You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
இந்தியாவில் மூன்றாவது முறையாக பிரதமராகும் மோதி - அமெரிக்கா, பாகிஸ்தான் பார்வை என்ன?
- எழுதியவர், ஷுமைலா ஜாஃப்ரி
- பதவி, பிபிசி நியூஸ், இஸ்லாமாபாத்
இந்தியாவில் நரேந்திர மோதி மீண்டும் பிரதமராவது பற்றி பாகிஸ்தானிடம் இருந்து அவ்வளவு உற்சாகமான கருத்துகள் வெளியாகவில்லை. நரேந்திர மோதி மூன்றாவது முறையாக பிரதமராகப் பதவியேற்பார் என்பதை வாக்கு எண்ணிக்கையை உன்னிப்பாக கவனித்தவர்களால் உணர முடிகிறது. இருப்பினும் பாஜக குறைந்த வித்தியாசத்தில் வெற்றி அடைந்திருப்பது சிலருக்கு ஆச்சரியத்தை அளிக்கிறது.
இந்தத் தேர்தல் முடிவுகள் காரணமாக பாகிஸ்தான்-இந்தியா உறவுகளின் எதிர்கால திசை எப்படி இருக்கும், அதன் சாத்தியமான விளைவுகள் ஆகியவை குறித்தே பாகிஸ்தானில் உள்ள அரசியல் ஆய்வாளர்கள் மிகவும் ஆர்வமாக உள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார் இஸ்லாமாபாத்தில் உள்ள பிபிசி செய்தியாளர் ஷுமைலா ஜாஃப்ரி. மறுபுறம் பொதுமக்கள் இதுபற்றிப் பெரிதாக ஆர்வம் காட்டவில்லை என்றும் குறிப்பிட்டார்.
எல்லை தாண்டிய அரசியல் நிகழ்வுகள் குறித்து பாகிஸ்தானியர்கள் பொதுவாக ஆர்வமாக இருப்பதில்லை. அவர்களைப் பொறுத்தவரை மோதி பொதுத் தேர்தலில் வெற்றி பெற்றார் என்பது தலைப்புச் செய்தியே தவிர வேறு ஏதும் இல்லை.
வழக்கமான அக்கறையின்மை மற்றும் இந்திய அரசியலைப் பற்றிய புரிதலின்மை தவிர இந்த ஆர்வமின்மைக்கு மற்றொரு காரணம், நாட்டில் நிலவும் அரசியல், பொருளாதார மற்றும் பாதுகாப்பு நெருக்கடி.
மக்கள் தங்கள் உள்நாட்டுப் பிரச்னைகளில் உழன்று கொண்டிருக்கும் நிலையில் இந்தியத் தேர்தல் பற்றி அவர்களுக்கு எந்தக் கவலையும் இல்லை.
பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
ஆயினும் தேர்தல் பிரசாரத்தின்போது மோதி இந்திய முஸ்லிம்களை குறிவைத்தார் என்று கூறப்படுவதை அடுத்து, அவர்களின் நல்வாழ்வு குறித்த கவலை பாகிஸ்தானியர்களிடையே காணப்படுகிறது. பாஜக மீண்டும் ஆட்சிக்கு வருவது இந்திய முஸ்லிம்களுக்கு நல்ல செய்தியல்ல என்பது இங்கு (பாகிஸ்தான்) நிலவும் கருத்து. அடுத்து வரும் பாஜக அரசு அவர்களை எப்படி நடத்தும்? இங்குள்ள மக்கள் அதை ஆர்வத்துடன் பார்ப்பார்கள்.
இந்திய பிரதமர் தனது தேர்தல் பேரணிகளின்போது பாகிஸ்தானை 'இழிவுபடுத்திப் பேசியது' பாகிஸ்தான் மக்களுக்குப் பிடிக்கவில்லை. அவரது தலைமையில் இந்தியா-பாகிஸ்தான் உறவு மேம்படும் என்ற நம்பிக்கையும் மக்களுக்கு இல்லை.
ஆயினும்கூட மோதி ஆட்சியில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியை குறிப்பாக உள்கட்டமைப்பு மற்றும் ரியல் எஸ்டேட் துறைகளில் ஏற்பட்டுள்ள வளர்ச்சியை சில சமூக ஊடக பயனர்கள் பாராட்டுகிறார்கள்.
நரேந்திர மோதியின் ஆட்சியின் கீழ் இந்தியா-பாகிஸ்தான் உறவு மேம்படுவதற்கான வாய்ப்புகள் மிகவும் குறைவு என்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.
இரு நாடுகளும் கடினமான அணுகுமுறையை எடுத்துள்ளன. குறிப்பாக இந்தியாவின் அணுகுமுறை வளைந்து கொடுப்பதாக இல்லை. இந்த சூழ்நிலையில், பாஜக அரசின் பாகிஸ்தானுக்கு எதிரான தோரணை தொடரும் என்று இஸ்லாமாபாத் கருதுகிறது என்று இஸ்லாமாபாத்தில் உள்ள இன்ஸ்டிட்யூட் ஆஃப் ஸ்ட்ராடஜிக் ஸ்டடீஸின் இந்திய ஆய்வு மையத்தின் இயக்குனர் குர்ரம் அப்பாஸ் கூறினார்.
பாகிஸ்தான் மிகவும் ஆவேசமான மற்றும் அதிக தன்னம்பிக்கை கொண்ட இந்தியாவை சமாளிக்க வேண்டும். மேலும் காஷ்மீர், சிந்து நதி நீர் ஒப்பந்தம் மீதான பதற்றங்கள் அதிகரிக்கக்கூடும் என்று டாக்டர் அப்பாஸ் மேலும் தெரிவித்தார்.
“இந்த கட்டத்தில் பாகிஸ்தானுடனான உறவை இயல்பாக்குவதில் பொருளாதார அல்லது அரசியல் பலன் எதுவும் இல்லை என்று இந்தியாவில் அரசியல் மற்றும் செயல் உத்தி வட்டாரங்களிடையே ஒருமித்த கருத்து இருப்பதாகத் தெரிகிறது. இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், "வீடு புகுந்து தாக்குவோம்" (அடுத்த நாட்டுக்குள் புகுந்து தாக்குவது) என்று பலமுறை மிரட்டல் விடுத்தார். இது தேர்தல் பரப்புரையின் போது பாஜக தலைவர்கள் மீண்டும் மீண்டும் வலியுறுத்திய கொள்கை. அதனால் பகைமைப் போக்கு தொடரும். பாகிஸ்தானைத் தனிமைப்படுத்தும் கொள்கைகளை இந்தியா தொடர்ந்து முன்வைக்கும்.”
பலூச் கிளர்ச்சியாளர்கள் மற்றும் பாகிஸ்தானுக்கு எதிரான போராளிக் குழுக்களுக்கு இந்தியா தொடர்ந்து மறைமுகமாக ஆதரவளிக்கும் என்றும் குர்ரம் அப்பாஸ் கருதுகிறார். பாகிஸ்தானின் மற்றொரு கவலை, தனது மண்ணில் தன் குடிமக்கள் இந்திய கையாட்களால் கொல்லப்படுவது ஆகும்.
“பாகிஸ்தானைத் தாக்குவது பாஜகவுக்கு உதவிகரமாக இருக்கும் வரை, அரசியல் ரீதியாக எந்தவொரு இயல்பு நிலையையும் எதிர்பார்ப்பது சிந்தனையில் மட்டுமே சாத்தியம். இருப்பினும், எல்லையில் படைகுறைப்பு யோசனை, தூதாண்மை முயற்சிகள் மற்றும் பரஸ்பர நண்பர்கள் மூலம் நேர்மறையான தகவல்தொடர்பு ஆகியவற்றுக்கு பாகிஸ்தான் தயாராக இருக்கும்" என்று டாக்டர் அப்பாஸ் மேலும் கூறினார்.
இந்தியாவுடன் வர்த்தகத்தைத் திறப்பது குறித்தும் பாகிஸ்தான் கோடிட்டுக்காட்டியுள்ளது. இருப்பினும் அவ்வாறு நடப்பது சந்தேகமே என்று டாக்டர் குர்ரம் அப்பாஸ் கருதுகிறார்.
“வர்த்தகம் தொடர்பாக இஸ்லாமாபாத் காத்திருந்து செயல்படும் கொள்கையை கடைப்பிடிக்கும். வர்த்தகத்தை மீண்டும் தொடங்குவது மறுபக்கத்திலிருந்து வரும் சமிக்ஞையைப் பொறுத்தது. நேர்மறையான அறிகுறி இருந்தால், பாகிஸ்தான் உடனடியாக செயல்படும்.”
“நிலைமையை இயல்பாக்குவது நடக்க இயலாத ஒன்றாகவே தோன்றுகிறது”:
நரேந்திர மோதி மற்றும் பாஜகவின் பாகிஸ்தான் எதிர்ப்புப் பேச்சு இந்திய வாக்காளர்களை ஈர்க்கிறது. அவர்கள் அதை தொடர்ந்து பறை சாற்றி வருகின்றனர். பல ஆண்டுகளாக அதை தந்திரமாகப் பயன்படுத்தி மக்கள் ஆதரவை பெறுகின்றனர் என்று இஸ்லாமாபாத்தை தளமாகக் கொண்ட வெளியுறவுக் கொள்கை சிந்தனைக் குழுவின் இந்தியா குறித்த ஆய்வாளரான மரியம் மஸ்தூர் கருதுகிறார்.
2019 இல் புல்வாமா தாக்குதலைப் பயன்படுத்தி பாகிஸ்தானுக்கு எதிரான உணர்வைத் தூண்டி மோதி தனது ஆதரவாளர்களைத் திரட்டினார் என்று மரியம் கூறுகிறார்.
“பல ஆண்டுகளாக இந்திய வாக்காளர்களிடையே பாகிஸ்தானுக்கு எதிரான உணர்ச்சியை மோதி தூண்டிவிட்டுள்ளார். இந்தப் பின்னணியில், இந்தியாவில் உள்ள எந்த அரசியல் அமைப்பும் இஸ்லாமாபாத்துடன் இயல்பு நிலையைப் பற்றி பேசத் துணியும் என்று நான் கருதவில்லை.”
இதற்கு நேர்மாறாக சமீபத்திய ஆண்டுகளில் பாகிஸ்தான் அரசியலில் இந்தியா ஒரு விஷயமாக இருக்கவில்லை என்று மரியம் கூறினார்.
இருப்பினும் இப்போதும் சிறிதளவு நம்பிக்கை இருப்பதாக டாக்டர் குர்ரம் அப்பாஸ் வாதிடுகிறார்.
”பிரதமர் மோதியின் கடைசி பதவிக்காலம் இதுவாக இருக்கலாம். எனவே அவர் தனக்கென ஒரு மரபை (legacy) உருவாக்க முயற்சிப்பார் என்று பலர் நம்புகிறார்கள். அவர் தனக்காக எந்த வகையான மரபை உருவாக்க விரும்புகிறார் என்பதைப் பொறுத்து பல விஷயங்கள் இருக்கும். அது சமாதானத்தை ஏற்படுத்துபவர் என்ற நேர்மறையான மரபா அல்லது பிரித்தாளும் எதிர்மறையான மரபா?"
இந்திய தேர்தல் முடிவுகளை அமெரிக்கா எப்படி பார்க்கிறது?
அமெரிக்காவின் டெலாவேர் பல்கலைக்கழகத்தில் சர்வதேச ஆய்வுகள் பிரிவின் நிபுணர், பேராசிரியர் முக்தாதர் கான் கூற்றுபடி:
அமெரிக்கா அரசாங்கம் இந்தியா தொடர்பாக தெளிவான கொள்கைகளைக் கொண்டுள்ளது. இந்தியா உடனான உறவை மிகவும் முக்கியமானதாகக் கருதுகிறது. குறிப்பாக சீனாவை கையாள்வதில் இந்தியாவின் பங்கு முக்கியம் என்று அமெரிக்கா எண்ணுகிறது.
இருப்பினும், துளசி கபார்ட் போன்ற சில பழமைவாத தலைவர்களைத் தவிர, அமெரிக்க அரசியல்வாதிகள் பலருக்கு மோதியை பிடிக்கவில்லை. அதேநேரம் பல அமெரிக்க தலைவர்கள் இந்தியாவுடனான உறவு குறித்து `இந்த நூற்றாண்டின் மிக முக்கியமான உறவு’ என்று கூறியுள்ளனர்.
சீனாவுக்கு எதிரான நிலைப்பாட்டில் இந்தியா முற்றிலுமாக அமெரிக்கா பக்கம் நின்றால், சர்வதேச அளவில் மேற்கத்திய நாடுகள் மற்றும் அமெரிக்காவின் ஆதிக்கம் 21ஆம் நூற்றாண்டு முழுவதும் நீடிக்கும். ஆனால், இந்தியா அமெரிக்காவுக்கு எதிராக மாறி, சீனா மற்றும் ரஷ்யாவுடன் கைகோர்த்தால், மேற்கத்திய ஆதிக்கம் இந்த நூற்றாண்டுடன் முடிவுக்கு வரும்.
அதனால் அமெரிக்காவுக்கு இந்தியா மிகவும் முக்கியம்.
தற்போது மோதியை சமாளிப்பது வெளிநாடுகளுக்கு மிகவும் கடினமாகிவிட்டது, ஏனெனில் சமீபகாலமாக இந்தியாவின் வெளியுறவுக் கொள்கைகள் மிகவும் தீவிரமாகிவிட்டது. எடுத்துக்காட்டாக, வெளிநாட்டில் நடந்த கொலை சம்பவம் பற்றி ஒரு சர்ச்சை எழுந்தது. அந்த நேரத்தில் மோதி பலவீனமாகி விடுவார் என சிலர் மகிழ்ச்சியாக இருந்தனர்.
மோதி கடந்த ஜூலை மாதம் அமெரிக்காவுக்கு சென்ற சமயத்தில், சர்வதேச அளவில் அவரது மதிப்பு உயர்ந்தது. ஆனால் அதற்குப் பிறகு அமெரிக்காவிலும் கனடாவிலும் காலிஸ்தானியர்கள் கொல்லப்பட்டதை அடுத்து இந்தியாவுக்கும் மோதி அரசாங்கத்துக்கும் அந்தஸ்து பாதிக்கப்பட்டு மேற்கத்திய நாடுகளால் அதிகம் விமர்சிக்கப்படுகிறது.
இந்தியாவின் வெளிநாட்டு உறவுகளில் விரிசல் ஏற்பட்டுள்ளது. அதனால் சர்வதேச அளவில் இந்தியாவின் நிலை பலவீனமாகியதாக கருதப்படுகிறது. மறுபுறம், வெளியுறவுக் கொள்கை குறித்து ராகுல் காந்தி, சசி தரூர் போன்ற தலைவர்களின் குரல் ஓங்கி ஒலிக்கும்.
இந்திய தேர்தல் முடிவுகள் குறித்து அமெரிக்க ஊடகங்களில் விவாதிக்கப்பட்டு வருகிறது. இம்முறை மோதி வெற்றி பெற்றுள்ளார். ஆனால் இனி வரும் காலங்களில் அவர் தன்மையான நிலைப்பாட்டை எடுக்க வேண்டும் என்பது அமெரிக்க ஊடகங்களின் கருத்து.
தேர்தல் முடிவுகள் அமெரிக்காவில் உள்ள இந்திய சமூகத்தினர் மத்தியில் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இருப்பினும் பலர், இந்த முறையும் `மோதிஜி’ பிரதமராக வருவார் என்பதில் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)