ரிசர்வ் வங்கி அதிகாரிகளுக்கே சவால் விட்ட கிராமத்து பெண்கள்: பள்ளிக்கே செல்லாமல் வங்கி தொடங்கிய கதை

- எழுதியவர், அம்ருதா துர்வே
- பதவி, பிபிசி மராத்தி
வங்கி என்பது அனைவருக்கும் பொதுவானது. ஆனால், பெண்களாகவே தொடங்கி, பெண்களுக்காகவே நடத்தப்படும், பெண்களுக்கு மட்டுமே கடன் வழங்கும் வங்கியைப் பற்றிக் கேள்விப்பட்டுள்ளீர்களா!
அப்படியொரு வங்கி மகாராஷ்டிரா மாநிலத்தில் செயல்பட்டு வருகிறது. மான் தேஷி மகிளா கூட்டுறவு வங்கி என்ற பெயரில் செயல்பட்டு வரும் இந்த வங்கியைத் தொடங்கியது படிப்பறிவில்லாத பெண்கள்.
இந்த வங்கியின் தலைமை நிர்வாக இயக்குநர் ரேகா குல்கர்னி, வங்கியின் செயல்பாடுகளைப் பற்றிச் சுருக்கமாக விளக்கினார்.
25 ஆண்டுகளுக்கு முன்பு, மஸ்வாத் என்ற பகுதியில் இந்த வங்கி நிறுவப்பட்டது. இப்போது மகாராஷ்டிரா முழுவதும் 8 கிளைகளைக் கொண்டுள்ளது.
மான் தேஷி மகிளா கூட்டுறவு வங்கி
மஸ்வத் கிராமம், சதாராவில் இருந்து 80 கிமீ தொலைவிலுள்ள மான் தெஹ்சில் என்ற பகுதியில் உள்ளது. மும்பையில் பிறந்த சேதனா கலா, விஜய் சின்ஹாவை மணந்து இந்த கிராமத்திற்கு இடம் பெயர்ந்து வந்தபோது, அங்கிருந்த விஷயங்கள் மிகவும் வித்தியாசமாக இருந்தன.
அங்கு வீட்டில் கழிப்பறை இருக்கவில்லை. பயணங்களும் கடினமானவையாக இருந்தன.
விஜய் சின்ஹா அங்கு கிராமங்களில் சமூக சேவை செய்து வந்தார். வறட்சியால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் பெரும்பாலான மக்கள் வேலை உறுதித் திட்டத்தின் கீழ் கூலி வேலை செய்து வந்தனர்.
கற்களை உடைப்பதே வேலையாக இருந்தது. அந்தக் காலகட்டத்தில், கைதிகளுக்கு இதுபோன்ற பணிகள் ஒதுக்கப்பட்டன. ஆனால், கிராமத்தில் வேலை எதுவும் இல்லாததால், ஆண்கள், பெண்கள் என்று அனைவரும் அதையே செய்தனர்.
அதைப் பார்த்த சேதனா அசந்துபோனார். காந்தாபாய் சலுங்கே என்ற சிறியளவில் தொழில் செய்துகொண்டிருந்த கொல்லரை பார்த்தபோது, சேதனாவுக்கு ஒரு யோசனை தோன்றியது. காந்தபாய் சலுங்கே இரும்பினால் ஆன பண்ணைக் கருவிகளை உருவாக்கினார். அவர் சாலையோரத்தில், சிறு கூடாரம் அமைத்து தங்கிக் கொண்டு, இந்த வேலையைச் செய்துகொண்டிருந்தார்.
அவருடைய குடும்பத்தில் 6 மகள்கள், 5 மகன்கள் மற்றும் குடிப்பழக்கத்திற்கு அடிமையான கணவரும் இருந்தனர். தன்னுடைய சிறிய தொழிலில் அவர்களுக்காகப் பணத்தைச் சேமிப்பது அவருக்கு மிகவும் கடினமாக இருந்தது. சேமிக்கும் பணத்தை வீட்டில் வைக்க முடியாததால், வங்கிக் கணக்கு தொடங்க காந்தாபாய் விரும்பினார்.
சேதனா சின்ஹாவும் காந்தாபாயும் வங்கிக்குச் சென்றார்கள். ஆனால், காந்தாபாய்க்கு அந்த நேரத்தில் அங்கு இருந்த இரண்டு வங்கிகளும் கணக்கு தொடங்க மறுத்துவிட்டன. அதற்குக் காரணம், காந்தாபாய், 5 ரூபாய், 10 ரூபாய் என்று தனது கணக்கில் போடுவதற்கு விரும்பினார். அதை வங்கிகள் அனுமதிக்கவில்லை.
அப்போதுதான் சேதனா சின்ஹாவுக்கு முதன்முறையாக மஸ்வாத்தில் வங்கி தொடங்க வேண்டும் என்ற எண்ணமே வந்தது.

வயது வந்தோருக்கான கல்வியறிவுக்கு வழிவகுத்த ரிசர்வ் வங்கியின் மறுப்பு
பெண்கள் வங்கியை நிறுவுவதற்காக சேதனா சின்ஹா அனுப்பிய முதல் விண்ணப்பத்தை ரிசர்வ் வங்கி நிராகரித்தது. ஏனெனில், வங்கியின் புரமோட்டர்களாக இருந்தவர்கள் படிப்பறிவில்லாத பெண்கள். விளம்பரதாரர்களின் கையொப்பங்கள் எதிர்பார்க்கப்படும் படிவத்தில் இந்தப் பெண்கள் தங்களுடைய கைரேகைகளை வைத்திருந்தனர்.
சேதனா சின்ஹா, மஸ்வாத் திரும்பியபோது மனச்சோர்வு அடைந்திருந்தார். பெண்களிடம் ரிசர்வ் வங்கியின் மறுப்பை விளக்கினார். இருப்பினும் அந்தப் பெண்கள் அதற்கான தீர்வை விரைந்து கண்டுபிடித்தனர்.
“அந்தப் பெண்கள், என்னிடம் ‘ஏன் அழுகிறாய்?’ என்று கேட்டார்கள். நாங்கள் படிக்கவும் எழுதவும் கற்றுக்கொள்கிறோம் என்றார்கள். உடனடியாக அனைத்து கிராமங்களிலும் வயது வந்தோருக்கான எழுத்தறிவு வகுப்புகளைத் தொடங்கினோம். பகலில், இந்தப் பெண்கள் தங்கள் வீடுகளிலும் பண்ணைகளிலும் கடினமாக உழைத்தார்கள். அதற்குப் பிறகு அவர்கள் எழுத, படிக்க கற்றுக்கொள்வதற்கு வருவார்கள். நானும் எனது சக ஊழியர் ருக்சானாவும் ஒவ்வொரு கிராமமாகச் சென்றோம்,” என்கிறார் சேதனா.
இந்த கிராமங்களில் உள்ள பெண்கள், வங்கியின் ஆரம்ப மூலதனத்திற்குப் பங்களிக்க முன்வந்தார்கள். தினசரி ஊதியம் வாங்கும் அவர்கள், தலா 500 ரூபாய்க்கு வங்கியின் பங்குகளை வாங்கினார்கள்.

சேதனா சின்ஹா, இந்தமுறை வங்கி உரிமத்திற்காக ரிசர்வ் வங்கியிடம் செல்லும்போது தனியாகச் செல்லவில்லை. அவருடன் 15 பெண்கள் சென்றனர்.
“எங்களுக்கு எழுத, படிக்கத் தெரியாது. ஆனால், எண்ண முடியும்’ என்று பெண்கள் அதிகாரியிடம் கூறினார்கள். எவ்வளவு தொகையை வேண்டுமானாலும் கொடுத்து எங்களை வட்டி கணக்கிடச் சொல்லுங்கள் என்றார்கள். அதேநேரத்தில், கால்குலேட்டர் இல்லாமல், கணக்கு போட உங்கள் அதிகாரிகளை வலியுறுத்துங்கள். யார் முதலில் கணக்கு போடுகிறார்கள் எனப் பார்ப்போம் என்றார்கள்,” என்று சேத்னா சின்ஹா விளக்குகிறார்.
வங்கிக்கு உரிமம் கிடைத்து செயல்படத் தொடங்கியது.
இந்த வங்கியில் ஆண், பெண் யாராக இருப்பினும் கணக்கு தொடங்கலாம். ஆனால், பெண்கள் மட்டுமே கடன் பெறத் தகுதியுடையவர்கள்.
மான் தேஷி மகிளா வங்கி, ஒரு லட்சம் பெண்களுக்கு கடந்த 25 ஆண்டுகளில் கடன் வழங்கியுள்ளது. அவர்கள் அனைவருமே தொடர்ச்சியாக கடன்களைப் பெறுபவர்கள். அவர்களுடைய வங்கியில் மொத்தம் ஒரு லட்சத்து ஏழாயிரம் பேர் கணக்கு வைத்துள்ளார்கள். அதில் 25% பேர் மட்டுமே ஆண்கள். 75% பேர் பெண்கள்.
2021-22 நிதியாண்டில், 17,000 பெண்களுக்கு அவர்களுடைய வங்கி மொத்தமாக 60,000 கோடி ரூபாய் வரை கடன் வழங்கியுள்ளது.
வருமானம் தரக்கூடிய கடன்
பெண்களுக்கு வருமானம் தரக்கூடிய காரணங்களுக்காக கடன் வாங்குவதற்கு இந்த வங்கி ஊக்குவிக்கிறது. இந்தப் பகுதியிலுள்ள பல பெண்கள் இப்போது நிலம், கால்நடைகள், கோழிகளை வாங்கியுள்ளார்கள். உள்ளூர் சந்தையில் காய்கறிகளை விற்க முடிவு செய்துள்ளனர். தங்கள் சொந்தத் தொழிலைத் தொடங்கியுள்ளார்கள்.
பங்கர்வாடியின் நகுசா டோல்டடே கடினமான குழந்தைப் பருவத்தோடு வளர்ந்தவர். அவர்களுடைய குடும்பத்தில் ஐந்தாவது மகள் பிறந்தபோது, அவருடைய பெற்றோர் அவருக்கு நகுசா(மராத்தியில் தேவையற்றது எனப் பொருள்) என்று பெயரிட்டார்கள். வறுமையின் காரணமாக, சகோதரிகள் தங்கள் பசியைப் போக்க உணவுக்காகப் பிச்சை எடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இருப்பினும், திருமணத்திற்குப் பிறகு, நகுசா டோல்டடே தனது கணவருடன் வாழத் தொடங்கினார். அப்போது முதல் வங்கிக் கடனை வாங்கி, தன் தனிப்பட்ட கடன்களை அடைத்தார். பிறகு அவர் வங்கியில் பல சிறிய கடன்களை எடுத்து, தொழில் செய்து, இப்போது மூன்றரை ஏக்கர் நிலத்தோடு இருக்கிறார்.
“நான் கடினமாக உழைத்து, முன்னேறினேன். இதைச் செய்தால் என்ன நடக்கும், அதைச் செய்தால் என்ன நடக்கும், வெளியே செல்லும்போது என்ன நடக்கும், வீட்டில் இருக்கும்போது என்ன நடக்கும் என்பதைப் புரிந்துகொண்டேன்,” என்று கூறுகிறார். தனது மகனிடம் இருந்து ஸ்கூட்டர் ஓட்டக் கற்றுக்கொள்ள விரும்புவதாக நகுசா கூறுகிறார்.

கந்துவட்டிக்காரர்களும் மோசடி செய்யும் சிட் ஃபண்டுகளும்
பெரும்பாலான பெண்கள், முன்பெல்லாம் வங்கிகளைவிட கந்துவட்டிக்காரர்களிடம் கடன் பெற்றதாகக் கூறினார்கள். பெரும்பாலான வங்கிகளில் அதைவிடக் குறைந்த வட்டி விகிதத்தில் கடன் பெறலாம் என்பதைத் தெரிந்துகொண்ட பிறகு, இதைத் தேர்ந்தெடுத்தார்கள். வீட்டில் ஆதரவு இல்லையென்றால், பெண்களே ஒருவருக்கு ஒருவர் உத்தரவாதம் கொடுப்பதையும் குழுக் கடன்களுக்கான வாய்ப்புகளையும் வங்கி வழங்கியுள்ளது.
பெண்கள் தங்களுடைய வங்கி சேமிப்பு, முதலீடுகள் ஆகியவற்றைப் பாதுகாப்பானவையாகக் கருதுகின்றனர்.
சுனந்தா ஃபத்தாரே, மஸ்வத் சந்தையில் காய்கறிகளை விற்கிறார். முன்பு, அவர் பொருட்களை வாங்குவதற்காக கந்துவட்டிக்காரர்களிடம் கடன் வாங்குவார். ஆனால், வட்டிச்சுமை அவருக்கு அதிகமாகிக் கொண்டிருந்ததால், வங்கியின் பக்கம் திரும்பினார்.
சில ஆண்டுகளுக்கு முன்பு அவர் தனது சேமிப்பை ஒரு சிட் ஃபண்ட் திட்டத்தில் முதலீடு செய்து அனைத்தையும் இழந்தார். இதன் விளைவாக அவர் ஒரு மதிப்புமிக்க பாடத்தைக் கற்றுக்கொண்டதாகக் கூறுகிறார்.
“நான் நிறைய பணத்தை இழந்துவிட்டேன். இப்போது நான் அத்தகைய வாய்ப்புகளின் பக்கம் செல்ல மாட்டேன். என் பணம் இப்போது வங்கியில் உள்ளது,” என்று கூறுகிறார். சுனந்தாவின் பேரன்கள் எட்டு மற்றும் பத்தாம் வகுப்பில் படிக்கிறார்கள். அவர்களுக்காக பல்வேறு வங்கித் திட்டங்களில் அவர் பணத்தைச் சேமித்துள்ளார்.
வங்கி அவர்களுக்கு நிதி ஸ்திரத்தன்மையை வழங்கியது மட்டுமின்றி, வெளியுலகத்தைத் தெரிந்துகொள்வதற்கான வாய்ப்பையும் வழங்கியது.
வங்கியின் தலைவி சேத்னா சின்ஹா, கேபிசிக்கு விருந்தினராக அழைக்கப்பட்டார். மேலும் சில பெண்கள் அவருடன் சென்றனர். அவர்களில் ஒருவர் சுனந்தா ஃபத்தாரே. அவர் மும்பை பயணம், ஓபராய் டவர்ஸில் தங்கியிருந்தது குறித்துப் பரவசமாக இருப்பதாகக் கூறுகிறார்.
“நான் அமிதாப் பச்சனை சந்தித்து கை குலுக்கினேன். ஒரு செல்ஃபி கூட எடுத்தோம்,” என்றவருக்கு டெல்லிக்கான தனது விமானப் பயணம் மறக்க முடியாததாக இருந்தது என்கிறார். அவருக்கு அமெரிக்கா செல்ல வேண்டுமென்ற கனவு உள்ளது.
வீட்டு வாசலுக்கு வந்த வங்கி
வங்கிகளும் நிதிச் சேவைகளும் அவர்களைச் சென்றடைவதை உறுதி செய்ய, வங்கிகள் மக்களைச் சென்றடைய வேண்டும். மான் தேஷி வங்கி, கிராமப்புற, தொலைதூர மற்றும் வறட்சியால் பாதிக்கப்படும் பகுதிகளில் அவர்களுடைய வீட்டு வாசலிலேயே வங்கி சேவையை வழங்கத் தொடங்கியுள்ளது. தொலைதூர கிராமங்களுக்குச் சென்று மக்களின் வீடுகளிலும் பண்ணைகளிலும்கூட சேவைகளை வழங்கும் வங்கி அதிகாரிகளை அவர்கள் நியமித்துள்ளனர். கணக்கு தொடங்கும் பணிகள், பணம் டெபாசிட் செய்வது, குறிப்பிட்ட அளவு பணத்தைத் திரும்பப் பெறுவது போன்ற சேவைகளை அவர்கள் வழங்குகின்றனர்.
இந்த முறையில் அவர்கள் பணம் எடுக்கும்போது, அவர்களுக்கு குறுஞ்செய்தியின் மூலம் தகவலும் அனுப்பப்படுகிறது.
வங்கி டிஜிட்டல் கல்வியறிவு திட்டத்தையும் தொடங்கியுள்ளது. பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட வேன் கிராமங்களுக்குச் சென்று, ஏடிஎம்களில் பணம் எடுப்பது எப்படி, அவ்வாறு செய்யும்போது என்னென்ன முன்னெச்சரிக்கைகள் எடுக்க வேண்டும், யுபிஐ செயலிகளை எப்படிப் பயன்படுத்துவது போன்ற பயிற்சிகளை வழங்குகிறது.
ரூபாலி ஷிண்டே, பாரம்பரிய தோல் இசைக்கருவிகளை உருவாக்கும் தொழிலை நடத்தி வருகிறார். ஊரடங்கின்போது அவர் டிஜிட்டல் பரிவர்த்தனைகளின் மதிப்பை உணர்ந்தார். அவற்றைப் பற்றி மற்ற பெண்களுக்கும் கற்பிக்க நினைத்தார். இப்போது அவர் வங்கியின் டிஜிட்டல் கல்வியறிவு திட்டத்தை வழிநடத்துகிறார்.

எதிர்கால சவால்கள்
மான் தேஷி வங்கி இப்போது உலகின் முதல் மகளிர் கூட்டுறவு டிஜிட்டல் வங்கியாக மாற விரும்புகிறது. இருப்பினும், அப்படிச் செய்வதில் பல சிரமங்கள் உள்ளன. கிராமப்புற மக்கள் எதிர்கொள்ளும் பிரச்னைகளுக்குச் சரியான தீர்வு காண்பதே முக்கிய சவாலாக உள்ளது.
“இந்தப் பயணத்தில் நான் ஒரு விஷயத்தை உணர்ந்துகொண்டேன். ஏழை மக்களுக்கு ஒருபோதும் மோசமான தீர்வுகளை வழங்காதீர்கள். அவர்கள் மிகவும் புத்திசாலிகள். அவர்களால் என்ன முடியும், எது தேவை என்பதை அவர்கள் புரிந்துகொள்கிறார்கள். இருப்பினும், தொழில்நுட்பம் நகரங்களிலேயே குவிந்துள்ளது.
சான்றாக, இன்று நாம் பரிவர்த்தனை செய்யும்போது குறுஞ்செய்தியைப் பெறுகிறார்கள். எங்கள் பெண்களால் படிக்க முடியாததால், அந்தக் குறுஞ்செய்தியைப் படித்துக் காட்டும் வசதி வேண்டும் என்று அவர்கள் வாதிடுகிறார்கள். இதன் விளைவாக, அத்தகைய கருத்துகளைக் கணக்கில் எடுத்துக்கொண்டு தீர்வுகளை உருவாக்க வேண்டும்.
மற்றொரு மாற்றமாக, சமூக நலன்களுக்காகப் பணத்தை முதலீடு செய்யத் தயாராக இருக்கும் சமூக முதலீட்டாளர்கள் இப்போது இந்தத் துறைக்குள் வர வேண்டும்.,” என்கிறார் சேத்னா.
“கிராமப்புற இந்திய பெண்களுக்கு அறிவுச் செல்வம் உள்ளது. அதை உலகம் முழுவதும் பரப்பும் ஒரு பல்கலைக்கழகம் இருக்க வேண்டும். இந்த கிராமத்தில் பெண்கள் ஒரு வங்கியை நிறுவ வேண்டும் எனக் கனவு கண்டார்கள். அது இப்போது வெற்றிகரமாக இயங்குகிறது என்பதை அது உலகுக்குத் தெரிவிக்கும்.”
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












