அணுக் கழிவு: 10 ஆயிரம் ஆண்டுகளுக்கு பின் வரும் தலைமுறையை எச்சரிப்பது எப்படி?

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், மார்க் பீசிங்
- பதவி, பிபிசி
பூமிக்கு அடியில் புதைத்து வைத்திருக்கும் அணுக்கழிவுகள் ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு நச்சுத்தன்மையுடன் இருக்கும். அதனால் ஏற்படும் அச்சுறுத்தலில் இருந்து தப்புவதற்கான எச்சரிக்கை முறையை எப்படி உருவாக்குவது என்பது எதிர்காலத்துக்கான கேள்வியாக உள்ளது.
``இது மரியாதை செலுத்த வேண்டிய இடம் கிடையாது'' என்று இதன் மீதுள்ள வாசகம் கூறுகிறது. ``மதிப்புமிக்க யாருடைய நினைவும் இங்கு போற்றப்படவில்லை. மதிப்புமிக்க எதுவும் இங்கு இல்லை. இங்கே இருப்பவை அனைத்தும் நமக்கு ஆபத்து ஏற்படுத்தக் கூடியவை, நமக்கு வெறுப்பை ஏற்படுத்தக் கூடியவை. இந்த அறிவிப்புத் தகவல், நமக்கான ஆபத்து குறித்த எச்சரிக்கையாக உள்ளது.''
பழங்கால கல்லறையின் நுழைவாயிலில் நீங்கள் எதிர்நோக்கக் கூடிய சாபத்தைப் போல இது இருக்கிறது. நியூமெக்சிகோவில் பாலைவனத்தில் உறுதியான பாறைகளின் நடுவே சுமார் 2 ஆயிரம் அடிகள் (610 மீட்டர்) ஆழத்தில் உருவாக்கப்பட்டுள்ள அணுக்கழிவு தனிமைப்படுத்தல் முன்னோடித் திட்ட (WIPP) தளத்தைக் குறிப்பிடுவதற்கு உதவக் கூடிய வாசகங்கள் இவை. பூமிக்கடியில் மிக நீண்ட குகைப்பாதைகளைக் கொண்ட இந்த இடம், அமெரிக்க ராணுவத்தின் மிகவும் அபாயகரமான அணுக்கழிவுகளைப் பாதுகாப்பதற்காக வடிவமைக்கப் பட்டுள்ளது.
3 லட்சம் ஆண்டுகள் நீடித்திருக்கப் போகும் நச்சுத்தன்மை
இந்தக் கழிவுகளில் உயிரை பலி வாங்கும் நச்சுத்தன்மை 3 லட்சம் ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்திருக்கும். இப்போது உலக அளவில் அனுமதிக்கப்பட்ட, ஆழ்பூமி அணுக்கழிவு சேமிப்பு மையமாக WIPP இருக்கிறது. 2020களின் மத்தியில் இதேபோன்ற ஒரு மையம் பின்லாந்தில் தொடங்கப்பட உள்ளது.
இன்னும் 10 முதல் 20 ஆண்டுகளில் இந்த வளாகம் முழுக்க அணுக்கழிவுகள் நிரம்பிவிட்டால், பூமிக்கு அடியில் செல்லும் குகைப்பாதைகள் அடைக்கப்பட்டு, கான்கிரீட் மற்றும் மண்ணால் சீல் செய்யப்படும். இப்போது அந்தத் தளத்தை ஒட்டி பரந்த நிலப்பரப்பில் அமைந்துள்ள கட்டடங்கள் அகற்றப்படும். ``நம் சமூகத்தின் மோசமான நரகத்துடன் தொடர்பு கொள்வதற்கு, அறிந்தே நாம் மேற்கொள்ளும் முயற்சியாக'' அந்த இடம் அமையும்.
அந்த இடத்தின் வெளிப்புற எல்லை முழுக்க அடங்கும் வகையில் 10 சதுர கிலோ மீட்டர் பரப்புக்கு 25 அடி உயரத்தில் கிரானைட் தூண்கள் நிறுவப்படும். அதற்கு உள்ளே 33 அடி உயரம், 100 அடி அகலத்தில் உறுதியான நிலம் இருக்கும். அதற்கும் உள்ளே இன்னொரு வரிசை கிரானைட் தூண்கள் நிறுவப்படும்.
இதன் நடுவே ``Do Not Enter'' (உள்ளே வராதீர்) என்ற அறிவிப்பு வைக்கப்படும். நினைவுச் சின்னமாக இருக்கப் போகும் அந்த அறையில் அந்த இடத்தைப் பற்றிய தகவல்கள் இருக்கும். ஒருவேளை அந்தத் தகவல்களைப் படிக்க முடியாமல் போனால், இன்னும் 20 அடி ஆழம் பூமியைத் தோண்டினால் இதே விவரங்கள் கிடைக்கும். அங்கும் இந்தத் தகவல்கள் புதைக்கப்பட்டுள்ளன. WIPP குறித்த விரிவான தகவல்கள் உலகெங்கும் பல இடங்களில், ஆவணக் காப்பகங்களில் பத்திரப்படுத்தி வைக்கப்படும். சிறப்பான தாளில் இவை தயாரிக்கப்பட்டிருக்கும். இவற்றை 10 ஆயிரம் ஆண்டுகளுக்குப் பத்திரமாக வைத்திருக்க வேண்டும் என்ற அறிவுறுத்தல் அதன் மீது பதிக்கப்பட்டிருக்கும். அந்த இடத்துக்கான லைசென்ஸ் அவ்வளவு காலத்துக்கு இருக்கிறது என வைத்துக் கொள்ளலாம்.

பட மூலாதாரம், Getty Images
அணு குறியீட்டியல் உலகிற்குப் போகலாம் வாருங்கள். WIPP-க்கு உத்தேசிக்கப்பட்டுள்ள பெரும்பாலான திட்டங்கள், அறிவியல் கற்பனைக் கதைகளின் தாக்கத்தால் ஏற்பட்டவையாக உள்ளன. அணுசக்தி இயற்பியலாளர்கள், பொறியாளர்கள், மானுடவியல் அறிஞர்கள், அறிவியல் கற்பனைக் கதைகள் எழுதுவோர், கலைஞர்கள் மற்றும் பிற துறையினர் பரவலான சிந்தனையின் அடிப்படையில் ஒன்றுகூடி, எதிர்காலத்தைக் கணிக்கும் திறன் கொண்டவர்கள் என கருதப்படுபவர்களுடன் இணைந்து இதற்குத் திட்டமிடுகின்றனர். எதிர்காலத்தில் வரக் கூடிய மானிடர்கள் - இவற்றைப் பார்க்க நேரிட்டால் இதன் ஆபத்தான தன்மையைப் புரிந்து கொள்ளும் வகையில் எச்சரிக்கை அம்சங்களை உருவாக்க அவர்கள் முயற்சிக்கிறார்கள்.
அந்தப் பகுதி முழுக்க, முட்களைப் போன்று கான்கிரீட் கூம்புகளை அமைக்கும் யோசனை நிராகரிக்கப்பட்டுவிட்டது. அது ஆபத்தான இடம் என்ற எண்ணத்தை தலைமுறைகளைக் கடந்து மக்கள் மத்தியில் உருவாக்கும் வகையிலான ஒரு நம்பிக்கை முறையை பரப்பலாம் என்ற யோசனையும் ஏற்கப்படவில்லை. ``அணுசக்தி மதகுரு'' என்ற சொற்றொடரை தாமஸ் செபோக் என்ற மொழியியலாளர் முதன்முதலில் 1981-ல் பயன்படுத்தினார். கதிர்வீச்சு பரவும்போது நிறம் மாறக் கூடிய தன்மையுடன் பூனை இனத்தை உருவாக்கி அதற்கு `ரே பூனை' என பெயரிடலாம். காலப்போக்கில் அந்தப் பூனைகளின் நிறம் மாறினால், மக்கள் ஓடி தப்பிக் கொள்ளும் பழக்கத்தை ஏற்படுத்த வேண்டும் என்று முன்வைக்கப்பட்ட யோசனையும் நிராகரிக்கப்பட்டது. தற்போது ரே கேட் இயக்கம் உருவாகி டி-சர்ட்கள், பாடல்கள் மற்றும் ஆவணப்படங்கள் பரவுவது விந்தையான ஒற்றுமையாக உள்ளது.
அணுசக்தி மதகுரு போன்ற பேச்சுகள் மற்றும் நியூமெக்சிகோ பாலைவனத்தின் இந்த வளாகத்தின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதில் இருந்து ஆக்ஸ்போர்டுஷயரின் ஊரகப் பகுதியில் செயல்படும் நவீன வளாகம் செயல்படுகிறது. தீர்வு காண்பதற்கான வாய்ப்பு வெகு தொலைவில் இருப்பதாகக் கருதப்பட்டாலும், ஒரு விஷயத்தில் அது நெருக்கத்தை எட்டிவிட்டதாகத் தோன்றுகிறது. இரண்டாம் உலகப் போரில் பயன்படுத்தப்பட்ட கல்ஹம் விமானதளம், பிரிட்டனின் அணுசக்தி ஆணையத்திற்கும், அணுக்கரு இணைப்பு ஆற்றலுக்கான குல்ஹம் மையத்திற்கும் (CCFE) அருகில் உள்ளது. பிரிட்டனின் அணுக்கரு இணைப்பு மூலம் அணுசக்தியை உருவாக்கும் ஆய்வகமாக குல்ஹம் மையம் உள்ளது. மேற்கு ஐரோப்பாவில் முதலாவது அணு உலை அமைக்கப்பட்ட ஹார்வெல் நகரம், 1947ல் பயன்படுத்தப்பட்ட மற்றொரு விமான தளமாக உள்ளது. பிரிட்டனின் கதிர்வீச்சுக் கழிவு மேலாண்மை லிமிடெட் (RWM) நிறுவனத்தின் தலைமையகம் அங்குதான் இருக்கிறது.
எதிர்காலத்தில் மனிதர்களுக்கு எப்படி உதவலாம் என்பது குறித்து சிந்தனைகள் முன்வைக்கப்பட்டன. நூலகங்கள், காலப்பெட்டகங்கள் மற்றும் இயல்பான குறியீடுகள் உருவாக்குவது பற்றி யோசிக்கப்பட்டது.
எனக்கு எதிரில் இரண்டு பேர் அமர்ந்திருக்கிறார்கள். இந்தப் பெரிய பிரச்சினைக்குத் தீர்வு காண்பது பற்றி யோசிப்பது தான் அவர்களுடைய வேலை. கதிர்வீச்சுக் கழிவு மேலாண்மை லிமிடெட் (RWM) நிறுவனத்தின் தலைமை அறிவியல் ஆலோசகரான பேராசிரியர் செர்ரி ட்வீட் மற்றும் அதே நிறுவனத்தைச் சேர்ந்த, துறை வல்லுநரான ஜேம்ஸ் பியர்சன் ஆகிய இருவரும், பிரிட்டனின் அணுக்கழிவு சேமிப்பு மையத்தில் செய்ய வேண்டிய குறியீடுகள் எப்படி இருக்க வேண்டும் என்று ஆய்வு செய்ய வேண்டும். பிரிட்டனின் அணுக்கழிவு பாதுகாப்பு மையத்திற்கு திட்டம் உருவாக்கி, கட்டி முடித்து, கழிவுகள் நிரம்பி, சீல் வைப்பதற்கு 200 ஆண்டுகள் ஆகும் என்று எதிர்பார்க்கப் படுகிறது. உலகில் மற்ற நாடுகளைப் போல இந்த நிறுவனமும், அணுக்கழிவு பாதுகாப்பு மையத்தில் குறியீடு செய்ய வேண்டிய கட்டாயக் கடமையை நிறைவேற்றியாக வேண்டும்.

பட மூலாதாரம், Getty Images
வீடியோ திரையில் மேலே இருப்பது வரலாற்று காலத்துக்கு முந்தைய ஸ்டோன்ஹென்ஞ்ச் அருகில் உள்ள சில்பரி மலைமேடு. ``அது 340,000 கனமீட்டர்கள் கொண்டது. 4,000 ஆண்டுகளுக்கும் முந்தையது'' என்கிறார் பியர்சன். ``இது எதற்காக பயன்படுத்தப் படுகிறது என்பது விவாதப் பொருளாகவே இருக்கிறது. ஆனால் பதில் கிடைக்கவில்லை. இது பழங்காலத்தின் குறியீட்டு ஏற்பாடா? இதை நன்றாக பயன்படுத்த முடியுமா? நாம் முயற்சி செய்து பார்க்கலாமா என தெரியவில்லை.
நெவாடாவில் லாஸ்வேகாஸ் அருகே யுக்கா மலையில் உருவாக்க உத்தேசிக்கப்பட்டுள்ள மையத்தில் இந்த அம்சங்களைக் கையாள்வது தொடர்பான கேள்விகளுக்குப் பதில் கண்டுபிடிக்க 1981ல் மனிதர்கள் இடைமுக பணிக் குழு உருவாக்கப்பட்டது. அணுக்குறியீடுகள் துறையை உருவாக்க வேண்டும் என்பது இதனுடைய பணியாக உள்ளது. இப்போது செயல்படாமல் இருக்கும் பணிக்குழுவின் பணிகளை பாரிஸ் நகரைச் சேர்ந்த அணுசக்தி முகமை (NEA) தற்போது கையில் எடுத்துக் கொண்டுள்ளது.
பதிவேடுகளைப் பாதுகாத்தல், தலைமுறைகளைக் கடந்து அறிவாற்றல் மற்றும் நினைவகத்தை பயன்படுத்துதல் (RK &M )ஆகியவற்றுக்கான பணிகளை இந்த முகமை 2011ல் தொடங்கியது. அதன் இறுதி அறிக்கை 2019 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது. நவீன அணுசக்தி தொழில்நுட்ப கட்டமைப்புகளைக் கொண்ட 33 நாடுகளுக்கு இடையே ஒத்துழைப்பை ஊக்கப்படுத்தக் கூடிய, அரசுகளுக்கு இடையிலான அமைப்பாக இந்த முகமை உள்ளது.
``பதிவேடுகளைப் பாதுகாத்தல், தலைமுறைகளைக் கடந்து அறிவாற்றல் மற்றும் நினைவகத்தை பயன்படுத்துதல் ஆகியவற்றுக்கான பணிகளை மேற்கொள்ளும் முயற்சி என்பது, புவியியல் ரீதியில் அந்த இடத்திற்கு அறியாமல் மனிதர்கள் வந்துவிடுவதற்கான வாய்ப்புகளைக் குறைப்பதாக இருக்க முடியுமா என்பதான முயற்சியாக இருக்கும்'' என்று டாக்டர் குளோரியா க்வாங் கூறினார். இவர் அணுசக்தி முகமையின் கதிரியக்கக் கழிவு மேலாண்மைத் துறையின் முன்னாள் துணைத் தலைவராக இருந்தார். இப்போது OECD அணுசக்தி ஏஜென்சியில் IFNEC தொழில்நுணுக்க செயலகத்தில் தலைவராக இருக்கிறார். ``எதிர்கால தலைமுறையில், விஷயங்களை அறிந்து முடிவெடுக்க உதவும் தன்மையை அதிகரிப்பதாகவும் இந்த முயற்சி இருக்கும்'' என்றார் அவர்.
நூலகங்கள், காலப் பெட்டகங்கள் மற்றும் இயல்புக் குறியீடுகள் போன்றவற்றின் மூலம், எதிர்காலத் தலைமுறையினர் விஷயங்களை அறிந்து முடிவெடுக்க உதவும் வகையில் பல யோசனைகள் இதில் முன்வைக்கப்பட்டன. ``நினைவுத் தூண்கள், நினைவுக் கோபுரங்கள் போன்ற ஏதாவது ஒன்றை நிறுவுதல், முட்கள் பரப்பிய தளம் போல உருவாக்குதல்'' போன்ற யோசனைகளும் தெரிவிக்கப்பட்டதாக அணுசக்தி கலாச்சார ஆராய்ச்சி குழமத்தின் ஒருங்கிணைப்பாளரும், லண்டன் பல்கலைக்கழகத்தில் கோல்ட்ஸ்மித்ஸில் ரீடர் பொறுப்பில் இருப்பவருமான டாக்டர் எலே கார்ப்பென்டர் தெரிவித்தார். ``ஒரு தூண் போன்ற அமைப்பை நிறுவினால் அது இடிக்கப்பட்டுவிடக் கூடும். எனவே தரையைத் தோண்டும் போது தெரியக் கூடிய வகையில் ஆயிரக்கணக்கான சிறிய அளவிலான குறியீடுகளை உருவாக்கலாம். ரோமானிய நாணய வில்லைகள் போன்ற தொன்மையான கைவினைப் பொருட்களைப் போன்றதாகவும் அவை இருக்கலாம்'' என்று அவர் கூறினார்.
எதிர்காலத்தில் அறியப்படக் கூடிய குறியீடாக இருக்க வேண்டுமானால், அவை `அணு கலாச்சாரத்தின்' அங்கமாக இருக்க வேண்டும் என்று செசிலே மஸ்ஸார்ட் கூறுகிறார்.
வரக் கூடிய காலத்தை விட்டுத் தள்ளுங்கள். இப்போதைய மனிதர்களின் காலத்திலேயே இது கஷ்டமான பணியாகக் கருதப்படுகிறது. மஞ்சள் நிறத்தின் பின்னணியில் விரிந்த நிலையில் மூன்று இலைகள் இருக்கும் குறியீட்டை உலக மக்களில் 6 சதவீதம் பேரால் தான் அடையாளம் கண்டுகொள்ள முடிகிறது என்று சர்வதேச அணுசக்தி முகமை நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது. இந்தக் குறியீடு தான் கதிர்வீச்சைக் குறிப்பிடும் அடையாளமாக இருக்கிறது.
ஜப்பானின் வடகிழக்கில் வைக்கப்பட்டுள்ள ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய சுனாமி கற்கள் சொல்லும் விஷயத்தை இப்போதும் மக்கள் புரிந்து கொள்கிறார்கள் என்று மற்றொரு ஆய்வில் தெரிய வந்துள்ளது. ஆனால் அந்தப் பகுதியில் உள்ளூர் மக்கள் சிலர் இந்த எச்சரிக்கைகளைப் புறக்கணித்துவிட்டு, சுனாமி ஆபத்து அதிகம் உள்ள பகுதிகளில் கட்டடங்கள் கட்டிவிட்டார்கள். அதற்கான விளைவை 2011 பூகம்பம் மற்றும் சுனாமி காலத்தில் அவர்கள் சந்திக்க நேரிட்டது.
எதிர்கால தலைமுறையினருக்கான குறியீடுகள் புரிந்து கொள்ளப்பட வேண்டுமானால் அவை ``அணு கலாச்சாரம் கொண்டதாக, அவர்கள் வழக்கத்தில் உள்ள நினைவுக் குறியீட்டுச் சின்னங்களாக, குறியீடுகளாக, சம்பிரதாய முறைகளாக இருக்க வேண்டும். இப்போதைக்கு பார்த்தால் கதிரியக்கத்தைக் குறிக்க ஒரே குறியீடு மட்டுமே உள்ளது'' என்று பிரஸ்ஸல்ஸ் நகரைச் சேர்ந்த கலைஞரும் ஆராய்ச்சியாளருமான செசிலே மஸ்ஸார்ட் கூறுகிறார்.
கழிவுகள் பாதுகாக்கப்படும் பகுதிக்கு மேற்புறத்தில் உலோகக் கூம்புகள் மற்றும் அரைக்கோள வடிவங்களில் அடுத்தடுத்து சிந்தனையாக்க ஆய்வகங்கள் அமைக்கலாமா என மஸ்ஸார்ட் கற்பனை விரிகிறது. ``இசைக் கலைஞர்கள், தொல்லியல் நிபுணர்கள், எழுத்தாளர்கள், பொருளாதார நிபுணர்கள், கலைஞர்கள், உயிரியல் நிபுணர்கள், கவிஞர்கள் என புதிய தலைமுறையினரை அங்கு வரவழைக்கலாம். குறியீடுகளின் அம்சங்கள் குறித்து அடுத்த தலைமுறையினருக்கு கொண்டு செல்வதற்கு அவர்களை பயன்படுத்தலாம்'' என்கிறார் அவர்.

பட மூலாதாரம், Getty Images
2011 ஆம் ஆண்டில் அமெரிக்க கலைஞர் பிரியன் மெக்கோவர்ன் வில்சன் மற்றும் கம்ப்ரியா பல்கலைக்கழகத்தில் நுண்கலைத் துறை பேராசிரியர் ராபர்ட் வில்லியம்ஸ் ஆகியோர் சற்று அதிகமாக யோசித்தனர். ``கம்ப்ரிய ரசாயன செயல்பாட்டுப் பகுதியில், அணுசக்தி தொடர்பான பழங்கால பொருட்கள், அலங்காரங்கள், சம்பிரதாயங்கள் ஆகியவை பற்றி நாங்கள் ஆய்வு செய்தோம். கம்ப்ரிய அணுசக்தி கடலோரப் பகுதியில், ஒருபோதும் மறக்க முடியாத வகையில் இவை அமைய வேண்டும் ன ஆய்வு செய்தோம்'' என்று வில்லியம்ஸ் கூறினார். உதாரணமாக, அணு மதகுரு என்பவருடைய உடைகளை அணுகுண்டின் தந்தை என கருதப்படும் ராபர்ட் ஓப்பென்ஹெய்மர் அணிந்திருப்பதைப் போல கற்பனை செய்தோம். கம்ப்ரியாவில் தொன்மையான பகுதிகளில் அந்த மதகுருவின் புகைப்படங்கள் எடுக்கப்பட்டன. குறியீடுகள் பற்றி அவர்களின் எண்ணங்களைக் கண்டறிய இந்த முயற்சி எடுக்கப்பட்டது.

பட மூலாதாரம், Getty Images
``அணுசக்தித் துறையைப் பொருத்த வரையில் கலைஞர்களை இடையூறாகப் பார்ப்பது எளிது'' என்று மஸ்ஸார்ட் கூறுகிறார். ``ஆனால் சில பொறியாளர்கள், டைரக்டர்கள், அறிவுஜீவிகள் மற்றும் தலைவர்கள் இப்போது கலையின் மதிப்பை உணர்ந்திருக்கிறார்கள்'' என்றும் அவர் குறிப்பிடுகிறார்.
அபாய குறியீட்டைப் பார்த்து மக்கள் பயந்து ஓடும்படி முயற்சிக்க வேண்டியதில்லை - ஜேம்ஸ் பியர்சன்
குறிப்பிட்ட இடம் பற்றியதாக இத் துறையின் கலந்தாடல்கள் இருக்கின்றன. ஆனால் அணுசக்தித் துறை என ஒட்டுமொத்த அளவில் கலைஞர்களான நாங்கள் பார்க்கிறோம். அதன் ஒரு பகுதியை மட்டும் பார்க்காமல், ஒட்டுமொத்த செயல்பாட்டையும் பார்த்து, முழுமையான குறியீடுகளை உருவாக்க விரும்புகிறோம்'' என்று கார்ப்பென்டர் கூறுகிறார்.
நிறைவாக RK &M முன்முயற்சியில், கூட்டு அமைப்புகள் மூலம் தீர்வு காண யோசனை தெரிவித்தது. ``இது மந்திரத்துவமான இடம் என்று யாரும் சொல்ல முடியாது'' என்று ஜேம்ஸ் பியர்சன் கூறினார். இவர் அந்த அமைப்பில் பணியாற்றியுள்ளார். ``ஒன்றை ஒன்று சார்ந்ததாக பல அமைப்புகளை உருவாக்குவது தான் மிகவும் வெற்றிகரமான தீர்வாக இருக்கும். இயல்பான குறியீடுகளை உருவாக்குவதுடன், இந்த இடம் குறித்த தகவல்களை பல ஆவணக் காப்பகங்களில் பத்திரப்படுத்த வேண்டும். ஏதாவது ஒரு காப்பகத்தில் ஏதும் விபத்து ஏற்பட்டு பதிவுகள் அழிந்து போனாலும், மற்றொன்றில் அது பத்திரமாக இருக்கும்'' என்கிறார் அவர்.
எதிர்கால சமூகங்களுக்கு தகவல்களை ஒருங்கிணைத்துக் கொடுப்பது பற்றி தான் சிந்திக்க வேண்டுமே தவிர, அவர்களை பயமுறுத்தி ஓட வைப்பதாக இருக்கக் கூடாது.
``இப்போது WIPP-க்கு திட்டமிடப் பட்டுள்ளதைப் போன்ற அபாய எச்சரிக்கைக் குறியீடுகள் மூலம் மக்களை பயமுறுத்தி ஓடச் செய்யக் கூடாது. அங்கே என்ன இருக்கிறது என்பதை மக்களுக்குத் தெரிவிக்க நீங்கள் முயற்சிக்க வேண்டும். எனவே, விஷயங்களை அறிந்து, அதன் அடிப்படையில் அவர் முடிவெடுக்க முடியும்'' என்று அவர் கூறுகிறார்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:












