பரளிக்காடு படகு சவாரி முதல் கேத்தரின் நீர்வீழ்ச்சி வரை - கோவையை சுற்றியுள்ள சுற்றுலா தலங்கள்

ஒரு அருவியின் புகைப்படம்
    • எழுதியவர், மோகன்
    • பதவி, பிபிசி தமிழ்

(இந்தக் கட்டுரை மறுபகிர்வு செய்யப்படுகிறது.)

பசுமை நிறைந்த கோவை மாவட்டத்தைச் சுற்றி பல்வேறு சுற்றுலா தலங்கள் உள்ளன. ஒரு நாள் பயணமாக சென்று வரக்கூடிய பெரிதும் அறியப்படாத இடங்கள் பற்றி இந்தக் கட்டுரையில் பார்ப்போம்.

கோவைக் குற்றாலம் - சிறுவாணி நீர் வீழ்ச்சி

கோவைக்கு மிக அருகில் உள்ள சுற்றுலாத் தளங்களில் கோவைக் குற்றாலமும் ஒன்று. அருவிகளுக்குப் பெயர் போன குற்றாலத்தை அடியொட்டி கோவைக் குற்றாலம் என்கிற பெயர் வந்துள்ளது. சிறுவாணி நீர்வீழ்ச்சிதான் பரவலாக இவ்வாறு அழைக்கப்படுகிறது.

கோவையில் இருந்து எளிதாக அடையக்கூடிய இடமாக கோவைக் குற்றாலம் அமைந்துள்ளது. கோடை வெயிலின் வெப்பத்தைத் தணிக்கவும் சிறிய தொலைவில் பைக் ரைடு செல்ல விரும்புபவர்களும் தேர்வு செய்யும் இடமாக இது உள்ளது.

கோவை குற்றாலம் - சிறுவாணி நீர் வீழ்ச்சி

நகரின் மையப்பகுதியான காந்திபுரத்தில் இருந்து 40 கி.மீ பயண தூரம். காந்திபுரத்திலிருந்து நேரடி பேருந்துகள் உள்ளன. சொந்த வாகனத்திலும் செல்லலாம்.

சாடிவயல் சோதனைச் சாவடியில் வாகனங்களை நிறுத்திவிட வேண்டும். நுழைவுச் சீட்டு பெற்ற பிறகு வனத்துறையினரின் வாகனத்தில் அழைத்துச் செல்வார்கள்.

அதன் பின்னர் சிறிது தூரம் காட்டுப் பகுதிக்குள் நடந்து சென்றால் கோவைக் குற்றாலத்தை அடையலாம். நொய்யல் நதி இங்குதான் தொடங்குகிறது. வெள்ளப்பெருக்கு ஏற்படும் காலங்களில் பொதுமக்கள் அனுமதிக்கப்படுவதில்லை.

கேத்தரின் நீர்வீழ்ச்சி

கேத்தரின் நீர்வீழ்ச்சி

கோவையில் வசிப்பவர்கள் தேநீர் குடிப்பதற்குக்கூட ஊட்டி வரை செல்வார்கள் எனப் பிரபலமாகச் சொல்லப்படுவது உண்டு. ஆனால் நீலகிரி மாவட்டத்தில் வழக்கமான இடங்களை விடவும் சாகசமான பயணங்களை மேற்கொள்ளும் இடங்களும் உள்ளன.

அதில் கேத்தரின் நீர்வீழ்ச்சியும் ஒன்று. கோத்தகிரியில் இருந்து ஏழு கிலோமீட்டர் தொலைவு வரை சென்று, அதன் பிறகு சுமார் ஒரு கிலோமீட்டர் தூரம் தேயிலைத் தோட்டங்கள் வழியாகக் காட்டிற்குள் பயணம் செய்தால் கேத்தரின் நீர்வீழ்ச்சியை அடையலாம். வனப் பகுதிக்குள் இருப்பதால் குளிரான வானிலையே இங்கு நிலவும்.

நீர்வீழ்ச்சியிலும் பற்களை நடனமாட வைக்கும் உறைகுளிர் வெப்பநிலையில் நீர் ஆர்ப்பரித்து ஓடும். காலை 9 மணி முதல் மதியம் 3 மணி வரை சுற்றுலாப் பயணிகள் செல்வதற்கு உகந்த நேரம்.

கொடிவேரி அணைக்கட்டு

கோவையில் இருந்து 65 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது கொடிவேரி அணைக்கட்டு. கோவையிலிருந்து ஒன்றரை மணிநேர பயணத்தில் கொடிவேரியை அடைந்துவிடலாம். ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிபாளையம் வட்டத்தில் அமைந்துள்ள கொடிவேரி தடுப்பணை பவானி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ளது.

கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் எளிதாக வந்து செல்லும் விதத்தில் மூன்று மாவட்டங்களுக்கும் மையமான இடத்தில் கொடிவேரி அணைக்கட்டு அமைந்துள்ளது.

நீர்வரத்து சரியாக உள்ள காலங்களில் பொதுமக்கள் அணைக்கட்டில் குளிக்க அனுமதிக்கப்படுகிறார்கள். 90களில் முக்கியமான படப்பிடிப்புத் தளமாகவும் கொடிவேரி விளங்கியுள்ளது. சின்னத்தம்பி திரைப்படத்தில் வரும் பெரும்பாலான காட்சிகள் இங்கு படமாக்கப்பட்டுள்ளன.

ஆனைக்கட்டி

ஆனைக்கட்டி

கோவையைச் சுற்றிப் பல்வேறு மலைவாசல் தலங்கள் இருந்தாலும் எளிதாக அடையக்கூடிய இடமாக ஆனைக்கட்டி உள்ளது. கோவையில் இருந்து 30 கி.மீ தொலைவில் தமிழ்நாடு - கேரளா எல்லையோரத்தில் ஆனைக்கட்டி அமைந்துள்ளது.

பழங்குடியின மக்கள் வசிக்கும் கிராமங்கள் ஆனைக்கட்டியைச் சுற்றிலும் அமைந்துள்ளன. இங்கு சுற்றுலா தலங்கள் அதிகளவில் இல்லை. இங்குள்ள மிதமான வானிலையை ரசிக்க வரும் சுற்றுலாப் பயணிகள் தனியார் ரிசார்ட்களில் தங்குவது வழக்கம். கோவையைச் சுற்றி பைக் ரைட் செல்ல விரும்புபவர்கள் தேர்வு செய்யும் இடங்களில் ஆனைக்கட்டியும் இடம்பெறும்.

பரளிக்காடு சூழல் சுற்றுலா

பரளிக்காடு

கோவை மாவட்டம் காரமடையில் அமைந்துள்ளது பரளிக்காடு சூழல் சுற்றுலா. கோவையிலிருந்து 60 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. பில்லூர் அணையையொட்டி அமைந்துள்ளது பரளிக்காடு கிராமம்.

இங்கு வனத்துறையால் சூழல் சுற்றுலா ஒருங்கிணைக்கப்படுகிறது. வாரத்தில் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டுமே அனுமதி. இணைய வழியாக மட்டுமே முன்பதிவு செய்யப்படுகிறது.

பரளிக்காடு

பரிசல் பயணம், பழங்குடியினர் விருந்து, ஆற்றுக் குளியல் என வனத்துறையால் முழுமையாக இந்தச் சுற்றுலா ஒருங்கிணைக்கப்படுகிறது.

கோவை மற்றும் அதன் சுற்று வட்டாரங்களில் உள்ளவர்கள் காடு, மலை சார்ந்து ஒரு நாள் சுற்றுலா சென்று வர ஏதுவான இடமாகப் பரளிக்காடு உள்ளது.

மலம்புழா அணை

மலம்புழா அணை

கோவையில் இருந்து 65 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது மலம்புழா அணை. கேரளாவின் பாலக்காடு மாவட்டத்தில் அமைந்திருந்தாலும் கோவையில் இருந்து எளிதாகச் செல்லும் இடமாக உள்ளது மலம்புழா அணை.

மலம்புழா அணை அருகே பூங்காவும் பல பொழுதுபோக்கு அம்சங்களும் உள்ளன.

படகுப் பயணம், கேபில் கார் பயணம் என சாகசம் நிறைந்த பல விஷயங்கள் இங்கு அமைந்துள்ளன. மலம்புழா அணை அருகே சிறிய நீர்வீழ்ச்சிகளும் அமைந்துள்ளன.

வால்பாறை

வால்பாறை

கோவையில் இருந்து ஒரு நிறைவான பயணம் செல்பவர்கள் தேர்வு செய்யும் பட்டியலில் தவிர்க்காமல் வால்பாறை முதலிடத்தில் இருக்கும்.

கோவையிலிருந்து 100 கிமீ தொலைவில் வால்பாறை அமைந்துள்ளது. பொள்ளாச்சியில் இருந்து 40 கிமீ மலைப்பாதையில் பயணம் செய்தால் வால்பாறையை அடையலாம்.

வால்பாறை செல்லும் வழியில் தேயிலைத் தோட்டங்கள் நிறைந்து பசுமை போர்த்திக் காணப்படும். மேல் சோலையாறு அணை, சின்ன கல்லார், நல்லமுடி வியூ பாயின்ட் ஆகியவை வால்பாறையில் பார்க்க வேண்டிய முக்கியமான இடங்கள்.

ஆழியாறு அணை, குரங்கு அருவி

கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் அமைந்துள்ளது ஆழியாறு அணை. கோவை - வால்பாறை செல்பவர்கள் அவசியம் வந்து செல்லும் இடமாகவும் ஆழியாறு அணை உள்ளது.

அணையின் மேல் பகுதியில் முழு நீளத்திற்கும் நடந்து செல்ல முடியும், அணையின் எழில்மிகு தோற்றத்தை முழுவதும் ரசிக்க முடியும் என்பதால் இளைஞர்கள் போட்டோ ஷூட் எடுக்கும் முக்கியமான இடமாகவும் ஆழியாறு அணை உள்ளது.

இங்கு பூங்கா, மீன் காட்சியகம் ஆகியவை தமிழ்நாடு மீன்வளத் துறையால் பராமரிக்கப்பட்டு வருகிறது. ஆழியாறு அணையில் இருந்து 5 கி.மீ தொலைவில் குரங்கு அருவி அமைந்துள்ளது. ஆழியாறு அணைக்கு வருபவர்கள் நிச்சயம் குரங்கு அருவிக்குச் செல்வார்கள்.

வெள்ளியங்கிரி மலையேற்றம்

வெள்ளியங்கிரி ட்ரெக்கிங்

கோவை மாவட்டம் போலுவாம்பட்டியில் வெள்ளியங்கிரி கோவில் அமைந்துள்ளது. வெள்ளியங்கிரி மலைக்குச் செல்ல ஆண்டுதோறும் மார்ச், ஏப்ரல், மே மாதங்களில் மக்கள் வனத்துறையால் அனுமதிக்கப்படுவார்கள்.

வெள்ளியங்கிரி ஏழு மலைகளைக் கொண்டுள்ளது. ஆறு கிலோமீட்டர் தூரம் மலைப் பாதைகளில் பயணித்து ஏழு மலைகளைக் கடந்து சென்றால் வெள்ளியங்கிரி மழை உச்சியை அடையலாம்.

பக்தர்கள் மட்டுமின்றி மலையேற்றம் செல்ல விரும்பும் பலரும் தேர்வு செய்யும் இடமாக வெள்ளியங்கிரி உள்ளது.

பாலமலை

பாலமலை

கோவை மாநகருக்கு அருகிலேயே அமைந்துள்ள ஒரு சிறிய மலைக் குன்றுதான் பாலமலை. இங்கு அரங்கநாதர் கோவில் ஒன்று அமைந்துள்ளது.

கோவை - மேட்டுப்பாளையம் சாலையில் பெரியநாயக்கன் பாளையத்தில் இருந்து கோவனூர் வழியாகச் சென்றால் பாலமலையை அடையலாம்.

நகரின் கூச்சல்களுக்கு நடுவே சிறிது நேரம் இளைப்பாற விரும்புவோர் இந்த இடத்தைத் தேர்வு செய்யலாம். பாலமலையில் நிலவும் மிதமான வெப்பநிலையையும் இயற்கைக் காட்சியையும் ரசித்துவிட்டு வரலாம்.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனல்
படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

உடுமலைப்பேட்டை

கோவையில் இருந்து 70 கி.மீ தொலைவில் உடுமலைப்பேட்டை அமைந்துள்ளது. ஆனைமலை புலிகள் காப்பகத்தின்கீழ் வரும் இந்தப் பகுதியில் திருமூர்த்தி அணை மற்றும் அமராவதி அணை முக்கியமான சுற்றுலாத் தலங்களாக அமைந்துள்ளன.

திருமூர்த்தி அணைக்கு மேலே பஞ்சலிங்க நீர்வீழ்ச்சி உள்ளது. நுழைவுச் சீட்டு பெற்றுக்கொண்டு செல்ல முடியும். 20 நிமிடங்கள் நடை பயணமாகச் சென்றால் நீர் வீழ்ச்சியை அடையலாம். திருமூர்த்தி அணையில் இருந்து 20 கி.மீ தொலைவில் அமராவதி அணை அமைந்துள்ளது.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு