You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
71 பேருடன் 'கூட்டணி' அமைச்சரவையை நடத்துவதில் மோதி முன்னுள்ள மிகப்பெரிய சவால்
- எழுதியவர், தில்நவாஸ் பாஷா
- பதவி, பிபிசி செய்தியாளர்
பிரதமர் நரேந்திர மோதியின் 71 உறுப்பினர்களைக் கொண்ட அமைச்சரவையில் 30 கேபினட் அமைச்சர்கள், 5 இணை அமைச்சர்கள் (தனிப் பொறுப்பு) மற்றும் 36 இணை அமைச்சர்கள் இடம்பெற்றுள்ளனர்.
2024 மக்களவை தேர்தலில் பாரதிய ஜனதா கட்சிக்கு தனிப் பெரும்பான்மை கிடைக்கவில்லை. பாஜக தலைமையிலான கூட்டணி அரசில் தெலுங்கு தேசம் கட்சி, ஐக்கிய ஜனதா தளம், சிவசேனா (ஏக்நாத் ஷிண்டே பிரிவு), லோக் ஜனசக்தி கட்சி (ராம் விலாஸ்), மத சார்பற்ற ஜனதா தளம், ராஷ்டிரிய லோக்தளம், இந்துஸ்தானி அவாம் மோர்ச்சா (எச்ஏஎம்), இந்தியக் குடியரசு கட்சி உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகளை சேர்ந்த 11 பேர் அமைச்சரவையில் உள்ளனர்.
கடந்த மோதி அரசாங்கத்தின் பிரபல முகங்களான ஸ்மிருதி இரானி, அனுராக் தாக்கூர் மற்றும் ராஜீவ் சந்திரசேகர் ஆகியோர் இந்த முறை அமைச்சரவையில் இடம்பெறவில்லை.
அதேசமயம், ஹரியானா முன்னாள் முதலமைச்சர் மனோகர் லால் கட்டார், மத்தியப் பிரதேச முன்னாள் முதலமைச்சர் சிவராஜ் சிங் சௌகான், கர்நாடக முன்னாள் முதலமைச்சர் ஹெச்.டி.குமாரசாமி ஆகியோர் அமைச்சரவையில் இடம்பெற்றுள்ளனர். பிகார் முன்னாள் முதலமைச்சர் ஜிதன் ராம் மஞ்சிக்கும் அமைச்சரவையில் இடம் அளிக்கப்பட்டுள்ளது.
பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
ராஜ்நாத் சிங், அமித் ஷா, நிர்மலா சீதாராமன், எஸ். ஜெய்சங்கர், நிதின் கட்கரி, பியூஷ் கோயல் ஆகியோரும் மோதி தலைமையிலான மூன்றாவது அரசில் இடம்பெற்றுள்ளனர். இந்த முறை பாஜக தலைவர் ஜே.பி. நட்டாவும் கேபினட் அமைச்சராக பதவியேற்றுள்ளார்.
தர்மேந்திர பிரதான், பூபேந்திர யாதவ், ஜோதிராதித்ய சிந்தியா ஆகியோர் மக்களவைத் தொகுதிகளில் வெற்றி பெற்று அமைச்சர்களாக பதவியேற்றுள்ளனர். இவர்கள் அனைவரும் முன்பு மாநிலங்களவை உறுப்பினர்களாக இருந்தனர்.
மொத்தம் 33 பேர் முதன்முறையாக அமைச்சர்களாக பதவியேற்றுள்ள நிலையில், அரசியல் வாரிசுகள் 6 பேருக்கு அமைச்சரவையில் இடம் கிடைத்துள்ளது.
அமைச்சரான வாரிசுகள் யார்?
முதன்முறையாக அமைச்சர்களாக பதவியேற்றவர்களில் 7 பேர் பாஜகவின் கூட்டணிக் கட்சிகளைச் சேர்ந்தவர்கள்.
அமைச்சரான ஜெயந்த் சௌத்ரி, முன்னாள் பிரதமர் சௌத்ரி சரண் சிங்கின் பேரன். சிராக் பஸ்வான் பிகாரின் மிகப்பெரிய தலைவர்களுள் ஒருவரான மறைந்த ராம்விலாஸ் பஸ்வானின் மகன் ஆவார்.
பிகார் முன்னாள் முதலமைச்சர் கர்பூரி தாகூரின் மகனும், எம்.பி.யுமான ராம்நாத் தாகூருக்கும் அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது.
காங்கிரஸில் இருந்து பாஜகவில் இணைந்து பதவியை இழந்த ரவ்னீத் சிங் பிட்டு, பஞ்சாபில் காலிஸ்தானிகளால் கொல்லப்பட்ட முன்னாள் முதலமைச்சர் பியாந்த் சிங்கின் பேரன் ஆவார்.
மகாராஷ்டிர மூத்த தலைவர் ஏக்நாத் காட்சேவின் மருமகள் ரக்ஷா காட்சேவுக்கும் ஆட்சியில் இடம் கிடைத்துள்ளது.
காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி 2021ல் பாஜகவில் இணைந்த ஜிதின் பிரசாதாவுக்கும் அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது. மன்மோகன் சிங் அரசில் ஜிதின் பிரசாதா அமைச்சராகவும் இருந்துள்ளார். ஜிதின் பிரசாதா காங்கிரஸ் தலைவர் ஜிதேந்திர பிரசாத்தின் மகன்.
மக்களவைத் தொகுதியில் கேரளாவில் பாஜகவுக்கு முதல் வெற்றியை தந்துள்ள நடிகர் சுரேஷ் கோபியும் அமைச்சராக்கப்பட்டுள்ளார்.
புதிய அரசில் 27 அமைச்சர்கள் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், 10 அமைச்சர்கள் பட்டியல் சாதியினர், 5 பேர் பட்டியல் பழங்குடியினர் மற்றும் 5 பேர் சிறுபான்மையினர்.
இந்தியாவின் மிகப்பெரிய சிறுபான்மைக் குழுவான முஸ்லிம்கள் மத்திய அரசாங்கத்தில் பிரதிநிதித்துவம் பெறவில்லை. அதாவது, புதிய அரசாங்கத்தில் ஒரு முஸ்லிம் அமைச்சர் கூட இல்லை.
அரசாங்கத்தில் பிரதமர் உட்பட மொத்தம் 72 அமைச்சர்கள் உள்ளனர். இதுபோன்ற சூழ்நிலையில், அடுத்த 2-3 ஆண்டுகளுக்கு அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்படாமல் இருக்க அதிக வாய்ப்பு உள்ளது.
மூத்த பத்திரிகையாளர் ஹேமந்த் அத்ரி கூறும்போது, “இப்போதுதான் பதவியேற்பு விழா நடந்தது, அமைச்சர்களுக்கு துறைகள் ஒதுக்கப்படவில்லை. கூட்டணி கட்சிகளை திருப்திபடுத்தும் சவாலை பாஜக எதிர்கொள்கிறது. அதிகாரத்தை மையப்படுத்தி ஆட்சியை நடத்துவதற்குப் பழகிவிட்ட பிரதமர், கூட்டணிக் கட்சிகளை எப்படி நிர்வகிப்பார் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். எந்தக் கட்சிக்கு எந்தத் துறை கிடைக்கும் என்பது, அரசு எந்த அளவுக்குச் சுமூகமாக இயங்கும் என்பதை முடிவு செய்யும்” என்றார்.
அனைத்துக் கூட்டணிக் கட்சிகளையும் பாஜக திருப்திப்படுத்த வேண்டும், எனவே துறைகளை பகிர்ந்தளிக்க நேரம் ஆகலாம்.
மகாராஷ்டிராவைச் சேர்ந்த தேசியவாத காங்கிரஸ் (அஜித் பவார் அணி) தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகிக்கிறது. ஆனால், அக்கட்சியிலிருந்து யாரும் அமைச்சராக பதவியேற்கவில்லை. பிரபுல் படேல் காங்கிரஸ் தலைமையிலான முற்போக்குக் கூட்டணி அரசில் கேபினட் அமைச்சராக இருந்தவர், அவரும் அமைச்சராக பதவியேற்கவில்லை.
அதிதி ஃபட்னிஸ் கூறுகையில், “தேசியவாத காங்கிரஸ் (அஜித் பவார் அணி) கட்சிக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட்டது. ஆனால், இணையமைச்சர் பதவிக்கு அக்கட்சி உடன்படவில்லை. தேசியவாத காங்கிரஸ் மற்றும் பாஜக இடையே முரண்பாடு ஏற்பட்டால், அது எதிர்காலத்தில் மகாராஷ்டிரா அரசியலை பாதிக்கலாம்” என்றார்.
மாநில பிரதிநிதித்துவம்
ஹரியானா மாநிலத்தில் இன்னும் சில மாதங்களில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. முன்னாள் முதலமைச்சர் மனோகர் லால் கட்டார் தவிர, ராவ் இந்தர்ஜித் சிங், கிருஷண் பால் குர்ஜார் ஆகியோரும் அமைச்சர்களாக பதவியேற்றுள்ளனர்.
பத்து மக்களவைத் தொகுதிகளை கொண்ட இந்த மாநிலத்தில், இந்த முறை பாஜக 5 இடங்களை இழந்துள்ளது. வரவிருக்கும் சட்டப்பேரவைத் தேர்தலைக் கருத்தில் கொண்டு, அமைச்சர்கள் குழுவில் ஹரியானாவுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளதாக மூத்த பத்திரிகையாளரும் அரசியல் ஆய்வாளருமான அதிதி ஃபட்னிஸ் நம்புகிறார்.
உத்தரப் பிரதேசத்தில் மக்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு இம்முறை ஏமாற்றமே கிடைத்துள்ளது.
அதிதி ஃபட்னிஸ் கூறும்போது, "உ.பி.யில் இருந்து ராஜ்நாத் சிங், ஜிதின் பிரசாத் போன்ற பழைய தலைவர்களைத் தவிர, புதிய முகங்களுக்கும் இடம் கொடுக்கப்பட்டுள்ளது. உ.பி.யில் இருந்து அனுப்ரியா படேல், கிர்த்தி வர்தன் சிங், கமலேஷ் பாஸ்வான், பி.எல்.வர்மா, பங்கஜ் சௌத்ரி, ஹர்தீப் சிங் பூரி மற்றும் எஸ்.பி. பாகேல் உட்பட மொத்தம் பத்து அமைச்சர்கள் பதவியேற்றுள்ளனர்” என்றார்.
கேரளாவில் பாஜகவுக்கு ஒரு இடம் மட்டுமே கிடைத்த நிலையில், அங்கிருந்து இரண்டு பேர் அமைச்சர்களாக பதவியேற்றுள்ளனர்.
பாஜக 14 இடங்களில் வெற்றி பெற்றுள்ள ராஜஸ்தானில் இருந்து கஜேந்திர சிங் ஷெகாவத், அர்ஜூன் ராம் மேக்வால், பூபேந்திர யாதவ் ஆகியோர் அமைச்சர்களாக பதவியேற்றுள்ளனர்.
மத்தியப் பிரதேசத்தில் 29 இடங்களிலும் பாஜக வெற்றி பெற்ற நிலையில், சாவித்ரி தாகூர் மற்றும் வீரேந்திர வர்மாவைத் தவிர சிவராஜ் சிங் சௌகான், ஜோதிராதித்ய சிந்தியா என மொத்தம் நான்கு பேர் அமைச்சர்களாக பதவியேற்றுள்ளனர்.
பிகாரில் ஐக்கிய ஜனதா தளம் மற்றும் பிற கட்சிகளுடன் இணைந்த பாஜக கூட்டணி ஆட்சி நடக்கிறது. 40 இடங்களைக் கொண்ட பிகாரில் மொத்தம் 8 அமைச்சர்கள் உள்ளனர்.
அதேசமயம், இந்த ஆண்டு தேர்தல் நடைபெறவுள்ள மகாராஷ்டிராவில், தேசிய ஜனநாயகக் கூட்டணி பெரும் தோல்வியை சந்தித்த நிலையில், அங்கிருந்து மொத்தம் 5 அமைச்சர்கள் உள்ளனர். ராம்தாஸ் அத்வாலேவுக்கும் அமைச்சரவையில் இடம் அளிக்கப்பட்டுள்ளது.
மக்களவைத் தேர்தலில் பாஜக ஓரிடத்தில் கூட வெற்றி பெறாத தமிழ்நாட்டிற்கும் மத்திய அமைச்சரவையில் பிரதிநிதித்துவம் கிடைத்துள்ளது. கர்நாடகாவில் இருந்து மொத்தம் 5 அமைச்சர்கள் பதவியேற்றுள்ளனர். ஆந்திராவில் தெலுங்கு தேசம் கட்சியைச் சேர்ந்தவர் உட்பட மூன்று பேர் அமைச்சர்களாக பதவியேற்றுள்ளனர். தெலங்கானாவிலிருந்து இரண்டு பேர் அமைச்சர்களாக பதவியேற்றுள்ளனர்.
அரசு ஸ்திரத்தன்மையுடன் இருக்குமா?
நரேந்திர மோதியின் இந்த புதிய அரசு, கூட்டணிக் கட்சிகளைச் சார்ந்து இருப்பதால், நாடாளுமன்றத்தில் கடும் எதிர்ப்பையும் சந்திக்க வேண்டியுள்ளது. இந்த அரசாங்கம் நிலையற்றதாகவே இருக்கும் என்ற யூகங்கள் உள்ளன.
இருப்பினும், அரசியல் கண்ணோட்டத்தில் பார்த்தால், இது சாத்தியமில்லை என்று அதிதி ஃபட்னிஸ் நம்புகிறார்.
ஃபட்னிஸ் கூறுகையில், “இரண்டு பெரிய கூட்டணிக் கட்சிகளான தெலுங்கு தேசம் மற்றும் ஐக்கிய ஜனதா தளம் ஆகிய இரண்டுமே தங்கள் சொந்த நலன்களையும் கருத்தில் கொள்ளும். ஐக்கிய ஜனதா தளம் குழப்பம் விளைவித்தால், பிகாரில் அதன் ஆட்சி கவிழும். மாநிலத்தில் ஆட்சியை நடத்துவதற்கு தெலுங்கு தேசம் பாஜகவைச் சார்ந்திருக்கவில்லை என்றாலும், மாநிலத்தின் வளர்ச்சிக்காக எல்லாவற்றையும் செய்வோம் என்பதை அக்கட்சி மக்களுக்கு நிரூபிக்க வேண்டும். மீண்டும் மீண்டும் வெளிப்படுத்தப்படும் உறுதியற்ற அச்சம் அவ்வளவு உண்மையானது அல்ல” என்றார்.
ஆனால், மூத்த பத்திரிகையாளர் ஹேமந்த் அத்ரியின் கருத்து சற்று வித்தியாசமானது. கூட்டணி ஆட்சியை நடத்துவதற்குத் தேவையான அனுபவம் பிரதமர் நரேந்திர மோதிக்கு இல்லை என்று ஹேமந்த் அத்ரி நம்புகிறார்.
ஹேமந்த் அத்ரி கூறுகையில், “நரேந்திர மோதி இதுவரை ஏகபோக ஆட்சியையே நடத்தி வந்திருக்கிறார், ஒருதலைப்பட்சமான முடிவுகளை எடுத்திருக்கிறார். கூட்டணிக் கட்சிகளுடன் மோதி எவ்வளவு பொருந்திப் போகிறார் என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். அறுதிப் பெரும்பான்மை அரசுக்கும், கூட்டணி ஆட்சிக்கும் வித்தியாசம் உள்ளது. அனைத்து கூட்டணி கட்சிகளுக்கும் இடம் கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் பாஜக உள்ளது. அரசு எந்தளவுக்கு ஸ்திரமாக இருக்கும் என்பதை துறைகளை ஒதுக்கீடு செய்வதுதான் தெளிவுப்படுத்தும்” என்றார்.
முந்தைய ஆட்சியின் போது, பிரதமர் நரேந்திர மோதி பண மதிப்பிழப்பு போன்ற பல பெரிய முடிவுகளை எடுத்தார். தனது விருப்பப்படி ஆட்சியை தொடர்ந்து நடத்தி வரும் நரேந்திர மோதி, கூட்டணி சார்ந்து தன்னை மாற்றிக் கொள்வாரா இல்லையா என்பதுதான் மிக முக்கியமான விஷயம் என ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.
ஹேமந்த் அத்ரி கூறுகையில், “குஜராத்தில் இருந்து டெல்லி வரையிலான மோதியின் அரசியல் பயணம் ‘தனியாக நடக்க வேண்டும்’ ('Ekala Chalo') என்ற கொள்கையின் அடிப்படையிலேயே உள்ளது. இந்த ஆட்சியில் ஒருவரின் சொந்த விருப்பம் சாத்தியப்படாது. மோதி தனது விருப்பத்தைப் பின்பற்றாமல் ஆட்சியை நடத்த முடியுமா என்பதுதான் இப்போதிருக்கும் கேள்வி” என்கிறார்.
மோதி முன்னுள்ள மிகப்பெரிய சவால் என்ன?
கடந்த அரசாங்கத்தின் பெரும்பாலான மூத்த அமைச்சர்கள் மற்றும் கூட்டணி கட்சியினர் புதிய அரசாங்கத்தில் இணைக்கப்பட்டுள்ளனர். அரசாங்கத்தில் அமைச்சர்களின் எண்ணிக்கை 81 வரை உயரலாம். இதன் பொருள் அமைச்சரவை விரிவாக்கம் செய்வதற்கான வாய்ப்பு உள்ளது.
கடந்த அரசாங்கத்தில் மொத்தம் 24 கேபினட் அமைச்சர்கள் இருந்தனர். இப்போது இந்த எண்ணிக்கை முப்பது என உள்ளது. அதாவது பிரதமர் நரேந்திர மோதியின் ஆட்சியில் மற்ற அரசியல்வாதிகளின் தலையீடுகள் அதிகமாக இருக்கும்.
இதுவரை, நரேந்திர மோதியின் ஆட்சியில், மற்ற அமைச்சர்கள் அவரது அறிவுறுத்தல்களைப் பின்பற்றினர். ஆனால் இப்போது பிரதமர் நரேந்திர மோதியே கூட்டணிக் கட்சிகளின் தலையீடுகளுக்கு வளைந்து கொடுக்க வேண்டியிருக்கும் என்று ஆய்வாளர்கள் நம்புகின்றனர்.
பிரதமர் மோதிக்கு வலுவான தலைவர் என்ற பிம்பம் உள்ளது, அவர் தனது கொள்கைகளை செயல்படுத்துவதில் பெயர் பெற்றவர்.
பிரதமர் மோதியும் இந்திய மக்களுக்கு பல பெரிய வாக்குறுதிகளை அளித்துள்ளார். ஒவ்வொரு ஆண்டும் இரண்டு கோடி இளைஞர்களுக்கு வேலை வழங்குவது, விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்குவது போன்ற பெரிய வாக்குறுதிகளை அவர் அளித்த நிலையில் அவற்றை முந்தைய ஆட்சிக் காலத்தில் நிறைவேற்ற முடியவில்லை.
பிரதமர் மோதியின் மிகப் பெரிய சவாலாக இருக்கும் என்று ஆய்வாளர்கள் கருதுவது, அவர் கொடுத்த வாக்குறுதிகள் குறித்து இப்போது அவர் பொறுப்பேற்க வேண்டும்.
ஹேமந்த் அத்ரி கூறும்போது, “பிரதமர் நரேந்திர மோதியிடம் இப்போது எண்ணிக்கை பலமோ, தார்மீக பலமோ இல்லை. பிரதமர் நரேந்திர மோதி 400-க்கும் மேற்பட்ட இடங்களை பாஜக கூட்டணி பெறும் என்று கூறிய நிலையில் அது நிறைவேறவில்லை. மோதி ஒரு சிறந்த பேச்சாளர் என்பது அனைவருக்கும் தெரியும். இது 2014 மற்றும் 2019 ஆம் ஆண்டுகளில் மோதியின் மிகப்பெரிய பலமாக இருந்தது, ஆனால் இந்த புதிய அரசாங்கத்தில் இதுவே அவரது மிகப்பெரிய பலவீனமாக இருக்கும்.
இப்போது அவர் மேடையில் இருந்து என்ன சொன்னாலும், அது யதார்த்தத்தின் அடிப்படையில் சோதிக்கப்படும்" என்றார்.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)