ஜஹான் ஆரா: ஆடம்பர தங்கும் விடுதிகள், மசூதிகள் கட்டிய உலகின் பணக்கார இளவரசி

பட மூலாதாரம், MUSEUM OF FINE ARTS, BOSTON
- எழுதியவர், அஜிஜூல்லா கான்
- பதவி, பிபிசி உருது
ஜஹான் ஆரா ஒரு அழகான மற்றும் திறமையான இளவரசி. 'முகலாயர் காலத்தின் மிகவும் செல்வாக்கு மிக்க இளவரசி' மற்றும் 'உலகின் பணக்கார இளவரசி' என்று பல வரலாற்றாசிரியர்கள் அவரை நினைவுகூர்கிறார்கள். வரலாற்றில், அவரது 'அமாரத்' அதாவது அவரது ஆட்சி மற்றும் முகலாய காலத்தில் அவரது செல்வாக்கு மற்றும் ஆதிக்கம் பற்றி நிறைய எழுதப்பட்டுள்ளது.
ஆனால், தற்போதைய பாகிஸ்தானின் பெஷாவர் நகருக்கு இளவரசி ஜஹான் ஆரா சென்றதைப் பற்றியும், வணிகர்களின் வசதிக்காக அவர் காலத்தில் நவீன தங்கும் விடுதி கட்டப்பட்டது பற்றியும் அதிகம் குறிப்பிடப்படவில்லை. முகலாயர் காலத்தில் பெஷாவர் ஒரு பெரிய வணிக மையமாக இருந்தது. டெல்லியில் இருந்து மத்திய ஆசியா வரை பெஷாவர் வழியாக வர்த்தகம் நடைபெற்று வந்தது. பல்வேறு நாடுகளில் இருந்து வரும் வணிகர்களின் குழு இங்கு தங்கும். அவர்களின் வணிக செயல்பாடுகள் இங்கு நடைபெறும். இதற்குப் பிறகு வணிகர்கள் ஓய்வெடுத்து புத்துணர்ச்சி பெறுவர். பொருள்களை ஏற்றிவரும் கால்நடைகளுக்கும் ஓய்வு கிடைக்கும். பிறகு பயணக்குழு அடுத்த இலக்கை நோக்கி நகரும். பெஷாவரில் வணிகர்களுக்கான இந்த வசதிகள் ஜஹான் ஆரா வருவதற்கு முன்பு இல்லை. ஜஹான் ஆரா 1638இல் பெஷாவரை அடைந்தார். அங்கு அவரது காலத்தில் ஒரு பெரிய அறிவிப்பை செய்தார்.

சாராய் ஜஹான் அரா பேகம்
ுஇங்குள்ள மக்களின் பிரச்னைகளை ஜஹான் ஆரா பார்த்தார். குறிப்பாக வியாபாரிகள் தங்குவதில் உள்ள பிரச்னைகளை பார்த்து இங்கு நவீன சத்திரம் கட்டுவதாக அறிவித்தார். விடுதியின் பணி 1638இல் தொடங்கியது. இது 1641 இல் முடிக்கப்பட்டது. இந்த கட்டிடம் வரலாற்று புத்தகங்களில் 'கேரவன் சராய்', 'சராய் ஜஹான் பேகம்' மற்றும் 'சராய் தோ தர்' என்ற பெயர்களால் நினைவுகூரப்படுகிறது. ”பெஷாவர் நகரின் முக்கியமான இடத்தில் ஜஹான் அரா பேகம் இந்த சத்திரத்தை கட்டினார். இது நகரின் கோட்டைக்குள் கட்டப்பட்டதால் மிகவும் பாதுகாப்பானது,”என்று இது குறித்து கைபர் பக்துன்க்வாவில் உள்ள தொல்லியல் துறை இயக்குனர் அப்துஸ் சமத் கான் கூறினார். இதில் குடியிருக்க அறைகள் மட்டுமின்றி, வியாபாரிகளுக்கு எல்லா விதமான வசதிகளும் செய்யப்பட்டிருந்தன. இந்த சத்திரம் நகரின் நடுவில் உள்ள 'கோர் கட்ரி' என்ற மிக உயரமான இடத்தில் கட்டப்பட்டது, அங்கு ஒவ்வொரு அறையின் முன்பும் ஒரு சிறிய வராண்டாவும், அறைக்கு அருகே பெரிய வரவேற்பறையும் கட்டப்பட்டன. வியாபாரிகள் வரவேற்பறையில் அமர்ந்து தங்கள் ஒப்பந்தங்களை செய்து கொண்டனர். அதுமட்டுமின்றி, சரக்குகளை ஏற்றிச் செல்லும் கால்நடைகள் ஓய்வெடுக்கவும் தனி இடம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
தண்ணீருக்காக ஒரு கிணறும் அதனுடன் அழகிய மசூதியும் இருந்தன.
"இந்த விடுதியில் பல அறைகள் இருந்தன. அவற்றில் 140 மட்டுமே பயன்படுத்தக்கூடியதாக இருந்தன," என்று கோர் கட்ரியின் பொறுப்பாளர் நூர் கான் பிபிசியிடம் கூறினார்.
பெஷாவரில் அந்தக் காலத்தில் மொத்தம் எட்டு சத்திரங்கள் இருந்ததாகவும், அங்கு வணிகர்கள் மற்றும் பிற பகுதிகளில் இருந்து வருபவர்கள் தங்கியிருந்ததாகவும், ஆனால் அவற்றில் உள்ள வசதிகள் ஆரா கட்டிய சத்திரத்தில் இருந்த அளவுக்கு இல்லை என்றும் அவர் கூறினார்.

பட மூலாதாரம், HULTON ARCHIVEHULTON ARCHIVE
ஜஹான் ஆரா யார்?
முகலாயர் காலத்தின் முக்கியமான பெண்களில் ஆரா பேகம் முதலிடத்தைப் பெற்றுள்ளார். அவர் ஷாஜஹான் என்று அழைக்கப்பட்ட ஷஹாபுதீன் முகமது குர்ரம்மின் மூத்த மகள். அவரது தாயார் பெயர் 'மும்தாஜ் மஹால்' என்று அழைக்கப்பட்ட அர்ஜுமந்த் பானோ பேகம் ஆவார். ஷாஜகானின் மூத்த மற்றும் 'செல்ல மகள்' ஆரா. அவருக்கு 'பாட்ஷா பேகம்' மற்றும் 'ஃபாத்திமா ஜமான் பேகம்' போன்ற மரியாதைக்குரிய பெயர்களும் வழங்கப்பட்டன. "பெஷாவர் அல்லது அதற்கு அப்பால் ஜஹான் ஆரா பேகத்தின் காலத்தைப் பற்றி எங்கும் அதிகம் குறிப்பிடப்படவில்லை. முகலாயர் கால வர்த்தகத்தின் கோணத்தில் பெஷாவர் ஒரு முக்கியமான நகரமாக இருந்தது. ஜஹான் ஆரா அந்த காலகட்டத்தில் ஈர்க்கக்கூடிய ஆளுமையுடன் திகழ்ந்தார்," என்று பிரபல வரலாற்றாசிரியரும் தொல்பொருள் ஆய்வாளருமான அலி ஜான் பிபிசியிடம் தெரிவித்தார்.
ஆரா பேகம் மக்கள் நலப் பணிகளில் அதிக கவனம் செலுத்தியதாக வரலாற்று நூல்கள் குறிப்பிடுகின்றன. டெல்லியிலும் பெரிய அளவில் மக்கள் நலப் பணிகளை அவர் செய்தார். மசூதிகள் கட்டினார். அவற்றுக்கான பொருளாதாரமும் ஏற்பாடு செய்யப்பட்டது. அவைகளுக்கென வக்ஃப்கள் (நிர்வாக அமைப்புகள்) நிறுவப்பட்டன. மசூதிகளை ஒட்டிய சந்தையின் கடைகளில் இருந்து அவற்றுக்கான பணம் வந்தது. இந்த வருமானத்திலிருந்து, மசூதியின் இமாம், முவாஸின் (அஸான் அழைப்பவர்), கதீஃப் (சொற்பொழிவு ஆற்றுபவர்) மற்றும் பிற ஊழியர்களுக்கு சம்பளம் வழங்கப்பட்டது. அதே பணம், மசூதியின் பழுதுபார்ப்பு மற்றும் பிற வேலைகளுக்கும் செலவிடப்பட்டது.
வியாபாரம் செய்த இளவரசி
ஜஹான் ஆராவுக்கு அவரது தாய் மும்தாஜ் மஹால் மற்றும் தந்தை ஷாஜஹான் ஆகியோர் சொத்துகளில் இருந்து பெரும் பங்கு கொடுக்கப்பட்து. ரொக்கத் தொகையுடன் கூடவே தோட்டங்களில் இருந்து வரும் வருமானமும் இதில் அடங்கும். அவரது உடன்பிறப்புகளை ஒப்பிடும்போது பெற்றோரின் சொத்துக்களில் இருந்து மிகப்பெரிய பங்கை அவர் பெற்றார். தாய் காலமான பிறகு ஆரா தனது உடன்பிறப்புகளை கவனித்துக்கொண்டார். ஆனால் பின்னர் அதிகாரப் போராட்டத்தில் சகோதரர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டது. ஜஹான் ஆரா மூத்த சகோதரர் தாரா ஷிகோவுக்கு ஆதரவாக இருந்தார் என்று வரலாற்று பதிவுகள் கூறுகின்றன. ஆனால் அதே நேரத்தில் ஔரங்கசீப் தனது வலிமை மூலம் ஆட்சியைக் கைப்பற்றினார். இது தொடர்பாக பல போர்களும் நடந்தன.
கோர் கட்ரி என்றால் என்ன?
பெஷாவரின் உட்பகுதியில் உள்ள மிக உயரமான இடம் கோர் கட்ரி. இந்த சொல்லின் பொருள் 'போராளிகளின் கல்லறை' என்பதாகும் என்று அலி ஜான் கூறுகிறார். இந்த இடத்தின் வரலாறு பண்டைய பெஷாவர் வரலாற்றைப் போலவே பழமையானது. இந்த நகரம் பொது யுகத்துக்கு முன்பே மக்கள் வசிக்கும் நகரமாக இருந்தது. ஏழாயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய நாகரிகத்தின் தொல்பொருள் எச்சங்கள் பெஷாவரில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன என்று சில நிபுணர்கள் கூறுகின்றனர். "இங்கு பௌத்த மதத்தின் தொல்பொருள் எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. புத்தரின் 'யாசக கிண்ணமும்' இங்கு வைக்கப்பட்டிருந்தாக வரலாற்று புத்தகங்களில் இருந்து அறியப்படுகிறது." என்று அலி ஜான் ’கோர் கட்ரி’ பற்றி கூறினார். பெளத்த மதத்தைத் தவிர, பண்டைய இந்து நாகரிகத்தின் இடிபாடுகளும் இங்கு கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. பல்வேறு நாகரிகங்களைச் சேர்ந்த மக்கள் இங்கு வாழ்ந்தனர். முகலாயர் காலத்தில் ஆட்சியாளர்கள் இந்த இடத்தின் மீது சிறப்பு கவனம் செலுத்தினர். "முகலாயப் பேரரசர் ஜாஹிருதீன் பாபர் தனது வாழ்க்கை வரலாற்றான 'பாபர்நாமா'வில் 1525 நவம்பர் 17 அன்று, இந்தியாவைக் கைப்பற்ற வேண்டும் என்று நினைத்து எனது படையை விரிவுபடுத்தினேன் என்று எழுதியுள்ளார்,” என்று அலி ஜான் கூறினார். பெஷாவரை அடைந்ததும், பாபர் கோர் கட்ரியை பார்வையிட்டார் என்று அலி ஜான் குறிப்பிட்டார். "இங்கே (கோர் கட்ரியில்) வழிபடுபவர்களுக்காக இருக்கும் இருண்ட, குறுகலான சில்லாகாக்கள் (தியானம் செய்யும் இடங்கள்) உலகில் எங்கும் இருக்காது. கதவு வழியாக நுழைந்து ஒரு படி அல்லது இரண்டு படிகளில் இறங்கிய பிறகு, முதலில் வளைத்து, பின்னர் ஊர்ந்து முன்னேற வேண்டும்,”என்று பாபர் எழுதியுள்ளார். ”இங்கே வெளிச்சம் இல்லாமல் உள்ளே போக முடியாது. இது தவிர, ஜாயாரத் (யாத்திரை) அல்லது வணங்க வருபவர்களின் தலை மற்றும் தாடியில் நீண்ட முடி இருப்பதைக் காணலாம்.”

கோர் கட்ரிக்கும் கோரக்நாத்துக்கும் உள்ள உறவு
இந்த இடத்தில் கோரக்நாத் என்ற இந்து வைத்தியர் அமர்ந்திருந்ததாகவும், சிகிச்சைக்காக வெகு தொலைவில் இருந்து மக்கள் அவரிடம் வந்தாகவும் வரலாற்று பதிவுகளில் கூறப்பட்டுள்ளது. கோரக்நாத் என்ற பெயரில் ஒரு கோயிலும் இங்கு நிறுவப்பட்டது. வைத்தியர் கோரக்நாத் இங்கே இருந்ததாக குறிப்பிடப்படும் அந்த காரணத்துக்காகவே கோர் கட்ரி என்ற பெயர் வந்ததாகவும் சொல்லப்படுகிறது.
கோர் கட்ரிக்கு உள்ளே செல்ல இரண்டு பெரிய கதவுகள் உள்ளன. '' இந்த கதவுகள் காரணமாக ஆரா சத்திரம் 'சராய் தோ தர்' என்றும் அழைக்கப்படுகிறது. இந்த பகுதியில் ரஞ்சித் சிங் ஆட்சி வந்தபோது, நகரை நிர்வகிக்க அவரும் இந்த இடத்தை தேர்வு செய்தார். இங்கு நகராட்சி அலுவலகம் நிறுவப்பட்டது,” என்று அப்துஸ் சமத் குறிப்பிட்டார்.
இதுதவிர நகரின் நிர்வாக அதிகாரியும் இந்த இடத்தில் அமர்ந்து பணியாற்றுவார். இந்த வாயில் மிகவும் உயரமானது. வாயிலுக்கு மேலே தங்கும் அறை இருந்தது. இங்கு இருக்கும் சத்திரத்தின் அறைகள் மிகவும் நன்றாக உள்ளன. இந்த அறைகள் ஒரு வரிசையில் நாலாபுறமும் பரவி ஒரு அழகான காட்சியை அளிக்கின்றன. நடுவில் பெரிய மரங்களும் தோட்டங்களும் இருக்கும் ஒரு கோயில் உள்ளது. ஆங்கிலேயர் காலத்தில், தாசில் கமிட்டி அலுவலகங்கள், தீயணைப்பு நிலையங்கள் இங்கு கட்டப்பட்டன. தீயணைப்பு வாகனங்கள் இன்றும் அங்கு இருப்பதை பார்க்கமுடியும். 2000 ஆம் ஆண்டிற்குப் பிறகு, சுற்றுலாவை மேம்படுத்தவும் தொல்லியல் பாதுகாப்பிற்காகவும் ஒரு பத்தாண்டு திட்டம் தொடங்கப்பட்டது. இந்த கட்டிடங்கள் மற்றும் பிற தொல்பொருள் இடிபாடுகளை பாதுகாப்பதே இதன் நோக்கம். விடுதி அறைகள் கடைகளாக மாற்றப்பட்டன. பாரம்பரிய கைவினைஞர்கள் இங்கு அழைக்கப்பட்டனர். இது தவிர தொல்லியல் முக்கியத்துவம் வாய்ந்த சில இடங்களில் அகழ்வாராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டன. அதிலிருந்து பல்வேறு வரலாற்றுப் பொருட்களும் கிடைத்தன. இவை அனைத்தும் கோர் கட்ரியில் அமைந்துள்ள ஒரு சிறிய அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளன. காலப்போக்கில் கைவினைஞர்கள் அந்த கடைகளை விட்டு வெளியேறினர். இப்போது மீண்டும் இந்த அறைகள் அல்லது கடைகள் இடிபாடுகளாக மாறத் தொடங்கியுள்ளன. எனவே, இந்தக் கட்டடங்களை பாதுகாக்க தொடர் முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












