ஈரோடு கிழக்கு: திமுக கூட்டணி வேட்பாளராக ஈவிகேஎஸ் இளங்கோவன் தேர்வாக என்ன காரணம்?

பட மூலாதாரம், facebook/E.V.K.S.Elangovan
- எழுதியவர், பிரமிளா கிருஷ்ணன்
- பதவி, பிபிசி தமிழ்
ஈரோடு கிழக்கு தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக இருந்த காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த திருமகன் ஈ.வெ.ரா, கடந்த ஜனவரி 4ஆம் தேதி மாரடைப்பால் காலமானார். அவரின் மறைவை அடுத்து, இடைத்தேர்தல் அறிவிப்பு வந்ததும், திருமகன் ஈ.வெ.ராவின் தந்தையும், மூத்த காங்கிரஸ் தலைவருமான ஈவிகேஎஸ் இளங்கோவன் தனது இளைய மகன் சஞ்சய் சம்பத்துக்கு சீட் ஒதுக்க கோரியிருப்பதாகத் தெரிவித்தார். ஆனால் காங்கிரஸ் கட்சி மீண்டும் ஈவிகேஎஸ் இளங்கோவனையே களமிறக்குவதாக அறிவித்தது.
ஈரோடு கிழக்கு தொகுதிக்கான சட்டமன்ற இடைத்தேர்தல் உள்பட பல சட்டமன்ற மற்றும் நாடாளுமன்றத் தேர்தல்களில் அந்த தொகுதியில் பதவியிலிருந்த நபரின் குடும்ப உறுப்பினர் அல்லது அவருடைய உறவினரை அடுத்தமுறை தேர்தலில் வேட்பாளராக தேர்வு செய்யும் நடைமுறையை கேள்விக்கு உட்படுத்தவேண்டும் என அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.
இந்தியாவில் பல மாநிலங்களிலும் இந்த நடைமுறை இருப்பது குறித்து, தேசிய அளவில் விமர்சனங்கள் எழுந்துள்ளன. தமிழ்நாட்டில் ஈரோடு கிழக்கு தொகுதி தேர்தல் களத்தில் காங்கிரஸ் கட்சி மீண்டும் ஈவிகேஎஸ் இளங்கோவனை நிறுத்தியுள்ளதால், குடும்ப அரசியல் நடைமுறை மேலும் கவனம் பெறுகிறது.
இந்தியாவில் பெரிதும் மதிக்கப்படும் எழுத்தாளர் மற்றும் அரசியல் விமர்சகரான ராமச்சந்திர குஹா சமீபத்தில் அரசியல் குறித்த விவாதம் ஒன்றில், இந்தியாவில் பல அரசியல் கட்சிகள் (political parties) குடும்ப நிறுவனங்களாக (family firms) செயல்படுகின்றன என்று காட்டமாகப் பேசினார்.
இந்தியாவில் தேசியக் கட்சிகள், மாநிலக் கட்சிகள் என்ற பாகுபாடு இல்லாமல் எல்லா கட்சிகளிலும் மீண்டும் மீண்டும் குடும்ப உறுப்பினர்களை முன்னிறுத்துவது என்பது ஜனநாயகத்திற்கு எதிரானது என்றார். சினிமா,மருத்துவம், விளையாட்டு உள்ளிட்ட துறைகளில் வாரிசுகளுக்கு முன்னுரிமை அளிக்கும் நடைமுறை காணப்பட்டாலும், அரசியலில் இந்த முன்னுரிமை மோசமான விளைவுகளை ஏற்படுத்தும், ஜனநாயகத்திற்கு ஆபத்தாக அமையும் என்றும் விமர்சித்தார்.
ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் செய்த அரசியல் பயணம்
தமிழ்நாட்டில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நபர்கள் தேர்தலை ஆக்கிரமிப்பதை பாரக்கமுடிகிறது. அதற்கு சில உதாரணங்கள்:
2001ல் திமுகவின் சார்பாக ஆலங்குளம் தொகுதியில் ஆலடி அருணா போட்டியிட்டுத் தோற்றார். 2004ல் அவர் கொலைசெய்யப்பட்டார். அவரது மகளும் மருத்துவரான பூங்கோதை ஆலடி அருணா 2006ல் ஆலங்குளம் தொகுதியில் போட்டியிட்டு வென்றார்.
2001ல் தூத்துக்குடி தொகுதியில் திமுக சார்பாக பெரியசாமி போட்டியிட்டுத் தோற்றார். ஆனால் அதே தொகுதியில் 2006ல் அவரது மகள் கீதா ஜீவன் நிறுத்தப்பட்டார்.
அவரும் வெற்றி பெற்றார். அதிமுகவில் ஓ.பன்னீர்செல்வம் பெரியகுளம் மற்றும் போடிநாயகனுர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார். கடந்த 2019 நாடாளுமன்றத் தொகுதியில் அவரது மகன் ரவீந்திரநாத் நிறுத்தப்பட்டார்.
அதிமுகவைச் சேர்ந்த டி ஜெயக்குமார் ராயபுரம் தொகுதியில் மட்டும் ஆறு முறை போட்டியிட்டு, ஐந்து முறை வெற்றி பெற்றுள்ளார். அவரது மகன் ஜெயவராதன் 2014ல் தென் சென்னை நாடாளுமன்றத் தொகுதியில் நிறுத்தப்பட்டார். அவர் வெற்றி பெற்றார்.
ஈவிகேஎஸ் இளங்கோவனை ஏன் காங்கிரஸ் முன்னிறுத்துகிறது?
தமிழ்நாட்டைப் பொறுத்தவரை, ஈவிகேஎஸ் இளங்கோவன் இதுவரை ஒரு முறை சட்டமன்ற உறுப்பினராகவும்(சத்தியமங்கலம் தொகுதி,1984) ஒரு முறை நாடாளுமன்ற உறுப்பினராகவும்(கோபிசெட்டிபாளையம் தொகுதி,2004) வெற்றிபெற்றுள்ளார். இரண்டு முறை நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டு தோல்வியைத் தழுவியுள்ளார்.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வேட்பாளர் குறித்து முன்னர் ஊடகத்தினரிடம் பேசிய இளங்கோவன், இளைய தலைமுறைக்குதான் வழிவிட முடிவு செய்திருப்பதாகத் தெரிவித்தார். தனது இளைய மகன் சஞ்சய் சம்பத்துக்கு வாய்ப்பு கேட்டுள்ளதாகவும் வெளிப்படையாகத் தெரிவித்தார். ஆனால், காங்கிரஸ் மேலிடம், மீண்டும் இளங்கோவனை வேட்பாளராக அறிவித்தது.
இடைத்தேர்தலில் போட்டியிடப்போவதில்லை என்று ஈவிகேஎஸ் இளங்கோவன் அறிவித்தபோதும்கூட, காங்கிரஸ் கட்சி அவரை வேட்பாளராக அறிவித்தது குறித்தும், வாரிசு அரசியல் குறித்தும் பல கேள்விகளுக்கு கட்டாயம் பதில் அளிப்பதாகக் கூறிய ஈவிகேஎஸ் இளங்கோவன், ''உங்கள் எல்லா கேள்விகளுக்கும் நான் பதில் சொல்கிறேன். தயாராக இருக்கிறேன். பிப்ரவரி 3ம்தேதி வேட்பாளர் மனுவைத் தாக்கல் செய்துவிட்டு பதில் சொல்கிறேன்,''என்கிறார். காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினரான செல்வப்பெருந்தகை ஈரோடு கிழக்கு தொகுதியில் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளார். வாக்காளர்களை நேரில் சந்திக்கும்போது, அவர்கள் காங்கிரஸ் கட்சியின் தேர்வு சரிதான் என்பதை உணர்த்துவதாகக் கூறுகிறார்.

''கடந்த ஆண்டு ராஜஸ்தான் மாநிலத்தில் எங்கள் கட்சியின் முக்கியமான கூட்டம் நடைபெற்றது. அதில் குடும்ப அரசியல் பற்றி மிக விரிவாக விவாதிக்கப்பட்டது. ஒவ்வொரு குடும்பத்தில் இருந்து ஒரு நபருக்கு தேர்தலில் போட்டியிடுவதற்கு வாய்ப்பு தரலாம்.
மற்றவர்கள் கட்சியில் இருக்கலாம் என்று முடிவு செய்யப்பட்டது. அதனால், தற்போது ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டிருப்பதில் தவறில்லை.
நாங்கள் பிரசாரத்திற்குச் செல்லும் இடங்களில் இளங்கோவனுக்கு நல்ல வரவேற்பு உள்ளது.வாக்காளர் விரும்பும் வேட்பாளரை நாங்கள் நிறுத்தியுள்ளோம்,''என்கிறார் செல்வப்பெருந்தகை.
''ஈரோடு கிழக்கு தொகுதியின் வெற்றி திமுகவுக்கு அவசியம்''
திமுக-காங்கிரஸ் கூட்டணியில், காங்கிரஸ்தான் ஈரோடு கிழக்கு தொகுதியில் போட்டியிடும் என திமுக அறிவித்தது. அதிமுகவில் பிளவுபட்டுள்ள ஓ பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிச்சாமி அணிகள், உச்சநீதிமன்றத்தில் நடந்துவரும் வழக்கில் கட்சி பிரதிநிதித்துவம் யாருக்குக் கிடைக்கும் என்ற தீர்ப்பை எதிர்பார்த்துள்ளனர்.
இருந்தபோதும், இருவரும் போட்டியிடுவதை உறுதிசெய்துள்ளனர். இந்நிலையில், காங்கிரஸ் கட்சி மீண்டும் இளங்கோவனை தேர்வு செய்தது குறித்து மூத்த பத்திரிகையாளர் இளங்கோவனிடம் கேட்டோம்.
''ஈவிகேஎஸ் இளங்கோவன் ஒரு மூத்த காங்கிரஸ் தலைவர், புதிய வேட்பாளர் ஒருவரை நிறுத்துவதைவிட, இவரை நிறுத்துவதுதான் சரியான மற்றும் பாதுகாப்பான தேர்வாக இருக்கமுடியும் என்பதால்தான் காங்கிரஸ் இதுவரை நிறுத்துகிறது.
ஈரோடு தொகுதியில் பெரியார் வாரிசுகளாக இளங்கோவன் குடும்பத்தினர் அடையாளம் காணப்படுவதும் ஒரு முக்கிய காரணம். பல ஆண்டுகளாக அரசியலில் இருக்கும் ஒரு குடும்பத்திலிருந்து வரும் வேட்பாளர் என்பதால் வாக்காளர் மத்தியில் அறிமுகம் தேவையில்லை,''என்கிறார் இளங்கோவன்.
இந்த தேர்தலில் காங்கிரஸ் மட்டுமல்ல, திமுகவும் இளங்கோவன் போட்டியிடுவதை விரும்பியது என்கிறார் இளங்கோவன்.
''திமுக ஏற்கனவே இந்த தொகுதியைக் காங்கிரஸ் போட்டியிடும் தொகுதி என முடிவுசெய்திருந்தது. புதிய திமுக வேட்பாளரைவிட, வாக்காளர்களுக்குப் பரிச்சயமான இளங்கோவனை திமுகவும் விரும்பியது.
ஒருவேளை அதிமுக சார்பாக, எடப்பாடி பழனிசாமி அணி, ஈரோடு கிழக்கு தொகுதியில் ஆதிக்க சாதியாக இருக்கும் ஒருவரை நிறுத்தினால், ஈவிகேஎஸ் இளங்கோவன் அந்த வேட்பாளருக்கு நல்ல எதிர் வேட்பாளராக இருப்பார் என்று திமுக நம்புகிறது.
அதனால், ஈவிகேஎஸ் இளங்கோவன் திமுக-காங்கிரஸ் கூட்டணியை மேலும் வலுப்படுத்தும் வேட்பாளராக மாறியுள்ளார்,''என்கிறார் அவர்.
மேலும், இதுபோன்ற இடைத்தேர்தல்களில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நபரை முன்னிறுத்துவது என்பது பல காலமாக பின்பற்றப்படுகிறது என்றும் வாக்காளர்கள் புதிய வேட்பாளருக்கு ஆதரவு தருவது மிகவும் அரிது என்பதால்தான் இந்த முடிவை கட்சிகள் எடுத்துள்ளன என்றும் கூறுகிறார். பாரபட்சமின்றி திமுக, அதிமுக என இரண்டு கட்சிகளிலும் உள்ள மூத்த தலைவர்களின் மகன்/மகள் என குடும்ப உறுப்பினர்களுக்கு வாய்ப்பு தருவது புதிதில்லை என்கிறார்.
''தேர்தல் வெற்றி என்பதுதான் அரசியல்கட்சிகளின் வெற்றியாகப் பார்க்கப்படுகிறது. அதனால், குடும்ப உறுப்பினர் என்ற ஒரு காரணத்தை அரசியல் கட்சிகள் விமர்சனமாகக்கூடப் பார்ப்பதில்லை,''என்கிறார் அவர்.
திமுகவின் பதில் என்ன?

தொடர்ந்து குடும்ப உறுப்பினர்களை தேர்தலில் முன்னிறுத்துவது ஏன் என்று திமுகவின் மூத்த தலைவர்களில் ஒருவரான டிகேஎஸ் இளங்கோவனிடம் கேட்டோம். குறிப்பாக ஈவிகேஎஸ் இளங்கோவனை தேர்வு செய்தது குறித்து கேட்டபோது, தகுதி நிறைந்த வேட்பாளர் மற்றும் வெற்றி வாய்ப்புகள் நிறைந்த வேட்பாளர் என்ற காரணங்களால்தான் அவர் தேர்வானதாகச் சொல்கிறார்.
''ஈவிகேஎஸ் இளங்கோவன் பெரியாரின் பேரன். இதற்கு முன்னர் ஒன்றிய அமைச்சராக இருந்திருக்கிறார். சட்டமன்ற உறுப்பினராகவும் இருந்திருக்கிறார். அவருக்கான வெற்றி வாய்ப்புகள் மற்றவர்களைவிட அதிகம் என்பதால்தான் அவரை தேர்வு செய்தார்கள்.
குடும்ப உறுப்பினர் என்பது ஒரு காரணம் என்றாலும், எல்லா நேரங்களிலும் அதுமட்டுமே காரணமாக இருக்காது. 1984ம் மற்றும் 1991ல் ஆயிரம் விளக்கு தொகுதியில் தற்போதைய முதல்வர் முக ஸ்டாலின் தோற்கடிக்கப்பட்டார்.
அவருக்கு அந்த தொகுதி தொடர்ந்து ஒதுக்கப்பட்ட போதும் தோல்வி கிடைத்தது. ஒவ்வொரு தேர்தலிலும் அரசியல் கட்சியாக எங்களுக்கு வெற்றியைத் தரும் வேட்பாளரை நிறுத்துவது வழக்கம். ஆனால் வாக்காளர்கள்தான் இறுதி முடிவு எடுப்பார்கள் என்பதற்கு இது ஒரு சாட்சி,''என்கிறார் டிகேஎஸ் இளங்கோவன்.
பிபிசி தமிழிடம் பேசிய வாக்காளர் மஞ்சுளா தான் இன்னும் வாக்களிப்பது குறித்த முடிவு செய்யவில்லை என்றும் குடும்ப உறுப்பினர்கள் அரசியலை ஆக்கிரமிப்பது பெரிய சிக்கல் இல்லை என்கிறார். மற்றொரு வாக்காளர் பாண்டியன், அரசியல் குடும்ப பின்னணி இல்லாத இளைஞர்களுக்கு வாய்ப்பு தருவது நல்லது என்கிறார்.
தீர்வு என்ன?

குடும்ப அரசியல் மற்றும் ஜனநாயகம் குறித்த ஆய்வில் ஈடுபட்டுள்ள ஆய்வாளர் லட்சுமணனிடம் பேசினோம். சென்னை வளர்ச்சி ஆராய்ச்சி நிறுவனத்தைச் சேர்ந்தவர் லட்சுமணன்.
''இந்தியாவில் பல மாநிலங்களில் குடும்ப உறுப்பினர்களை நிறுத்துவது என்பது சாதாரணமாக நடைபெறுகிறது. சுதந்திரத்திற்குப் பிறகு மாநிலக் கட்சிகளும், கம்யூனிஸ்ட், பாஜக உள்ளிட்ட கட்சிகளும் காங்கிரஸ் கட்சியிலிருந்த குடும்ப அரசியல் நடைமுறையைப் பெரிதும் விமர்சித்தனர்.
அப்போது கடுமையாக விமர்சித்த பல கட்சிகளில் தற்போது குடும்ப அரசியல் ஒரு பகுதியாகிவிட்டது. எல்லா கட்சிகளிலும் குடும்ப அரசியல் வந்துவிட்டதால், அதனைப் பலரும் பெரிதுபடுத்துவதில்லை,''என்கிறார் லட்சுமணன்.
ஜனநாயகம் என்பது மக்களுக்கான அரசியல் என்ற நிலை மாறிவிட்டது என்றும் மன்னராட்சியிலிருந்து குடும்ப அரசியல் செய்யும் கட்சிகளின் பிடியில் மக்கள் உள்ளனர் என்கிறார் அவர். பெரும்பான்மை மக்களிடம் அரசியல் புரிதலை ஊக்குவிக்காமல், வெறும் வாக்காளர்களாக மட்டுமே அரசியல்வாதிகள் மக்களைப் பயன்படுத்துவதால் குறைபாடு ஏற்பட்டுள்ளது என்றும் கூறுகிறார் லட்சுமணன்.
''இந்தியா மட்டுமல்ல, அண்டை நாடுகளான, பாகிஸ்தான், இலங்கை உள்ளிட்ட நாடுகளிலும் குடும்ப அரசியலுக்குப் பஞ்சம் இல்லை. அதனால், நம் நாட்டில் அரசியல் கட்சிகளில் தாங்களாகவே இந்த தவறை திருத்துவதைத் தவிர வேறு வழி இல்லை என்பதுதான் உண்மை,''என்கிறார் அவர்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












