும் நாம் தமிழர் கட்சி மக்களை ஈர்க்கிறது," என்றார்.
மேலும், சுய பெருமை பேசுவது ஒன்றும் குற்றம் இல்லை. ஆனால், பிற மாநிலத்தவர் குறிப்பாக வட மாநிலத்தவர் மீது வெறுப்புணர்வை விதைக்கும் வகையில் பேசுவது தவறுஎன்றும் அதைத்தான் இனவாதம் எனக் கூறுவதாகவும் குறிப்பிடுகிறார் சிகாமணி.
அதேபோல், "எதிலும் தூய்மைவாதம் பேசும் மக்களின் தேர்வாகவும் நாம் தமிழர் கட்சி இருக்கிறது. அதீத தூய்மைவாதம் பேசும் இவர்கள் கற்பனை உலகில் வாழ்பவர்கள், நிகழ்காலத்தில் எதிலுமே திருப்தி கொள்ளாதவர்கள்."
"இனவாதம், தூய்மைவாதம் தாண்டி, இருபெரும் திராவிடக் கட்சிகளுக்கும் மாற்று தேடும் மக்களில் ஒரு பிரிவினரும் நாம் தமிழர் கட்சியை ஆதரிக்கின்றனர். வைகோ, விஜயகாந்த் வரிசையில் இன்று நாம் தமிழர் கட்சியும் அந்த வாக்குகளை அறுவடை செய்கிறது," என்று கூறினார்.
மேலும் பேசிய அவர், "இந்திய ஒன்றியத்தின் ஒரு பகுதியாக உள்ள தமிழ்நாட்டால் சீமான் பேசுவது போல மத்திய அரசைப் புறக்கணித்துவிட்டு எதையும் கண்டுகொள்ளாமல் தனித்து இயங்க முடியாது. நாடாளுமன்றத்திலும், சட்டமன்றத்திலும் வலிமை மிக்க கட்சியாக இருந்தாலும் திமுகவால்கூட மத்திய அரசுக்குப் பெரிய அளவில் அழுத்தம் கொடுக்க முடியவில்லை. அப்படி இருக்கையில், சீமான் மேடைகளில் பேசுவதையெல்லாம் நாம் தமிழர் கட்சியால் செயல்படுத்திவிட முடியுமா?" என்றும் கேள்வி எழுப்பினார்.
நாம் தமிழர் கட்சியின் நிரந்தர சின்னமாக எது இருக்கும்?
கரும்பு விவசாயிக்குப் பதிலாக புதிதாகப் பெற்ற மைக் சின்னத்தை மக்களிடையே சென்று சேர்ப்பதில் சிரமம் ஏற்பட்டதா என்ற கேள்விக்கு, "எங்கள் கட்சியில் சேர்பவர்கள் நல்ல அரசியல் புரிதலுடன், விழிப்புணர்வுடன் இருக்கின்றனர். அவர்கள் நாம் தமிழர் கட்சி எங்கே என்றுதான் தேடுகின்றனர். இதுபோன்ற அரசியல் விழிப்புணர்வுள்ள தொண்டர்களுக்கு சின்னத்தைக் கொண்டு சேர்ப்பதில் எங்களுக்குப் பெரிய சிரமம் இருக்கவில்லை," என்று கூறினார் இடும்பாவனம் கார்த்தி.
அப்படியென்றால், நாம் தமிழர் கட்சியை தேர்தல் ஆணையம் அங்கீகரித்தால் உங்கள் கட்சியின் சின்னமாக எதைத் தேர்வு செய்வீர்கள் என்ற கேள்விக்கு, "வேளாண் அடிப்படையிலான தற்சார்பு பொருளாதாரத்தை வலியுறுத்தும் நாம் தமிழர் கட்சியின் கொள்கைக்கு கரும்பு விவசாயி சின்னமே பொருத்தமானது என்பதால் அதையே தேர்வு செய்வோம்" என்று பதிலளித்தார்.
நாம் தமிழர் கட்சியின் எதிர்காலம் எப்படி இருக்கும்?
நாம் தமிழர் கட்சியின் வளர்ச்சி தொடருமா என்று கேட்டபோது,"நாம் தமிழர் கட்சியின் வளர்ச்சி கவனிக்கத்தக்க ஒன்றுதான் என்றாலும் ஆட்சியைப் பிடிக்கும் அளவுக்கு பெரிய கட்சியாக வளரும் என்று சொல்ல முடியாதுஎனச் சொல்ல முடியாது" என்கிறார் பத்திரிகையாளர் சிகாமணி.
"இதுவொரு இடைக்கால வளர்ச்சிதான். வைகோ, விஜயகாந்த் போல மாற்று தேடும் மக்களுக்கும், இனவாத பேச்சுகளால் கவரப்படும் இளைஞர்களுக்கும் வடிகாலாக நாம் தமிழர் கட்சி இருக்கும்."
அடுத்த கட்டத்திற்கு வளர்வது என்பது நாம் தமிழர் கட்சிக்கு சிரமமான விஷயமாகவே இருக்கும் என்று தெரிவித்தார் சிகாமணி.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)