கெளதம் அதானியின் எழுச்சி

நரேந்திர மோதி சிறுவனாக ரயில்வே நடைபாதைகளில் தேநீர் விற்றுக் கொண்டிருந்தார். கெளதம் அதானியோ ஆமதாபாத் நகர வீதிகளில், சைக்கிளில் வீடுவீடாக சென்று பொருட்களை விற்றுக் கொண்டிருந்தார்.

தற்போது நரேந்திர மோதி, இந்தியாவின் பிரதமராக இருக்கிறார். அவரது நண்பர் கெளதம் அதானியோ உலகின் முதல் 5 பெரும் பணக்காரர்களில் ஒருவராக இருக்கிறார். அதானியின் அதிவேக வளர்ச்சி, முதலில் குஜராத்திலும் பின்னர் இந்தியாவிலும் அதிகாரமிக்க மனிதராக உயர்ந்த மோதியின் வளர்ச்சியுடன் இணைத்தே அவ்வப்போது பேசப்படுகிறது.

அதானி எண்டர்பிரைசஸ் (NSE நிகழ் நேர விலைகள்) - தரவுகள்: Yahoo Finance

அதானி எண்டர்பிரைசஸ் (NSE நிகழ் நேர விலைகள்) - தரவுகள்: Yahoo Finance

மோதியுடனான நெருக்கமும், மிகக் குறுகிய காலத்தில் உலகின் பெரும் பணக்காரர்களில் ஒருவராக உருவெடுத்துள்ள கெளதம் அதானியின் அபரிமிதமான வளர்ச்சியும் பலரது புருவங்களையும் உயர்த்தியுள்ளது.

“இந்தியா மற்றும் உலகம் முழுமையும் வர்த்தகம் செய்ய அதானி கனவு கண்டார்” என்று அவரது வாழ்க்கை வரலாற்று நூலில், அதை எழுதிய மும்பையைச் சேர்ந்த பத்திரிகையாளரும், ஆராய்ச்சியாளருமான ஆர்.என்.பாஸ்கர் கூறுகிறார். சாதாரண குடும்பத்தில் பிறந்து, வரையறுக்கப்பட்ட, குறைவான வாய்ப்புகளையே கொண்டவராக இருந்தாலும் உலகின் பெரும் பணக்காரர்களில் ஒருவராக அதானி  உயர்ந்திருப்பதாக அவர் குறிப்பிடுகிறார். அவரது பயணம் அனைவருக்கும் ஊக்கம் தரும் ஒன்றாக தோன்றினாலும், அதற்கு நிகராக சர்ச்சைகளையும் கொண்டுள்ளது.

அரசு நிர்வாகத்தில் தனக்குள்ள தொடர்புகளை கெளதம் அதானி தவறாக பயன்படுத்துவதாக இந்திய ஊடகங்கள், எதிர்க்கட்சித் தலைவர்கள் ஆகியோரில் ஒரு தரப்பினர் மீண்டும் மீண்டும் குற்றம்சாட்டுகின்றனர். வணிகத்தை தொடங்குவது, சட்டத்தில் உள்ள ஓட்டைகளை சாதகமாக பயன்படுத்துவது, தொழிற்சாலைகளை அமைக்க மலிவு விலையில் இடங்களை வாங்குவது போன்றவற்றை அதானி இதன் மூலம் சாதித்துக் கொள்கிறார் என்பது அவர்களின் குற்றச்சாட்டு.

அந்த குற்றச்சாட்டுகள் அடிப்படை ஆதாரமற்றவை என்று அதானி மறுத்தாலும், அதானி குழும நிறுவனங்களை இந்தியாவின் உச்சத்தில் உள்ள  வர்த்தக நிறுவனங்களாக உயர்த்தியது எது என்ற கேள்வி அப்படியே இருக்கிறது. இன்னும் விரிவாகப் பார்த்தால், கல்லூரிப் படிப்பை பாதியில் நிறுத்திய கெளதம் அதானி மிகப்பெரிய கனவை காணவும், இந்தியாவில் 100 பில்லியன் டாலர் சொத்துமதிப்பைத் தொட்ட முதல் பணக்காரராகவும் உருவெடுக்கச் செய்த காரணிகள் எவை என்ற கேள்வி எழுகிறது.


மேலும், 2019 டிசம்பர் 31-ம் தேதி 2 லட்சம் கோடி ரூபாயாக இருந்த அதானி குழுமத்தின் சந்தை மதிப்பு அடுத்த மூன்றே ஆண்டுகளுக்குள்ளாக அதாவது, 2022 செப்டம்பர் மத்தியில் 20.74 லட்சம் கோடியாக அசுர வேகத்தில் அதிகரித்தது எப்படி என்பதை ஒருவரால் எந்த வார்த்தைகளைக் கொண்டு விளக்க முடியும்?

பிபிசியின் ஜூபைர் அகமது, அர்ஜூன் பார்மர் ஆகிய இருவரும் இந்த கேள்விகளுக்கு விடை காண குஜராத்திற்கும், மும்பைக்கும் பயணம் செய்தனர்.

15-16 வயதில் சைக்கிளில் சென்று துணிகளை விற்றுக் கொண்டிருந்த கெளதம் அதானி அதன் பின்னரே ஸ்கூட்டர் வாங்கியுள்ளார். அந்த நாட்களில் அதானி சாதாரண வியாபாரியாக சைக்கிளில் வீடு, வீடாக, கடை, கடையாக சென்று எவ்வாறு துணிகளை விற்றார் என்பதை இன்றும் நினைவில் வைத்திருக்கிறார் அவரது பதின்பருவ நண்பரான கிரீஷ்பாய் டேனி.

அவர் மிகவும் கடினமாக உழைத்தார்.

பழைய ஆமதாபாத் நகரில் அதானியின் ஆரம்ப கால வாழ்க்கையை நினைவூட்டும் சின்னங்களை இன்றும் காண முடிகிறது. அவரது தந்தையின் கடையில், 'அதானி டெக்ஸ்டைல்ஸ்' என்ற பெயர்ப்பலகை துருப் பிடித்திருந்தாலும் அப்படியே இருக்கிறது. அந்த கடை இன்னும் அதானி குடும்பத்தின் வசமே இருப்பதாக உள்ளூர் வியாபாரிகள் கூறுகின்றனர். சுற்றிலும் துணி மற்றும் புடவைக் கடைகள் நிறைந்த பரபரப்பான சந்தையில் அந்த கடை இருக்கிறது. நெருக்கடி மிகுந்த அந்த சந்தையில் நவீனமாக காட்சி தரும் சில உள்பட மேலும் பல கடைகளும் அதானி என்ற பெயர்ப் பலகையை தாங்கியிருந்தாலும், அவை அதானி குடும்பத்துடன் தொடர்புடையவை அல்ல.

அங்குள்ள வியாபாரிகளுடன் உரையாடுகையில், “இந்த சந்தையில் நூற்றுக்கணக்கான கடைகள் உள்ளன. அதானி இங்கே துணி வியாபாரம் செய்த போதிருந்த கடைகள் பலவும் இன்னும் உள்ளன. இங்குள்ள வியாபாரிகளில் ஒருவர் அடுத்த 2-3 தசாப்தங்களில் இந்தியாவின் மிகப்பெரிய பணக்காரராகவும், உலகின் 2-வது பெரிய செல்வந்தராக உருவெடுப்பார் என்று அப்போது யாருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை,” என்று ஒருவர் தத்துவம் பேசினார்.

முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு விரிவாகி விட்ட தமது வியாபார சாம்ராஜ்ஜியத்தை ஆமதாபாத்தில் உள்ள தலைமையகத்தில் இருந்தே அதானி நிர்வகிக்கிறார். கடந்த நவம்பர் மாத நிலவரப்படி, சந்தையில் பட்டியலிடப்பட்ட அதானி குழுமத்தின் கீழுள்ள 7 நிறுவனங்களின் சந்தை மதிப்பு 235 பில்லியன் அமெரிக்க டாலராகும். இது பல நாடுகளின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியை விட அதிகம்.

இந்தியாவில் பின்வரும் வர்த்தகங்களில் அதானி குழுமம் முன்னிலை வகிக்கிறது:

1970 மற்றும் 1980 களில் இந்திய தொழிலதிபர் ஒருவர் கடல் கடந்து பிற நாடுகளில் பெரிய திட்டங்களை சொந்தமாக்கிக் கொள்வது என்பது நினைத்துப் பார்க்கவே முடியாத ஒன்று. இந்தியாவுக்கு வெளியே ஆஸ்திரேலியா, இலங்கை, இஸ்ரேல், இந்தோனேஷியா போன்ற நாடுகளில் மிகப்பெரிய திட்டங்களை தொடங்கி நடத்தும் முதல் இந்திய தொழிலதிபர் அதானி தான்.

“ஆஸ்திரேலியாவில் குயின்ஸ்லாந்து மாகாணத்தில் 35 ஆண்டுகளுக்கும் மேலாக நிலக்கரி ஏற்றுமதிக்கு பயன்படுத்தப்பட்ட அப்போட் பாயின்ட் துறைமுக முனையத்தை அதானி நிறுவனம் வாங்கி நடத்துகிறது” என்று அதானி குழும இணையதளம் கூறுகிறது. சர்ச்சைக்குரிய கார்மிக்கேல் நிலக்கரிச் சுரங்கத்துடன், தண்டவாளப் பணிகள் திட்டத்தையும் அதானி சுரங்கத் தொழில் நிறுவனம் சொந்தமாக்கிக் கொண்டுள்ளது. கொழும்பு, இஸ்ரேலின் ஹைஃபா ஆகிய இடங்களில் இந்நிறுவனத்திற்கு சொந்தமான துறைமுகங்கள் உண்டு. இந்தோனேஷியாவில் இந்நிறுவனத்திற்கு சொந்தமாக நிலக்கரிச் சுரங்கம் உள்ளது. மேலும், இதன் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி வர்த்தகம், பசுமை ஆற்றல் உற்பத்தியில் பல பில்லியன் அமெரிக்க டாலர்களை முதலீடு செய்ய உறுதி பூண்டுள்ளது.

அதானி குழும இணையதளத்தின் படி,  2021-22ஆம் நிதியாண்டில் அதன் வருவாய் 70,433 கோடி ரூபாயாகும்.

டாடாவும், பிர்லாவும் சுதந்திரத்திற்குப் பிந்தைய இந்திய பொருளாதாரத்தை வடிவமைத்தார்கள் என்றால், 21-ம் நூற்றாண்டு இந்தியாவை அதானிகளும் அம்பானிகளுமே வலுவூட்டுகிறார்கள். முகேஷ் அம்பானியுடன் ஒப்பிடுகையில், கெளதம் அதானி முதல் தலைமுறை தொழில்முனைவோர் என்பது அவரை இன்னும் சிறப்பு வாய்ந்தவராக்குகிறது.

அதானியின் வளர்ச்சிக்கு அவரது அரசியல் தொடர்புகளே காரணம் என்று விமர்சிப்பவர்கள் கூறுகின்றனர்.

2022 பிப்ரவரி 2-ம் தேதி நாடாளுமன்றத்தில் ராகுல்காந்தி முன்வைத்த இந்த விமர்சனத்தைப் பாருங்கள்.

"அமைப்புசாரா தொழில்துறையில் ஏகபோக முதலாளித்துவம் உருவாக்கப்பட்டுள்ளது. எந்த துறையாக இருந்தாலும், குறிப்பாக 2 மிகப்பெரிய ஏகபோக நிறுவனங்களைப் பற்றி கூறுகிறேன். (அதானி, அம்பானி என்று சில எம்.பி.க்கள் குறிப்பிட்டனர்) கொரோனா பேரிடரின் போது டெல்டா, ஓமைக்ரான் போன்ற வைரஸின் திரிபுகள் இருந்தன. அதேபோல் கிட்டத்தட்ட இந்திய பொருளாதாரத்தின் அனைத்து துறைகளிலும் இரண்டு ஏ வகை திரிபுகள் பரவிக் கொண்டிருக்கின்றன. ஒரு நபர் – பெயரைக் குறிப்பிட விரும்பவில்லை - நாட்டின் அனைத்து துறைமுகங்கள், விமான நிலையங்கள், மின்சாரம், விநியோகம், சுரங்கம், பசுமை ஆற்றல், எரிவாயு விநியோகம், சமையல் எண்ணெய் உற்பத்தி மற்றும் வர்த்தகம் ஆகியவற்றை கட்டுப்படுத்துகிறார் (சில எம்.பி.க்கள் அதானி என்று முழக்கமிட்டனர்). நாட்டில் எங்கே என்ன நடந்தாலும் அதானியை அங்கே பார்க்கலாம். மறுபுறம் பெட்ரோகெமிக்கல்ஸ், தொலைத்தாடர்பு, சில்லறை வணிகம், ஆன்லைன் வர்த்தகம் ஆகிய துறைகளில் அம்பானி ஏகபோக ஆதிக்கம் செலுத்துகிறார். நாட்டின் மொத்த செல்வமும் குறிப்பிட்ட சிலரின் கட்டுப்பாட்டில் இருக்கிறது."

ராகுலின் உரையில் சில மிகைப்படுத்தப்பட்டதாக தோன்றினாலும் அந்த குற்றச்சாட்டுகள் கள நிலவரத்தை பிரதிபலிக்கவும் செய்கின்றன.

ஆமதாபாத்தைச் சேர்ந்த மூத்த பத்திரிகையாளர் திலீப் படேல் கூறுகிறார்:

"அதானி புத்திசாலி என்பதில் சந்தேகம் இல்லை. ஆனால், எப்போதெல்லாம் அவருக்கு அரசின் உதவி தேவையோ அப்போதெல்லாம் நரேந்திர மோதி அதை செய்துள்ளார்; கட்ச் பகுதியில் தொழில் தொடங்க அதானிக்கு நிலம் கொடுத்துள்ளார். அதானிக்கு மலிவு விலையில் அதிக அளவு நிலத்தை வழங்கியது யார் என்று பார்த்தால் அது நரேந்திர மோதி தான். மோதி பிரதமராகி இருக்காவிட்டால் அதானிக்கு விமான நிலையங்களோ, துறைமுகங்களோ கிடைத்திருக்காது. லாபத்தில் இயங்கி வந்த ஆமதாபாத் விமான நிலையம் கூட அதானிக்கு தாரைவார்க்கப்பட்டது” என்கிறார் ஆமதாபாத்தைச் சேர்ந்த மூத்த பத்திரிகையாளர் திலீப் படேல்." 

அதானியின் முந்த்ரா துறைமுகம் மற்றும் சிறப்பு பொருளாதார மண்டலத்தில் இருந்து வெறும் 3 கிலோமீட்டர் தொலைவில் நாவினால் கிராமம் உள்ளது.

சிறப்பு பொருளாதார மண்டலத்திற்காக நிலத்தை கையகப்படுத்தியதால் பாதிக்கப்பட்ட 19 கிராமங்களில் நாவினாலும் ஒன்று என்கிறார் உள்ளூர் விவசாயி நரேன் காத்வி. அரசின் செயல்பாடுகள் மீது காத்விக்கு புகார்கள் உண்டு.

அவர் சொல்கிறார்:

“மத்திய அரசு அல்லது அதன் தலைமை தொழிலதிபர்களுக்கு மிகவும் நெருக்கமாக இருப்பதாக மக்கள் சொல்கிறார்கள். தொழிலதிபர்களுக்கு வரிச்சலுகைகள், மலிவு விலையில் நிலம் போன்ற உதவிகளை அவர்கள் தொடர்ந்து செய்கிறார்கள் என்பதே உண்மை.

அரசுடன் கெளதம் அதானிக்கு நெருக்கம் உண்டு என்பது உண்மை. 2019ஆம் ஆண்டு முதல் 2021ஆம் ஆண்டு  வரை கொரோனா பேரிடர் கால கட்டத்தில் உலகம் முழுவதும் வேளாண்மையும், தொழில்துறையும் கடுமையாக பாதிக்கப்பட்டதை நீங்கள் காணலாம். உலகெங்கும் எந்த வளர்ச்சியும் இல்லையென்றாலும் அதானி மட்டும் அசுர வளர்ச்சி கண்டுள்ளார். விமான நிலையங்கள், ரயில்கள், ரயில் தண்டவாளங்களை கொடுப்பது உள்பட ஏராளமான சலுகைகளை அவர்களுக்கு அரசு வழங்கியுள்ளது என்பது மறுக்க முடியாத உண்மை. அதேநேரத்தில் கெளதம் அதானியும் துணிச்சலானவர், ரிஸ்க் எடுக்க தயங்காதவர்.”

அதானியின் நண்பர் கிரீஷ்பாய் டேனியோ, அதானிக்கு சாதகமாக மோதி செயல்பட்டிருக்கலாம் என்பதை நம்ப மறுக்கிறார். “ஒவ்வொருவரும் மோதியை பற்றி பேசுகின்றனர். ஆனால் எனக்குத் தெரிந்தவரை, மோதி யாருக்கும் சாதகமாக செயல்படுபவர் அல்ல,” என்று அவர் கூறுகிறார்.

மேலும் அழுத்திக் கேட்ட போது அவர் சொல்கிறர்:

"நான் அரசியல்வாதி அல்ல. அதானிக்கு மிகச்சிறிய அளவில் மோதி உதவியிருக்கலாம். ஆனால் இரு கைகளும் தட்டினால்தானே ஓசை வரும்."

ஆர்.என்.பாஸ்கர் அதானியின் அதிகாரபூர்வ வாழ்க்கை வரலாறை எழுதியவர். “தொழிலதிபர்களுக்கு அரசியல்வாதிகள் எவ்வளவு தேவையோ அதைவிட அதிகமாக அரசியல்வாதிகளுக்கு தொழிலதிபர்கள் தேவை. இரு தரப்பும் பரஸ்பரம் ஒத்துழைக்கும் போது மிகப்பெரிய பலன்கள் கிடைக்கும்” என்று அவர் நம்புகிறார்.

ஆனால் அவர் மற்ற அரசியல்வாதிகளை விட மோதிக்கு நெருக்கமானவர் இல்லையா? பாஸ்கர் சொல்கிறார்:

“2001-ம் ஆண்டு குஜராத்தில் மோதி அதிகாரத்திற்கு வந்த போது அது நிகழ்ந்தது. மற்ற முதலமைச்சர்களைப் போலவே மோதியுடனும் அவர் நட்பு பாராட்டினார். 2014 வரை குஜராத் முதலமைச்சராக மோதி நீடித்ததால் அந்த நெருக்கம் மேலும் அதிகரித்தது. 2014-ம் ஆண்டில் மோதி பிரதமரான போது அவர்கள் இருவரும் ஒருவரை ஒருவர் நன்கு அறிந்தவர்களாகி விட்டனர். இரண்டாவதாக, அரசியல், சமூக, பொருளாதார காரணங்களுக்காக அரசு சில அவசர நடவடிக்கைகளை மேற்கொள்ள விரும்பும் போது அதனை திறம்பட செயல்படுத்தும் தொழிலதிபர்களையே தேர்வு செய்கிறது. தமக்கு மோசமான பெயரை பெற்றுத் தரக் கூடிய ஒருவருக்கு அதனை தர யாரும் விரும்பமாட்டார்கள்.”

அதானிக்கு சாதகமாக அரசு செயல்படுவதாக எழுந்துள்ள குற்றச்சாட்டுகள் பல சர்ச்சைகளுக்கு வித்திட்டுள்ளன. அவற்றில் சிலவற்றை பார்க்கலாம்:

சர்ச்சைக்குரிய 3 பெரும் திட்டங்கள்

முந்த்ரா துறைமுகம் மற்றும் சிறப்பு பொருளாதார மண்டலம்

மேற்குக் கடற்கரையில் குஜராத்தின் கட்ச் மாவட்டத்தில் உள்ள முந்த்ரா துறைமுகம் அதானி குழுமத்தின் வளர்ச்சியில் முக்கிய மைல் கல்லாகும்.

முந்த்ரா துறைமுகத்தின் முக்கியத்துவத்தை ஆர்.என்.பாஸ்கர் தனது புத்தகத்தில், “முந்த்ரா துறைமுக ஒப்பந்தமே அதானி மேற்கொண்ட மிகப்பெரிய வர்த்தக ஒப்பந்தம். முந்த்ரா துறைமுகம் இல்லாவிட்டால்  அதானியின் மிகச்சில தொழில்கள் மட்டுமே வளர முடிந்திருக்கும்,” என்று குறிப்பிட்டுள்ளார்.
அவரது கூற்றுப்படி, முந்த்ரா துறைமுகம் மற்றும் சிறப்பு பொருளாதார மண்டலத்தின் கீழ் அதானி குழுமத்திற்கு 15,665 ஏக்கர் நிலம் சொந்தமாக உள்ளது. கூடுதலாக 16,688 ஏக்கர் நிலத்தை அவரது குழுமத்திடம் ஒப்படைப்பதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன.
கெளதம் அதானியும், அவரது குழுமமும் முந்த்ரா துறைமுகத்திற்காக சந்தை விலையைக் காட்டிலும் மிகக் குறைந்த விலையில் நிலத்தை கையகப்படுத்தியதாக அடிக்கடி குற்றம்சாட்டப்படுகிறது. அதானி குழுமத்திற்கு அடிமாட்டு விலையில் நிலங்கள் விற்கப்படும் போது குஜராத் அரசை பல ஊடகங்கள் கடுமையாக விமர்சித்துள்ளன.

2014 ஏப்ரலில் என்.டி.டி.வி. தொலைக்காட்சிக்கு அளித்த நேர்காணலில் இந்த குற்றச்சாட்டுகளை கெளதம் அதானி மறுத்தார்.
“முந்த்ரா துறைமுக மேம்பாட்டிற்காக தனது நிறுவனத்திற்கு தரப்பட்ட நிலம் தரிசு நிலம்தான். அந்த நிலத்தை குறைந்த விலைக்கு வாங்கப்படுதாக கூறுவதில் எந்த முகாந்திரமும் இல்லை,” என்று அந்த நேர்காணலில் அதானி கூறினார்.
சந்தை விலையைக் காட்டிலும் 3 மடங்கிற்கும் குறைவாகவே நிலத்தின் விலை நிர்ணயிக்கப்பட்டதாக கூறப்படும் குற்றச்சாட்டுகளை அவர் மறுக்கிறார். “அந்த குற்றச்சாட்டுகள் அடிப்படை ஆதாரமற்றவை,” என்கிறார் அவர்.

“முந்த்ராவில் நாங்கள் தொழில் நடவடிக்கைகளை தொடங்கிய போது குஜராத்தில் சிமன்பாய் பட்டேலின் அரசு பதவியில் இருந்தது. 1993ம் ஆண்டு அங்கு ஒரு சதுர மீட்டருக்கு 10 காசு என்ற விலையில் நிலம் தரப்பட்டது. கடலில் மூழ்கிய, மோசமான, தரிசு நிலமாகவே அது இருந்தது,” என்று அவர் மேலும் குறிப்பிடுகிறார்.

“அரசு உத்தரவுப்படி, வளர்ச்சி நடவடிக்கைகளை மேற்கொள்ள 1993ம் ஆண்டு நாங்கள் சென்ற போது அங்கு ஒன்றுமே இல்லை. அப்போது முந்த்ராவில் ஒரு ஏக்கர் நிலம் வெறும் 400 ரூபாயாகவே இருந்தது. ஏக்கருக்கு ரூ.5 ஆயிரம் விலையில் நாங்கள் நிலத்தை வாங்க முடிவு செய்திருந்தாலும், மக்கள் அதற்கு தயாராகவே இருந்தனர். ஆனால் நாங்கள் 10 மடங்கு விலை கொடுத்து நிலத்தை வாங்கினோம்” என்று அவர் தெரிவித்துள்ளார்.

ஆர்.என்.பாஸ்கர் தனது புத்தகத்தில் இந்த குற்றச்சாட்டுகளையும் குறிப்பிடத் தவறவில்லை.

“அந்த நிலத்தை விற்று அரசு பணம் பார்த்தது. அதேபோல்தான் நில உடைமையாளர்களும், மீனவர்களும் பணம் பார்த்தனர். நிலத்திற்கு கிடைத்த பணத்தால் அவர்கள் திருப்தியடைந்தனர். ஆனால், அதானி அடிமாட்டு விலைக்கு நிலத்தை வாங்கிவிட்டதாக விமர்சிப்பவர்கள், அன்று அந்த நிலங்களின் மதிப்பு என்னவென்பதை மறந்துவிட்டனர்.” என்கிறார் அவர்.


முந்த்ரா துறைமுக மேம்பாட்டுத் திட்டத்திற்காக அதானி குழுமத்திற்கு வழங்கப்பட்ட நிலத்தின் அப்போதைய சந்தை மதிப்பு என்ன? அது என்ன விலைக்கு அதானி குழுமத்திற்கு வழங்கப்பட்டது? என்று தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் பிபிசி அளித்த மனுவுக்கு குஜராத் அரசு பதிலளிக்கவில்லை.


அதானியின் வானளாவிய வளர்ச்சிக்கு பிரதமர் மோதியும் முந்த்ரா துறைமுகமுமே காரணம் என்று குஜராத் அரசியலை நன்கு அறிந்த மூத்த பத்திரிகையாளர் திலீப் படேல் கூறுகிறார்.

பிபிசியிடம் பேசிய அவர், “முந்த்ராவில் நிலம் ஒப்படைக்கும் பணிகள் சின்மாய் படேல் ஆட்சியில் தொடங்கப்பட்டது என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. ஆனால், மோதி ஆட்சியில்தான் அதானி குழுமத்திற்கு மிகப்பெரிய அளவில் நிலம் வெறும் சாக்கலேட் வாங்கும் விலைக்கு வழங்கப்பட்டன” என்றார்.


(முந்த்ராவில் சுற்றுச்சூழல் விதிகளை அதானி குழுமம் மீறுவதாகவும் குற்றச்சாட்டுகள் உண்டு. இதற்காக, 2013ம் ஆண்டில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு விதித்த 200 கோடி ரூபாய் அபராதத்தை மோதி அரசு நீக்கிவிட்டதாக இந்திய ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டது.
பிசினஸ் ஸ்டேன்டர்டு (Business Standard) பத்திரிகை தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் பெற்ற தகவலில் இது தெரியவந்தது.


முந்த்ரா அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்த விவசாயி நரைன் காத்வி, பிபிசியிடம் பேசுகையில், “நவீனமாக்கலை நாங்கள் எதிர்க்கவில்லை. இது நாட்டின் வளர்ச்சிக்கு உதவுவதோடு புதிய வேலைவாய்ப்புகளையும் உருவாக்கும். ஆனால், உள்ளூர் மக்களின் வாழ்வாதாரத்தை அழித்து இவற்றை செயல்படுத்தக் கூடாது. சுற்றுச்சூழலும், உள்ளூர் மீனவர்களின் வாழ்வாதாரமும் எந்த வகையிலும் பாதிக்கப்படக் கூடாது என்பதை உறுதிப்படுத்த வேண்டும்,” என்றார்.)

இந்த குற்றச்சாட்டுகள் குறித்து விளக்கம் பெற இமெயில் வாயிலாக அதானி குழுமத்தை தொடர்பு கொண்டோம். ஆனால், இதுவரை எந்த பதிலும் கிடைக்கவில்லை.

அனுபவமே இல்லாத போதும் விமான நிலைய ஏலத்தில் வெற்றி

விமான நிலையங்களை நிர்வகித்த அனுபவமே இல்லாத அதானி குழுமம், 2019-ம் ஆண்டு ஏலத்தில் 6 விமான நிலையங்களை மேம்படுத்தவும், நிர்வகிக்கவும் உரிமம் பெற்றது பலரது புருவங்களையும் உயரச் செய்தது. அதானி குழுமத்திற்கு சாதகமாக விதிகள் வளைக்கப்படுவதாக மீண்டும் குற்றச்சாட்டுகள் எழுந்தன. ஆமதாபாத், லக்னோ, மங்களூரு, ஜெய்ப்பூர், கவுகாத்தி மற்றும் திருவனந்தபுரம் ஆகிய 6 விமான நிலையங்களை நிர்வகிக்கும் உரிமத்தை அதானி குழுமம் வென்றது.

இதன் மூலம் ஜி.எம்.ஆர்., ஜி.வி.கே. ஆகிய நிறுவனங்களுக்கு அடுத்தபடியாக,
விமான நிலையங்களை நிர்வகிக்கும் மூன்றாவது பெரிய நிறுவனமாக அதானி குழுமம் உருவெடுத்தது. அதைத் தொடர்ந்து மும்பை சர்வதேச விமான நிலைய நிர்வாகப் பொறுப்பை ஜி.வி.கே. நிறுவனத்திடம் இருந்து வாங்கியதும், இந்தியாவின் 25% விமானப் பயணிகளை கையாளும் பொறுப்பு அதானி குழுமத்தின் வசம் வந்தது. அத்துடன், இந்தியாவின் 33% சரக்குப் போக்குவரத்தும் அதானி குழுமத்தின் கட்டுப்பாட்டில் உள்ளன.

ஒரே நிறுவனத்திடம் 2 விமான நிலையங்களுக்கும் கூடுதலாக ஒப்படைக்கக் கூடாது என்ற இந்திய நிதி அமைச்சகம் மற்றும் நிதி ஆயோக்கின் ஆட்சேபனைகள் புறந்தள்ளப்பட்டதாக ஊடகச் செய்திகள் கூறுகின்றன. குற்றச்சாட்டுகளின் தீவிரத்தன்மையை உணர்ந்து மத்திய சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகம் விளக்கம் அளிக்க வேண்டியதாயிற்று.

“அரசு துறைகளின் ஆட்சேபனைகள் கவனத்தில் கொள்ளப்படவில்லை என்ற குற்றச்சாட்டுகள் தவறானவை,” என்று அரசு வெளியிட்ட ஊடக செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. “அதுகுறித்து ஆய்வு செய்ய அமைக்கப்பட்ட குழு, ஒரே நிறுவனம் எத்தனை விமான நிலையங்களுக்கும் விண்ணப்பிக்கலாம், அவற்றிற்கு எத்தனை வழங்கலாம் என்பதற்கு உச்சவரம்பு நிர்ணயிக்க தேவையில்லை என்று அறிக்கை தந்ததாக அரசு செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருந்தது. ஏனெனில், ஏலத்தில் இருந்த 6 விமான நிலையங்களுமே சிறியவை; நாட்டின் ஒட்டுமொத்த விமானப் பயணிகளில் 9.5 சதவீதத்தை மட்டுமே கையாளக் கூடியவை.”

ஏலத்தில் போட்டியை அதிகரிக்கவும், விமான நிலைய நிர்வாகத்தை ஏகபோகத்தை தடுக்கவும் முந்தைய அனுபவம் தேவையில்லை என்று அந்தக் குழு தீர்மானித்ததாக சிவில் விமான போக்குவரத்து அமைச்சகம் கூறுகிறது.

6 விமான நிலையங்களுக்கான ஏல நடைமுறை குறித்த விவரங்களை கேட்டு தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் பிபிசி விண்ணப்பித்தது. அதற்கு விமான நிலைய கட்டுப்பாட்டு ஆணையம் அளித்த ஆவணங்களின்படி, 6 விமான நிலையங்களுக்கான ஏலத்திலும் மற்ற நிறுவனங்களைக் காட்டிலும் அதானி குழுமம் அதிக தொகையை குறிப்பிட்டுள்ளது. ஆர்.டி.ஐ. மூலம் பெறப்பட்ட தரவுகளை ஆய்வு செய்கையில், 6 விமான நிலையங்களுக்கான ஏலத்தில் அதானி என்டர்பிரைசஸ் நிறுவனம் விமான நிலையத்திற்கு வரும் ஒரு பயனருக்கான நிர்வாகச் செலவாக ரூ.115 முதல் ரூ.177 வரை குறிப்பிட்டு, உரிமத்தை வென்றுள்ளது.

மற்ற நிறுவனங்களைக் காட்டிலும் அதானி நிறுவனம் அதிக தொகையை குறிப்பிட்டிருந்தாலும், அனுபவம் கட்டாயம் என்ற விதி நீக்கப்படாமல் இருந்திருந்தால், இந்த ஏலத்தில் கொச்சி இன்டர்நேஷனல் ஏர்போர்ட் நிறுவனம், ஜி.எம்.ஆர். ஏர்போர்ட் நிறுவனம் ஆகியவை கடும் சவாலை அளித்திருக்கும்.

இந்திய அரசுக்கு பகுதியளவு சொந்தமான, தேசிய முதலீடு மற்றும் உள் கட்டமைப்பு நிதி(NIIF) நிறுவனமும் குவாஹத்தி, ஆமதாபாத், ஜெய்ப்பூர் ஆகிய விமான நிலையங்களின் நிர்வாக உரிமையைப் பெற ஆர்வம் காட்டியது. அதன் இணையதளத்தில், அனைத்து வகையான உள்கட்டமைப்பு திட்டங்களிலும் முதலீடு செய்ய பரிந்துரைக்கப்பட்டிருந்தது. ஏலத்தில் NIIF குறிப்பிட்டிருந்த தொகையை முழுமையாக ஆராய்ந்த போது, அதற்கும், அதானி எண்டர்பிரைசஸ் குறிப்பிட்ட தொகைக்கும் இடையே வெறும் 5 ரூபாய் முதல் 31 ரூபாய் வரையிலுமே வித்தியாசம் இருந்தது.

கோடா அனல் மின் நிலையம்

கடந்த செப்டம்பரில் இந்தியா வந்த வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனாவை கெளதம் அதானி சந்தித்தார். பின்னர் அவர் தனது ட்வீட்டில், “2022-ம் ஆண்டு வங்கதேசத்தின் தேசிய நாளான டிசம்பர் 16ம் தேதி 16,000 மெகாவாட் திறன் கொண்ட கோடா அனல் மின் நிலையம் மற்றும் பிரத்யேக மின்சார சப்ளை பாதை திட்டம் தொடங்கும்” என்ற உறுதிப்பாட்டை வெளிப்படுத்தினார்.

இதுகுறித்த விவாதத்தின் போது, ஜார்க்கண்டின் கோட்டா மாவட்டத்தில் அதானி குழுமம் நிறுவியுள்ள மின் உற்பத்தி நிலையம் குறித்த சர்ச்சைகளும் மீண்டும் எழுந்தன. இத்திட்டத்திற்காக, விவசாயிகளிடம் இருந்து விளைநிலங்களை உரிய நடைமுறைகளை ஏதும் பின்பற்றாமல் அதானி குழுமமும், ஜார்க்கண்ட் அரசும் வாங்கியுள்ளதாக ஊடக செய்திகளில் குற்றம்சாட்டப்பட்டது. அதானி குழுமத்தின் திட்டத்திற்காக 917 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்த அரசுக்கு பரிந்துரை செய்து 11 பக்க குறிப்பை கோட்டா மாவட்ட நிர்வாகம் வெளியிட்டது.

உள்ளூர் விவசாயிகளும், நில உடைமையாளர்களும் இந்த முடிவை எதிர்த்து ஜார்க்கண்ட் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். பிபிசியிடம் பேசினார் அவர்களது வழக்குரைஞர் சோனல் திவாரி:

“இது நிலம் கையகப்படுத்துதல் தொடர்பான வழக்கு. இத்திட்டத்திற்காக நிலம் கையகப்படுத்துவதை நில உரிமையாளர்கள் எதிர்க்கின்றனர்.பொது நோக்கத்திற்காக நிலத்தை கையகப்படுத்த வகை செய்யும், 'சரியான இழப்பீடு, வெளிப்படைத்தன்மை, மறுவாழ்வு மற்றும் மறுகுடியமர்த்தலுடன் கூடிய நிலம் கையகப்படுத்துதல் சட்டம் - 2013' உடன் இது மாறுபடக் கூடியது. இந்த வழக்கில் மனுதாரர்களுக்கு ஆதரவாக நான் வாதாடுகிறேன்.”

கோட்டா அனல்மின் திட்டத்திற்காக நிலம் கையகப்டுத்துவதற்கு எதிராக போராடி வரும் கோட்டியா கிராமத்தைச் சேர்ந்த சிந்தாமணி சாகு என்ற 73 வயது மூதாட்டி, உரிய நேரத்தில் நீதி கிடைக்கும் என்ற நம்பிக்கை இல்லை என்று விரக்தியுடன் கூறுகிறார். நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருக்கும் போதே அனல் மின் நிலையத்திற்கான பணிகள் முழுவீச்சில் நடந்து கொண்டிருப்பதாக அவர் குறிப்பிடுகிறார்.

அவர் பிபிசியிடம் பேசினார்:

"பொதுநலன் என்ற விதியைப் பயன்படுத்தி, இத்திட்டத்திற்காக என்னுடைய குடும்பப் பரம்பரைக்கு சொந்தமான  5 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டுள்ளது. எங்கள் நிலம், நீர், குறைந்த ஊதியத்தில் கிடைக்கும் தொழிலாளர்களைப் பயன்படுத்தி உற்பத்தி செய்யப்படும் மின்சாரம் அண்டை நாடான வங்கதேசத்திற்கு அனுப்பப்படவுள்ளது. இது அதானியை மேலும் பணக்காரராக்கும். எங்களுக்கு என்ன பயன்?"

“2016-ல் நடத்தப்பட்ட மக்களின் கருத்துக் கேட்புக் கூட்டத்தில், நிலம் கையகப்படுத்துதலுக்கு எதிராக போராடிய கிராமவாசிகள் பங்கேற்க அனுமதிக்கப்படவில்லை. நிலம் கையகப்படுத்துதலுக்கு கிராமத்தினரின் ஒப்புதல் தேவை என்ற விதியை அதானி குழுமமோ, அரசோ கடைப்பிடிக்கவே இல்லை. ஆனால், திட்டத்தை தொடங்க தேவையான அனைத்தும் சரியாக பூர்த்தி செய்யப்பட்டுவிட்டன என்று ஆவணங்களில் இடம் பெறுவதை அந்நிறுவனம் உறுதி செய்துவிட்டது.” என்கிறார் அவர்.

அதானி குழுமத்திற்கு ஆதரவாக அரசு நிர்வாகம் செயல்படுகிறது என்று அவர் குற்றம்சாட்டுகிறார். 2014 முதல் 2019 வரை, ஜார்க்கண்டில் ரகுபர் தாஸ் தலைமையிலான பா.ஜ.க. அரசு பதவி வகித்தது என்பது குறிப்பிடத்தது.

“நான் உள்பட நிலம் கையகப்படுத்துதலை எதிர்த்த அனைவர் மீதும் பொய்யான குற்ற வழக்குகளை பதிவு செய்து மிரட்டி அழுத்தம் கொடுத்தனர். கையகப்படுத்தப்பட்ட நிலத்தில் பெரும்பான்மையானவை விளைநிலங்கள். மோட்டியா, டாங்கா, மாலி, பட்வா ஆகிய கிராமங்களில் நிலம் கையகப்படுத்தப்பட்டுள்ளது. ஆனால், நான் போராட்டத்தை தொடர்கிறேன். என் நிலத்தை கையகப்படுத்தவோ, இழப்பீட்டை ஏற்றுக் கொள்வதாகவோ நான் ஒப்புதல் தரவில்லை.”

2013 ஆம் ஆண்டு சட்டப்படி, பொது நோக்கிற்காக தனியார் நிறுவனத்திற்காகவோ அல்லது அரசு - தனியார் கூட்டுத் திட்டத்திற்காகவோ சம்பந்தப்பட்ட அரசுகள் நிலத்தை கையகப்படுத்த முடியும். ஆனாலும் சில குறிப்பிட்ட நடைமுறைகள் பின்பற்றப்படுவதை கட்டாயமாக்கியுள்ளது. சட்டம் முன்வைக்கும் நடைமுறைகளின்படி, சட்டத்தின் நான்காவது பிரிவின் கீழ் சமூக தாக்க மதிப்பீட்டு ஆய்வு செய்ய வேண்டியது கட்டாயம்.  சட்டத்தின் 2வது அட்டவணையில, நிலம் கையகப்படுத்துதலால் பாதிக்கப்படுவோருக்கு மறுவாழ்வு அளித்தலுக்கான விதிகளும் இடம் பெற்றுள்ளன.

இதைத் தவிர்த்து, கிராம சபைகளில் மறுவாழ்வுத் திட்டம் குறித்த மக்களின் கருத்துக் கேட்புக் கூட்டமும் நடத்தப்பட வேண்டும். அந்த கூட்டத்தில் எழுப்பப்படும் ஆட்சேபனைகள் குறிப்பெடுக்கப்பட்டு, மாவட்ட ஆட்சியருக்கு அனுப்பப்பட வேண்டும்.

இதுகுறித்து ஜார்க்கண்ட் மாநில அரசின் விளக்கத்தை பெற பிபிசி முயன்றது. ஆனால், எந்த பதிலும் கிடைக்கவில்லை.

ஆரம்ப நாட்கள்

உலகின் இரண்டாவது பெரும் செல்வந்தராக போர்ப்ஸ் இதழால் அறிவிக்கப்பட்டதால் உலக அளவில் அறியப்படும் நபராக கெளதம் அதானி உருவெடுத்தார். அதானி குறித்தும், அவரது வர்த்தக சாம்ராஜ்யம் குறித்தும் அறிந்து கொள்ள சர்வதேச ஊடகங்கள் முற்பட்டன.

புதிரான தொழிலதிபராக திகழும் அதானி மீதான ஆர்வத்திற்கு அது மட்டுமே காரணம் அல்ல. கொரோனா பேரிடர் காலத்தில் லட்சக்கணக்கானோர் வறுமையின் பிடியில் சிக்கிய போது அதானியின் சொத்து மதிப்பு மட்டும் அசுர வளர்ச்சி பெற்றது எப்படி? என்ற மர்மமே இதற்கு நடுநாயகமாக திகழ்ந்தது.

70 நாடுகளில் ஊடுருவி 100 இடங்களில் தடம்பதித்து பரந்து விரிந்துள்ள சாம்ராஜ்ஜியத்தை கொண்டுள்ள இந்த மனிதரைப் பற்றி முழுமையாக அறிந்து கொள்வதற்கான உண்மையான முயற்சியாக இது அமைந்தது.
ஆகவே, நாம் பயன்படுத்தும் ஆற்றலில் இருந்து துறைமுகங்கள், விமான நிலையங்கள் வரை தடம் பதித்துள்ள அதானி யார்? வெற்றிக்கான தாரக மந்திரமாக ஏதேனும் வர்த்தக சித்தாந்தத்தை கொண்டுள்ளாரா? அல்லது 1970களில் வைரத்தை தேடும் சாதாரண நபராக இருந்த அவரை இன்று முகேஷ் அம்பானியுடன் இணைந்து இந்தியாவின் பொருளாதாரத்தை தீர்மானிக்கும் முக்கிய சக்தியாக ஒன்றாக வளர்த்தெடுத்த அந்த வர்த்தக மாதிரி எது?

60 வயதான கெளதம் அதானி இதுவரை சில ஊடக நேர்காணல்களை மட்டுமே அளித்துள்ளார். பொதுவெளியில் அவர் பேசியதும் குறைவே. கார்ப்பரேட் உலகின் பளபளப்பு மற்றும் கவர்ச்சியில் இருந்து அவர் விலகியே இருக்கிறார். சுய பரப்புரைகளையும், விளம்பரங்களையும் அவர் தவிர்த்து விடுகிறார். அதானியிடம் நேர்காணல் கேட்ட போது, அடுத்த சில மாதங்களுக்கு நேரம் இல்லை என்று அவர் தரப்பில் பதில் தரப்பட்டது. அவரது கார்ப்பரேட் தகவல் தொடர்புப் பிரிவின் வாயிலாகவே அவரை தொடர்பு கொள்ள முடிகிறது. அவருக்கு பாதுகாப்பு அரணாக திகழும் இந்த பிரிவு, பெரும் தொழிலதிபர்களுக்கு மிகவும் தேவையான ஒன்று.

பத்திரிகையாளரும், ஆய்வாளருமான ஆர்.என்.பாஸ்கரின் எழுத்துகள் வாயிலாகவே கெளதம் அதானி குறித்த நெருக்கமான தகவல்களை அறிந்து கொள்ள முடிகிறது. சில சர்ச்சைக்குரிய ஒப்பந்தங்களைக் காட்டிலும் அதானியைப் பற்றி வெகு சிலவே அறிந்து கொள்ள முடிவது ஏன் என்று வினவிய போது, 2 முக்கிய காரணங்களை ஆர்.என்.பாஸ்கர் குறிப்பிட்டார். “முதலாவதாக, ஊடக வெளிச்சம் படுவது குறித்து கெளதம் அதானி அதிகம் அலட்டிக் கொள்ள மாட்டார். அவர் கூச்ச சுபாவம் உடையவர். அவர் ஆடம்பரம், ஊடக வெளிச்சம், புகைப்படங்கள், போன்றவற்றை விரும்பக் கூடிய தொழிலதிபர் அல்ல.  ஊடகங்களுக்கு நேர்காணல் தர கெளதம் அதானி தயங்குவார். புகைப்படங்களை எடுக்க நீங்கள் அவரை வற்புறுத்த வேண்டியிருக்கும்,” என்கிறார் ஆர்.என்.பாஸ்கர்.

மேலும் தொடரும் அவர், “நீங்கள் கெளதம் அதானி போன்ற நபராக இருக்கும் பட்சத்தில் உங்களின் ஒவ்வொரு உத்திகள் குறித்தும் பேச முடியாது. அதற்கு பொறுமையும் நீண்ட கால காத்திருப்பும் அவசியம்,” என்கிறார்.

ஆரம்ப அறிகுறிகள்

அதானி குடும்பம் குஜராத்தில் இருந்த போதில் இருந்தே, அந்த சந்தையில் மொத்த விலை துணிக்கடையை தினேஷ் வோரா நடத்தி வருகிறார். கெளதம் அதானியின் மனைவி ப்ரீத்தி அதானி தனது உறவினர் என்பது பெருமை தருவதாக அவர் கூறுகிறார். அந்த நேரத்தில் தலைசிறந்த தொழிலதிபராக உருவெடுப்பதற்கான எந்தவொரு அசாதாரண திறமைகளையும் அதானி வெளிப்படுத்தவில்லை என்கிறார் அவர்.

தினேஷ் வோரா

தினேஷ் வோரா

அதானி குடும்பத்தினரைப் பார்க்க தினேஷ் வோரா செல்வது தற்போது அரிதாகி விட்டது. “அங்கே நாங்கள் செல்வது குறைந்துவிட்டது. திருமண விழாக்கள் மற்றும் குடும்பத்தினர் கூடும் நிகழ்வுகளில் பங்கேற்க மட்டுமே நாங்கள் செல்கிறோம். இதற்கு, நாங்கள் விரும்பும் போதெல்லாம் அங்கே செல்ல முடியாது என்று அர்த்தமல்ல. முக்கிய காரணம் ஏதுமில்லாமல் அங்கே சென்று வந்து அவர்களின் நேரத்தை வீணடிக்கக் கூடாது என்று எண்ணுகிறோம்.”

அதானியைப் போலவே, பெரும்பாலான அவரது நண்பர்களும் அகமதாபாத்தில் தான் தொடர்ந்து வசிக்கின்றனர். லச்சு பாய் என்று பரவலாக அறியப்படும் லட்சுமணன் சவுத்ரிதான் கெளதம் அதானியின் பழைய நண்பர் ஆவார். அவருடனான சந்திப்பின் போது, “1982 முதல் கடந்த 40 ஆண்டுகளாக அதானியைத் தெரியும்” என்று பெருமையுடன் கூறினார்.

அதானியின் பதின்ம வயதில் பெரும் தொழிலதிபராக உருவெடுப்பதற்கான அறிகுறிகளை அவர் கண்டாரா?. “ஆரம்பத்தில் இருந்தே பெரிய மனிதர்களுடன் நல்ல தொடர்பை உருவாக்க வேண்டும் என்று அவர் எண்ணினார். வேலையில் முழு அர்ப்பணிப்புடன் ஈடுபடுவதில் அவரைப் போல  வேறு யாரையும் பார்த்ததில்லை,” என்கிறார் கிண்டலாக.

வர்த்தகத்திலும், வாழ்க்கையிலும் பெரும் வாய்ப்புகளைத் தேடி அவர் மும்பைக்கு இடம் பெயர்ந்தார். அங்கே அவர் வைர வியாபாரத்தில் ஈடுபட்டார். மும்பையின் ஆடம்பர பகுதியான ஓபரா ஹவுஸ் பகுதியில் உள்ள பிரசாத் சாம்பர்ஸ் என்ற பல அடுக்குமாடி கட்டடத்தில் அவர் பணிபுரிந்தார்.


பள்ளியில் கெளதம் அதானி சாதாரண மாணவர்தான். கல்வியைக் காட்டிலும் வர்த்கத்தில்தான் அவர் நாட்டம் காட்டினார். ஆகவே, கல்லூரில் முதலாம் ஆண்டுக்குப் பிறகு படிப்பை பாதியில் நிறுத்திவிட்டார்.


அதன் பிறகாவது, உலகின் பெரும் செல்வந்தர்கள் வரிசையில் இடம் பிடிப்பதற்கான அறிகுறிகள் தென்பட்டனவா? பணம் சம்பாதிப்பதற்கான மறைமுக திறமைகள் அவரிடம் இருந்தனவா?

“மற்ற குழந்தைகளைப் போல சாதாரண ஒருவராகவே அவரும் இருந்தார். ஆனால், படைப்பாற்றல் கொண்ட குழந்தை போல அதீத ஆற்றல் கொண்டவராக இருந்தார். என் புத்தகத்தில் ஒரு அத்தியாயத்தில் இடம் பெறும் “டூஃபானி”  என்ற பெயரைச் சொல்லியே அவரை அழைப்பேன். அதானியின்  சகோதரரையும், அவர் மனைவியையும் காண்கையில், அதானி எப்போதும் ஆற்றல் நிறைந்த தைரியமான குழந்தையாக இருந்ததாக அவர்கள் கூறினர்,” என்கிறார் பாஸ்கர்.

அதானி ஒருமுகமாக வர்த்தகத்தில் மட்டுமே கவனம் செலுத்தும் ஒருவராக தோன்றினார். பாஸ்கர் மேலும் தொடர்கையில், “அதானி பதின்ம வயதில் மற்றவர்களிடம் இருந்து வித்தியாசமானவராக இருந்தார். சினிமா இதழ்களையோ, விளையாட்டு தொடர்பான புத்தகங்களையோ அவர் தேடியதில்லை. மாறாக அறிவியல் தொடர்பான இதழ்களையே அவர் நாடினார். ஒவ்வொன்றும் எப்படி வேலை செய்கின்றன? எது அவற்றை செயல்பட வைக்கிறது? என்று கேள்வி எழுப்பும் மனதை அவர் கொண்டிருந்தார்.”

பூர்வீக வீடு

கெளதம் அதானி, குஜராத்தில் சாதாரண நடுத்தர வர்க்க ஜெயின் குடும்பத்தில் பிறந்தவர். அவரது தந்தை வடக்கு குஜராத்தில் உள்ள தாரட் நகரில் உள்ள நெருக்கடி மிகுந்த சந்தையில் சிறிய துணி வியாபாரியாக இருந்தார். அவரது குடும்பத்தின் பரம்பரை வீடு இன்றும் அங்கே உள்ளது. நாம் அங்கு சென்ற போது ஆனந்த் பரோட் என்று அறிமுகப்படுத்திக் கொண்ட பராமரிப்பாளரின் பொறுப்பில் அந்த வீடு இருக்கிறது. “7-8 மாதங்களுக்கு முன்பு அதானி அவரது குழுவினருடன் இந்த வீட்டிற்கு வருகை தந்தார். எங்களுடன் பேசிய அவர்கள், டிரோன் கேமராவைப் பயன்படுத்தி கட்டடத்தை படம் எடுத்தனர்,” என்று அவர் கூறினார்.

பாரம்பரிய வீட்டிற்கு அதானியின் வருகை அந்த நகரில் ஒருவித எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. மாதங்கள் உருண்டோடிய பிறகும் கூட, அவரது அரிதான வருகை குறித்து அங்குள்ள ஒவ்வொருவரும் மற்றவர்களை மிஞ்சும் வகையில் பேசுகின்றனர். அங்குள்ள ஜெயின் வழிபாட்டுத் தளத்தில் கெளதம் அதானி சுமார் ஒரு மணி நேரம் தரிசனம் மற்றும் வழிபாடு செய்ததாக மதகுரு கூறுகிறார்.

வுதம் அதானியின் மூத்த சகோதரரின் மகன் என்று தன்னை அறிமுகம் செய்துகொண்ட சுரேஷ் ஹிராலால் அதானி, அந்த நேரத்தில் வெளியூர் சென்றிருந்ததால் அவரை பார்க்க முடியவில்லை என்று வருந்துகிறார்.

"ஒரு நாள் வித்தியாசத்தில் நான் அதை தவற விட்டு விட்டேன். என்னுடைய பாரம்பரிய வீட்டில் கெளதம் அதானி இருக்கிறார் என்ற தகவலை கேள்விப்படும் போது நான் வெளியூரில் இருந்தேன். மறுநாளே நான் விரைந்து வந்தாலும் அவர் சென்றுவிட்டார். ஆமதாபாத்தில் அவரை சந்திக்க முயற்சித்தேன். ஆனால், அது அவ்வளவு எளிதான காரியமல்ல."

அதானியின் பிறந்த ஊரில் இருந்து வெளியேறாத, இன்னும் வறுமையில் இருந்து மீள முடியாத அதானியின் மிகச்சில உறவினர்களில் இவரும் ஒருவர்.

பழைய இந்தியாவை நினைவுகூறும் தாரட் நகரில், மேடு, பள்ளம் நிறைந்த கரடுமுரடான சாலைகள், திட்டமிடப்படாத வீதிகள், குடியிருப்புகள், வீடுகள் மற்றும் குறுகிய தெருக்களில் ஒழுங்குபடுத்தப்படாத இரைச்சல் நிறைந்த போக்குவரத்து போன்றவற்றை காண முடிகிறது. இந்தியாவின் முன்னணி உள்கட்டமைப்பு தொழிலதிபர் உருவாக்கியுள்ள ஆடம்பர குடியிருப்புகள், வானளாவிய பளபளக்கும் கட்டடங்கள் ஆகியவற்றிற்கு வெகு தொலைவில் இது இருக்கிறது. நீர்த்தேக்க தொட்டி கட்டித் தந்த அதானிக்கு நன்றிக்கடன்பட்டிருப்பதாக உள்ளூர் மக்கள் கூறுகின்றனர். கோயில் கட்டித் தருவதாக அதானி உறுதியளித்திருப்பதாகவும் அவர்கள் கூறுகின்றனர். மேலும், அந்த இடத்தை நவீன நகராக அதானி மாற்ற வேண்டும் என்றும் அவர்கள் விரும்புகின்றனர்.

அதானியின் தந்தை சாந்திலால் அதானி தாரட் நகரை காலி செய்துவிட்டு அகமதாபாத்தில் குடியேறிவிட்டார். அங்கேதான் 1962ஆம் ஆண்டு அதானி பிறந்தார். அதானியின் உடன் பிறந்த 7 பேர், அவர்களது குழந்தைகள் என நெருக்கமாக பின்னிப் பிணைந்த அதானியின் குடும்பம், அதானி குழுமத்தின் ஒருங்கிணைந்த பகுதியாக திகழ்கின்றனர். ஒரே ஒரு சகோதரர் மட்டும் துபாயில் குடியேறிவிட்டார்.

அவரது நண்பர்கள் மற்றும் குடும்பத்தினரிடம் பேசிய போது, சராசரி புத்திசாலித்தனம் கொண்ட, மகத்தான சாதனை படைப்பதற்கான எந்த அறிகுறிகளும் இல்லாத சாதாரண இளைஞனாகவே அவர் இருந்தார் என்பது தெளிவாகிறது.

ஆனால், இளைஞராக இருந்த போதே, அவர் எதையும் பெரிய அளவில் செய்துள்ளார்; அடுத்த பெரிய வாய்ப்பை தேடியுள்ளார். மூத்த சகோதரர் மன்சுக்பாய் அதானியின் பிளாஸ்டிக் வர்த்தக நிறுவனமான ஈசி பேக்கேஜிங் (Easy Packaging) நிறுவனத்தில் சேர அவர் அகமதாபாத்திற்கு திரும்பியதும் அந்த குணநலன்கள் வெளிப்பட்டன.

“வெறும் வர்த்தகத்தில் கெளதம் அதானி மகிழ்ச்சி கொள்ளவில்லை. சகோதரருடன் இணைந்த பிறகு அவர் தொழிலை விரிவாக்கினார். வர்த்தகத்தை விரிவுபடுத்த அவர் மலிவான மூலதன சப்ளையை தேடினார். முகவர்களை தவிர்த்து, யார் உண்மையான சப்ளையர் என்பதை கண்டுபிடித்து, வெளிநாட்டில் இருந்த அவர்களிடமே நேரில் சென்று, பெருமளவு மூலதனப் பொருட்களை வாங்கினார். இந்தியாவில் பலதரப்பட்ட மக்களுக்கு அதனை விற்க முடியும் என்று அவருக்குத் தெரியும். அவர் ரிஸ்க் எடுக்கக் கூடிய துணிச்சல்காரராக இருந்தார். அதேநேரத்தில், துணிச்சலுடன் கூடவே மோசமான விளைவுகளை தணிக்கும் உத்திகளையும் அவர் கையாண்டார். அதுதான் அதானியை தனித்துவம் மிக்கவராக மாற்றுகிறது,” என்று ஆர்.என்.பாஸ்கர் கூறுகிறார்.

1986-ம் ஆண்டு 24 வயதை எட்டிய போது அதானி திருமண பந்தத்தில் இணைந்தார். அதானி குடும்பத்திற்கு வெகுவான பரிச்சயமான, ஜெயின் சமூகத்தைச் சேர்ந்தவரின் மகளான, அவரது மனைவி பிரீத்தி அதானி ஒரு பல் மருத்துவர் ஆவார். அதானி திருமணத்திற்கான ஏற்பாடுகளை முன்னின்று தாமே செய்ததாக அவரது நண்பர் லச்சு பாய் கூறுகிறார். “திருமணத்திற்கான எல்லா ஏற்பாடுகளையும் நானே முன்னின்று செய்தேன். அது அவரது தொடக்க காலம் என்பதால் பெரிய அளவில் ஆடம்பரம் ஏதும் இல்லை. நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் மட்டுமே கலந்து கொண்ட ஜெயின் சமூக பாரம்பரிய முறையில் திருமணம் நடந்தது,” என்கிறார் அவர்.

அதானியின் இறக்குமதி வர்த்தகம் பெரிய அளவில் வளர்ச்சி அடைந்தது 1988ஆம் ஆண்டு முதல் 1992ஆம்   ஆண்டுக்கு இடைப்பட்ட நான்கே ஆண்டுகளில்தான். இந்த காலகட்டத்தில் அதானியின் இறக்குமதி 100 மெட்ரிக் டன்னில் இருந்து 40 ஆயிரம் மெட்ரிக் டன்னாக அசுர வளர்ச்சி பெற்றது. விரைவிலேயே ஏற்றுமதியிலும் நுழைந்து, முன்னணி ஏற்றுமதியாளராகவும் உருவெடுத்தார்.

முந்த்ரா துறைமுகம் ஒரு திருப்பு முனையா?

பிசியான ஏற்றுமதியாளராகவும் இறக்குமதியாளராகவும் உருவெடுத்த அதானி, துறைமுகங்களில் பொருட்களை ஏற்றவும் இறக்கவும் தேவையற்ற தாமதங்கள் ஏற்படுவதை கண்ணுற்றார். அத்துடன், திறனற்ற செயல்முறைகளாலும் தனக்கு மட்டும் ஆண்டுக்கு 10 முதல் 12 கோடி ரூபாய் வரை இழப்பு ஏற்படுவதை அவர் கண்டார். அப்போதே, முந்த்ராவில் சொந்தமாக துறைமுகம் அமைக்க வேண்டும் என்று முடிவெடுத்தார். அதனை சாதித்தும் காட்டிவிட்டார். அப்போது, இந்திய பொருளாதாரம் தாராளமயமாக்கப்பட்டிருந்தது. தனியார் பங்களிப்புடன் முந்த்ரா உள்பட 10 துறைமுகங்களை மேம்படுத்த குஜராத் அரசு தீர்மானித்தது. முந்த்ரா துறைமுகம் அருகில் மாநில அரசுக்குச் சொந்தமாக உள்ள கண்ட்லா துறைமுகத்தைக் காட்டிலும் ஆழமானது. ஆகவே, இயற்கையாகவே பெரிய கப்பல்களுக்கு ஏற்ற

அதானியின் வர்த்தக விரிவாக்க நடவடிக்கையில் முந்த்ரா துறைமுகம் ஒரு முக்கிய மைல்கல், கொண்டாட்ட தருணம். அவரது குழந்தைப் பருவ நண்பர் கிரீஷ்பாயின் வார்த்தைகளில் சொல்வதென்றால்,”முந்த்ராவில் தரிசு நிலத்தை அவர் வாங்கினார். அது இன்று சொர்க்கமாகிவிட்டது.”

இந்த துறைமுகம்தான் 2014ம் ஆண்டு சிறப்பு பொருளாதார மண்டலம் அமைக்க வழிவகுத்தது. இப்போது அங்கே தேன்கூடு போல அதானி பவர், டாடா பவர், அதானி வில்மர் போன்ற பல முக்கிய நிறுவனங்கள் செயல்படுகின்றன.

முந்த்ரா துறைமுகம் மற்றும் சிறப்புப் பொருளாதார மண்டலத்தைச் சுற்றியுள்ள கிராமங்களுக்குச் சென்று பார்க்கும் போது அது அதானியின் உலகம் என்பது புலனானது. அவர் விரும்பியதே அங்கே நடக்கிறது. கிராமத்தில் சிலருடன் உரையாட முயன்ற போது அவர்கள் பேச மறுத்துவிட்டனர். அங்கே கண்ணுக்கு புலப்படாத வகையில் எங்கும் நிறைந்திருக்கும் அதானியின் ஆட்களின் கண்கணில் படுவதை அவர்கள் விரும்பவில்லை. முந்த்ரா துறைமுகம் மற்றும் சிறப்பு பொருளாதார மண்டலத்திற்கு நிலம் கையகப்படுத்துவதற்கு எதிராக போராட்டம் நடத்திய உள்ளூர் சமூக ஆர்வலருடனான அனுபவத்தை இங்கே குறிப்பிடுவது பொருத்தமாக இருக்கும். நாங்கள் அங்கே செல்லும் முன்பே அவரை தொடர்பு கொண்டு, நிலம் கையகப்படுத்தலில் இன்றும் புகார்களை கொண்ட உள்ளூர் மக்கள் சிலருடன் தொடர்பை ஏற்படுத்தித் தருமாறு அவரை கேட்டிருந்தோம். ஆனால், அவரோ அதற்குப் பதிலாக எங்கள் உரையாடலை பதிவு செய்து அதானி நிறுவனத்தின் கார்ப்பரேட் அலுவலகத்திற்கு அனுப்பி விட்டார். அவர்களோ, நாங்கள் பேச வேண்டிய நபர்களாக அவர்களது சொந்த பட்டியலை தயார் செய்து வைத்திருந்தனர். மற்றொரு சமூக ஆர்வலரை அணுகிய போது அவர் நேர்காணல் தர விரும்பவில்லை. ஆனால், சில ஆவணங்களை பகிர்ந்து கொண்டார். அதானியை எதிர்த்தவர்களிடையே ஒருவித அச்ச உணர்வு குடிகொண்டிருப்பதை உணர முடிந்தது.

 

நரைன் காத்வி என்ற உள்ளூர் விவசாயி மட்டும் துணிச்சலாக, தெளிவாக விவசாயிகளின் உரிமைகளுக்காக பல ஆண்டுகளாக போராடிக் கொண்டிருக்கிறார். இன்றும் கூட அவர் நம்பிக்கையை இழக்கவில்லை. சிறப்புப் பொருளாதார மண்டலத்தில் இணைக்கப்பட்ட 19 கிராமங்களும் தங்களது கால்நடைகளுக்கு மேய்ச்சல் நிலங்களாக திகழ்ந்ததாக அவர் கூறுகிறார். 1960 மற்றும் 1970களில் அந்த நிலம் உள்ளூர்  நிர்வாகம் மற்றும் மாநில அரசால் அவர்களுக்குத் தரப்பட்டதாக கூறும் அவர், சிறப்புப் பொருளாதார மண்டலத்திற்கு அந்த நிலங்கள் யாவும் இழப்பீடு கூட தரப்படாமல் கையகப்படுத்தப்பட்டு விட்டதாக குமுறுகிறார்.

அவரது குற்றச்சாட்டை தனியாக உறுதிப்படுத்த முடியவில்லை. ஆனால் சமரச தொனியில், “சிறப்புப் பொருளாதார மண்டலத்தை உருவாக்கியவர் அதானி. ஏராளமான நிறுவனங்கள் அங்கு தொழில் தொடங்கியுள்ளன.அல்ட்ரா மெகா பவர் பிளான்ட் என்ற பெயரில் டாடாவுக்கு மிகப்பெரிய மின்உற்பத்தி நிலையமும் உள்ளது. நாங்கள் அந்த நிறுவனங்களுக்கு எதிரானவர்கள் அல்ல. எங்கள் கால்நடைகளுக்குத் தேவையான தீவனங்களை அரசோ அல்லது அதானியோ வழங்க வேண்டும் என்பதே எங்களின் ஒரே கோரிக்கை. இல்லாவிட்டால் எங்கள் நிலங்களை திருப்பித் தர வேண்டும். அல்லது எங்களுக்கு வேறொரு மேய்ச்சல் நிலத்தை அரசு தர வேண்டும்” என்று அவர் கூறுகிறார்.

முந்த்ரா துறைமுகமும், சிறப்புப் பொருளாதார மண்டலமும் இணைந்து இந்திய பொருளாதாரத்தின் முக்கிய ஆற்றல் மையமாக திகழ்கிறது என்பதில் சந்தேகமே  இல்லை. அவரது பால்ய நண்பர் கிரீஷ்பாயின் வார்த்தைகளில் சொல்வதென்றால், “அதானி தரிசு நிலத்தை வாங்கி சொர்க்கமாக மாற்றியிருக்கிறார்.”

மோதியின் நெருங்கிய நண்பர்களும், ஏகபோக முதலாளித்துவமும்

அதானி, அம்பானி ஆகியோருக்கு சாதகமாக, ஏகபோக முதலாளித்துவத்திற்கு ஆதரவாக மோதி செயல்படுவதாக ராகுல்காந்தி உள்பட பல எதிர்க்கட்சித் தலைவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். ஏகபோக முதலாளித்துவம் பற்றி விருப்பு வெறுப்பற்ற பார்வையை ஆர்.என்.பாஸ்கர் கொண்டிருக்கிறார்.

அவர் கூறுகிறார்:

"ஒரு மனிதனைப் பாதுகாக்க வளரும் பொருளாதாரங்கள் தானாகவே ஈர்க்கப்படுகின்றன. அரசியல்வாதிகள் மற்றும் தொழிலதிபர்கள்  இணைந்து பணியாற்றுகின்றனர். அதானிகள் அப்படித்தான் எழுந்தார்கள், அம்பானிகள் அப்படித்தான் எழுந்தார்கள். கடந்த காலத்தில் பிர்லாக்கள் இப்படித்தான் தோன்றினார்கள்."

இது உலகளாவிய நடைமுறை என்று அவர் நம்புகிறார். “நீங்கள் ஒரு அரசாக இருக்கும் பட்சத்தில், எந்த ஒரு தனிநபரும் மிதமிஞ்சியவராக உருவெடுக்காமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். அதேநேரத்தில், பெரும் தொழிலதிபர்கள் வீழ்ந்துவிடாமல் காக்கவும் வேண்டும். ஆனால், உலகம் முழுவதும் வளரும் நாடுகளில் ஒருசிலர் மிகப்பெரிய அளவில் உருவெடுக்கின்றனர். அமெரிக்காவில் ராக்பெல்லரை எடுத்துக் கொண்டால், ஒரு காலத்தில் அமெரிக்காவின் ஒட்டுமொத்த எண்ணெய் வர்த்தகமும் அவர் வசமே இருந்தது. வர்த்தக ஏகபோகத்தை தடுக்கும் குழுக்கள் வர 20 ஆண்டுகள் பிடித்தன. அதன் பிறகு அவரது நிறுவனம் 34 சிறுசிறு நிறுவனங்களாக பிரிக்கப்பட்ட போதிலும் அவை அனைத்துமே வளம் கொழிப்பவையாகவே இருந்தன. அமெரிக்காவில் தண்டவாளங்களை அமைத்து உரிமையாக்கி வைத்திருந்த தொழிலதிபர்களைப் பாருங்கள். அதற்கான அனைத்து சலுகைகளும் ஒரே ஒரு நபரைச் சென்றடைந்தன. ஏன்? நிலையான வட்டி வீதத்துடன் வெளிநாட்டு நாணய பரிமாற்றத்தில் ஏகபோகம் செலுத்தும் ரோத்ஷில்டைப் பாருங்கள்,” என்று அவர் சுட்டிக்காட்டுகிறார்.

அதானியை ஆதரிக்கும் அவரது நண்பர்கள், டாடா, பிர்லா, பஜாஜ் போன்ற சில குறிப்பிட்ட தொழில் நிறுவனங்களுக்கு முன்னாள் பிரதமர் நேரு சாதகமாக செயல்பட்டதாக கூறுகின்றனர். அது ஏகபோக முதலாளித்துவம் இல்லையா? என்று அவர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.

அதானி குழுமத்தின் மாபெரும் சக்தி தடுத்து நிறுத்த முடியாதது என்பதில் இன்று சந்தேகம் இல்லை. இந்தியாவில் ஏராளமான உள்கட்டமைப்பு மேம்பாட்டுப் பணிகள் அவரது வசம் உள்ளன. ஏராளமான எரிவாயு மற்றும் மின்சக்தி விநியோகப் பணிகளை அவரது நிறுவனங்களே செய்கின்றன. இது ஒரு தொடக்கமே என்று பலரும் நம்புகின்றனர். இந்தியாவின் உள்கட்டமைப்பு மேம்பாட்டிற்கான சாத்தியங்கள் மிகப்பெரியவை. உலக வங்கியின் சமீபத்திய அறிக்கைப் படி, இந்தியா வேகமாக வளரும் நகர மக்கள் தொகையின் தேவைகளை பூர்த்தி செய்ய 2036 வரை ஆண்டுதோறும் 55 பில்லியன் அமெரிக்க டாலர் அளவுக்கு நகர உள்கட்டமைப்பு மேம்பாட்டிற்கு செலவிட வேண்டியிருக்கும் என்று கூறப்பட்டுள்ளது.

இந்தியாவில் தனியார் முதலீடு என்பது மிகவும் தேவையான ஒன்றாக இருப்பதாக உலக வங்கியின் இந்தியப் பிரிவு இயக்குநர் அகஸ்டி தானோ குவாமே கூறுகிறார். “இந்திய நகரங்கள் பசுமை, திறன், நிலையான வளர்ச்சி இலக்குகள் கொண்ட நகரமாக்கல் ஆகியவற்றை செயல்படுத்த பெரிய அளவில் நிதி தேவைப்படுகிறது. மிகப்பெரிய, வேகமாக வளர வாய்ப்புள்ள நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் தனியார் மூலதனத்தை திரட்ட உகந்த சூழலை உருவாக்க வேண்டியது அவசியம். அதன் மூலமே, நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் அங்கே  வளர்ந்து வரும் மக்கள்தொகையின் வாழ்க்கைத் தரத்தை நிலையான முறையில் மேம்படுத்த முடியும்," என்பது அவரது கருத்து.

இந்நாள் வரை, பெரும்பாலான உள்கட்டமைப்பு திட்டங்களுக்கு மத்திய அரசு அல்லது மாநில அரசுகள் தான் நிதி அளிக்கின்றன. தனியார் முதலீடு என்பது 5 சதவீதத்தை தாண்டவில்லை. ஆகவே, பெரிய உள் கட்டமைப்பு திட்டங்களை வசப்படுத்த முடியும் என் நம்பிக்கை தனியார் முதலீட்டாளர்கள் மற்றும் தொழில் முனைவோரிடம் இருக்கிறது.

நாட்டின் செல்வத்தை உருவாக்கும் நபர்களுக்கு அதிக மரியாதை தர வேண்டும், அவர்களின் மகத்தான சேவைகள் அங்கீகரிக்கப்பட வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோதி அடிக்கடி பொதுவெளியில் வேண்டுகோள் விடுத்துள்ளார். இதன் மூலம், மோதி தற்போதைய கொள்கைகளை தொடரப் போவதை உறுதிப்படுத்துகிறார். அதானிகளும் அம்பானிகளும் சில பெரிய தொழில் நிறுவனங்களுமே இதன் பயனாளிகளாக இருப்பார்கள் என்பது வெளிப்படை.

சில குறிப்பிட்ட நபர்கள் மட்டுமே செல்வந்தர்களாகி வருகிறார்கள் என்றே சாமானியர்கள் கருதுவதாகவும், அதில் தர்க்க ரீதியாக நியாயம் இருப்பதாகவும் அதானியின் நண்பர் கிரீஷ்பாய் கூறுகிறார். “ஆம். பணக்காரர் – ஏழை இடையே மிகப்பெரிய வித்தியாசம் இருக்கிறது. ஆனால், மோதி செய்வது சரிதான். வேலைவாய்ப்புகளை யாரால் தர முடியும்? உள்கட்டமைப்புகளை யாரால் உருவாக்க முடியும்? யாரை நம்பலாம்? என்று அவர் சிந்திக்கிறார்” என்கிறார் கிரீஷ்பாய்.

கௌதம் அதானியுடன் கிரீஷ்பாய் டேனி

கௌதம் அதானியுடன் கிரீஷ்பாய் டேனி

கௌதம் அதானியுடன் கிரீஷ்பாய் டேனி

கௌதம் அதானியுடன் கிரீஷ்பாய் டேனி

கௌதம் அதானியுடன் கிரீஷ்பாய் டேனி

கௌதம் அதானியுடன் கிரீஷ்பாய் டேனி

Item 1 of 3

கௌதம் அதானியுடன் கிரீஷ்பாய் டேனி

கௌதம் அதானியுடன் கிரீஷ்பாய் டேனி

கௌதம் அதானியுடன் கிரீஷ்பாய் டேனி

கௌதம் அதானியுடன் கிரீஷ்பாய் டேனி

கௌதம் அதானியுடன் கிரீஷ்பாய் டேனி

கௌதம் அதானியுடன் கிரீஷ்பாய் டேனி

பிரதமர் காட்டும் மரியாதை, ஒருசில தொழிலதிபர்களுக்கு மட்டுமே ஆனதாக இருக்கக் கூடாது என்று பாஸ்கர் விரும்புகிறார்.

அவர் கூறுகிறார்:

"இரண்டு விஷயங்களில் மோதியுடன் எனக்கு உடன்பாடு இல்லை. 2014ஆம் ஆண்டு முதல் இன்று வரை சுமார் 8 ஆண்டுகளில் 35,000 செல்வந்தர்கள் இந்தியாவை விட்டு வெளியேறியுள்ளனர். ஆகவே, அரசாங்கம் செய்யும் ஏதோ ஒன்று செல்வந்தர்களை நாட்டை விட்டு வெளியேறச் செய்கிறது. இந்தியாவில் வாழ வேண்டுமானால் நீங்கள் எஃகு போல உறுதியானவராக இருக்க வேண்டும். மேலும் கடந்த ஆண்டு மக்களவையில் அரசு அளித்த புள்ளிவிவரங்களை நீங்கள் பார்த்தால், ஒரே ஆண்டில் 1.6 லட்சம் இந்தியர்கள் பாஸ்போர்ட்டை ஒப்படைத்துள்ளனர். மக்கள் சொந்த நாட்டை விட்டு வெளியேறுவது ஏன்? சிறந்த வேலை வாய்ப்புகள், சிறந்த வணிகச் சூழல் போன்றவை இருந்தால் அவர்கள் வெளியேற மாட்டார்கள். அதற்கான வாய்ப்புகளை இந்தியா உருவாக்க வேண்டும். திறமைசாலிகளை நீங்கள் விரட்டியடிக்க முடியாது."

அதானி சாம்ராஜ்ஜியம் கடன் சுமையால் தத்தளிக்கிறதா?

நிறுவனங்கள் வாங்கியிருக்கும் கடன் ஆராயும் 'கிரெடிட் சைட்ஸ்' என்ற நிறு என்ற ஆராய்ச்சி நிறுவனம் ஆகஸ்ட் மாதம் ஒரு அறிக்கையை வெளியிட்டது. அதில் அதானி குழுமம் அதிகப்படியான கடன் வாங்கியிருப்பதாக தெரிவித்திருந்தது. அதே போல் வேறு பல அபாயகரமான தேர்வுகளையும் செய்திருப்பதாகக் கூறியிருந்தது. இது அதானி குழுமத்தின் பல நிறுவனங்களின் பங்குச் சந்தை மதிப்பை கீழே இறக்கியது என்றும் அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது. அதானி குழுமத்தின் நிறுவனங்கள் தொலைதொடர்பு, சிமெண்ட் மற்றும் நீண்டகால உட்கட்டமைப்பு திட்டங்களில் புதிய முதலீடுகளை செய்து கொண்டிருந்த ஒரு காலத்தில் இத்தகைய அறிக்கை வெளியானது. 

இந்த அறிக்கை இந்த அறிக்கையின்படி அதானி குழுமத்தின் நிறுவனங்கள் வாங்கியிருக்கும் கடன் அந்த குழுமத்தை மிகப்பெரிய ஆபத்தில் தள்ளும் வாய்ப்பிருப்பதாக கூறியிருந்தது. ஆனால் அதானி குழுமம் இந்த அறிக்கையை மறுத்தது. தாங்கள் தொடர்ந்து கடன்களை அடைத்து வருவதாகவும், கடந்த 9 வருடங்களில் தங்கள் கடன் விகிதம் 7.6 மடங்கிலிருந்து 3.2 மடங்காக குறைந்திருப்பதாக கூறியிருந்தனர்.

மார்ச் 2022-ல் அதானி குழுமத்தின் மொத்த கடன் 1.88 லட்சம் கோடி ரூபாயாக இருந்தது. 2015-16 ஆம் ஆண்டில் அதானி குழும நிறுவனங்களின் மொத்த கடனில் 55% பொதுத்துறை வங்கிகளிடமிருந்து பெறப்பட்டது. 2021-22 அதுவே 21 சதவீதமாக இருந்தது.

அதானியை விமர்சிப்பவர்கள் உள்பட குஜராத்தில் இருக்கும் பலரும் அதானி குழுமத்தின் அதிகப்படியான கடன்களை கண்டு வருத்தப்படுவதில்லை. குஜராத் மாநிலத்தில் தங்கள் சொந்த பணத்தை செலவு செய்து புதிய தொழில் துவங்கும் பழக்கமில்லை என்று மூத்த பத்திரிக்கையாளர் திலீப் பாடில் கூறுகிறார். 

அதானியின் கடன்களைப் பற்றிநாம் கவலைப்பட வேண்டியதில்லை என்று கிரீஷ் பாய் கூறுகிறார். "அவர் கடனை அடைக்காமல் இருந்ததே இல்லை. அவரது பங்குகளைப் பாருங்கள். மக்கள் அவரை நம்புவதால் அவரது பங்குகளை வாங்குகிறார்கள்," என்று கூறுகிறார்.  

கிரெடிட் சைட்ஸ் நிறுவன அறிக்கை அதானி குழுமத்தில் இருக்கும் வேறு ஒரு குறையையும் சுட்டிக்காட்டி அது கவலை கவலையளிக்கக்கூடிய விஷயம் என்று தெரிவித்திருந்தது. கௌதம் அதானி இல்லாத சமயத்தில் குழுமத்தை நடத்தும் மூத்த நிர்வாகிகளின் திறன் போதுமானதாக இல்லை என்று குறிப்பிட்டிருந்தது. அதானியின் நெருங்கிய நண்பர்களே கூட அதானி குழுமம் ஒரு தனி நபரால் நடத்தப்படுவதாக தெரிவிக்கின்றனர். கௌதம் பாய் கூறுகிறார்: "இது ஒரு தனிமனிதனால் நடத்தப்படுகிறது. அவர் மட்டுமே முதலாளி. அவர் அறியாமல் அங்கு எதுவுமே நகராது. ஆனால் எத்தனை பெரிய பொறுப்புகள் இருந்தும் அவர் எப்போதும் அமைதியானவராகவே காட்சியளிக்கிறார்."

ஆற்றல் துறையில் அதானியின் முரண்பாடுகள்  

பூமி வெப்பமாதலைத் தடுக்கும் பொருட்டு பசுமை ஹைட்ரஜன், காற்றாலை டர்பைன்கள் மற்றும் சூரிய மின்சக்தி பேனல் உற்பத்திக்கு 70 பில்லியன் அமெரிக்க டாலர்களை முதலீடு செய்ய அதானி உறுதி அளித்துள்ளார். இது பாராட்டுக்குரியது என்று ஆய்வாளர்கள் கூறினாலும், சுற்றுச்சூழலை மாசுபடுத்தும் நிலக்கரியை அதிக அளவில் இறக்குமதி செய்யும் ஒருவர், சுற்றுச்சூழலை பேணுவதில் மிகப்பெரிய முதலீட்டாளராகப் போவதாக உறுதியளிப்பதை அவர்கள் முரண்பாடாக கருதுகின்றனர்.

ஆனாலும், புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் துறையில் 70 பில்லியன் டாலர் முதலீடு செய்வதாக அதானி அளித்துள்ள வாக்குறுதியை சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் வரவேற்றுள்ளனர்.

முந்த்ரா துறைமுகம் மற்றும் சிறப்புப் பொருளாதார மண்டலம் ஆகியவற்றில் சுற்றுச்சூழல் விதிமுறை மீறல்கள் குறித்து விசாரிக்க மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்தால் 2012-ல் அமைக்கப்பட்ட ஒரு குழு 2013 இல் அறிக்கை அளித்தது.

அதில், "முந்த்ராவில் அதானி துறைமுக திட்டமும், சிறப்புப் பொருளாதார மண்டலமும் சுற்றுச்சூழல் விதிகளுக்கு இணங்காமல் பல முறை மீறியதை அந்த அறிக்கை உறுதிப்படுத்தியது.

சில நேரங்களில் அதானி நிறுவனம் சுற்றுச்சூழல் நடைமுறைகளை புறக்கணித்திருப்பதாக அந்த அறிக்கை கூறுகிறது.

பிசினஸ் ஸ்டாண்டர்ட் (Business Standard) அறிக்கைப்படி, 2014ல் மோதி அரசு பதவியேற்றதும், முந்தைய மன்மோகன் அரசால் விதிக்கப்பட்டிருந்த ரூ.200 கோடி அபராதத்தை தள்ளுபடி செய்துவிட்டது. அத்துடன், மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் நிர்ணயித்திருந்த பல கடுமையான நிபந்தனைகளை தளர்த்தி, அதானி திட்டத்திற்கான சுற்றுச்சூழல் அனுமதியை ஆபத்தான வகையில் மோதி அரசு மேலும் நீட்டித்தது.

அதானியை நன்கு அறிந்த லச்சு பாய் மற்றும் கிரீஷ்பாய் ஆகியோர் பெருமளவில் முதலீடு செய்வதாக அதானி அளித்துள்ள உறுதிமொழியால் அவரது வணிக சாம்ராஜ்யம் மேலும் புதிய உச்சத்தை தொடும் என்று நம்புகிறார்கள். அதானியின் பயணம் எங்கே நிற்கும்? அதானி தனது சாம்ராஜ்யத்தை அடுத்த தலைமுறை கையகப்படுத்தும் வகையில் தயார் செய்திருப்பதாக அவர்கள் நம்புகிறார்கள்.

அதானியின் மூத்த மகன் கரண் சிமென்ட் வணிகத்தை கவனித்து வருகிறார், அதானி குழுமத்தை நடத்துவதில் அவரது இளைய மகன் ஜீத் ஆழ்ந்த ஈடுபாடு கொண்டுள்ளார். அவர்கள் தவிர, அதானி குழுமத்தில் ஒருங்கிணைந்த அங்கமாக இருக்கும் இரண்டாம் தலைமுறை உறவினர்களும் உள்ளனர். அதானியின் வளர்ச்சிக்கு காரணம் பிரதமர் மோதியோ அல்லது வேறு எந்த அரசியல்வாதியோ அல்ல என்று அவர்கள் இருவரும் உறுதிபடக் கூறுகின்றனர். இது கடவுள் வகுத்த விதி என்று அவர்கள் நம்புகின்றனர். ஆர்.என்.பாஸ்கரோ இதனை வித்தியசாமான கோணத்தில் நோக்குகிறார்.

“மனதளவில் தயாராக இருக்கும் நபர்களையே அதிர்ஷ்டம் சென்று சேர்கிறது” என்பது அவரது கருத்து.

பிபிசி செய்தியாளர்கள்: ஜூபைர் அகமது மற்றும் அர்ஜுன் பர்மர்
ஷார்ட்ஹேண்ட் தயாரிப்பு: ஷதாப் நஸ்மி
ஓவியங்கள்: புனீத்குமார் பர்னாலா
படங்கள்: Getty
பிரசுரிக்கப்பட்ட தேதி: 22 டிசம்பர் 2022