மாத்திரை அளவிலான கதிர்வீச்சு குடுவை மாயம் - கண்டுபிடிக்க முடியாமல் திணறல்

பட மூலாதாரம், DFES
- எழுதியவர், கேத்ரின் ஆர்ம்ஸ்ட்ராங்
- பதவி, பிபிசி நியூஸ்
மேற்கு ஆஸ்திரேலியாவில் கதிரியக்கப் பொருள் அடங்கிய சிறிய குடுவை காணாமல் போனதைத் தொடர்ந்து தேடுதல் வேட்டை நடைபெற்று வருகிறது.
காணாமல் போன குடுவையில், சிறிய அளவில் கதிரியக்கத்தை வெளிப்படுத்தும் சீசியம் -137 தனிமம் உள்ளது. இதை தொட்டால் கடுமையான நோயை ஏற்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதை பொதுமக்கள் பார்த்தால், விலகி இருக்கவேண்டும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்த கதிரியக்க பொருள், ஜனவரி மாதம் 10ஆம் தேதிக்கும் 16ஆம் தேதிக்கும் இடையே நியூமன் நகரத்திற்கும் பெர்த் நகரத்திற்கும் இடையே காணாமல் போனது. இந்த இரண்டு ஊர்களுக்குமான தூரம் சுமார் 1,400 கிலோ மீட்டர்.
பில்பாரா பிராந்தியத்தில் உள்ள நியூமனுக்கு வடக்கே உள்ள ஒரு சுரங்கத்தில் இருந்து பெர்த் நகரத்தின் வடகிழக்கு பகுதிக்கு ஒரு லாரியில் கொண்டு செல்லப்பட்டபோது இது தவறிவிட்டது.
சீசியம்-137 என்பது சுரங்க நடவடிக்கைகளில் பொதுவாகப் பயன்படுத்தப்படும் ஒரு தனிமம் ஆகும்.
"காணாமல் போன குடுவையை அணு ஆயுதமாக பயன்படுத்த முடியாது. ஆனால் வெளியாகும் கதிர்வீச்சினால் காயங்கள் ஏற்படும் என்றும், புற்றுநோய் போன்ற பாதிப்புகளும் ஏற்படும்," என்று ஆஸ்திரேலிய தீயணைப்பு மற்றும் அவசர சேவைகள் துறை (DFES) தெரிவித்துள்ளது.

பட மூலாதாரம், Getty Images
இந்த பொருளால் "தேவையான தாக்கத்தை" ஏற்படுத்தும் அளவு கதிர்வீச்சை வெளிப்படுத்த முடியும் என்று, தலைமை சுகாதார அதிகாரியும் கதிரியக்க கவுன்சிலின் தலைவருமான டாக்டர் ஆண்ட்ரூ ராபர்ட்சன் கூறினார்.
"என்னவென்று தெரியாமல் யாராவது அதை எடுத்துக்கொள்வார்கள் என்பதே எங்கள் கவலை," என்று அவர் கூறினார்.
"அதை சுவாரசியமான ஒன்று என்று நினைத்து அதை வைத்துக்கொள்ள நேரிடலாம், அல்லது அதை தங்கள் அறையில், காரில் வைத்திருக்க நேரிடலாம் அல்லது வேறு யாரிடமாவது கொடுக்கவும் செய்துவிடுவார்கள்," என்று ராபர்ட்சன் கூறினார்.
காணாமல் போன கதிரியக்க குடுவை, சுமார் 6 மில்லி மீட்டர்- 8 மில்லி மீட்டர் அளவே இருக்கும். இதை விளக்கும் வகையில் ஒரு படத்தை ஆஸ்திரேலிய தீயணைப்பு மற்றும் அவசர சேவைகள் துறை வெளியிட்டுள்ளது.
இதைக் கண்டறியும் முயற்சியில், பயணம் தொடங்கி நிறைவடைந்த இடம் வரை தேடப்பட்டுள்ளது. ஆனால் 1400 கி.மீ தூரத்தில் இந்த சிறிய பொருளைத் தேடுவது கடற்கரை மணலில் ஊசியைத் தேடுவது போல என்பதால், தேடும் பகுதியின் அளவை சுருக்கும் முயற்சியில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். இதற்காக லாரி சென்ற சரியான பாதை மற்றும் நிறுத்திய இடங்களை கண்டறிந்து அங்கு தேடுதலை நடத்தி வருகின்றனர்.
இந்த பொருளைப் பார்க்கும் நபர்கள், ஆஸ்திரேலிய தீயணைப்பு மற்றும் அவசர சேவைகள் துறையை தொடர்பு கொள்ளும்படி அறிவுறுத்தப்பட்டு இருக்கின்றனர்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் டிவிட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












