You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
பாஜக vs இந்தியா கூட்டணி: சாதி ரீதியாக யாருக்கு, எவ்வளவு வாக்குகள் கிடைத்தன?
லோக்நிதி-சிஎஸ்டிஎஸ் (Lokniti-CSDS) அமைப்பு நடத்திய தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்பின் தரவுகள், 2024-இல் பா.ஜ.க-வுக்கு எதிர்பார்த்த அளவு வெற்றி கிடைக்காவிடினும், பல்வேறு சமூகத்தினரிடையே அக்கட்சிக்கான ஆதரவு மாறாமல் இருப்பதைக் காட்டுகின்றன.
2019 மக்களவைத் தேர்தலில் 303 இடங்களைப் பெற்ற பா.ஜ.க, 2024-இல் 240 இடங்களை மட்டுமே பெற்றிருக்கிறது. இருந்தபோதிலும் 2019 மற்றும் 2024-க்கு இடைப்பட்ட காலத்தில் பா.ஜ.க-வை ஆதரிக்கும் மக்களின் சதவீதம் மாறவில்லை.
உயர் சாதிப் பிரிவு மக்கள் மத்தியில் பா.ஜ.க-வுக்கான ஆதரவு அலை அப்படியே இருந்தது. அவர்களில் 53% பேர் 2019-இல் இருந்ததைப் போலவே 2024-இல் பா.ஜ.க-வுக்கு வாக்களித்தனர். வழக்கமாக இந்து உயர் சாதியினரிடையே காங்கிரசுக்கு ஓரளவு தான் ஆதரவு கிடைக்கும். ஆனால் காங்கிரசின் கூட்டணிக் கட்சிகளுக்கு இந்து உயர் சாதி மக்கள் மத்தியில் குறிப்பிடத்தக்க ஆதரவு உள்ளது.
இந்து மேல்நிலை ஓ.பி.சி (இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் -OBC) பிரிவு மக்கள் மத்தியில் காங்கிரஸ் (20%) மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் (15%) 5 முதல் 6 சதவீதம் வரை வாக்குகளைப் பெற்றுள்ளன. மேலும் பா.ஜ.க மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் இந்து மேல்நிலை ஓ.பி.சி சாதிப் பிரிவினர் மத்தியில் வெறும் 2% வாக்குகளை பெற்று பின்னடைவைச் சந்தித்தன.
பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
குறைந்த தலித் ஓட்டு சதவீதம்
பா.ஜ.க மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளுக்கு இந்து கீழ்நிலை ஓ.பி.சி சாதி மக்கள் மத்தியில் கடந்த தேர்தலை போலவே இந்த தேர்தலிலும் வாக்கு சதவீதம் ஓரளவுக்கு அதே அளவில் பதிவாகியுள்ளது. ஆனால் இந்து கீழ்நிலை ஓ.பி.சி சாதியினரிடையே 2019-ஆம் ஆண்டு வாக்குப் பங்கீட்டை ஒப்பிடுகையில் காங்கிரஸ் 3% மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் 7% அதிகமாக பெற்றுள்ளன.
2019 மக்களவை தேர்தலுடன் ஒப்பிடுகையில் தேசிய அளவில் பா.ஜ.க 3% தலித் வாக்குகளை இழந்துள்ளது, அதன் கூட்டணி கட்சிகளும் 2% வாக்குகளை இழந்துள்ளன.
கடந்த ஐந்து ஆண்டுகளில் தேர்தல் வாக்குப்பதிவில் காங்கிரஸ் 1% தலித் சமூக ஓட்டுகளை இழந்துள்ளது. உத்தரப் பிரதேசத்தில் சமாஜ்வாதி கட்சிக்கு அதிகளவில் கிடைத்துள்ள தலித் மக்களின் வாக்குகளால் காங்கிரஸ் கூட்டணி கட்சிகள் பலனடைந்துள்ளன.
உ.பி-யில் உள்ள தலித் மக்களிடையே பா.ஜ.க-வுக்கான ஆதரவு கணிசமான அளவு குறைந்துள்ளது. வேறு சில மாநிலங்களிலும் தலித் வாக்காளர்களின் ஆதரவு சற்று குறைந்துள்ளதை மாநில அளவிலான வாக்கு சதவீதம் பிரதிபலிக்கிறது.
பழங்குடிச் சமூகங்கள் மத்தியில் காங்கிரஸுக்கான ஆதரவு குறைந்திருந்தாலும், அதன் கூட்டணி கட்சிகளுக்கு பழங்குடி மக்களின் ஆதரவு 2% அதிகமாக கிடைத்துள்ளதால், இந்த தேர்தலில் காங்கிரசுக்கு பழங்குடி வாக்குகளின் சதவீதம் ஓரளவு ஈடுசெய்யப்பட்டதாகத் தெரிகிறது. அதே சமயம் முந்தைய தேர்தலை விட 2024 மக்களவைத் தேர்தலில் பா.ஜ.க-வுக்கு பழங்குடி சமூகத்தினரிடமிருந்து கிடைக்கும் ஆதரவு 5% அதிகரித்துள்ளது. இது பாஜகவுக்கு உண்மையில் நல்ல செய்தி.
முஸ்லிம் வாக்காளர்கள் மத்தியில் பா.ஜ.க-வுக்கான ஆதரவு 1% குறைந்துள்ளது, ஆனால் அதன் கூட்டணி கட்சிகளுக்கு முஸ்லிம் மக்களின் ஆதரவு அதிகமாக கிடைத்துள்ளதால், இந்த தேர்தலில் ஓரளவு ஈடு செய்யப்பட்டுள்ளது.
முஸ்லிம் மக்களின் ஆதரவு யாருக்கு?
கடந்த தேர்தலைக் காட்டிலும், காங்கிரஸ் கட்சிக்கு முஸ்லிம் மக்களிடையே ஆதரவு அதிகரித்து இம்முறை 5% அதிகமாக வாக்குகள் கிடைத்துள்ளது. மேலும் அதன் கூட்டணிக் கட்சிகளுக்கு முஸ்லிம் மக்களின் அதிக ஆதரவு கிடைத்துள்ளது. உத்தரப் பிரதேசத்தில் சமாஜ்வாதி கட்சிக்கும், பிகாரில் ராஷ்ட்ரிய ஜனதா தளத்துக்கும் முஸ்லிம் சமூகம் அதிகளவில் ஆதரவு கொடுத்துள்ளன. அதன் விளைவாகக் காங்கிரஸ் கூட்டணிக் கட்சிகளுக்கு இம்முறை 15% அதிகமாக முஸ்லிம் வாக்குகள் கிடைத்துள்ளது.
மற்றொருபுறம் டெல்லியில் ஆம் ஆத்மி-காங்கிரஸ் கூட்டணிக்கு முஸ்லிம் வாக்குகள் அதிகம் கிடைத்தன. இந்தியா கூட்டணிக்கு கிடைத்த முஸ்லிம்களின் ஆதரவை ஒருங்கிணைத்து கணக்கிட்டால் கணிசமான பலனைத் தந்ததாகத் தெரிகிறது.
இந்த தேர்தலில் பா.ஜ.க-வுக்கு பெரிய இழப்புகள் ஏற்பட்டிருக்கிறது என்பது வெளிப்படையாக தெரிகிறது. அப்படி இருந்தும் அதன் ஆதரவு தளம் எப்படி மாறாமல் அப்படியே இருக்கிறது என்று ஆச்சரியத்தை ஏற்படுத்தலாம். இதனை மிகவும் எளிமையாக புரிந்து கொள்ளலாம். பா.ஜ.க-வின் தேசிய வாக்கு சதவீத பங்கீட்டில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை.
2024-இல் 36.6% வாக்குகளை பெற்றுள்ளது, 2019-இல் 37.6% ஆக இருந்தது. தொகுதிகள் மிகவும் முக்கியம். தொகுதிகளின் அடிப்படையில்தான் ஆட்சி அமைகிறது. ஆனால், தொகுதிகளின் எண்ணிக்கையை போலவே முக்கியமாக கருத வேண்டிய வேறு சில விஷயங்களும் உள்ளன.
வகுப்புவாரியான வாக்கு சதவீதம்
2024 மக்களவைத் தேர்தலில் வாக்கு சதவீதத்தில் ஒரு சுவாரசியமான போக்கு காணப்படுகிறது. ஏழைகள் மற்றும் குறைந்த வருமானம் கொண்ட வாக்காளர்களிடையே குறிப்பிடத்தக்க மாற்றம் ஏற்பட்டுள்ளது.
முந்தைய 2014 மற்றும் 2019 மக்களவை தேர்தல்களில் பா.ஜ.க-வுக்கு ஆதரவளிப்பதில் ஏழைகளுக்கும் பணக்காரர்களுக்கும் இடையேயான இடைவெளி மிகவும் அதிகமாக இருந்தது. அதாவது ஏழைகள் மற்றும் குறைந்த வருமானம் உள்ள வகுப்பினரிடம் (lower income group) ஒப்பிடும்போது பணக்காரர்கள் மற்றும் நடுத்தர வர்க்க வாக்காளர்கள் பா.ஜ.க-வுக்கு அதிகளவில் வாக்களித்தனர். ஆனால் 2024-ஆம் ஆண்டில் பா.ஜ.க-வுக்கு கிடைத்த ஆதரவைப் பொறுத்தவரை ஏழைகளுக்கும் பணக்காரர்களுக்கும் இடையிலான இந்த இடைவெளி கணிசமாகக் குறைந்துள்ளது.
லோக்நிதி-சிஎஸ்டிஎஸ் பிந்தைய கருத்துக்கணிப்பு பகுப்பாய்வின் படி, 2024 மக்களவைத் தேர்தலில் பா.ஜ.க பெரும்பான்மையை இழந்துவிட்டாலும், பொருளாதாரத்தில் பின்தங்கிய வகுப்பினரில் கணிசமான பகுதியினர் அக்கட்சிக்கு வாக்களித்துள்ளனர். ஏழைகளில் 37% பேர் பா.ஜ.க-வுக்கு வாக்களித்துள்ளனர், மேலும் 21% பேர் காங்கிரஸைத் தேர்ந்தெடுத்துள்ளனர்.
இருப்பினும் பா.ஜ.க-வின் கூட்டணிக் கட்சிகளுக்கு ஏழை சமூகத்தினர் மத்தியில் (6%) மிகக் குறைந்த அளவிலான ஆதரவு மட்டுமே கிடைத்தது. தேசிய ஜனநாயகக் கூட்டணியுடன் ஒப்பிடுகையில், காங்கிரஸின் கூட்டணிக் கட்சிகள் ஏழை சமூகத்தினர் மத்தியில் 14% வாக்குகளைப் பெற்றுள்ளது.
பா.ஜ.க-வுக்கு கைகொடுத்தது எது?
அதேபோல, பா.ஜ.க கீழ்நிலை வகுப்பைச் சேர்ந்தவர்களிடம் இருந்து 35% வாக்குகளை பெற்றுள்ளது, இது காங்கிரஸ் பெற்றதை விட 13% அதிகமாகும். நடுத்தர வர்க்கத்தினரிடமிருந்து பெற்ற வாக்குகளின் அடிப்படையில் பா.ஜ.க காங்கிரஸை விட அதிக வாக்குகளை தக்க வைத்துள்ளது. இருப்பினும் காங்கிரஸ் மேல்தட்டு வகுப்பு மக்கள் மத்தியில் அதிக வாக்குகளைப் (41%) பெற்றுள்ளது.
இதில் சுவாரஸ்யம் என்னவென்றால், 2019 தேர்தலுடன் ஒப்பிடும்போது, பா.ஜ.க-வுக்கு வாக்களித்த மேல்தட்டு வகுப்பினரின் (41%) வாக்கு விகிதத்தில் சரிவு ஏற்பட்டுள்ளது. மேலும் நடுத்தர வர்க்கத்தினர் இடமிருந்து பாஜக பெற்ற வாக்குகள் கடந்த தேர்தலை விட 3% சரிவை கண்டுள்ளது.
கீழ்நிலை வகுப்பினரிடையே, முந்தைய தேர்தலில் 36% வாக்குகளை பெற்ற பா.ஜ.க இம்முறை 35% வாக்குகளை பெற்றுள்ளது.
இதில் குறிப்பிடப்பட வேண்டிய விஷயம் என்னவென்றால், 2014 முதல், ஏழை வாக்காளர்களிடம் இருந்து பா.ஜ.க பெற்ற வாக்குகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது, இந்தத் தேர்தலிலும் அந்த விகிதம் 37% அதிகரித்துள்ளது.
ஆளும் பா.ஜ.க அரசின் பல்வேறு நலத்திட்டங்கள், குறிப்பாக ஏழை எளிய மக்களுக்கு இலவச உணவு வழங்கும் திட்டம் பா.ஜ.க-வுக்கு கை கொடுத்திருப்பதாகத் தெரிகிறது.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)