You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
சார்லஸ் டார்வின் தந்த பரிணாம வளர்ச்சி கோட்பாட்டின் 10 முக்கிய அம்சங்கள்
சார்லஸ் டார்வினின் பரிணாம வளர்ச்சி கோட்பாடு, அறிவியலில் மட்டுமல்லாது, ஆன்மீகத்திலும் கூட பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. ஏனெனில், கடவுள்தான் மனிதனைப் படைத்தார் என்று மதங்கள் அதுகாறும் சொல்லி வந்த கோட்பாடுகளையும், கருத்துகளையும் மறுதலிக்கக் கூடியதாக அவரது கண்டுபிடிப்புகள் அமைந்தன.
அதுவரை, எல்லா உயிரினங்களும் ஒரு தெய்வீக சக்தியால் கருத்தரிக்கப்படுகிறது என்றே மக்களும் நம்பி வந்தனர். பிரிட்டனில் பிறந்த இயற்கை ஆர்வலரான சார்லஸ் டார்வின்தான், முதன் முதலில் மனிதனின் பரிணாம வளர்ச்சி இயற்கையாக நிகழ்கிறது என்பதை விளக்கினார்.
டார்வின் மறைந்த நாளான இன்று, மனித வரலாற்றில் பெரும் புரட்சியை ஏற்படுத்திய முக்கிய கண்டுபிடிப்புகளில் ஒன்றான அவரது பரிணாம வளர்ச்சி கோட்பாடு பற்றியும், அதற்காக அவர் மேற்கொண்ட பயணங்கள் பற்றியும் முக்கிய 10 அம்சங்களைப் பார்க்கலாம்.
பரிணாம வளர்ச்சி கோட்பாடு - 10 முக்கிய அம்சங்கள்
- பரிணாம வளர்ச்சி கோட்பாட்டை அளித்த சார்லஸ் டார்வின் ஆராய்ச்சியை பரிசோதித்து செம்மைப்படுத்த 20 ஆண்டுகள் ஆயின. தாம் பயின்ற கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தை விட்டு 22-வது வயதில் நீண்ட பயணம் மேற்கொண்டார்.
- எச்.எம்.எஸ் பீகிள் என்ற கப்பலில் டார்வின் தென் அமெரிக்கா சென்றார். மனிதனின் பரிணாம வளர்ச்சி குறித்து முதல் தடயம் அளித்த தொல்லுயிர் படிவங்களை அங்கேதான் அவர் சேகரித்தார்.
- கலபகோஸ் தீவுகள் சென்றபோது வெவ்வேறு தீவுகளில் பலவிதமான தனித்துவ பண்புகளோடு ஆமைகள் திகழ்வதை டார்வின் கண்டார். நிறைய உணவு கிடைக்கும் தீவுகளில் சிறிய கழுத்துடனும், வறண்ட தீவுகளில் நீளமான கழுத்துடனும் ஆமைகள் காணப்பட்டன. பரிணாம வளர்ச்சியின் விளைவு இது என்பதை அவர் புரிந்து கொண்டார்.
- புதிய வகை விலங்குகளை உருவாக்க கலப்பின முறையை எவ்வாறு ஆய்வாளர்கள் பயன்படுத்துகிறார்கள்? என்பதை டார்வின் கவனிக்க ஆரம்பித்தார்.
- எந்த இனம் சூழலுக்கு ஏற்ப தன்னை மாற்றிக்கொள்கிறதோ அந்த இனம் உயிர் வாழ முடியும். தன்னை மாற்றிக்கொள்ளாத இனம் அடுத்த சந்ததியினரே இல்லாமல் மறைந்து விடுகிறது.
- அனைத்து உயிரினங்களுமே ஒரு பொதுவான மூதாதையரில் இருந்து கிளைத்தவை என்று டார்வின் கூறுகிறார். அதாவது, மனிதன், யானை, சிங்கம், மீன்கள், முதலைகள் என அனைத்துமே பொதுவான ஓர் உயிரில் இருந்து பரிணாம வளர்ச்சியின் விளைவாக வந்தவை என்பது அவரது கோட்பாடு.
- எல்லா உயிரினங்களையும் வைக்கும் அதே தளத்தில் தான் மனிதனையும் டார்வின் வைத்தார். அவரது கண்டுபிடிப்புகள் பிரிட்டனில் 19 ஆம் நூற்றாண்டின் ஆராய்ச்சி முடிவுகளின் அடிப்படையை உலுக்கின.
- டார்வின் 1859ம் ஆண்டு உயிரினங்களின் தோற்றம் குறித்த தனது புத்தகத்தை வெளியிட்டார். அதன் பிறகு அறிவியலுக்கு அப்பாற்பட்ட பிரபலம் ஆனார்.
- பன்முகத்தன்மை கடவுளிடம் இருந்து வந்தது அல்ல, அறிவியலில் இருந்து வந்தது என விளக்கம் அளித்து மேலும் ஆராய்ச்சி செய்வதற்கான வழியை வகுத்தவர் டார்வின்.
- பரிணாம வளர்ச்சி நம்பிக்கையோடு தொடர்புடையது என கத்தோலிக்க தேவாலயம் அறிவித்தது.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்