You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
பிகாரில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட 10 வயது தலித் சிறுமி மரணம் - சிகிச்சையில் தாமதம் காரணமா?
- எழுதியவர், சிது திவாரி
- பதவி, பிபிசி செய்தியாளர்
பிகாரின் முசாஃபர்பூரில் 10 வயது தலித் சிறுமி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. பாட்னாவில் சிகிச்சையின் போது அச்சிறுமி உயிரிழந்தார்.
சிகிச்சையில் அலட்சியமாக இருந்ததாலேயே சிறுமி உயிரிழந்ததாக, பாட்னா மருத்துவக் கல்லூரி மருத்துவமனை நிர்வாகத்தின் மீது சிறுமியின் குடும்பத்தினர் குற்றம் சாட்டியுள்ளனர். ஆனால், சிறுமியை காப்பாற்ற தங்களால் முடிந்த அனைத்தையும் செய்ததாக மருத்துவமனை நிர்வாகம் கூறியுள்ளது.
இந்த சம்பவத்தைத் தொடர்ந்து, மாநிலத்தில் சட்டம்-ஒழுங்கு மற்றும் மருத்துவமனை நிர்வாகத்தின் மீது எதிர்க்கட்சிகள் பல கேள்விகளை எழுப்பியுள்ளன.
"மருத்துவமனைகளிலேயே குழப்பம் எனும்போது மருத்துவமனை எனும் பெயரில் கட்டடங்கள் கட்டி என்ன பயன்" என, எதிர்க்கட்சியான ராஷ்டிரிய ஜனதா தளம் குற்றம் சாட்டியுள்ளது.
அதேசமயம், இச்சம்பவம் துரதிருஷ்டவசமானது என, ஆளும் ஐக்கிய ஜனதா தளம் மற்றும் பாஜக கூறியுள்ளது.
இந்த சம்பவம் குறித்து தாமாக முன்வந்து விசாரணையை தொடங்கியுள்ளது தேசிய மகளிர் ஆணையம். இதுகுறித்து முழுமையான மற்றும் பாரபட்சமற்ற விசாரணையை மேற்கொள்ளுமாறு பிகார் மாநில தலைமை செயலாளர் மற்றும் காவல் துறை டிஜிபிக்கு தேசிய மகளிர் ஆணைய தலைவர் விஜய கிஷோர் ரஹத்கர் உத்தரவிட்டுள்ளார். மேலும், இவ்விவகாரத்தில் மருத்துவமனை நிர்வாகம் மற்றும் காவல்துறையின் பங்கு குறித்து விசாரிக்குமாறும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
என்ன நடந்தது?
மே 26 அன்று முசாஃபர்பூரில் 10 வயது சிறுமி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. இந்த சம்பவத்தில் குற்றம் சட்டப்பட்ட ரோஹித் குமார் சாஹ்னி என்பவரை காவல் துறையினர் கைது செய்தனர். காவல்துறை கூற்றுப்படி, சிறுமியின் அத்தையின் வீட்டுக்கு அருகே அந்த நபர் வசித்து வந்துள்ளார், எனவே அவருக்கு ஏற்கெனவே அந்த சிறுமியை தெரியும்.
அந்த சிறுமியின் மாமா பிபிசியிடம் கூறுகையில், "தன்னுடைய வீட்டுக்கு வெளியே காலை 10 மணியளவில் சிறுமி விளையாடியுள்ளார். அப்போது, அங்கு வந்த ரோஹித், அவரை சிறுமியின் அத்தை வீட்டுக்கு அழைத்துச் செல்வதாகக் கூறி சைக்கிளில் அழைத்துச் சென்றுள்ளார். ஆனால், ரோஹித், சுமார் 150 மீட்டர் தொலைவில் உள்ள வயல்வெளிக்கு அழைத்துச் சென்று அங்கு பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். சிறுமியை கொல்லும் நோக்கத்தில் பலமாக தாக்கியுள்ளார்." என்றார்.
சிறுமி நீண்ட நேரத்துக்கு வீட்டுக்கு வரவில்லை என்றதும் தான் தேட ஆரம்பித்ததாகக் கூறுகிறார் சிறுமியின் மாமா.
அவர் கூறுகையில், "நாங்கள் ரோஹித்தை பிடித்து விசாரித்தோம், ஆனால் அவர் எதையும் கூறவில்லை. நாங்கள் போலீஸை அழைத்து, ரோஹித்தை காவல் நிலையத்தில் ஒப்படைத்தோம். ஆனால், ரோஹித் எதையும் கூறவில்லை. அதன்பின், சிறுமி ஒருவர் காயங்களுடன் சாலையில் கிடப்பதாக எங்களுக்குத் தகவல் கிடைத்தது. அதன்பின், சிறுமியை உள்ளூர் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றோம், பின் மேல் சிகிச்சைக்காக முசாஃபர்பூரில் உள்ள ஸ்ரீ கிருஷ்ணா மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு (SKMCH) அழைத்துச் சென்றோம்." என்றார்.
மூன்றாம் வகுப்பு படித்துவந்த அச்சிறுமியின் தந்தை மூன்று ஆண்டுகளுக்கு முன்பே இறந்துவிட்டார். தன்னுடைய மூன்று குழந்தைகளை வளர்ப்பதற்காக அவர்களின் தாயார் கூலி வேலை செய்துவந்தார்.
காவல்துறை கூறுவது என்ன?
முசாஃபர்பூரின் ஊரக காவல் கண்காணிப்பாளர் வித்யா சாகரிடம் இதுகுறித்து பிபிசி பேசியது.
வித்யா சாகர் கூறுகையில், "இச்சம்பவம் தொடர்பாக பத்து நாட்களில் குற்றப் பத்திரிகை தயாரிக்கவும் விரைவான விசாரணை நடத்தவும் நாங்கள் முயற்சித்து வருகிறோம். சிறுமியின் ஆடை உட்பட பல ஆதாரங்கள் நிகழ்விடத்திலிருந்து எங்களுக்குக் கிடைத்துள்ளன, அறிவியல்பூர்வ ஆதாரங்களை நாங்கள் தயாரித்து வருகிறோம்." என்றார்.
குற்றம் சாட்டப்பட்ட நபர் குறித்துக் கூறுகையில், "சிறுமிக்கு சாப்பிடுவதற்கு சாக்லேட் உள்ளிட்ட தின்பண்டங்களை அவர் கொடுத்துள்ளார். குற்றம் சாட்டப்பட்டவரின் குடும்பத்தினர் தற்போது தலைமறைவாக உள்ளனர். அவருடைய மனைவி ஏற்கெனவே அவரை பிரிந்துவிட்டார்." என்றார்.
அந்த சிறுமி முசாஃபர்பூரில் உள்ள ஸ்ரீ கிருஷ்ணா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் குழந்தைகள் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.
அந்த மருத்துவமனையின் கண்காணிப்பாளர் குமாரி விபா பிபிசியிடம் கூறுகையில், "அந்த சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். அவருடைய கழுத்து மற்றும் மார்புப் பகுதியில் காயங்கள் இருந்தன. அவருடைய மார்புப் பகுதியில் உள்ள காயம் அவ்வளவு ஆழமாக இல்லை, ஆனால் கழுத்தில் உள்ள காயம் மிகவும் ஆழமாக இருந்தது. சிறுமியின் மூச்சுக்குழாயில் அறுவை சிகிச்சை செய்ய வேண்டியிருந்தது." என்றார்.
மூச்சுக்குழாயில் அறுவை சிகிச்சை செய்வதற்கான வசதி அந்த மருத்துவமனையில் இல்லை. எனவே, அதற்காக பாட்னா எய்ம்ஸ் மருத்துவமனையின் காது மூக்கு தொண்டை பிரிவை ஸ்ரீ கிருஷ்ணா மருத்துவமனை தொடர்புகொண்டது.
குமாரி விபா கூறுகையில், "காது மூக்கு தொண்டை பிரிவில் மூச்சுக்குழாய் அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய மருத்துவர் அப்போது விடுப்பில் இருந்தார். எனவே, அச்சிறுமியை மே 31ம் தேதி பாட்னா மருத்துவக் கல்லூரிக்கு அழைத்துச் செல்லுமாறு பரிந்துரைத்தோம். அங்கு அன்றைய இரவு முழுவதும் அச்சிறுமி உயிருடன் இருந்தார்." என்றார்.
'மருத்துவர்கள் எங்களை அலைக்கழித்தனர்'
பாட்னா மருத்துவக் கல்லூரிக்கு மே 31ம் தேதி பரிந்துரைக்கப்பட்டதையடுத்து, சிறுமியை அவர்கள் குடும்பத்தினர் அங்கு அழைத்துச் சென்றனர்.
சிறுமியின் மாமா பிபிசியிடம் கூறுகையில், "நாங்கள் ஒரு மணிக்கு சிறுமியை அந்த மருத்துவமனைக்கு அழைத்து சென்றோம். ஆனால் மருத்துவமனை நிர்வாகம் எங்களை பல மணிநேரம் அலைக்கழித்தது. வெவ்வேறு வார்டுகளுக்கு எங்களை அலைக்கழித்தனர். ஸ்ரீ கிருஷ்ணா மருத்துவமனையில் சிறுமியை முறையாக கவனித்தனர், ஆனால் பாட்னா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஏற்பாடுகள் சிறப்பாக இல்லை. இரவு முழுவதும் எங்களுக்கு இன்னல்கள் இருந்தன. எப்போதெல்லாம் செல்கிறோமோ, அப்போதெல்லாம் மருத்துவமனை பாதுகாவலர் எங்களை துரத்தினார். காலையில் நாங்கள் சிறுமியை பார்த்தபோது, அவளது தொண்டை மற்றும் வாயிலிருந்து ரத்தம் வழிந்தது, அவள் இறந்துவிட்டாள்," என்றார்.
பாட்னா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் கண்காணிப்பாளர் ஐ.எஸ். தாக்கூரிடம் பிபிசி இதுகுறித்து பேசியது.
அவர் கூறுகையில், "மே 31ம் தேதி நான் விடுப்பில் இருந்தேன். மதியம் 1:23 மணியளவில் நோயாளியின் வருகை பதிவு செய்யப்பட்டது. மாலை 3:36 மணியளவில் அச்சிறுமி மகப்பேறு பிரிவில் அனுமதிக்கப்பட்டார்." என்றார்.
சிறுமியை மருத்துவமனையில் காலதாமதம் ஏற்பட்டது குறித்து கேட்டதற்கு, "சிறுமியின் குடும்பத்தினர் அவரை முதலில் குழந்தைகள் நலப்பிரிவுக்கு தான் அழைத்துச் சென்றனர். அங்கு சோதித்த பிறகு சிறுமியை காது, மூக்கு, தொண்டை பிரிவுக்கு அழைத்துச் சென்றனர். காது மூக்கு தொண்டை பிரிவில் எங்களிடம் ஐசியூ இல்லை என்பதால், மகப்பேறு பிரிவில் உள்ள ஐசியூவில் சிறுமியை அனுமதித்தோம். அங்கு வைத்து சிறுமியை மருத்துவர்கள் பரிசோதித்தனர். அச்சிறுமி மேம்பட்ட உயிர்காக்கும் அமைப்புகள் அடங்கிய ஆம்புலன்ஸில் இருந்தார், அது ஒரு சிறிய மருத்துவமனை போன்றது. சிறுமிக்கு படுக்கை கிடைக்கவில்லை என்பது அடிப்படை ஆதாரமற்றது," என்றார்.
சிறுமியை பாட்னா மருத்துவமனைக்கு பரிந்துரைத்தது தெரியாதா?
இதுகுறித்து பதிலளித்த ஐ.எஸ். தாக்கூர், "எங்களுக்கு ஸ்ரீ கிருஷ்ணா மருத்துவமனையில் இருந்து எந்த தகவலும் வரவில்லை. அப்போது சிறுமியின் உடல் நிலை மோசமாக இருந்தது. மாலை 6:15 மணியளவில் அவரது உடல்நிலை மேலும் கவலைக்கிடமானது. இரவு முழுவதும் முயற்சி செய்தும் அவரை காப்பாற்ற முடியவில்லை," என்றார்.
மக்களின் கோபம்
இச்சம்பவத்தையடுத்து, மாநிலத்தின் சட்டம்-ஒழுங்கு மற்றும் மருத்துவமனை அளித்த சிகிச்சை தொடர்பாக சமூக வலைதளங்களிலும் அரசியல் வட்டாரங்களிலும் கேள்விகள் எழுப்பப்படுகின்றன.
மே 31ம் தேதி சிறுமியை அனுமதிக்க காலதாமதமானபோது, மாநில காங்கிரஸ் நிர்வாகிகள் அந்த மருத்துவமனைக்கு சென்றனர். ராஷ்டிரிய ஜனதா தளம், இடதுசாரி கட்சிகளும் இச்சம்பவம் தொடர்பாக மாநில அரசை விமர்சித்துள்ளன.
காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ஷர்வத் ஜஹான் ஃபாத்திமா அச்சிறுமியை முசாஃபர்பூரில் சந்தித்தார். அவர் கூறுகையில், "அச்சிறுமியை விமானம் மூலம் மருத்துவமனைக்கு அழைத்துவந்து சிகிச்சை அளித்திருக்க வேண்டும் என்பது எங்கள் கோரிக்கையாக இருந்தது, ஆனால் ஆனால், அப்படி செய்யாமல், மே 29 மற்றும் 30 ஆகிய தேதிகளில் பிரதமர் மோதி பிகார் வருவதாக இருந்ததால், அதே மருத்துவமனையில் சிறுமியை வைத்திருந்தனர்," என்றார்.
இதனிடையே, பாஜக செய்தித் தொடர்பாளர் அனாமிகா சிங் படேல் கூறுகையில், "சிறுமியின் இறப்பு துரதிருஷ்டவசமானது. நானே மருத்துவமனை ஒன்றை நடத்தி வருகிறேன், ஒருவரை மருத்துவமனையில் அனுமதிப்பது என்பது நேரம் எடுக்கும் நடைமுறை தான். எங்கள் அரசாங்கத்தில் உள்ளவர்கள் பொறுப்பாக பணியாற்றுகின்றனர்" என்றார்.
ஐக்கிய ஜனதா தள செய்தித் தொடர்பாளர் அஞ்சும் அரா கூறுகையில், "இந்த சம்பவம் துரதிருஷ்டவசமானது. குற்றம் சட்டப்பட்ட நபர் கைது செய்யப்பட்டுள்ளார். இதுகுறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. குற்றம் இழைத்தவர் மீது சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.
முதலமைச்சர் நிதிஷ் குமாரை ராஷ்டிரிய ஜனதா தளம் எக்ஸ் தளத்தில் விமர்சித்துள்ளது, "பாட்னா மருத்துவமனையில் அனுமதிக்க வேண்டும் என்பதற்காக பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சிறுமி பல மணிநேரம் காத்திருந்தார். ஆனால், விசாரணை அமைப்பு ஒரு அங்குலம் கூட நகரவில்லை! இவ்வளவு குழப்பங்கள், ஊழல், தவறான நடத்தை, வளங்கள் பற்றாக்குறை, கூர் உணர்வு இல்லாதது என அனைத்துக்கும் மத்தியில் மருத்துவமனை என்ற பெயரில் பெரிய கட்டடங்களைக் கட்டி என்ன பயன்?" என கேள்வி எழுப்பியுள்ளது.
இதற்கு முன்பும் பிகார் அரசு மருத்துவமனைகளில் நிர்வாக குளறுபடிகள் நிகழ்வதாக தகவல்கள் வெளியாகின. சமீபத்தில், பாட்னாவில் உள்ள நாளந்தா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நோயாளி ஒருவரின் கால் விரல்களை எலி கடித்த சம்பவம் நிகழ்ந்தது. இதற்கு முன்பும் கடந்தாண்டு நவம்பர் மாதம் அம்மருத்துவமனையில் இறந்த சடலத்திலிருந்து கண் காணாமல் போன சம்பவம் நிகழ்ந்துள்ளது. இச்சம்பவம் வெளிச்சத்துக்கு வந்த பின்னர், எலிதான் கண்ணை கடித்ததாக தகவல் வெளியானது.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு