அணுக்கரு இணைவு: உலகின் எரிசக்தி நெருக்கடிக்கு அறிவியல் தரும் தீர்வு

பட மூலாதாரம், Getty Images
சூரியனின் பிரகாசம் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக மனிதர்களுக்கு விந்தையாகவே உள்ளது.
ஆனால் சூரியனின் அபரிமிதமான ஆற்றலுக்குக் காரணம் அணுக்கரு இணைவு என்னும் அணுக்கரு வினை தான் என்று சுமார் நூறு ஆண்டுகளுக்கு முன்பு கண்டுபிடிக்கப்பட்டது.
அதே மாதிரியான அணுக்கருப் பிணைப்பை பூமியில் செய்ய முடிந்தால், அது ஒரு புரட்சியாக இருக்கும். உலகெங்கிலும் உள்ள மக்கள் அபரிமிதமான ஆற்றலைப் பெற முடியும்.
கடந்த 100 ஆண்டுகளாக அணுக்கரு பிணைப்பு மூலம் மின்சாரம் உற்பத்தி செய்ய முயற்சிகள் நடைபெற்று வருகின்றன. ஏறக்குறைய ஐம்பது ஆண்டுகளாக, இந்த இலக்கு அடுத்த சில தசாப்தங்களில் அடையப்படும் என்று கூறப்பட்டு வருகிறது.
இந்த ஆண்டு பிப்ரவரியில், இங்கிலாந்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள் ஐந்து வினாடிகளுக்கு இதைச் செய்ய முடிந்ததாகக் கூறினர்.
இப்போது கேள்வி என்னவென்றால், உலகின் எரிசக்தி நெருக்கடிக்கு அணுக்கரு பிணைப்பு நிரந்தரத் தீர்வை அளிக்குமா?
இந்தக் கேள்விக்கான பதிலைப் பெற பிபிசி நான்கு வல்லுநர்களிடம் பேசியது.
அணுக்கரு இணைவு என்றால் என்ன?
எளிமையான சொற்களில் கூறினால், அணுக்கரு பிணைப்பு என்பது இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட அணுக்கருக்கள் இணையும் செயல்முறையாகும். இந்த செயல்பாட்டில் அதிக அளவு ஆற்றல் வெளியாகிறது.
"அதுதான் அணுக்கரு பிணைப்பில் நிகழ்கிறது. நாம் அணு கருக்களை எடுத்துக்கொண்டு, அவற்றை ஒன்றாக இணைக்கிறோம். இதனால், அவற்றிந் நிறை குறைந்து ஆற்றல் உருவாகிறது." என்கிறார் தென்கிழக்கு லூசியானா பல்கலைக்கழகத்தின் இயற்பியல் இணைப் பேராசிரியர் ரெட் ஆலன்.
இது ஒரு எளிய செயல்முறை போல் தெரிகிறது, நாம் ஏன் நீண்ட காலத்திற்கு முன்பு இதை முயற்சிக்கவில்லை? காரணம் இந்த செயல்முறையுடன் தொடர்புடைய சிக்கல்கள்.
அணுக்கள் நமது உலகின் மிகச்சிறிய பகுதி. அவை ஒன்றுடன் ஒன்று சேர்ந்து மூலக்கூறுகளை உருவாக்குகின்றன. எடுத்துக்காட்டாக, இரண்டு ஹைட்ரஜன் அணுவும் ஒரு ஆக்ஸிஜன் அணுவும் இணைந்து நீர் மூலக்கூறை உருவாக்குகின்றன. இந்த ஒரு மூலக்கூறு மூன்று அணுக்களால் ஆனது.
ஆனால் அணுக்கரு பிணைப்பில் இரண்டு அணுக்களை எடுத்துக்கொண்டு, ஒரு மூலக்கூறை உருவாக்க வேண்டியதில்லை, ஆனால் இரண்டையும் கலந்து ஒரு அணுவை உருவாக்குகிறீர்கள். மிகுந்த பலத்துடன் அருகில் கொண்டு வரும்போது, அவை இணைக்கப்படுகின்றன.
ரெட் ஆலன், இது குறித்து, "இந்தத் தொடர்பு மிகவும் வலுவானது. தூரம் மிகக் குறைவு. நீங்கள் இரண்டு புரோட்டான்களை ஒன்றுக்கொன்று மிக அருகில் கொண்டு வந்தால், ஒன்றையொன்று கவரும் அணுக்கரு விசை ஒன்றையொன்று எதிர்க்கும் மின் விசையைவிட, மிக அதிகமாக இருப்பதால் அவை இணைகின்றன." என்று விளக்குகிறார்.
இது நிகழும்போது, ஒரு பெரிய அளவு ஆற்றல் வெளியேறுகிறது. இதற்குப் பின்னால் உள்ள காரணத்தைப் பிரபலமான E = MC2 சூத்திரத்தின் மூலம் புரிந்து கொள்ளலாம்.

பட மூலாதாரம், Getty Images
1905 ஆம் ஆண்டில், ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் இந்த சமன்பாட்டை முன்வைத்து, நட்சத்திரங்கள் மற்றும் அணு வெடிப்புகளில் ஆற்றல் எவ்வாறு வெளிப்படுகிறது என்பதை விளக்கினார்.
இந்தச் சமன்பாடு அணுவின் நிறை குறைந்து ஆற்றலாக மாறுகிறது என்று கூறுகிறது.
ரெட் ஆலன் கூறுகிறார், "நான் குறைந்த நிறை கொண்ட அணுக்களை எடுத்து அவற்றை ஒன்றாக சேர்த்தால், விளைவுப் பொருளின் நிறை தொடக்கத்தில் இருந்ததை விட குறைவாக இருக்கும். அதைத்தான் நாம் அணுக்கரு பிணைப்பில் செய்கிறோம். ஆற்றல் பெறுவதற்கு அணுக்களை இணைக்கிறோம்."
தற்போதுள்ள அணுமின் நிலையங்கள் இந்த வழியில் அதாவது அணுகரு பிணைப்பு மூலம் ஆற்றல் பெறுவதில்லை. அணுக்கரு பிளப்பின் மூலமே ஆற்றலைப் பெறுகின்றன.
அணுக்கரு பிளப்பிலும் ஐன்ஸ்டின் சூத்திரம் பொருந்தும்.
அணு உலைகளில் நிகழும் அணுக்கரு பிளப்பு என்பது பிணைப்பைக் காட்டிலும் எளிது. ஆனால், பிளப்பிலும் சவால்கள் உண்டு.

பட மூலாதாரம், Getty Images
ரெட் ஆலன் விளக்குகிறார், "அணுக் கரு பிளப்பில் சில சிக்கல்கள் உள்ளன. தற்போதுள்ள அணுமின் நிலையங்கள் அவற்றிலிருந்து அதிக ஆற்றலைப் பெறுகின்றன. ஆனால் நீங்கள் அதிக நிறை கொண்ட அணுவை எடுத்து அதை உடைக்கும்போது, அதில் சில துண்டுகள் மிச்சம் ஆகும்.அவை கதிரியக்கம் மட்டுமல்ல, வேதியியல் ரீதியாகவும் செயல்படக்கூடியவை. அதைத்தான் நாம் அணுக்கழிவு என்று அழைக்கிறோம்."
அணுக்கரு பிணைப்பில் உள்ள மிகப்பெரிய சவால், இந்த செயல்முறையை தொடர்ந்து நிகழ்த்துவதுதான். இந்த நடைமுறையின் கழிவுகள் கரியக்கத்தன்மை அற்றவையாகவோ அல்லது குறைவான கதிரியக்கத் தன்மையுடனோ இருக்கும். பிணைப்புக்குத் தேவையான எரிபொருளும் எளிதில் கிடைக்கும்.
அணுக்கரு பிணைப்பு எங்கிருந்து தொடங்கியது என்பதை இப்போது புரிந்துகொள்வோம்.
நட்சத்திரங்களின் ஆற்றல்
1920 ஆம் ஆண்டில், பிரிட்டிஷ் வானியல் இயற்பியலாளர் ஆர்தர் எடிங்டன் கார்டிஃப் நகரில் சுமார் ஆயிரம் விஞ்ஞானிகள் முன்னிலையில் உரை நிகழ்த்தியபோது முற்றிலும் புதிய விஷயத்தைச் சொன்னார். அணுக்கரு பிணைப்பே சூரியனின் ஆற்றலுக்குக் காரணம் என்பதே அவர் கூறிய அந்த புதிய தகவல்.
பிரின்ஸ்டன் பிளாஸ்மா இயற்பியல் ஆய்வகத்தின் முதன்மை ஆராய்ச்சியாளரும், பிரின்ஸ்டன் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்தவருமான பாத்திமா இப்ராஹிமி அந்த உரை குறித்து விளக்குகிறார். "உடுக்களில் (நட்சத்திரங்களில்) உள்ள ஒளித் துகள்கள் ஒன்றோடொன்று தொடர்பு கொள்கின்றன என்பதை அவர் விளக்கினார். அணுக்கரு பிணைப்பு எதிர்வினை மூலம் அதிக ஆற்றலை உருவாக்க முடியும். 1920 களின் முற்பகுதியில் உடுக்கள் தங்கள் ஆற்றலை எவ்வாறு உருவாக்குகின்றன என்பது குறித்த தெளிவு கிடைத்தது."
சூரியனுக்குள் இருக்கும் ஹைட்ரஜன் அணுக்கள், ஹீலியம் என்ற புதிய தனிமத்தின் அணுக்களை உருவாக்கத் தேவையான வேகத்தில் மோதுகின்றன என்று ஆர்தர் எடிங்டன் கூறினார்.

பட மூலாதாரம், Getty Images
இந்தச் செயல்பாட்டில் சிதைவடையும் நிறை ஆற்றலாக மாற்றப்படுகிறது. சுமார் ஒரு தசாப்தத்திற்குப் பிறகு, பிரிட்டிஷ் விஞ்ஞானி எர்னஸ்ட் ரூதர்ஃபோர்ட் ஒரு ஆய்வகத்தில் சூரியனுக்குள் நடக்கும் வினையை நிகழ்த்திப் பார்க்க முயற்சி செய்தார். இதற்காக, டிரிடியம் மற்றும் டியூட்டீரியம் ஆகிய இரண்டு வகையான ஹைட்ரஜன் அணுக்களைப் பயன்படுத்தினார்.
பாத்திமா இப்ராஹிமி விளக்குகிறார், "பரிசோதனையின் போது அணுக்கரு பிணைப்பு நிரூபிக்கப்பட்டது. அவர் ஹைட்ரஜனின் கனமான மாதிரிகளைப் பயன்படுத்தினார். அவர் இந்த மாதிரிகளை மிகப்பெரிய ஆற்றலுடன் மோதவிட்டார். இப்படித்தான் இணைவு நடந்தது. அவரும் அவரது சகாக்களும் ஆய்வகத்தில் ஹீலியத்தைப் பயன்படுத்தி ஆற்றலை உருவாக்கினர்."
மக்கள் பயன்பாட்டிற்கு பிணைப்பு மூலம் ஆற்றலை உருவாக்குவதை யாரும் அப்போது நினைக்கவில்லை. ஆனால் 1950களில் சிந்தனை மாறியது.
"விஞ்ஞானிகள் பிணைப்பு எதிர்வினைகள் மூலம் ஆற்றலை உருவாக்குவது பற்றி சிந்திக்கத் தொடங்கினர். அது ஒரு உற்சாகமான நேரம். 1950 மற்றும் 1960 களில், பிணைப்பு குறித்த முன்னேற்றம் வேகமாக நிகழ்ந்தது." என்கிறார் பாத்திமா.
இந்த செயல்முறையில் இரண்டு பகுதிகள் உள்ளன. இயந்திரத்தை வடிவமைப்பது மற்றும் இணைவதற்கு ஹைட்ரஜன் பிளாஸ்மாவைத் தயாரிப்பது.
பிளாஸ்மா என்பது ஹைட்ரஜன் அணுக்களின் கலவையாகும். அணு உலைக்குள் அவை பெருமளவில் வெப்பமடைந்து எங்கும் சிதறிக் கிடக்கின்றன. அணுக்கள் ஒன்றையொன்று விட்டு ஓடுவதில்லை. மோதுகின்றன. அவை உருகுவதற்கும் ஆற்றலைப் பெறுவதற்கும், சாதனத்தின் மீது முழுமையான கட்டுப்பாட்டைக் கொண்டிருப்பது அவசியம்.
இதைச் செய்யும் முறை என்னவென்றால், பெரிய காந்தங்களின் உதவியுடன் அணுக்களுக்கு திசையை அளித்து, அவற்றை ஒரு வளையத்தில் வேகமாகச் சுழல வைப்பதாகும். 1950 ஆம் ஆண்டில், அப்போதைய சோவியத் யூனியனைச் சேர்ந்த இரண்டு விஞ்ஞானிகள், ஆண்ட்ரி சகாரோவ் மற்றும் இகோர் டாம் ஆகியோர் இதே போன்ற விளைவுகளைத் தரும் வடிவமைப்பை உருவாக்கினர். அதற்கு டோகோமாக் என்று பெயரிடப்பட்டது.
ஃபாத்திமா இப்ராஹிமி விளக்குகிறார், "காந்தத்தைப் பயன்படுத்தி இணைவு செய்யலாம் என்று கூறி இந்தக் கோட்பாட்டை முன்வைத்தார். டோகோமாக் யோசனையின் கீழ், சூடான அயனியாக்கம் செய்யப்பட்ட வாயு பிளாஸ்மா இந்த வட்டத்தில் பிணைக்கப்படும் வகையில் ஒரு காந்த வட்டம் உருவாக்கப்படுகிறது."
டோகோமாக் அணுஉலையின் வடிவமைப்பு அணுக்கரு பிணைப்பு பற்றிய ஆராய்ச்சிக்கு அடிப்படையாக அமைந்தது.

பட மூலாதாரம், ITER
ஐந்து கோடி டிகிரி வெப்பநிலை
பிரான்சின் தென்பகுதியில் உலகின் முதல் அணுக்கரு பிணைப்பு மின் நிலையம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதற்கு சர்வதேச தெர்மோநியூக்ளியர் பரிசோதனை உலை என்று பெயரிடப்பட்டுள்ளது. முப்பதுக்கும் மேற்பட்ட நாடுகள் இதுவரை சுமார் 20 பில்லியன் யூரோக்களை இதில் முதலீடு செய்துள்ளன.
"இது ஒரு மிகப்பெரிய திட்டம். உலகின் அனைத்து பெரிய நாடுகளும் இதில் முதலீடு செய்துள்ளன. இதற்குத் தேவைப்படும் ஆற்றலைவிட பல மடங்கு அதிக ஆற்றல் இதன் விளைவாகக் கிடைப்பதை உறுதி செய்யும் முதல் திட்டம் இது. நாம் ஆற்றலைப் பயன்படுத்துகிறோம், அதை விட அதிகமாகப் பெறுகிறோம். வெளியிடப்படும் ஆற்றலின் அளவு 10 மடங்கு இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது," என்று அணுசக்தி எதிர்காலத்திற்கான முனைவர் பயிற்சி மையத்தின் இயக்குனர் மார்க் வெய்ன்மேன் கூறுகிறார்,
இது மிகவும் சிக்கலான திட்டம். இதில் கோடிக்கணக்கான பகுதிகள் உள்ளன. இது டோகோமாக் வடிவமைப்பை அடிப்படையாகக் கொண்டது.
பிளாஸ்மா ஒரு வெற்றிட பாத்திரத்தில் இருக்கிறது என்று மார்க் விளக்குகிறார். அது ஒரு டோனட் வடிவத்தில் இருக்கிறது. அதைச் சுற்றி ஒரு சிறப்பு செயல்முறை மூலம் குளிர்ச்சியூட்டப்பட்ட ஒரு பெரிய காந்தம் உள்ளது.
ஹைட்ரஜன் பிளாஸ்மாவை 50 மில்லியன் டிகிரி சென்டிகிரேட் வெப்பநிலையில் வைத்திருக்க வேண்டும். இது சூரியனின் வெப்பநிலையை விட பத்து மடங்கு அதிகம்.
சூடுபடுத்தும் போது, வாயு மற்றும் ஜெல்லி போன்றவை உருவாகும் என்று மார்க் விளக்குகிறார். அங்கு அணுக்கள் இல்லை. நேர்மறையாக சார்ஜ் செய்யப்பட்ட மையம் மற்றும் எதிர்மறையாக சார்ஜ் செய்யப்பட்ட எலக்ட்ரான்கள் உள்ளன. இது டோனட் வடிவத்தில் சூப் போன்ற நீர்மமாகத் தொடங்குகிறது. ஹைட்ரஜன் அணுக்கள் மோதி ஹீலியத்தை உருவாக்குகின்றன.
"இதன் கீழே ஒரு டைவர்ட்டர் உள்ளது. இது காரின் எக்ஸாஸ்டர் போன்றது. காரில் எரிபொருளை எரிப்பது போல் பிளாஸ்மாவை எரிக்கிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம், பிறகு சில துணைப் பொருட்கள் வெளிவரும். இவற்றில் ஒன்று ஹீலியம் அணுக்கள். நாம் அவற்றை வெளியே எடுக்க வேண்டும். இல்லையெனில் அவை பிளாஸ்மாவை மாசுபடுத்தி, முழு செயல்முறையையும் நிறுத்திவிடும்." என்று மார்க் வெய்ன்மேன் விளக்குகிறார்.

பட மூலாதாரம், JET/UKAEA
அணுஉலைக்குள் இணைப்பைத் தொடரத் தேவைப்படும் வெப்பநிலை பல பிரச்சனைகளுக்குக் காரணமாகிறது. ஆனால் இந்த வழியில் பெறப்பட்ட அணுசக்தி நன்மைகளையும் கொண்டுள்ளது.
மார்க் வெய்ன்மேன், "ஒருமுறை நீங்கள் அதை இயக்கிவிட்டால் பிறகு அது தற்சார்புடன் இயங்கும். அணுஉலையில் எரிபொருளைச் சேர்த்துக் கொண்டே இருக்க வேண்டும். பிளாஸ்மா காந்தத்தால் சூழப்பட்டிருப்பதை உறுதி செய்ய வேண்டும்." என்று விவரிக்கிறார்.
பிளாஸ்மாவை சூடாகவும் மற்ற அனைத்தையும் குளிர்ச்சியாகவும் வைத்திருக்க தேவையான ஆற்றலைப் பெற நாம் இன்னும் வெகு தொலைவு செல்ல வேண்டியுள்ளது என்று மார்க் கூறுகிறார்.
மேலும் அவர், "உண்மையில், எதிர்காலத்தில் அணுமின் நிலையங்களுக்கு இயந்திரத் திறன் முக்கியமாக இருக்கும். நாம் 10 மடங்கு அல்லது அதற்கு மேற்பட்ட ஆற்றலைப் பெற விரும்பினால், செயல்முறை தொடர்வது முக்கியம். இதற்கு நாம் சிறிது ஆற்றலைத் திரும்பச் செலுத்த வேண்டியிருக்கும். அதற்குப் பிறகும், நமக்கு போதுமான ஆற்றல் இருக்க வேண்டும். அதை டர்பைன் கொண்டு, மின்சாரமாக மாற்றலாம். இதில் பொறியியலுடன் பொருளாதாரமும் சம்பந்தப்பட்டிருக்கிறது.
பிரிட்டனில் சமீபத்தில் நடந்த ஒரு பரிசோதனையில், ஐந்து வினாடிகள் மட்டுமே இந்த இணைவு நீடித்தது. அங்கு பயன்படுத்தப்படும் ஆற்றலில் மூன்றில் இரண்டு பங்கு மட்டுமே வெளியே வந்தது. உலையை உருவாக்க நாம் எதைப் பயன்படுத்துகிறோமோ, அதைப்பொருத்துத் தான், அதன் உள்ளே இருக்கும் வெப்பம் எவ்வாறு பராமரிக்கப்படும் என்பதும் தீர்மானிக்கப்படுகிறது.

பட மூலாதாரம், ITER
மூலப்பொருட்களில் உள்ள சவால்கள்
ஷெஃபீல்ட் பல்கலைக் கழகத்தின் மூத்த விரிவுரையாளர் டாக்டர். ஏமி காண்டி, "இணைப்பு தொழில்நுட்பம் மற்றும் பிணைப்பு ஆற்றல் ஆகியவை உலகிற்கு நல்ல அளவிலான ஆற்றலை வழங்க முடியும் என்று நான் நினைக்கிறேன். அதுவும் கார்பன் டை ஆக்சைடு மற்றும் அணு கதிரியக்கக் கழிவுகளை உற்பத்தி செய்யாமல். இதை நிரூபிக்க முடியும். புவிக்கோளை காப்பாற்றும் திசையில் புதிய சகாப்தம் படைக்கப்படலாம்." என்று அவர் நம்பிக்கை தெரிவிக்கிறார்.
அணுக்கரு இணைவு அணு உலை உள்ளே இருக்கும் கடும் வெப்பத்தைத் தாங்கி நீண்ட நேரம் வேலை செய்யும் ஒரு பொருளை உருவாக்கத் தனது துறை மூலம் ஆய்வு செய்து வருவதாக அவர் கூறுகிறார்.
மேலும் அவர், " அணுக்கரு இணைவு சாதனத்தில் பல்வேறு பொருட்களை வைக்கலாம், அந்த சாதனம் வாழ்நாள் முழுவதும் செலவின்றச் செயல்பட முடியும் என்ற நிலையை எட்டும் வகையில் மூலப்பொருள் ஒரே நிலையில் அதிக நேரம் நீடிக்கும் வகையில் ஒரு செயல்முறைக்கு முயன்று வருகிறோம்." என்று அவர் கூறுகிறார்.
உலைகளில் எரிபொருளாகப் பயன்படுத்தப்படும் ஹைட்ரஜன் வகைகளில் ஒன்று டிரிடியம். அதன் கிடைத்தற்கரிய வகை.
ஆனால் இணைவு உலைகளில் மற்றொரு வகை ஹைட்ரஜன் பயன்படுத்தப்படுகிறது. இது டியூட்டிரியம். இது குறித்து ஒரு நல்ல செய்தி உள்ளது.
"டியூட்டீரியம் எளிதில் கிடைக்கிறது. கடல் நீரில் இருந்து டியூட்டீரியத்தை எடுக்கும் தொழில்நுட்பத்தில் நாங்கள் ஏற்கனவே பணியாற்றி வருகிறோம். விஞ்ஞானிகள் மற்றும் பொறியாளர்கள் இதைப் பயன்படுத்துகின்றனர். இது மருத்துவ சாதனங்களிலும் பயன்படுத்தப்படுகிறது. அதன் செயல்முறை நன்கு அறியப்பட்டதாகும்." என்று டாக்டர் ஏமி காண்டி கூறுகிறார்.
ஆனால் அணுக்கரு பிணைப்பு செய்விப்பது கடினம். பிரிட்டனில் உள்ள பிணைப்பு உலை ஐந்து வினாடிகள் மட்டுமே நீடித்தது. ஆனால் பிரெஞ்சு அணுஉலையின் வடிவமைப்பில் குறிப்பிடத்தக்க முன்னேற்றங்கள் செய்யப்பட்டுள்ளன என்று ஏமி குறிப்பிடுகிறார்.
"அவர்கள் எளிய தாமிரத்தால் செய்யப்பட்ட காந்தத்தைப் பயன்படுத்தியதால், ஐந்து வினாடிகள் மட்டுமே நீடிக்க முடிந்தது. ஐந்து வினாடிகளுக்குப் பிறகு அது மிகவும் சூடாகிவிட்டது. எதிர்கால இணைவு சாதனங்களில் மிகை கடத்தி காந்தங்கள் பயன்படுத்தப்படும். இது காந்த சக்தியை அதிகரிக்கிறது. அதனால், முந்நூறு முதல் ஐந்நூறு நொடிகள் வரை அணுக்கரு பிணைப்பு செய்விப்பது சாத்தியமாகும்."
500 வினாடிகள் ஒரு குறுகிய காலம் போல் தோன்றலாம். ஆனால் அணு இயற்பியலில் இது ஒரு கணிசமான நேரம். பிணைப்பு மூலம் ஆற்றலைப் பெறும் திசையில் இது ஒரு பெரிய திருப்புமுனையாகும்.
மீண்டும் அதே கேள்வி எழுகிறது. உலகின் எரிசக்தி நெருக்கடிக்கு அணுக்கரு பிணைப்பு நிரந்தரத் தீர்வை அளிக்குமா?
இந்தப் பாதையில் இன்னும் பல தடைகள் உள்ளன, அவை கடக்கப்பட வேண்டும். சிக்கல்கள் வடிவமைப்பு தொடர்பானவை. அதிக வெப்பநிலையைத் தாங்கிக்கொண்டு தொடர்ந்து பிணைப்பு செயல்முறையைத் தொடரக்கூடியதாக இருக்க வேண்டும்.
நவீன தொழில்நுட்பம் இந்த சிக்கல்களைத் தீர்ப்பதற்கு மிகவும் நெருக்கமாக இருப்பதாகத் தெரிகிறது, ஆனால் பிரான்சின் உலை இன்னும் முழுமையாகத் தயாராகவில்லை என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்.
இது பலனளிக்கும் போது, மக்களுக்கு வழங்குவதற்காக எரிசக்தியை உற்பத்தி செய்யும் நோக்கத்திற்காக மேலும் சில அணு உலைகள் கட்டப்பட வேண்டும்.
அதுவரை, நிலக்கரி மற்றும் எண்ணெய் போன்ற மூலங்களிலிருந்து ஆற்றலைப் பெறும்போது கார்பன் உமிழ்வைக் குறைக்க வேண்டியதன் அவசியத்தைப் பற்றிய கவலைகள் இருக்கும்.
ஆனால் இந்த நூற்றாண்டின் இரண்டாம் பாதியில் ஆற்றல் உற்பத்தியில் புதிய சகாப்தம் தொடங்கும் என்ற உண்மையான நம்பிக்கை இன்னும் இருப்பதாகத் தெரிகிறது. நமது பல பிரச்சனைகளை அது நிரந்தரமாகத் தீர்க்கும்.
இந்தக் கட்டுரையில் Google YouTube வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Google YouTube குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
YouTube பதிவின் முடிவு
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்













