விஜய் கருத்துத் தெரிவித்த தமிழ்நாட்டின் 3 விவகாரங்கள் என்னென்ன? அவரது அரசியல் சார்பு பற்றி என்ன தெரியவந்திருக்கிறது?

விஜய் எந்தப் பக்கம் போகப் போகிறார்?

பட மூலாதாரம், X/@vijayfc

    • எழுதியவர், சாரதா வி
    • பதவி, பிபிசி தமிழ்

நடிகர் விஜய், தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியைத் தொடங்கி தனது அரசியல் பிரவேசத்தை பிப்ரவரி 2ஆம் தேதி அதிகாரபூர்வமாக அறிவித்திருந்தார். நாடாளுமன்றத் தேர்தல்களில் போட்டியிடவில்லை, யாருக்கும் ஆதரவு இல்லை என்று தெரிவித்திருந்த விஜய், 2026 சட்டமன்றத் தேர்தல்களில் களத்தில் இறங்கப் போவதாக தெரிவித்துள்ளார்.

‘ஊழல் மலிந்த அரசியல் கலாசாரம்’ மற்றும் ‘பிளவுவாத அரசியல் கலாசாரம்’ ஆகியவற்றை எதிர்த்துத் தனது அரசியல் அமையும் என்று தெரிவித்திருந்தார்.

நாடாளுமன்றத் தேர்தல்கள் முடிந்துள்ள நிலையில், பலரது கவனமும் விஜய் பக்கம் திரும்பியுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவராகத் தன்னை அறிவித்துள்ள நடிகர் விஜய் இதுவரை முக்கியமான மக்கள் பிரச்னைகளில் நேரடியாகத் தனது கருத்தை தெரிவித்தது வெகு சில நேரங்களில் மட்டுமே.

குடியுரிமை திருத்தச் சட்டம் பற்றி விஜய் கூறியது என்ன?

இஸ்லாமிய சமூகத்தினருக்குப் பாதகம் விளைவிக்கும் என்று எதிர்க்கட்சிகளால் எதிர்க்கப்படும் குடியுரிமை திருத்தச் சட்டம் 2019, கடந்த மார்ச் மாதம் மத்திய அரசால் நிறைவேற்றப்பட்ட போது அதற்கு கண்டனத்தைப் பதிவு செய்திருந்தார் விஜய்.

“சமூக நல்லிணக்கத்துடன் நாட்டு மக்கள் அனைவரும் வாழும் சூழலில் பிளவுவாத அரசியலை முன்னிறுத்திச் செயல்படுத்தப்படும் இந்திய குடியுரிமை திருத்தச் சட்டம் 2019 போன்ற எந்தச் சட்டமும் ஏற்கத்தக்கது அல்ல. தமிழ்நாட்டில் இச்சட்டத்தை நடைமுறைப்படுத்த மாட்டோம் என்று ஆட்சியாளர்கள் உறுதி அளிக்க வேண்டும்” என எக்ஸ் தளத்தில் பதிவு செய்திருந்தார்.

கள்ளச்சாராய மரணங்கள் பற்றி விஜய் கூறியது என்ன?

விஜய் எந்தப் பக்கம் போகப் போகிறார்?

பட மூலாதாரம், X/@tvkvijayhq

கள்ளக்குறிச்சியில் விஷச் சாராயம் குடித்து கூலித் தொழிலாளர்கள் பலர் உயிரிழந்த நிலையில், தமிழ்நாடு அரசைக் கண்டித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார்.

அந்த அறிக்கையில், “கடந்த ஆண்டு இதே நிகழ்வு காரணமாகப் பல உயிர்களை இழந்த துயரத்தில் இருந்து இன்னும் முழுமையாக மீளாத நிலையில், மீண்டும் இப்படியொரு சம்பவம் நிகழ்ந்திருப்பது, அரசு நிர்வாகத்தின் அலட்சியத்தையே காட்டுகிறது” இதுவே முதல் முறையாக மாநில அரசு மீது விஜய் கூறிய முதல் விமர்சனம்.

விஜய் எந்தப் பக்கம் போகப் போகிறார்?

பட மூலாதாரம், X/@vijayfc

நீட் தேர்வு விவகாரத்தில் விஜயின் நிலைப்பாடு என்ன?

இந்த வாரம் சென்னையில் நடைபெற்ற, பத்து, பன்னிரண்டாம் வகுப்பில் முதல் மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களுக்கான கல்வி விருது விழாவில் பேசிய விஜய் நீட் தேர்வு குறித்தும் மாநில உரிமைகள் குறித்தும் தனது கருத்தைத் தெரிவித்துள்ளார்.

“நீட் தேர்வால் கிராமப்புற ஏழை எளிய பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மாணவர்கள் பாதிக்கப்படுகிறார்கள். நீட் மாநில உரிமைகளுக்கு எதிரானதாக இருக்கிறது. 1975க்கு முன் கல்வி மாநிலப் பட்டியலில் இருந்தது. ஒன்றிய அரசு அதை பொதுப் பட்டியலில் சேர்த்ததே பிரச்னையின் தொடக்கம்.

ஒரே நாடு, ஒரே பாடத்திட்டம், ஒரே தேர்வு என்பது கல்வி கற்கும் நோக்கத்துக்கே எதிராக உள்ளது. பன்முகத்தன்மை நமது பலம், பலவீனம் அல்ல. பல்வேறு குளறுபடிகள் காரணமாக நீட் தேர்வு மீதான நம்பகத்தன்மை போய்விட்டது. நீட் தேர்வு ரத்து குறித்து தமிழக சட்டமன்றம் கொண்டு வந்திருக்கும் தீர்மானத்தை நான் மனப்பூர்வமாக வரவேற்கிறேன்” என்றார்.

தனது உரையை முடிக்கும்போது , “வாய்ப்புகள் கிடைக்கவில்லை என்றால் வருத்தப்படாதீர்கள். கடவுள் உங்களுக்காக மற்றொரு வாய்ப்பை வைத்துக்கொண்டு காத்திருக்கிறார் என்று அர்த்தம்” என்று மாணவர்களுக்குத் தெரிவித்தார்.

மாணவர்களுக்கான கல்வி விருது நிகழ்வில் முதல் நாள் பேசிய விஜய் நீட் தேர்வு குறித்து எதுவும் பேசவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இது தவிர, குவைத்தில் உயிரிழந்த இந்திய தொழிலாளர்களுக்கு இரங்கல், புதுச்சேரி சிறுமி படுகொலைக்கு வேதனை, அம்பேத்கர் ஜெயந்திக்கும், ரமலான் பண்டிகைக்கும் வாழ்த்து தெரிவித்திருந்தார்.

நாடாளுமன்றத் தேர்தல்களில் வெற்றி பெற்ற பிரதமர் மோதி, அண்டை மாநிலத் தலைவர்கள், திமுக எம்பிக்களுக்கும் வாழ்த்து தெரிவித்திருந்தார்.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

கடந்த ஆண்டு, மாணவர் சந்திப்புகளில் பேசிய விஜய், “அம்பேத்கர், பெரியார், காமராஜரை பற்றித் தெரிந்து கொள்ளுங்கள். தேவையானதை எடுத்துக் கொள்ளுங்கள். மற்றதை விட்டுவிடுங்கள். நாளைய வாக்காளர்கள் நீங்கள்தான். புதிய தலைவர்களை நீங்கள்தான் தேர்ந்தெடுக்கப் போகிறீர்கள். நமது விரலை வைத்து நாமே குத்திக் கொள்ளக்கூடாது. 1.5 லட்சம் பேர் கொண்ட ஒரு தொகுதியில் வாக்குக்கு ரூ.1000 கொடுத்து, ஒருவர் 15 கோடி செலவு செய்கிறார் என்றால், அவர் அதற்கு முன்பு எவ்வளவு சம்பாதித்திருக்க வேண்டும் என்று யோசித்துப் பார்க்க வேண்டாமா?” என்று பேசினார்.

கடந்த 2022ஆம் ஆண்டு ஹதராபாத்தில் வாரிசு படத்தின் படப்பிடிப்பின் போது, தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவை சந்தித்திருந்தார். அதற்கு முன்னதாக புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி விஜயை சந்தித்திருந்தார். இவை எல்லாம் மரியாதை நிமித்தமான சந்திப்புகள் என்றே கூறப்பட்டன.

கடந்த 2013ஆம் ஆண்டு வெளிவந்த ‘தலைவா’ படத்தின் போஸ்டரில் டைம் டு லீட் என்ற வாசகம் இருந்தது. தலைவா படம் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டிருந்ததால், தமிழக முதல்வர் ஜெயலலிதாவிடம் வேண்டுகோள் விடுத்தார். அந்த வாசகம் நீக்கப்பட்ட பிறகு படம் வெளியானது.

தமிழ் சினிமாவின் உச்ச நடிகராக, அதிக சம்பளம் பெற்றுக் கொண்டிருக்கும் போதே, அதை விடுத்து, அரசியலில் இறங்கப் போகிறேன் என்று விஜய் கூறியவுடனே, அவர் எந்தப் பக்கம் செல்லப் போகிறார் என்பது குறித்த பேச்சுகள் தொடங்கிவிட்டன.

விஜய் எந்தப் பக்கம் போகப் போகிறார்?

பட மூலாதாரம், Pazha Karuppaiah

‘சீமானுடன் சேர்ந்தால் சர்வ நாசம்’ – பழ கருப்பையா

பிபிசி தமிழிடம் பேசிய மூத்த அரசியல்வாதி பழ கருப்பையா, “விஜய் பாஜகவுக்கு எதிராக நிற்கிறார் என்று தெரிகிறது. நீட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார். திமுகவை எதிர்த்துதான் அவர் அரசியலுக்கு வர வேண்டும். இப்போது இருக்கும் ஆட்சி சிறந்தது என்றால், புதிதாக ஒருவர் ஏன் வர வேண்டும்? ஸ்டாலினை எதிர்க்க மாட்டார் என்றால், விஜய் கட்சி தொடங்குவதற்கான தேவையே கிடையாது," என்று கூறினார்.

மேலும், "யாரோடு சேரக்கூடாது என்று விஜய் தெரிந்துகொள்ள வேண்டும். சீமானுடன் சேர்ந்தால் சர்வ நாசம் ஆகிவிடுவார். அது அவருக்குத் தெரியாது, நான் சொல்கிறேன். ரெட்டியார், நாயக்கர், நாயுடு, அருந்ததியர் ஆகியோர் தமிழர்கள் இல்லை என்று கூறி 20% வாக்குகளை ஒதுக்கி வைத்துள்ளார் சீமான். பாஜகவுடன் சேர்ந்தால் 12% இஸ்லாமிய வாக்குகள் கிடைக்காது."

"விஜய் கூறியுள்ள ஒன்றிரண்டு விஷயங்களை வைத்து அவரின் முழு உள்ளத்தைப் புரிந்துகொள்ள முடியாது. ஆனால் மென்மையான எதிர்ப்பாளியாக இருக்கிறார். வன்மையாகக் கையாள வேண்டும் என்பது என் கருத்து,” என்று கூறுகிறார் பழ கருப்பையா.

'திமுகவின் வாக்கு வங்கி குறையும்' - தமிழருவி மணியன்

விஜய் அரசியலுக்கு வருவதால் உடனடி பாதிப்பு திமுகவுக்கு என்கிறார் ரஜினியின் அரசியல் ஆலோசகரான தமிழருவி மணியன்.

“திமுகவின் வாக்கு வங்கியில் 16% சிறுபான்மையினரின் வாக்குகள். சிறுபான்மை மக்களுக்காகக் குரல் கொடுக்கிறோம் என்ற திமுகவைவிட, தலித் கிறிஸ்தவரான விஜய் அதைக் கூறினால், மக்களிடம் எடுபடும். தமிழ்நாட்டின் அனைத்து தலைவர்களும் விஜய் கட்சி தொடங்கியதற்கு வாழ்த்தினர். முதல்வரும் உதயநிதியும் மட்டும்தான் வாழ்த்து தெரிவிக்கவில்லை” என்றார்.

திமுக கூறும் கருத்துகளையே விஜய் கூறினால், திமுக கூட்டணிக் கட்சிகளை விஜய் பக்கம் இழுக்க வாய்ப்புண்டு என்கிறார் அவர்.

“திருமாவளவன் திமுகவில் மகிழ்ச்சியாக இல்லை, இறுக்கமாகத்தான் இருக்கிறார். புதுக்கோட்டையில் 300 பேர் வசிக்கும் கிராமத்தில் குடிநீர் தொட்டியில் மலம் அள்ளிப் போட்டவர்களை இன்னுமா கண்டுபிடிக்கிறார்கள்? இதன் பின்னால் உள்ள நுண் அரசியல் அவருக்குத் தெரியாதா? பாசிச எதிர்ப்பு, என்பதற்காகத்தான் அங்கு இருக்கிறார். அதையே விஜய் கூறினால், அவருடன் சேர வாய்ப்புண்டுதானே! விஜய் ‘ஒன்றிய அரசு’ என்றுதான் கூறுகிறார். இவை எல்லாம் சூசகமாக என்ன கூறுகிறது?” என்றார்.

விஜய் எந்தப் பக்கம் போகப் போகிறார்?

பட மூலாதாரம், Facebook/ தமிழருவி

சீமானும் விஜய்யும் கூட்டணி அமைக்க வாய்ப்பு உண்டு என்று கூறும் தமிழருவி மணியன், “விஜய்யை வரவேற்க சீமான் தயாராக இருக்கிறார். அவருக்குப் பின்னால் இருப்பது தமிழ்த் தேசியம் பேசுபவர்கள் என்றாலும், கூட்டணி அமைக்க ஒத்த கருத்து தேவையில்லை, பொது எதிரி இருந்தால் போதும். அது திமுக. 1967இல் தமிழ்நாட்டில் காமராஜரை வீழ்த்துவதற்காக, முற்றிலும் வெவ்வேறான கொள்கைகள் கொண்ட கருணாநிதி, ராஜாஜி, முஸ்லீம் லீக், கம்யூனிஸ்டுகள் ஒன்றிணைந்தனர்.

அதேபோன்று 1977இல் மத்தியில் இந்திரா காந்தி என்ற பொது எதிரியை வீழ்த்த எதிர்க்கட்சிகள் கூட்டணி அமைத்தனர். இருப்பினும், விஜய்க்கு அதிகபட்சமாக 8-10% வாக்குகளுக்கு மேல் கிடைக்காது. சீமானுடன் சேர்ந்தாலும் மொத்தமாக 20%க்கு மேல் கிடைக்காது. எனவே இந்தக் கூட்டணி கோட்டையைப் பிடிக்க முடியாது,” என்றார்.

மேலும், விஜய் தனது நகர்வுகளை மிகவும் திட்டமிட்டு எடுத்து வைப்பதாகச் சுட்டிக்காட்டுகிறார் தமிழருவி மணியன். “காமராஜர் சாயலில் முதல் அடியைக் கல்வியை நோக்கி எடுத்து வைத்துள்ளார். ஏழை எளியவர்களுக்கு இரவுப் பாடசாலை, ஆண்டுதோறும் முதல் மதிப்பெண் பெறும் மாணவர்களுக்கு விருது, ஏழை மாணவர்களுக்கு ஐ.ஏ.எஸ் படிக்க நூலகங்கள் அமைக்கக் கூறியுள்ளார். அம்பேத்கர் ஜெயந்தியின்போது அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து அதை விழாவாகக் கொண்டாடச் சொல்லியிருந்தார். ரமலான் பண்டிகையின் போது இஸ்லாமிய மக்களுடன் நோன்பில் கலந்து கொள்ள வேண்டும் என்று கூறினார்” என்றார்.

'ரஜினியுடன் இருந்த மூன்று ஆண்டுகள் வீணாகிவிட்டது'

எனினும் நடிகர்கள் மீது தனக்கு நம்பிக்கை இல்லை என்பதையும் அவர் பதிவு செய்கிறார்.

“நான் மூன்று ஆண்டுகள் ரஜினிகாந்துடன் பயணம் செய்து, ஆயிரம் வியூகங்களை அமைத்து, எனது காலத்தை வீணடித்துவிட்டேன். எனது நம்பகத்தன்மையையும் ஓரளவு இழந்துவிட்டேன். ஆனால் ரஜினி எதையும் இழக்கவில்லை. எனது சொந்த அனுபவத்திலிருந்து கூறுகிறேன், நடிகர்களிடம் இருந்தது பெரிதாக எதையும் எதிர்ப்பார்க்க முடியாது. 90களில் ரஜினிகாந்துக்கு இருந்தது போல, தற்போது விஜய்க்கு ரசிகர் கூட்டம் உள்ளது. ரஜினி மாதிரி கடைசி நேரத்தில் பின்வாங்குவாரா இல்லையா என்று எப்படி உறுதியாகத் தெரியும்? அரசியல் என்பது பெரும் திமிங்கலங்கள் உள்ள பெருங்கடல், இதில் விஜய் கரை சேர்வது மிகவும் அரிது” என்றார்.

நல்ல தெளிவான அரசியல் சிந்தனை உள்ளவர்கள் தன் பக்கம் இருக்கிறார்கள் என்று விஜய் மக்களுக்குக் காட்டவில்லை என்றும், அது அவருக்கு எதிர்மறையாக இருக்கும் என்பதைக் காலம் அவருக்கு உணர்த்தும் என்றும் அவர் தெரிவித்தார்.

விஜய் எந்தப் பக்கம் போகப் போகிறார்?

'பாஜகவின் பிடியிலிருந்து விஜய் தப்ப முடியாது'

டென்வர் பல்கலைகழக பகுதி நேர பேராசிரியரும், சென்னை பல்கலைக்கழக அரசியல் பொது நிர்வாகத் துறையின் முன்னாள் தலைவருமான ராமு மணிவண்ணன், “தனது பலம் என்னவென்று தெரிந்துகொள்ள விஜய் தனியாகப் போட்டியிடுவார். அவரது இளம் ரசிகர்களுக்கு பொதுவெளியில் ஒரு இடம் இருக்கிறது, ஆனால் விஜய் எந்தப் பக்கம் நோக்கித் தனது அரசியலை நடத்துவார் என்று கேட்டால், அது இன்னும் அவருக்கே தெரியாது," என்கிறார்.

"ரஜினி 90களில், சிறந்த நடிகர் என்ற அடையாளத்தை தாண்டி, தானே ஒரு பிராண்டாக உருவான போது அவரது புகைப்படங்களை அட்டைப் படமாகப் போட்டனர் குமுதமும் ஆனந்த விகடனும். ஆனால் அவரால் ஒரு அரசியல்வாதியாக உருவெடுக்க முடியவில்லை. இப்போது ஊடகங்கள் அதைத்தான் விஜய்க்கும் செய்கின்றனர்” என்றார்.

விஜய்யின் குடியுரிமை திருத்தச் சட்டம், நீட் தேர்வு குறித்த கருத்துகளைக் கொண்டு அவர் பாஜகவுக்கு எதிராக நிற்கிறார் என்று கூறப்பட்டாலும், அப்படிக் கூற முடியாது என்கிறார் பேராசிரியர் ராமு மணிவண்ணன்.

“தமிழ்நாட்டுக்கு என்று ஒரு நிலைப்பாடு உண்டு, அதைத்தான் விஜய் பேசுகிறார். திமுக, அதிமுக யாராக இருந்தாலும் மாநிலத்துக்கான பொது நிலைப்பாட்டைத்தான் பேசுவார்கள். பாஜகவின் பிடியிலிருந்து வெகுதொலைவில் இருக்க முடியாது. கல்வி விருது நிகழ்ச்சி நடத்த எப்படிப் பணம் கிடைக்கிறது என்பது போன்ற பல கேள்விகள் எழும்,” என்றார்.

மேலும், “ரஜினி அரசியலுக்கு வருவாரா இல்லையா என்று தெரியும்வரை அவரைப் பற்றிய பேச்சு இருந்துகொண்டே இருந்தது. தெரிந்தபிறகு, காணாமல் போய்விட்டார். அதே போன்றுதான், விஜய்யும். விஜய் எல்லாருக்கும் எதிரி, எல்லோருடன் இணங்கிப் போவது என்ற அணுகுமுறையைக் கொண்டுள்ளார். அவர் எந்தப் பக்கம் என்று தெரிந்துவிட்டால் அவரது முக்கியத்துவம் குறைந்துவிடும். தமிழகத்தைப் புரட்டிப் போடும் அளவுக்கு அவர் ஏதும் செய்யாத வரை அவர் மீதான நம்பிக்கை குறைவுதான்” என்கிறார் பேராசிரியர் ராமு மணிவண்ணன்.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)