ஜேம்ஸ் வெப் புதிய படங்கள்: நட்சத்திரங்களின் பிரசவ விடுதி, 5 உடுத்திரள்களின் அண்டவெளி நடனம்

பட மூலாதாரம், NASA/ESA/CSA/STScI
- எழுதியவர், ஜொனாதன் அமோஸ்
- பதவி, பிபிசி அறிவியல் செய்தியாளர்
இதுவரை இல்லாத தெளிவோடும், ஆழத்தோடும் கூடிய ஒரு விண்வெளிப் படம் ஒன்றை ஜேம்ஸ் வெப் விண்வெளி தொலைநோக்கி திங்கள் கிழமை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியது.
4.6 பில்லியன் ஒளியாண்டு தூரத்தில் இருந்த உடுத்திரள் கூட்டத்தைக் காட்டும் இந்தப் படம் பின்னணியில் 13 பில்லியன் ஆண்டுகளுக்கு முந்தைய பேரண்டத்தின் காட்சியையும் காட்டியது.
இந்நிலையில், ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி எடுத்த மேலும் சில வியப்பூட்டும் படங்களை நாசா செவ்வாய்க்கிழமை வெளியிட்டது.
ஐந்து உடுத்திரள்கள் (நட்சத்திரக் கூட்டங்கள்) நடனமாடும் பாவனையில் அருகருகே அமைந்திருப்பதைக் காட்டும் படம் ஒன்றும், உடுக்களை (நட்சத்திரங்களை) பிரசவிக்கும் ஒளிமயமான முகடுகளும் இந்தப் படங்களில் அடக்கம்.
அமெரிக்க, ஐரோப்பிய, கனடிய விண்வெளி முகமைகள் சேர்ந்து 1000 கோடி டாலர் செலவில் உருவாக்கிய இந்த விண்வெளி தொலைநோக்கி மாபெரும் சாதனைகளைப் படைத்த ஹபிள் விண்வெளி தொலைநோக்கியின் வாரிசாக இருக்கும் என்று கருதப்படுகிறது.
ஜேம்ஸ் வெப் வெளியிட்ட இந்த வியப்பூட்டும் படங்கள் அது அறிவியல் சார்ந்த பணிகளைத் தொடக்க ஆயத்தமாக இருப்பதைக் காட்டுகிறது. விண்ணில் கடந்த டிசம்பர் மாதம் ஏவப்பட்ட இந்த தொலைநோக்கி, கடந்த 6 மாதமாக தனது அதிநவீன கருவிகளை பரிசோதித்து வந்தது. அடுத்து வரும் 20 ஆண்டுகளுக்கு விண்வெளி ஆராய்ச்சியில் இந்த தொலைநோக்கி ஆதிக்கம் செலுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த தொலைநோக்கி பேரண்டத்தை அகச்சிவப்பு படங்களாக எடுப்பதால், முந்தைய விண்வெளி தொலைநோக்கிகளைவிட வெகு தூரத்தை, துல்லியமாக இதனால் படம் பிடிக்க முடிகிறது.
13.8 பில்லியன் ஆண்டுகள் (1380 கோடி ஆண்டுகள்) முன்பு பெருவெடிப்பு மூலம் பேரண்டம் தோன்றியது என்கிறார்கள் அறிவியலாளர்கள். ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி இதில் 13.5 பில்லியன் ஆண்டு முன்பு வரை சென்று படம் எடுக்க முடியும் என்று நாசா நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.
நமது பால்வெளி மண்டலத்தில் உள்ள பல கோள்களை ஆராய்ந்து அதில் உயிர்கள் எதிலும் உள்ளதா என்று பார்க்க இந்த தொலைநோக்கியின் அதிநவீன தொழில்நுட்பக் கருவிகளை விண்வெளி ஆய்வாளர்கள் பயன்படுத்துவார்கள்.
இனி ஜேம்ஸ் வெப் வெளியிட்ட புதிய படங்களும் விளக்கமும்:

கரீனா நெபுலா - நட்சத்திரங்களின் பிரசவ விடுதி

பட மூலாதாரம், NASA/ESA/CSA/STScI
பேரண்டத்தின் காட்சியை வியக்கவைக்கும் வகையில் படமெடுத்த முதல் தலைமுறை விண்வெளி தொலைநோக்கி ஹபிள். விண்வெளியில் புவியின் கண் என்று வருணிக்கப்பட்ட ஹபிள் எடுத்த படங்களில் முக்கியமானது கரீனா விண்முகிலின் படம். நெபுலா என்று அழைக்கப்படும் விண்முகில்கள் தூசியும், வாயுக்களும் அடங்கியவை மேகக்கூட்டம் போன்ற பகுதி ஆகும். இவற்றில் இருந்தே நட்சத்திரங்கள் பிறக்கின்றன.
புவியில் இருந்து சுமார் 7,600 ஒளி ஆண்டு தூரத்தில் அமைந்துள்ள இந்த கரீனா வெண்முகில் மிக பிரும்மாண்டமான, மிகுந்த பிரகாசமான விண்முகில் கூட்டம். வெறும் கண்களோடு விண்ணில் பார்த்தால் இந்த விண்முகில் கூட்டத்தை பார்க்க முடியாது. காரணம், தூசியும், வாயுக்களும் இந்தக் காட்சியைப் பார்க்க முடியாமல் மறைத்திருக்கும்.
முதலில் ஹபிள் தொலைநோக்கி இந்தப் பகுதியைப் படமெடுத்திருந்தாலும் ஜேம்ஸ் வெப் இதனை வித்தியாசமான முறையில் படமெடுத்துள்ளது.
இந்தப் படத்தில் மேல் பாதி வாயுக்கள் அடங்கிய பகுதி. கீழ்ப் பாதி தூசி அடங்கிய பகுதி. இந்த தூசி அடங்கிய பகுதி பார்ப்பதற்கு மலை முகடுகள் போல அமைந்துள்ளது. இந்த இரண்டு பகுதிகளையும் தெளிவாகப் பிரித்துக் காட்டும் அளவுக்கு இந்தப் படம் துல்லியமாக அமைந்துள்ளது.

SMACS 0723


தெற்கத்திய வளையம்

பட மூலாதாரம், NASA/ESA/CSA/STScI
புவியில் இருந்து 2 ஆயிரம் ஒளி ஆண்டு தூரத்தில் அமைந்துள்ள தெற்கத்திய வளையம். எய்ட் பர்ஸ்ட் நெபுலா என்று அழைக்கப்படும் இந்த விரிவடையும் பிரும்மாண்ட விண்முகிலின் நடுவில் இறந்துகொண்டிருக்கும் நட்சத்திரம் ஒன்று ஒளியூட்டிக்கொண்டிருக்கிறது. நியர் இன்ஃப்ராரெட் மற்றும் மிட் இன்ஃப்ராரெட் முறையில் ஜேம்ஸ் வெப் எடுத்த படங்கள் இவை.

ஸ்டெஃபான்ஸ் குவின்டெட்: 5 உடுத் திரள்களின் அண்டவெளி நடனம்

290 மில்லியன் ஒளியாண்டு தூரத்தில் அமைந்துள்ள காட்சி இது. ஜேம்ஸ் வெப் எடுத்த வியப்பூட்டும் துல்லியத்துடன் அமைந்த இந்தப் படத்தில் ஐந்து உடுத்திரள்கள் வெவ்வேறு கோணத்தில் நடனமாடுவது போன்ற பாவனையில் இணைந்துள்ளன. பெகாசஸ் ராசியில் அமைந்துள்ள இந்தப் பகுதிக்குப் பெயர் ஸ்டெஃபான்ஸ் குவின்டெட். மிக நெருக்கமாக உடுத்திரள்கள் சேர்ந்துள்ள கூட்டம் இது. அடிக்கடி இந்த உடுத்திரள்கள் நெருங்கியும், விலகியும் சென்று நடனமாடுவது போன்ற தோற்றத்தைக் கொடுக்கும்.

இந்தக் கட்டுரையில் Google YouTube வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Google YouTube குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
YouTube பதிவின் முடிவு
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












