அதானி குழுமத்தை அசைத்துப் பார்க்கும் ஹிண்டன்பர்க் ஆய்வறிக்கை உள்நோக்கம் கொண்டதா?

அதானி குழுமத்திற்கு நெருக்கடி

பட மூலாதாரம், Getty Images

    • எழுதியவர், தினேஷ் உப்ரேதி
    • பதவி, பி.பி.சி. செய்தியாளர்

அமெரிக்காவின் நிதியியல் தடயவியல் நிறுவனமான ஹிண்டன்பர்க், அதானி குழுமம் குறித்து பல தீவிரமான கேள்விகளை எழுப்பியுள்ளது. இந்த அறிக்கை ஆதாரமற்றது என்று மறுக்கும் அதானி குழுமம் சில கேள்விகளுக்குப் பதிலளித்துள்ளது. ஆனால் முதலீட்டாளர்கள் மத்தியில் ஒரு வகை அச்சம் நிலவி வருகிறது.

அதானி குழுமம் குறித்த இந்த அறிக்கை ஜனவரி 24 அன்று வெளியிடப்பட்டது.

இந்தத் தேதி முக்கியமானது, ஏனென்றால் இரண்டு நாட்களுக்குப் பிறகு, ஜனவரி 27 அன்று, கௌதம் அதானியின் நிறுவனம் பங்குச் சந்தையில் இரண்டாம் நிலை பங்குகளை வெளியிட இருந்தது. இதுவொரு சிறிய பிரச்னை அல்ல. இதுவரை இல்லாத மிகப்பெரிய தொகையான ரூ.20,000 கோடிக்கான எஃப் பி ஓ.

இந்திய ஊடகங்களில் தொடர்ந்து தலைப்புச் செய்திகளில் இடம் பெற்று வருகிறது, அமெரிக்காவின் நிதியியல் தடயவியல் ஆராய்ச்சி நிறுவனமான ஹிண்டன்பர்க்.

கோடீஸ்வர தொழிலதிபர் கௌதம் அதானி தலைமையிலான அதானி குழுமத்திடம் இந்த அறிக்கையில் இந்நிறுவனம் கேட்டுள்ள 88 கேள்விகளே இதற்குக் காரணம். இதில் உள்ள பல கேள்விகள் மிகவும் தீவிரமானவை மற்றும் நேரடியாக அதானி குழுமத்தின் கார்ப்பரேட் நிர்வாகத்தைக் குறிவைக்கக் கூடியவை.

இந்த அறிக்கை வெளியானவுடன், அதானி குழுமத்தின் முதலீட்டாளர்கள் மத்தியில் பீதி ஏற்பட்டது. குழுமத்தின் பங்குகளில் பெருமளவில் விற்கப்பட்டன. சிறிது நேரத்தில் அதானி குழுமத்தின் முதலீட்டாளர்கள் மற்றும் ப்ரமோட்டர்களின் சந்தை மூலதனம் பல லட்சம் கோடிகள் இழப்பைச் சந்தித்தது.

அதானி குழுமத்திற்கு நெருக்கடி

பட மூலாதாரம், Getty Images

ஃபோர்ப்ஸ் பில்லியனர்கள் குறியீட்டின்படி, கௌதம் அதானியின் நிகர மதிப்பு 18 சதவீதம் குறைந்துள்ளது. ஃபோர்ப்ஸ் இதழின் உலக கோடீஸ்வரர்களின் நிகழ்நேரப் பட்டியலின்படி, அவர் பணக்காரர்களின் பட்டியலில் நான்காவது இடத்திலிருந்து ஏழாவது இடத்திற்குத் தள்ளப்பட்டார்.

ஓர் ஆய்வறிக்கையால்,

  • கௌதம் அதானி மற்றும் அவரது குழுமம் கேள்விக்குள்ளாகிறது.
  • அதானி குழுமத்தின் முதலீடுகள் ஆட்டம் காண்கின்றன.
  • அதானி குழுமத்தின் சந்தை மதிப்பு 4 லட்சம் கோடி ரூபாய் இழப்பு
  • உலகின் நான்காவது பெரும்பணக்காரராக இருந்த அதானி ஏழாவது இடத்திற்குத் தள்ளப்பட்டார்.
  • முதலீட்டாளர்களுக்கு அதானி குழுமம் அளித்த விளக்கத்தில் சில கேள்விகளுக்குப் பதில்.

இந்த அறிக்கையை நிராகரித்த அதானி குழுமம், இது முற்றிலும் ஆதாரமற்றது என்று கூறியுள்ளது.

அதானி குழுமத்திற்கு நெருக்கடி

பட மூலாதாரம், Getty Images

பின்னணியில் இந்திய தேசியக் கொடியுடன், வீடியோ செய்தியளித்த அதானி குழுமத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ஜுகேஷிந்தர் சிங், இந்த அறிக்கையை வெளியிடுவதற்கு முன்பு அதானி குழுமத்தைத் தொடர்பு கொள்ளவோ அல்லது சரிபார்க்கவோ இல்லை என்று கூறினார்.

அதானி குழுமத்தின் சட்டத் தலைவர் ஜதின் ஜலுந்த்வாலா, “ஹிண்டன்பர்க் நிறுவனத்திற்கு எதிராக அதானி குழுமம் இந்தியா மற்றும் அமெரிக்காவில் தண்டனை பெற்றுத் தரக்கூடிய சட்டரீதியான நடவடிக்கை எடுப்பது குறித்து பரிசீலித்து வருகிறது” என்று கூறினார்.

அதேநேரத்தில், ஹிண்டன்பர்க் நிறுவனம், அதன் அறிக்கை சரியானது என்று வலியுறுத்துகிறது. ஹிண்டன்பர்க், "இதுவரை அதானி எந்தவொரு பதிலும் அளிக்கவில்லை. மேலும், நாங்கள் எதிர்பார்த்தது போல், அதானி மிரட்டல் தொனியில் பேசுகிறார்," என்று ட்வீட் செய்துள்ளது.

“106 பக்கங்கள், 32,000 வார்த்தைகள், 720க்கும் மேற்பட்ட எடுத்துக்காட்டுகள் அடங்கிய, இரண்டாண்டு ஆராய்ச்சியில் உருவான அறிக்கையை "ஆராய்ச்சி செய்யப்படாதது" என்று ஊடகங்களுக்கு அளித்த அறிக்கையில் அதானி குறிப்பிட்டார்.

மேலும் இதை அமெரிக்க, இந்திய சட்டங்களின் அடிப்படையில், தண்டனைக்குரிய குற்றமாக இதை எடுத்துச் செல்லும் வழிவகைகளை ஆராய்ந்து வருவதாகவும் கூறியுள்ளார்.”

"அதானி நிறுவனத்தின் சட்ட நடவடிக்கை அச்சுறுத்தலைப் பொருத்தவரை, நாங்கள் அதை வரவேற்கிறோம் என்பதைத் தெளிவாகக் கூறிக் கொள்கிறோம். எங்கள் அறிக்கை சரியானது என்பதே எங்கள் வாதம். மேலும் எங்களுக்கு எதிராக எடுக்கப்பட்ட எந்த சட்ட நடவடிக்கையும் ஆதாரமற்றதாகவே இருக்கும்."

X பதிவை கடந்து செல்ல, 1
X பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

X பதிவின் முடிவு, 1

"அதானி இதில் தீவிரமாக இருந்தால், அவர் அமெரிக்காவில் வழக்குப் பதிவு செய்ய வேண்டும். தேவைப்படும் ஆவணங்களின் நீண்ட பட்டியல் உள்ளது. சட்ட நடவடிக்கையின் போது அவரிடம் இவற்றைக் கோருவோம்."

இருப்பினும், இந்த 88 கேள்விகளுக்குப் பதிலளிக்கும் விதமாக, ஹிண்டன்பர்க்கிடமும் இரண்டு முக்கியமான கேள்விகள் முன்வைக்கப்படுகின்றன.

முதலாவதாக, தன்னை 'ஆக்டிவிஸ்ட் ஷார்ட் செல்லிங்' நிறுவனம் என்று கூறிக்கொள்ளும் ஹிண்டன்பர்க், கோடிக்கணக்கான லாபம் ஈட்டுவதற்காக அவ்வாறு செய்யவில்லையா என்ற கேள்வி. இரண்டாவது கேள்வி இந்த அறிக்கை வெளியான காலம் குறித்தது. அதானி எண்டர்பிரைசஸின் ரூ.20,000 கோடி எஃப்.பி.ஓ வெள்ளிக்கிழமை வெளியாவதற்கு முன்பு இது வேண்டுமென்றே வெளியிடப்பட்டதா?

ஷார்ட் செல்லிங் என்றால் என்ன?

இது குறித்த முழு விவரங்களையும் புரிந்து கொள்வதற்கு முன், ஹிண்டன்பர்க்கின் நோக்கம் குறித்த ஐயமும் எழுப்பப்படுகிறது.

உண்மையில், அந்நிறுவனம் ஒரு ஷார்ட் செல்லர் என்று அழைக்கப்படுகிறது. தன்னிடம் இல்லாத பங்குகளை விற்பது தான் ஷார்ட் செல்லிங் எனப்படும். (இது என்ன, பங்குகளே இல்லாதபோது எதை விற்பது என்று நீங்கள் மலைக்கலாம்.)

ஒரு ஷார்ட் செல்லர், 100 ரூபாய் பங்குகள் 60 ரூபாய்க்கு இறங்கும் என்று எதிர்பார்த்தால், அவர் ஒரு தரகரிடம் கடன் வாங்கி அதை மற்ற முதலீட்டாளர்களுக்கு விற்கலாம், அவர்கள் அதை 100 ரூபாய்க்கு வாங்கத் தயாராக உள்ளனர். இந்தப் பங்கு 60க்குக் குறையும்போது, ஷார்ட் செல்லர் அதை வாங்கித் தரகரிடம் திருப்பித் தருவார். இதன் மூலம் ஒவ்வொரு பங்கிலும் ரூ.40 லாபம் ஈட்ட முடியும்.

ஹிண்டன்பர்க் எழுப்பிய தீவிர கேள்விகள்

அதானி குழுமம் வெளிநாடுகளில் உள்ள தனது பல நிறுவனங்களை வரி ஏய்ப்புக்குப் பயன்படுத்தியதா?

வரி புகலிட நாடுகளில் (மொரீஷியஸ் மற்றும் பல கரீபியன் நாடுகளில் - இந்த நாடுகளில் வணிகத்திற்காக டெபாசிட் செய்யப்பட்ட அல்லது முதலீடு செய்யப்பட்ட பணத்தின் ஆதாரத்தை சொல்ல வேண்டிய அவசியமில்லை. மேலும், இந்த நாடுகளில் வரியும் மிகக் குறைவு அல்லது வரியே இல்லை.) அதானி குழும நிறுவனங்களின் பங்குகளைக் கொண்ட பல ஷெல் நிறுவனங்கள் உள்ளன.

இந்தக் கேள்விக்கு அதானி குழுமம் நேரடியான பதில் எதையும் அளிக்கவில்லை. ஆனால், "கார்ப்பரேட் நிர்வாகத்தைப் பொருத்தவரை, குழுமத்தின் நான்கு பெரிய நிறுவனங்கள் வளர்ந்து வரும் சந்தைகளில் மட்டும் அல்லாமல், அந்தப் பிரிவு அல்லது துறையில் முதல் ஏழு நிறுவனங்களில் இடம் பிடித்துள்ளன. " என்று கூறியுள்ளது.

ஹிண்டன்பர்க் ரிசர்ச் நிறுவனர் ஆண்டர்சன்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, ஹிண்டன்பர்க் ரிசர்ச் நிறுவனர் ஆண்டர்சன்
  • சுங்க வரி ஏய்ப்பு, போலி இறக்குமதி ஆவணங்களைத் தயாரித்து, சட்டவிரோத நிலக்கரி இறக்குமதி என்ற பல குற்றச்சாட்டுகள் இருக்கும் நிலையில், கௌதம் அதானியின் இளைய சகோதரர் ராஜேஷ் அதானி குழுமத்தின் நிர்வாக இயக்குநராக ஆக்கப்பட்டது ஏன்?
  • கௌதம் அதானியின் மைத்துனர் சமீர் வோரா ஏன் முக்கியமான பதவியில் இருக்கிறார்?
  • பினாமி நிறுவனங்கள் மூலம் வைர வியாபாரத்தில் அவரது பெயர் அடிபட்ட பிறகும் சமீர் அதானி ஆஸ்திரேலியா பிரிவின் செயல் இயக்குநராக நியமிக்கப்பட்டது ஏன்?

கவுதம் அதானியின் சகோதரர் வினோத் அதானியிடம் அரசு அமைப்புகள் விசாரணை நடத்தி வருகின்றன. வெளிநாடுகளில் உள்ள போலி நிறுவனங்கள் மூலம் அதானி நிறுவனங்களில் பல பில்லியன் டாலர்களை முதலீடு செய்ததாகவும், அதில் ஹவாலா பணமும் அடங்கும் என்றும் அவர் மீது குற்றச்சாட்டுகள் உள்ளன. இதன் மூலம் அதானி குழும நிறுவனங்களின் பங்குகளின் விலை உயர்த்தப்பட்டதாக அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

X பதிவை கடந்து செல்ல, 2
X பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

X பதிவின் முடிவு, 2

88 ஹிண்டன்பர்க் கேள்விகளில் 21 கேள்விகள் ஏற்கனவே பொது களத்தில் உள்ளவை என்று அதானி குழுமம் கூறுகிறது. ஹிண்டன்பர்க் தனது இரண்டு ஆண்டுகளுக்கும் மேலான ஆய்வின் அடிப்படையில் அறிக்கை தயாரிக்கப்பட்டதாகக் கூறுவதும் பொய் என்றும், 2015 முதல் வெவ்வேறு சந்தர்ப்பங்களில் நிறுவனத்தால் வெளியிடப்பட்ட ஆவணங்களின் அடிப்படையிலேயே இந்த அறிக்கை வெளியாகியுள்ளது என்றும் அதானி நிறுவனம் கூறுகிறது.

அதானி குழுமத்தின் சில நிறுவனங்களின் தணிக்கையாளர்கள் குறித்த கேள்வி - அதானி எண்டர்பிரைசஸ் மற்றும் அதானி டோட்டல் கேஸ் ஆகியவை மிகச் சிறிய மற்றும் இணையதளம் கூட இல்லாத ஒரு நிறுவனத்தால் தணிக்கை செய்யப்பட்டது. இது நான்கு கூட்டாளிகளையும் 11 பணியாளர்களையும் கொண்டுள்ளது மேலும் இந்த தணிக்கை நிறுவனம் மேலும் ஒரு பட்டியலிடப்பட்ட நிறுவனத்தை மட்டுமே தணிக்கை செய்கிறது. அதானி எண்டர்பிரைசஸ் 156 துணை நிறுவனங்களையும், பல கூட்டு நிறுவனங்களையும் கொண்டிருக்கும் நிலையில், தணிக்கை மேலும் கடினமாகிறது என்று ஆய்வு நிறுவனம் குற்றம் சாட்டுகிறது.

இதற்கு, அதானி குழுமத்தின் பதில் என்னவென்றால், பட்டியலிடப்பட்ட ஒன்பது நிறுவனங்களில் எட்டு நிறுவனங்கள் ஆறு பெரிய தணிக்கையாளர்களால் தணிக்கை செய்யப்படுகின்றன. அதானி டோட்டல் கேஸ் நிறுவனத்தின் தணிக்கையை ஆறு பெரிய ஆடிட்டர்களில் ஒருவரிடம் ஒப்படைக்கும் திட்டமும் உள்ளது என்பது தான்.

வருமானம் மற்றும் இருப்புநிலைக் குறிப்பில் குளறுபடி? அதானி குழுமத்தின் சில நிறுவனங்களில் வருமானம் அதிகமாகக் காட்டப்பட்டு இருப்புநிலைக் குறிப்பில் முறைகேடு நடந்ததாக ஹிண்டன்பர்க் தனது ஆய்வு அறிக்கையில் கூறியுள்ளது.

அதானி குழுமத்தின் பதில் என்னவென்றால், பட்டியலிடப்பட்ட ஒன்பது நிறுவனங்களில் ஆறு, குறிப்பிட்ட துறையின் வருமானம், செலவு மற்றும் விரிவாக்கத்திற்கான செலவினங்களுக்காகப் பரிசீலனையில் உள்ளன. இது வழக்கமான நடைமுறை தான் என்பது தான்.

அதானி குழுமத்திற்கு அதிக கடன் சுமை? ப்ரமோட்டர்கள் பங்குகளை அடகு வைத்துக் கடன் வாங்கியுள்ளதாகவும், அதானி குழுமத்தின் மீது பெரும் கடன் சுமை இருப்பதும் பெரும் பிரச்சனையாக உள்ளதாக அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

அதானி குழுமம்: இந்த கடன், ப்ரமோட்டர்கள் வைத்திருக்கும் நான்கு சதவீத பங்குகளுக்கும் குறைவாகவே உள்ளது.

அதானி குழுமத்திற்கு நெருக்கடி

பட மூலாதாரம், Getty Images

அதானி குழுமத்தின் பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்ட நிறுவனங்களின் கடன் சுமை குறித்து முதலீட்டாளர்கள் மற்றும் ஆய்வாளர்கள் ஏற்கனவே கவலை தெரிவித்துள்ளனர். பங்குச் சந்தைக்கு அளிக்கப்பட்ட தகவலின்படி, மார்ச் 2022 இறுதிக்குள், அதானி குழுமத்தின் ஆறு நிறுவனங்களான அதானி எண்டர்பிரைசஸ், அதானி கிரீன் எனர்ஜி, அதானி போர்ட்ஸ், அதானி பவர், அதானி டோட்டல் கேஸ் மற்றும் அதானி டிரான்ஸ்மிஷன் ஆகியவை ரூ.1.88 லட்சம் கோடி கடன் பெற்றுள்ளன.

அதானி குழுமத்தின் ஏழு பட்டியலிடப்பட்ட நிறுவனங்களின் கடன் அவற்றின் பங்குகளை விட அதிகமாக இருப்பதாக Refinitiv குழுமத்தால் வெளியிடப்பட்ட தரவு காட்டுகிறது. அதானி க்ரீன் எனர்ஜிக்கு ஈக்விட்டியை விட 2000 சதவீதம் கடன் அதிகம்.

இந்திய பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள அதானி குழுமத்தின் ஏழு நிறுவனங்களின் பங்குகள் அதே துறையின் போட்டி நிறுவனங்களை விட மிக அதிக விலையில் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாகவும், அவற்றின் மதிப்பு 85 சதவீதத்திற்கும் அதிகமாக இருப்பதாகவும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

ஹிண்டன்பர்க் தனது அறிக்கையில், "எங்கள் விசாரணை அறிக்கையை நீங்கள் புறக்கணித்தாலும், அதானி குழுமத்தின் நிதிக் கணக்குகளை உன்னிப்பாக ஆய்வு செய்தாலும், அதன் ஏழு பட்டியலிடப்பட்ட நிறுவனங்களில் 85% வரை சரிவு ஏற்பட வாய்ப்புள்ளது. இதற்குக் காரணம் பங்குகளின் மதிப்பீடு வானளவு உயர்ந்தது. " என்று கூறியுள்ளது.

அறிக்கையின் நம்பகத்தன்மை குறித்த கேள்வி

ஹிண்டன்பர்க் தனது அறிக்கை இரண்டு வருட ஆய்வுக்குப் பிறகு தயாரிக்கப்பட்டதாகவும், இதற்காக அதானி குழுமத்தில் பணியாற்றிய முன்னாள் நிர்வாகிகளுடன் மேலும் பலரிடம் பேசி, பல ஆவணங்களின் அடிப்படையில் அமைந்ததாகவும் கூறுகிறது.

முதலீட்டுத் துறையில் பல தசாப்தங்களாக அனுபவம் இருப்பதாக நிறுவனம் கூறுகிறது. நிதி ஆராய்ச்சி நிறுவனம் அனைத்தும் இப்படிக் கூறிக்கொண்டாலும், இந்த நிறுவனத்தின் சிறப்பு என்ன?

நிறுவனம் தனது இணையதளத்தில் முதலீட்டு முடிவுகளின் அடிப்படையில் பகுப்பாய்வு செய்வதோடு மட்டுமல்லாமல், கண்டுபிடிக்க கடினமாக இருக்கும் மூலங்களிலிருந்து ரகசியத் தகவல்களைப் பற்றிய புலனாய்வு விசாரணை மற்றும் ஆராய்ச்சியையும் நடத்துகிறது என்று எழுதியுள்ளது. இந்த நிறுவனத்தின் பெயருக்குப் பின்னால் ஒரு சிறப்புக் கதையும் உள்ளது.

விபத்தின் பெயரில் நிறுவனம் பெயரிடப்பட்டது ஏன்?

இந்நிறுவனத்திற்கு ஹிண்டன்பர்க் சம்பவத்தின் பெயரிடப்பட்டது. 1937 ஹிண்டன்பர்க் விபத்தில் 35 பேர் இறந்தனர்.

ஹிண்டன்பர்க் ஒரு ஜெர்மன் விமான விண்கலம். இது தீயில் எரிந்து நாசமானது. ஹைட்ரஜன் பலூன்களில் முன்பு விபத்துகள் நடந்ததால், இந்த விபத்தைத் தவிர்த்திருக்கலாம் என்று ஆய்வு நிறுவனம் நம்புகிறது.

இந்த விண்கலத்தில் விமான நிறுவனம் 100 பேரை வலுக்கட்டாயமாக உட்கார வைத்தன. ஹிண்டன்பர்க் விபத்தைப் போலவே, பங்குச் சந்தையில் ஏற்படும் முறைகேடுகள் மீது தாங்கள் ஒரு கண் வைத்திருப்பதாக நிறுவனம் கூறுகிறது. அவற்றை அம்பலப்படுத்தி

முன்னுக்கு கொண்டு வருவதே நோக்கமாகும் என்று அந்நிறுவனம் கூறிக்கொள்கிறது.

ஹிண்டன்பர்கின் செயல்பாடு

ஹிண்டன்பர்க் ஆராய்ச்சி நிறுவனம் தன் அறிக்கைகள் மற்றும் பிற நடவடிக்கைகளின் மூலம் முன்னரே பல நிறுவனங்களின் பங்குகளின் விலைகளை இறக்கியுள்ளதாக அந்நிறுவனத்தின் இணையதளம் கூறியுள்ளது.

ப்ளூம்பெர்க் அறிக்கையின்படி, ஹிண்டன்பர்க் 2020 ஆம் ஆண்டு முதல் 30 நிறுவனங்களின் ஆய்வு அறிக்கைகளை அம்பலப்படுத்தியுள்ளது. அறிக்கை வெளியிடப்பட்ட அடுத்த நாளிலேயே அந்த நிறுவனத்தின் பங்குகள் சராசரியாக 15% சரிந்தன.

அடுத்த ஆறு மாதங்களில் இந்த நிறுவனங்களின் பங்குகள் சராசரியாக 26 சதவீதத்துக்கும் மேல் சரிவைப் பதிவு செய்துள்ளதாக அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. அதானி குழுமத்தைப் பொருத்தவரை, அறிக்கை வந்த பிறகு, இரண்டு வர்த்தக அமர்வுகளில் நிறுவனங்களின் பங்குகள் 25% க்கும் அதிகமாக சரிந்துள்ளன.

இருப்பினும், அதானி குழுமப் பங்குகளின் ஷார்ட் செல்லர் என்று தன்னைத் தானே ஹிண்டன்பர்க் ஒப்புக்கொண்டுள்ளதால், இந்த ஆய்வு அறிக்கைக்குப் பின்னால் ஒரு 'அஜெண்டா' இருப்பதாக எவரும் எளிதில் கூறலாம் என்று ஒரு ஆய்வு நிறுவனத்தின் ஆய்வாளர் ஆசிஃப் இக்பால் கூறுகிறார்.

"இந்த அறிக்கையின் மூலம் ஹிண்டன்பர்க் நேரடியாக நிதி ரீதியாக லாபம் பெறும். எனவே இதற்கு உள் நோக்கம் இருக்கலாம் என்ற வாதம் மறுக்க முடியாதது. ஆனால் அறிக்கையில் கூறப்பட்ட குற்றச்சாட்டுகள், பெரும் கடன்கள், அதிக மதிப்பீடுகள் இவை குறித்து நீண்ட காலமாகப் பல முதலீட்டாளர்கள் பேசிவருகிறார்கள். " என்று ஆசிஃப் கூறுகிறார்.

பங்குச் சந்தை ஆய்வாளர் அருண் கெஜ்ரிவாலும் ஹிண்டன்பர்க்கின் நோக்கம் குறித்துக் கேள்விகளை எழுப்புகிறார். "பங்கு ஆர்வலருக்குப் பணம் சம்பாதிப்பது நோக்கமாக இருக்காது. பங்குகளை ஷார்ட் செய்து, பின்னர் கேள்வி எழுப்புவது வெளிப்படையாக மிரட்டல் போக்கு தான். இதற்கு ஒரு ஒழுங்குமுறை ஆணையம் உள்ளது, அதனிடம் கேள்வி எழுப்ப வேண்டும். இந்த 88 கேள்விகளை செபியிடம் கேட்டிருக்க வேண்டும்”

அதானி குழுமத்திற்கு நெருக்கடி

பட மூலாதாரம், ANI

படக்குறிப்பு, 2020ம் ஆண்டு ஜனவரியில் நாட்டின் பெரும் தொழிலதிபர்கள் பிரதமர் மோடி சந்தித்த போது எடுக்கப்பட்ட படம்.

முன்னரே கேள்வி எழுந்தது

கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம், ஃபின்ச் குழுமத்தின் நிறுவனமான கிரெடிட்-சைட்ஸ், அதானி குழுமத்திற்கு பெரும் கடன் சுமை இருப்பதாக ஒரு அறிக்கையை வெளியிட்டது. இதைத் தொடர்ந்து, அதானி குழுமத்தின் பல நிறுவனங்களின் பங்குகளின் விலையும் குறைந்துள்ளது.

ஆனால் அதானி குழுமத்தின் நிதி மற்றும் நிர்வாகம் தொடர்பான சில அதிகாரிகளுடன் பேசி, ஒரு மாதத்திற்குள் திருத்தப்பட்ட அறிக்கை வெளியிடப்பட்டது.

குழுமத்தின் கடன் அளவு, அதை நிர்வகிக்க முடியாத அளவுக்கு அதிகரிக்கவில்லை என்று கூறப்பட்டது. குழுமத்தின் விரிவாக்கத் திட்டங்களுக்கு முக்கியமாக கடன் மூலம் நிதி வழங்கப்படுவதில்லை என்றும் கூறப்பட்டது.

அதானி டிரான்ஸ்மிஷன் மற்றும் அதானி பவர் ஆகிய இரண்டு குழு நிறுவனங்களின் புள்ளிவிவரங்கள் அதானி குழும நிர்வாகத் தரப்பு வாதத்தைக் கேட்டபின் கிரெடிட் சைட்ஸ் கடன் தளங்களால் திருத்தப்பட்டன. இருப்பினும், திருத்தம் செய்யப்பட்ட போதிலும், அதானி குழும நிறுவனங்கள் மீதான தங்கள் பரிந்துரைகளை கிரெடிட் சைட்ஸ் மாற்றவில்லை.

கௌதம் அதானிக்கு பின்னடைவு

2022 ஆம் ஆண்டில், உலகின் முதல் 10 பணக்காரர்களில் கௌதம் அதானியின் சொத்து மட்டுமே அதிகரித்துள்ளது.

இதுவரை 2023 ஆம் ஆண்டில், முதல் 10 பணக்காரர்களில் பில்லியன் கணக்கில் நஷ்டத்தைச் சந்தித்த ஒரே நபரும் இவரே. சமீபத்தில் கையகப்படுத்தப்பட்ட அம்புஜா சிமெண்ட்ஸ் மற்றும் என்டிடிவி உட்பட, அதானி குழுமத்தின் பட்டியலிடப்பட்ட 10 நிறுவனங்களின் பங்குகள் விற்பனைக்குப் பலியாகின.

ப்ளூம்பெர்க் பில்லியனர்ஸ் குறியீட்டின் சமீபத்திய தரவரிசையில், கௌதம் அதானி நான்காவது இடத்தில் இருந்து ஏழாவது இடத்திற்கு சரிந்துள்ளார்.

அதானி குழுமத்திற்கு நெருக்கடி

பட மூலாதாரம், Getty Images

ஹிண்டன்பர்க் அறிக்கையால் முதலீட்டாளர்களுக்கு அபாயமா?

அதானி குழுமத்தின் பங்குகளைத் தவிர, இந்த ஆய்வு அறிக்கையின் தாக்கம் சந்தையிலும் காணப்பட்டதாகச் சந்தை ஆய்வாளர்கள் கருதுகின்றனர். அறிக்கையில் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு, அதானி குழுமத்திற்கு பதிலாக செபியிடம் இருந்து மக்கள் பதில்களை அறிய விரும்புகிறார்கள்.

இது போன்ற அறிக்கைகள் குறுகிய காலத்தில் பெரும் பாதிப்பை ஏற்படுத்துவதாகப் பங்கு ஆய்வாளர் ஆசிப் இக்பால் கூறுகிறார்.

ஆசிப் கூறுகையில், “நிறுவனத்தின் அடிப்படை வலுவாக இருந்து, இந்த குற்றச்சாட்டுகளுக்கு அதானி குழுமம் சரியாக பதிலளித்தால், முதலீட்டாளர்களின் நஷ்டத்தைத் தவிர்க்கலாம். ஆனால், அதானி குழுமம் பெரியதாகவும், அதன் மீதான கடன் சுமை அதிகமாகவும் இருப்பதால், இதன் தாக்கம் சில வங்கிகளின் மீதும் நிச்சயம் இருக்கும்.” என்கிறார்.

சந்தை ஆய்வாளர் அருண் கெஜ்ரிவால் கூறுகையில், "இந்த அறிக்கையின் தாக்கத்தைப் பொருத்தவரை, அதானி எண்டர்பிரைசஸ் நிறுவனத்தின் எஃப்.பி.ஓ.வில் பாதிப்பை ஏற்படுத்தும் என்பது உறுதி. மேலும் வங்கிகளில் இருந்து சில கடனை அடைப்பதற்காக நிறுவனம் இந்த எஃப்.பி.ஓ. வெளியிட்டுள்ள நிலையில், அது பலனளிக்காத சூழலில், சில பெரிய வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களில் இது தாக்கத்தை ஏற்படுத்தும்.” என்று விளக்குகிறார்.

அதானி குழுமத்திற்கு நெருக்கடி

பட மூலாதாரம், REUTERS/AMIT DAVE

ஏயுஎம் கேபிட்டலின் ஆராய்ச்சித் தலைவர் ராஜேஷ் அகர்வால், ஆராய்ச்சி அறிக்கையில் உள்ள சில குற்றச்சாட்டுகள் மிகவும் தீவிரமானவை என்று நம்புகிறார். "ஹிண்டன்பர்க்கின் ஆய்வு அறிக்கை அதானி குழும நிறுவனங்களில் நீண்டகால தாக்கத்தை ஏற்படுத்தும் என்று தோன்றவில்லை. வெளிநாட்டு முதலீட்டாளர்கள் இதனால் பாதிக்கப்படலாம், ஆனால் அவர்கள் சொந்த ஆராய்ச்சி குழுவை வைத்திருப்பதால், அவர்கள் முதலீடு அல்லது விற்பனை முடிவுகள் இது போன்ற அறிக்கைகளின் அடிப்படையில் அமைவதில்லை. " என்று ராஜேஷ் கூறுகிறார்.

ராஜேஷ் கூறுகையில், "கடந்த காலங்களிலும் பங்கு விலைகள் குறித்துக் கேள்விகள் எழுந்தன. ஆனால் இது அதானி குழுமத்தின் பங்குகளிக்கு மட்டுமல்ல. இந்த அறிக்கை முதலீட்டாளர்களின் உணர்வை நிச்சயமாகப் பாதித்துள்ளது. அதனால் தான், அதானி குழுமத்தைத் தவிர, சில வங்கிகள் மற்றும் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களின் பங்குகளும் விற்கப்பட்டன.” என்றார்.

ஹிண்டன்பர்க்கின் அறிக்கை குறித்து அமெரிக்க முதலீட்டாளர் பில் அக்மேன் தனது பதிலைத் தெரிவித்துள்ளார். ஹிண்டன்பர்க்கின் அறிக்கை 'மிகவும் நம்பகத்தன்மை வாய்ந்தது மற்றும் நன்கு ஆய்வு செய்யப்பட்டது' என்று அக்மேன் கூறியதாக ராய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

இருப்பினும், அதானி குழுமத்தை தாமே சுயாதீனமாக ஆய்வு செய்யாததால், அதை முதலீட்டு ஆலோசனையாக எடுத்துக் கொள்ளக் கூடாது என்றும் மற்ற முதலீட்டாளர்களை அவர் எச்சரித்தார்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: