"தமிழர்களை வடமாநில தொழிலாளர்கள் விரட்டுவதாக வெளியான வீடியோ தவறானது" - திருப்பூர் காவல்துறை

திருப்பூரில் தமிழர் ஒருவரை வட மாநில தொழிலாளர்கள் கும்பலாகச் சேர்ந்து துரத்தி தாக்குவதாகச் சொல்லப்படும் வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் பரவலாகப் பகிரப்பட்டு வருகின்றது.
இந்த வீடியோ காட்சியில் நடந்த சம்பவம் திருப்பூரில் உள்ள வேலம்பாளையம் திலகர் நகர் பகுதியில் நடைபெற்றதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஆனால் இந்தச் சம்பவம் இரண்டு நபர்களுக்கு மத்தியில் டீ கடையில் நடந்த வாய்த்தகராரால் நடைபெற்றது என்றும் அவர்கள் இருவேறு மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் இனவாதத்தைத் தூண்டும் வகையில் வீடியோ பரப்பப்படுகிறது என்றும் திருப்பூர் காவல் ஆணையர் பிரவீன் குமார் அபிநபு பிபிசி தமிழிடம் உறுதி செய்துயுள்ளார்.
கடந்த ஜனவரி 14ஆம் தேதி திலகர் நகர் பகுதியில் ஒரு டீ கடையில் தமிழ் மற்றும் வடமாநில தொழிலாளர்கள் தேநீர் அருந்திக்கொண்டிருந்தனர்.
அப்போது, மோதல் ஏற்பட்ட இருதரப்பில் ஒருவர் புகை பிடித்துக் கொண்டிருந்தார். புகை மற்றொருவர் மீது பட்டதால், இரண்டு நபர்களுக்கு இடையில் வாய் தகராறு ஏற்பட்டுள்ளது. அதன் விளைவாக நடந்த சம்பவம்தான் அந்த வீடியோவில் உள்ளது என்று காவல் ஆணையர் பிரவீன் குமார் அபிநபு கூறினார்.
''ஒரு கட்டத்தில் ஒரு நபர் மற்றொருவரைத் தாக்க முற்பட்டுள்ளார். அதனால், மற்றொருவர் தான் பணிபுரியும் இடத்திற்குச் சென்று தனது நண்பர்களை அழைத்து வந்தார்.
அவர்களுக்கு இடையில் வாக்குவாதம் ஏற்பட்டது. அதில், ஒருவரும் காயம் அடையவில்லை. சில நிமிடங்கள் மட்டுமே அங்கு சலசலப்பு நடைபெற்றது.
ஆனால் சமூக ஊடகங்களில் இந்தச் சம்பவம் ஜனவரி 26ஆம் தேதி நடந்த தாக்குதல் சம்பவம் என்று பகிரப்படுகிறது. இதில் தாக்குதல் எதுவும் நடைபெறவில்லை.
இந்த வீடியோவை உள்நோக்கத்துடன் பரப்புவதைத் தவிர்ப்பது நல்லது என்று தொழிலாளர்களுக்கு அறிவுறுத்தியுள்ளோம்,'' என்று அவர் பிபிசி தமிழிடம் தெரிவித்தார்.
மேலும், சனிக்கிழமை மாலை நடந்த செய்தியாளர் சந்திப்பில் பேசிய அவர் இந்த சம்பவம் குறித்துப் புலனாய்வு செய்ய இரண்டு தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.
திலகர் நகர் பகுதியில் நடைபெற்ற சம்பவம் மிகவும் அரிதாக நடைபெறும் தகராறு என்றும் இதே சம்பவம் ஒரே இனத்தைச் சேர்ந்த நபர்களுக்கு இடையில் நடந்திருந்தால் கவனம் பெற்றிருக்காது என்றும் திருப்பூர் காவல் ஆணையர் கூறுகிறார்.
இந்தச் சம்பவத்தில் தமிழ் மற்றும் வட மாநில தொழிலாளர்களுக்கு இடையில் ஏற்பட்ட தகராறுக்கு, தொழில் போட்டி, வேலைவாய்ப்பு, முன்விரோதம் என எந்தத் தொடர்பும் இல்லை என்றார்.
ஆனால் இதுபோன்ற அரிதான சம்பவங்கள்கூட இரண்டு தரப்பு மக்கள் மத்தியில் விரிசல் ஏற்படுத்த வாய்ப்புள்ளதா எனக் கேட்டபோது, திருப்பூர் நகரத்தில் உள்ள பின்னலாடை நிறுவனங்களிடம் இதுகுறித்துப் பேசி வருவதாகவும், இரண்டு தரப்பு தொழிலாளர்கள் மத்தியிலும் ஒற்றுமையை ஊக்குவிக்கும் நிகழ்வுகளை நடத்தும் திட்டம் இருப்பதாகவும் கூறினார்.
சமூக ஊடகங்களில் தொடர்ந்து இந்த வீடியோ பரவி வருவதால், பல அரசியல் தலைவர்களும் கருத்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.
மதுரையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய 'நாம் தமிழர்' தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், திருப்பூரில் தமிழர்களை வட இந்தியர்கள் தாக்கியதாகச் சொல்லப்படும் சம்பவத்திற்குக் கடும் கண்டனம் தெரிவித்தார்.
''இந்தச் சம்பவம் ஒரு தொடக்கம்தான். இதுபோன்ற சம்பவங்கள் தொடர்ந்து பல இடங்களில் நடக்கும்போதுதான் நீங்கள் சீமானை தேடுவீர்கள். இதுபோன்ற நபர்களை ஆதரிக்க இங்கு ஒரு கூட்டம் இருக்கிறது. இந்தியை கட்டாயம் படிக்க வேண்டும் என்று சொன்ன கூட்டம் அது,'' என்று பேசியுள்ளார்.

பட மூலாதாரம், TIRUPUR POLICE
தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில், "வட மாநிலத்தவர்களின் குற்றச் செயல்கள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டிருப்பதைப் பொறுத்துக்கொள்ள முடியாது. தமிழ்நாட்டு இளைஞர்கள் மீது தாக்குதல் நடத்தியிருப்பது ஏற்றுக்கொள்ள முடியாது", என்று தெரிவித்தார்.
மேலும், "தமிழ்நாட்டில் இந்திய அரசு நிறுவனங்களில் திட்டமிட்டு தமிழர்களைப் புறக்கணித்து, வெளி மாநிலங்களைச் சேர்ந்தவர்களையே 90 விழுக்காட்டிற்கு மேல் பணியில் சேர்க்கிறார்கள். கோவை, திருப்பூர், சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் உள்ள அமைப்புசாரா பணிகளிலும் பெருமளவு வெளிமாநிலத்தவர்கள் வேலை பார்க்கிறார்கள்," என்று அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
''நாகாலாந்து, அருணாச்சல பிரதேசம், மிசோரம், மணிப்பூர் ஆகிய மாநிலங்களில், வெளி மாநிலத்தவர்கள் சென்று தங்க, அந்த மாநிலங்களின் உள் அனுமதி வாங்க வேண்டும் என்ற சட்டம் இருக்கிறது. இந்தச் சட்டம் தமிழ்நாட்டிற்கும் வேண்டும்," என்று தெரிவித்துள்ளார்.
சென்னையில் உள்ள வட மாநில தொழிலாளர் கூட்டமைப்பைச் சேர்ந்த சர்ஜித் இந்த வீடியோ மோசமான உதாரணம் என்கிறார்.
''பல காலமாக வட மாநில மக்கள் தமிழ்நாட்டுக்கு வேலைக்காக வருகிறார்கள். சமீபகாலமாக எங்களை மோசமாகச் சித்தரிக்கும் வீடியோக்களை பார்க்கும்போது வேதனையாக உள்ளது.
இதுபோன்ற வீடியோவை வெளியிடக்கூடாது. எங்கள் ஊரில் இருந்து தமிழ்நாட்டுக்கு வந்த பலர் இங்கே இரண்டு தலைமுறைகளாக வாழ்கின்றனர்,'' என்கிறார் சர்ஜித்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












