நாசாவின் ஜேம்ஸ்வெப் தொலைநோக்கி படம் பிடித்த பூமியை விட இளமையான புறக்கோள்

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், க. சுபகுணம்
- பதவி, பிபிசி தமிழ்
வானியலாளர்கள், நாசாவின் ஜேம்ஸ் வெப் விண்வெளி தொலைநோக்கியைப் பயன்படுத்தி, சூரிய மண்டலத்திற்கு வெளியே இருக்கும் ஒரு புறக்கோளுடைய ஒளிப்படத்தை எடுத்துள்ளனர்.
"இந்த புறக்கோள் ஒரு ராட்சத வாயு கிரகமாக உள்ளது. இதில் பாறைகளைக் கொண்ட மேற்பரப்பே இல்லை. ஆகையால் இதில் உயிர்கள் வாழ முடியாது," என்று நாசா குறிப்பிட்டுள்ளது.
ஜேம்ஸ் வெப்பின் சக்தி வாய்ந்த அகச்சிவப்பு கதிர் பயன்பாடு மூலமாக நான்கு வெவ்வேறு ஒளி ஃபில்டர்களில் எடுக்கப்பட்ட படங்கள், நம் சூரிய மண்டலத்திற்கு வெளியே உள்ள கோள்களை எப்படி எளிதாகப் படமெடுக்க முடியும் என்பதைக் காட்டுகிறது. இது புறக்கோளைப் பற்றி முன்பு கிடைத்ததை விட அதிகமான தகவல்களை வெளிக்கொண்டு வரக்கூடிய வாய்ப்புகளுக்கு வழி காட்டுகிறது.


புறக்கோள்
நம் சூரியன் ஒரு விண்மீன், அதைச் சுற்றித்தான் பூமி உட்பட 8 கோள்களும் சுற்றுகின்றன. நம்முடைய பால்வெளி மண்டலத்தில் மட்டும் இதுபோல் சுமார் பத்தாயிரம் கோடி விண்மீன்கள் உள்ளன. நம்முடைய உடுத்திரள் (Galaxy) போலவே 20,000 கோடி உடுத்திரள்கள் நம் பார்வைக்கு உட்பட்ட பேரண்டத்தில் உள்ளதாக மதிப்பிட்டுள்ளார்கள்.
அவை அனைத்திலுமே நம் சூரியனை போன்ற விண்மீன்கள் உள்ளன. அவற்றையும் கோள்கள் சுற்றுகின்றன. சூரியனைத் தவிர மற்ற விண்மீன்களைச் சுற்றும் கோள்கள், அதாவது சூரிய மண்டலத்திற்கு வெளியே உள்ள கோள்கள், புறக்கோள்கள்(Exoplanets) என்று அழைக்கப்படுகின்றன. நாசா இதுவரை 5,084 புறக்கோள்களை இனம் கண்டு உறுதி செய்துள்ளது.

"இது ஜேம்ஸ் வெப் திட்டத்திற்கு மட்டுமல்ல, பொதுவாக வானியலுக்கே ஒரு மாற்றத்தைத் தரக்கூடிய தருணம்" என்று பிரிட்டனிலுள்ள எக்ஸெடெர் பல்கலைக்கழகத்தின் இயற்பியல் மற்றும் வானியல் இணை பேராசிரியரான சாஷா ஹிங்க்லி கூறியுள்ளதாக நாசா தெரிவிக்கிறது. ஐரோப்பிய விண்வெளி ஆய்வு நிறுவனம், கனடிய விண்வெளி ஆய்வு நிறுவனம் ஆகியவற்றுடன் இணைந்து நாசா வழிநடத்திவரும் ஒரு சர்வதேச திட்டம் தான் ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி.
ஜேம்ஸ் வெப்பின் ஒளிப்படத்திலுள்ள எச்ஐபி 65426 பி (HIP 65426 b) எனப்படும் புறக்கோள், வியாழன் கோளை விட ஆறு முதல் 12 மடங்கு அதிக நிறையைக் கொண்டது. இந்த அவதானிப்புகள் அதை இன்னும் தெளிவாகப் புரிந்துகொள்ள உதவும். நம்முடைய பூமி 4.5 பில்லியன் ஆண்டுகள் பழைமையானது. பூமியைப் போன்ற கோள்களோடு ஒப்பிடும்போது, இப்போது கண்டறியப்பட்டுள்ள புறக்கோள் 15 முதல் 20 மில்லியன் ஆண்டுகளே பழமையானது. ஆம், அது பூமியை விட இளமையானது.
சிலியில் உள்ள ஐரோப்பிய தெற்கு ஆய்வகத்தில் உள்ள மிகப்பெரிய தொலைநோக்கியில் ஸ்பியர் (SPHERE) கருவியைப் பயன்படுத்தி வானியலாளர்கள் 2017-இல் இந்த புறக்கோளைக் கண்டுபிடித்தனர். ஒளியின் குறுகிய அகச்சிவப்பு அலைநீளத்தைப் பயன்படுத்தி அதன் படங்களை எடுத்தார்கள். ஆனால் இப்போது ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி, அதன் நீண்ட அகச்சிவப்பு அலைநீளத்தைப் பயன்படுத்தி எடுத்த ஒளிப்படங்கள் புதிய விவரங்களை வெளிப்படுத்துகிறது. வளிமண்டலத்தில் உள்ள அகச்சிவப்பு ஒளி காரணமாக, பூமியில் அமைந்திருக்கும் தொலைநோக்கிகளால் ஜேம்ஸ் வெப், ஹப்பிள் ஸ்பேஸ் போன்ற விண்வெளி தொலைநோக்கிகள் அளவுக்குத் தெளிவாக விவரங்களைக் காட்டும் ஒளிப்படங்களை எடுக்க முடியாது.


பட மூலாதாரம், NASA
- இந்த ஒளிப்படம் ஜேம்ஸ் வெப் விண்வெளி தொலைநோக்கியில் எடுக்கப்பட்டது. அதன் அகச்சிவப்பு ஒளியின் வெவ்வேறு ஒளிப்பட்டைகளில் எச்ஐபி 65426 பி புறக்கோளை காட்டுகிறது.
- ஊதா நிற படம், அண்மை அகச்சிவப்பு கேமராவில் 3.00 மைக்ரோமீட்டர் அலைநீளத்தில் எடுக்கப்பட்டதைக் காட்டுகிறது. நீல நிற படம், அண்மை அகச்சிவப்பு கேமராவில் 4.44 மைக்ரோமீட்டரில் எடுக்கப்பட்டதைக் காட்டுகிறது.
- மஞ்சள் நிற படம் இடைதூர அகச்சிவப்புக் கருவியில் 11.4 மைக்ரோமீட்டரில் எடுக்கப்பட்டதையும் சிவப்பு நிற படம், இடைதூர அகச்சிவப்பு கருவியில் 15.5 மைக்ரோமீட்டரில் எடுக்கப்பட்டதையும் காட்டுகின்றன.
- வெப் தொலைநோக்கியின் வெவ்வேறு கருவிகளுடைய, ஒளியைப் பதிவு செய்யும் வெவ்வேறு வழிகள் காரணமாக, இந்தப் படங்கள் ஒவ்வொன்றும் வித்தியாசமாகத் தெரிகின்றன. அதன் ஒவ்வொரு கருவியிலும் உள்ள கரோனாகிராஃப் (coronagraph) எனப்படும் ஒளியைத் தடுக்கும் மூடிகளின் தொகுப்பு, புறக்கோளை பார்க்க ஏதுவாக விண்மீனின் ஒளியைத் தடுக்கிறது. ஒவ்வோர் ஒளிப்படத்திலும் இருக்கின்ற சிறு வெள்ளை நட்சத்திரம், புறக்கோள் சுற்றும் விண்மீன் அமைந்துள்ள இடத்தைக் குறிக்கிறது.

இந்த தரவுகள் இன்னும் மதிப்பாய்வு செய்யப்படவில்லை. வானியல் ஆய்வாளர்கள், இந்தத் தரவுகளைப் பகுப்பாய்வு செய்து ஆய்வுக் கட்டுரையைத் தயார் செய்து கொண்டிருக்கிறார்கள். பிறகு, அதை ஆய்விதழுக்கு மதிப்பாய்வுக்காக அனுப்புவார்கள். ஆனால், வெப் தொலைநோக்கி முதன்முதலாக ஒரு தொலைதூர புறக்கோளைப் படம் எடுத்திருப்பது, அத்தகைய இன்னும் பல தொலைதூர புறக்கோள்களை ஆய்வு செய்வதற்கான எதிர்கால சாத்தியக்கூறுகள் உள்ளதைக் காட்டுகிறது.
பூமிக்கும் சூரியனுக்கும் இடையே இருக்கும் தொலைவைவிட 100 மடங்கு அதிக தொலைவு எச்ஐபி 65426 பி (HIP 65426 b) என்ற புறக்கோளுக்கும் அது சுற்றி வரும் விண்மீனுக்கும் இடையே இருக்கிறது. ஆகையால், ஜேம்ஸ் வெப் ஒளிப்படத்தில் விண்மீனையும் அதைச் சுற்றிவரும் இந்தப் புறக்கோளையும் எளிதாகப் பிரித்து அடையாளப்படுத்த வானியலாளர்களால் முடிந்துள்ளது.
ஜேம்ஸ் வெப் தொலைநோக்கியிலுள்ள அண்மை அகச்சிவப்பு கேமரா (NIRCam) மற்றும் இடைதூர அகச்சிவப்பு கருவி (MIRI) ஆகிய இரண்டுமே நம்முடைய விண்மீனான சூரியனின் ஒளியைத் தடுக்கும் சிறிய மூடிகளின் தொகுப்பைக் கொண்டுள்ளன. எச்ஐபி 65426 பி போன்ற சில புறக்கோள்களின் நேரடி ஒளிப்படங்களை வெப் தொலைநோக்கி பதிவு செய்ய இது உதவுகிறது. நாசாவின் நான்சி கிரேஸ் ரோமன் விண்வெளி தொலைநோக்கியை, 2027ஆம் ஆண்டு விண்ணில் ஏவத் திட்டமிடப்பட்டுள்ளது. இது இன்னும் மேம்பட்ட கரோனாகிராஃப் விண்மீன் ஒளிதடுப்பு மூடிகளைக் கொண்டிருக்கும்.

அண்மை அகச்சிவப்பு கேமரா (Near Infrared Camera, NIRCam)
ஜேம்ஸ் வெப் தொலைநோக்கியின் முதன்மையான படமெடுக்கும் கருவி. இதன் அகச்சிவப்பு அலைநீள வரம்பு, 0.6 முதல் 5 மைக்ரான். இதில், அண்மை அகச்சிவப்பு கேமராவில், ஒளி தடுப்பு மூடிகளான கரோனா கிராஃப்கள் பொருத்தப்பட்டுள்ளது. இந்தக் கருவி, சூரிய மண்டலத்தைப் போன்ற பிற விண்மீன் மண்டலங்களின் மையத்திலுள்ள பிரகாசமான விண்மீனின் ஒளி படர்ந்திருக்கும் பகுதியைச் சுற்றி அமைந்துள்ள மங்கலான பொருட்களின் படங்களை அண்மை அகச்சிவப்பு கேமரா தெளிவாகப் பதிவு செய்ய உதவுகிறது.
இடைதூர அகச்சிவப்புக் கருவி (Mid-Infrared Instrument, MIRI)
இது கேமரா மற்றும் ஸ்பெக்ட்ரோகிராஃப் எனப்படும் ஒளிப்படப் பொறி (ஒளியின் அலைநீளம் அல்லது அதிர்வெண்ணைப் பொருத்து பிரிக்கும் கருவி) ஆகியவற்றைக் கொண்டுள்ளது. இது மின்காந்த நிறமாலையின், அகச்சிவப்புப் பகுதியின் மையத்திலுள்ள மனித கண்கள் பார்ப்பதைவிட அதிக அலைநீளம் கொண்ட ஒளியைப் பதிவு செய்கிறது.
இடைதூர அகச்சிவப்புக் கருவி, 5 முதல் 28 மைக்ரான் வரையிலான அலைநீளம் கொண்ட ஒளியைப் பதிவு செய்கிறது. இதன் உணர்திறன் கண்டறியும் கருவிகள், தொலைதூர உடுத்திரள்கள், புதிதாக உருவாகும் விண்மீன்கள், மங்கலாகத் தெரியும் வால்விண்மீன்கள் ஆகியவற்றைப் பதிவு செய்ய உதவுகிறது.

"எச்ஐபி 65426 பி புறக்கோள் சுற்றி வரும் விண்மீனின் ஒளியைக் கட்டுப்படுத்த வெப் தொலைநோக்கியின் விண்மீன் ஒளிதடுப்பு மூடிகள் செயல்பட்ட விதம் வியக்க வைக்கும் வகையில் இருந்தது," என்று ஹின்க்லி கூறினார்.
கோள்களை விட அவை சுற்றி வரும் விண்மீன்கள் மிகவும் பிரகாசமாக இருப்பதால், புறக்கோள்களின் நேரடி ஒளிப்படங்களை எடுப்பது மிகவும் சவாலானது. எச்ஐபி 65426 பி புறக்கோள், அண்மை அகச்சிவப்பில், அதன் விண்மீனைவிட 10,000 மடங்கு மங்கலாக உள்ளது. மேலும், இடைதூர அகச்சிவப்புக் கதிர்களில் அதைவிடச் சற்று குறைவாக சில ஆயிரம் மடங்கு மங்கலாக உள்ளது.

பட மூலாதாரம், Getty Images
ஃபில்டர் செய்யப்பட்ட ஒவ்வொரு படத்திலும், புறக்கோள் சற்று வித்தியாசமான வடிவைக் கொண்ட ஒளிக்குமிழியாகத் தோன்றுகிறது.
"இந்த புறக்கோளின் ஒளிப்படங்களைப் பெறுவதை ஒரு விண்வெளிப் புதையலைத் தோண்டுவதைப் போல் உணர்ந்தேன். முதலில் நான் பார்த்ததெல்லாம் விண்மீனில் இருந்து வெளிப்பட்ட ஒளியை மட்டும் தான். ஆனால், கவனமாக ஒளிப்படத்தைப் பகுப்பாய்ந்ததன் மூலம், அந்த விண்மீன் ஒளியை நீக்கி புறக்கோளை வெளிப்படுத்த முடிந்தது," என்று ஒளிப்படங்களின் பகுப்பாய்வுக்கு தலைமை தாங்கிய சான்டா குரூஸில் உள்ள கலிஃபோர்னியா பல்கலைக்கழகத்தின் முதுகலை ஆய்வாளர் ஆரின் கார்ட்டர் கூறியதாக நாசா குறிப்பிட்டுள்ளது.
ஹப்பிள் ஸ்பேஸ் தொலைநோக்கியும் முன்பு புறக்கோள்களின் இத்தகைய தெளிவான படங்களை எடுத்துள்ளது. ஆகவே, விண்வெளியில் எடுக்கப்பட்ட புறக்கோளின் முதல் தெளிவான படம் என்று இதைக் குறிப்பிட முடியாது. இருப்பினும் ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி, புறக்கோள் ஆய்வுகளில் முன்னோக்கிச் செல்வதற்கான வழியை எச்ஐபி 65426 பி காட்டுகிறது.
இதில் நாம் கவனிக்கத்தக்க ஓர் அம்சம் உண்டு. ஜேம்ஸ் வெப் அதன் தேடுதலை இப்போது தான் தொடங்கியது. ஆகவே, புறக்கோள்களின் பல படங்கள் இன்னும் வரவுள்ளன. அத்தகைய ஒளிப்படங்கள் புறக்கோள்களின் இயற்பியல், வேதியியல் கட்டமைப்பு, அவற்றின் உருவாக்கம் பற்றிய புரிதலை நாம் வடிவமைக்க உதவும். இன்னமும் அறியப்படாமல் உள்ள புறக்கோள்களை கண்டுபிடிக்கவும் கூட ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி நமக்கு உதவலாம்.
சமீபத்தில் கூட, வாஸ்ப்-39பி என்ற புறக்கோள் ஒன்றில் கரிம வாயு(CO2) இருப்பதற்கான தடயத்தை ஜேம்ஸ் வெப் கண்டுபிடித்தது. சூரிய குடும்பத்திற்கு வெளியே இருக்கும் ஒரு கோளில் கரிம வாயு இருப்பதற்கான முதல் தெளிவான ஆதாரம் ஜேம்ஸ் வெப் மூலம் கிடைத்தது. ஒருவேளை இந்தப் பேரண்டத்தில் உயிர்கள் வாழக்கூடிய மற்ற கோள்களுக்கான தேடலிலும்கூட ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி நமக்கு உதவலாம்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்













