கூகுள் ஏஐ தேடல் இணையதளங்களை குறைத்துக் காட்டி வணிகங்களை அழிக்கிறதா?

 கூகுள்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, மக்கள் ஆண்டுக்கு ஐந்து பில்லியன் முறை கூகுள் தேடுபொறியைப் பயன்படுத்துகின்றனர்.
    • எழுதியவர், தாமஸ் ஜெர்மைன்
    • பதவி, பிபிசி நியூஸ்

கடந்த ஒரு வருடத்தில், கூகுள் ஒரு மாற்றத்தைச் செய்துள்ளது, நீங்கள் அதைக் கவனித்திருக்கலாம்.

முன்பு, நீங்கள் இணையத்தில் எதையாவது தேடும்போது, அது தொடர்பான இணைப்புகளின் பட்டியல் கிடைக்கும்.

ஆனால் இப்போது அதற்கு பதிலாக, செயற்கை நுண்ணறிவு (AI) உருவாக்கிய பதில்கள் கிடைக்கிறது.

இந்த பதில்களை "செயற்கை நுண்ணறிவு சுருக்கங்கள் (AI summaries) " என்று அழைக்கிறது கூகுள்.

சில நேரங்களில் அவை மிகவும் பயனுள்ளதாக இருக்கின்றன.

ஆனால் சில நேரங்களில், தவறான தகவல்களை அளித்து, மக்களை குழப்புகின்றன.

அதேபோல், இந்த செயற்கை நுண்ணறிவு சுருக்கங்கள் (AI summaries) நீங்கள் அடுத்து என்ன செய்யத் தேர்வு செய்கிறீர்கள் என்பதிலும் தாக்கம் செலுத்துகின்றன.

இந்த ஆண்டு, 900 அமெரிக்க இணைய பயனர்கள் இணையத்தில் தாங்கள் தேடுபவற்றைக் கண்காணிக்க, பியூ ஆராய்ச்சி மையத்துக்கு அனுமதி கொடுத்தனர்.

"செயற்கை நுண்ணறிவு சுருக்கங்கள் (AI summaries) தோன்றும் தேடல்களில், இவர்கள் இணைப்புகளை கிளிக் செய்யும் வாய்ப்பு குறைவாக இருந்தது. மேலும், அவர்கள் தேடல் செயல்முறையை (Browsing) முழுவதுமாக நிறுத்துவதற்கும் அதிக வாய்ப்பு இருந்தது," என பியூவின் 'டேட்டா லேப்ஸ்' இயக்குநர் ஆரோன் ஸ்மித் கூறுகிறார்.

கூகுளில் தேடும்போது, செயற்கை நுண்ணறிவு சுருக்கங்கள் (AI summaries) தோன்றும்போது, பயனர்கள் இணையதள இணைப்புகளை கிளிக் செய்யும் வாய்ப்பு கிட்டத்தட்ட இரு மடங்கு குறைவாக இருந்தது. மேலும், 26% சமயங்களில், அவர்கள் தேடுவதையே நிறுத்திவிட்டனர் என புதிய ஆய்வு ஒன்று கூறுகிறது.

இது மிக முக்கியமானது, ஏனென்றால் மக்கள் ஆண்டுக்கு ஐந்து பில்லியன் முறை கூகுள் தேடுபொறியைப் பயன்படுத்துகின்றனர். இணையதள செயல்பாடுகள் தொடங்கும் இடமும் இதுதான்.

பெரும்பாலான வலைத்தளங்கள், அதிலும் குறிப்பாக, பொருட்களை விற்காமல் தகவல் மற்றும் உள்ளடக்கம் வழங்கும் வலைத்தளங்கள் விளம்பரங்கள் மூலம் வருமானம் ஈட்டுகின்றன.

இந்த டிஜிட்டல் சூழல் பார்வையாளர்களின் எண்ணிக்கையைச் சார்ந்து இயங்குகிறது. ஆனால், கூகுளின் தேடல் முடிவுகளில் வலைத்தளங்கள் தோன்றுவதை குறைத்து, ஒரே இரவில் வணிகங்களை அழித்துவிடலாம்.

இணைய பயன்பாடு

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, பல தளங்கள், கூகுளில் உள்ள இணைப்புகள் மூலம் பயனர்கள் பார்வையிடுவதை தான் நம்பியுள்ளன.

"பெரும்பாலான வலைத்தளங்கள் இயங்குவதற்கு கூகுள் பார்வையாளர்கள் தேவை," என மார்க்கெட்டிங் நிறுவனமான ஆம்சிவ் நிறுவனத்தின் தேடுபொறி குறித்த பிரிவின் துணைத் தலைவர் லில்லி ரே கூறுகிறார்.

"ஆனால், செயற்கை நுண்ணறிவு சுருக்கங்கள் (AI summaries) பார்வையாளர்களை பெருமளவு குறைத்து, வலைத்தளங்களின் வருமானத்தை 20%, 30%, அல்லது 40% வரை சரியச் செய்கின்றன. இது பெரிய பாதிப்பை ஏற்படுத்தி, உயர்தர உள்ளடக்கத்தை உருவாக்குவதற்கான ஊக்கத்தைக் குறைக்கிறது."

கூகுளின் புதிய செயற்கை நுண்ணறிவு பயன்முறை, பாரம்பரிய தேடல் முடிவுகளை முற்றிலும் நீக்குவதால், இது மேலும் மோசமாகலாம்.

லில்லி ரே மற்றும் நிபுணர்கள் இது பேரழிவை ஏற்படுத்தலாம் என எச்சரிக்கின்றனர்.

சிலர் இது நாம் அறிந்த இணையத்தை அழித்துவிடலாம் என அஞ்சுகின்றனர்.

வலைத்தளங்களை செயற்கை நுண்ணறிவு அழித்துவிடுமா?

வலைத்தளங்களைப் பார்வையிடுவதற்காக மக்கள் வருவதை, செயற்கை நுண்ணறிவு சுருக்கங்கள் (AI summaries) குறைக்கின்றன என்று சொல்லப்படும் கருத்தை 'முட்டாள்தனம்' எனக்கூறி மறுக்கிறது கூகுள்.

"நாங்கள் ஒவ்வொரு நாளும் வலைத்தளங்களுக்கு பில்லியன் கணக்கான கிளிக்குகளை இயக்குகிறோம், அதில் பெரிய சரிவு இல்லை",

மேலும், "இந்த ஆய்வு தவறான முறையையும், தேடல் போக்குவரத்தை சரியாக பிரதிநிதித்துவப்படுத்தாத, ஒரு சார்பு கொண்ட கேள்விகளையும் பயன்படுத்துகிறது"என கூகுளின் செய்தித் தொடர்பாளர் கூறுகிறார்.

ஆனால், பியூ நிறுவனம் தங்களது ஆராய்ச்சியில் உறுதியாக உள்ளது.

"எங்கள் முடிவுகள், வலை பகுப்பாய்வு நிறுவனங்களின் சுயாதீன ஆய்வுகளுடன் பெரும்பாலும் ஒத்துப்போகின்றன," என ஆரோன் ஸ்மித் கூறுகிறார்.

கூகுளில் தேடப்படும் விஷயங்களைப் பொறுத்து, செயற்கை நுண்ணறிவு சுருக்கங்கள் (AI summaries) தேடல் போக்குவரத்தை 30% முதல் 70% வரை குறைக்கின்றன என பல அறிக்கைகள் கூறுகின்றன.

நூற்றுக்கணக்கான வலைத்தளங்களின் தரவைப் பயன்படுத்தி இதைத் தானே சோதித்ததாக ரே கூறுகிறார்.

ஆனால், கூகுள் இதை ஏற்கவில்லை.

ஆராய்ச்சி தவறானது, தரவுகள் சார்புடையவை, மற்றும் அர்த்தமற்ற தரவுகளை மேற்கோள் காட்டி, அதை கணக்கில் எடுத்துக்கொள்ளக்கூடாது என்று பிபிசியிடம் கூறுகிறது கூகுள்.

மக்கள் வலைத்தளங்களுக்கு சென்று தேடுவது பல காரணங்களால் மாறுபடுவதாகவும், செயற்கை நுண்ணறிவு சுருக்கங்கள் (AI summaries) பலவகையான இணைப்புகளை வழங்கி, வலைத்தளங்களைக் கண்டறிய புதிய வழிகளை உருவாக்குவதாகவும் கூகுள் கூறுகிறது.

செயற்கை நுண்ணறிவு சுருக்கங்களில் (AI summaries) இருந்து வரும் தரவுகள் உயர்தரமானவை, ஏனெனில் பயனர்கள் அந்தத் தளங்களில் அதிக நேரம் செலவிடுகின்றனர் என கூகுள் செய்தித்தொடர்பாளர் தெரிவிக்கிறார்.

ஆனால் அதற்கு முரணாக, கூகுளின் சொந்த செயற்கை நுண்ணறிவு, அதன் மக்கள் தொடர்பு துறையின் கருத்தை மறுக்கிறது.

கூகுள் ஜெமினியிடம் கேட்டால்,செயற்கை நுண்ணறிவு சுருக்கங்கள் (AI summaries) வலைத்தளங்களுக்கு தீங்கு விளைவிக்கும் எனக் கூறும்.

"ஆதாரம் தெளிவாக உள்ளது. கூகுள் தகவல்களை மாற்றி, உண்மையை மறைக்க முயல்கிறது, ஏனெனில் அது மக்களை பயமுறுத்தும்," என்கிறார் ரே.

ஆனால் கூகுள் நிறுவனம் தாங்கள் வெளிப்படைத்தன்மைக்கு உறுதிபூண்டுள்ளதாகக் கூறுகிறது.

 கூகுள்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, கடந்த காலத்தில், கூகுள் கேள்விகளுக்குப் பதிலளிக்கும் வகையில் இணைப்புகளை வழங்கியது.

குழப்பும் செயற்கை நுண்ணறிவு

ஆனால், இதைத்தான் நாம் அனைவரும் விரும்புகிறோமா என்ற மற்றொரு கேள்வியும் உள்ளது.

"மக்கள் செயற்கை நுண்ணறிவால் இயங்கும் அனுபவங்களை நோக்கி ஈர்க்கப்படுகிறார்கள். தேடலில் உள்ள செயற்கை நுண்ணறிவு அம்சங்கள் மக்கள் மேலும் கேள்விகளைக் கேட்க உதவுகின்றன, இது வலைத்தளங்களுடன் இணைவதற்கு புதிய வாய்ப்புகளை உருவாக்குகிறது," என கூகுள் செய்தித்தொடர்பாளர் கூறுகிறார்.

ஆனால், இது அர்த்தமற்றது என ரே கூறுகிறார்.

"கூகுள் 'இனி யாரும் கிளிக் செய்ய விரும்பவில்லை' என்று சொல்லலாம். ஆனால் அது மற்றவர்களின் கடின உழைப்பில் லாபம் ஈட்டுகிறது. தகவல்களை உருவாக்கிய தளங்களுக்கு பார்வையாளர்கள் செல்வதை, கூகுளின் செயற்கை நுண்ணறிவு தடுக்கிறது" என்கிறார் ரே.

வலைத்தளங்களை விடுங்கள், ஏஐயின் தவறான தகவல்களைத் தரும் பழக்கம் உங்களுக்கும் கெடுதல் தரும் என்று ரே கூறுகிறார்.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப்
படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

"செயற்கை நுண்ணறிவு பற்றிய பொதுவான விளக்கங்கள் பெரும்பாலும் தவறாக இருக்கின்றன," என்கிறார் அவர்.

"இது வலைத்தளங்களில் இருந்து பார்வையாளர்களை பறிப்பது மட்டுமல்ல, பயனர்கள் வெவ்வேறு தகவல்களை ஆராய்ந்து, விரும்பியவற்றைத் தேர்ந்தெடுத்து, முடிவுகளை எடுக்கும் திறனைக் கொள்ளையடிப்பது போன்றது."

ஏஐயின் பதில்கள் உதவிகரமாகவும், புறநிலை அம்சம் கொண்டதாகவும், மற்ற தேடல் அம்சங்களுடன் ஒப்பிடக்கூடிய துல்லியத்துடனும் உள்ளன என்கிறது கூகுள்.

ஒருவேளை இந்த ஒப்பந்தத்தில் நாமும் சேர்ந்திருக்கலாம்.

ஏனென்றால், பதில்கள் விரைவாகவும் எளிதாகவும் கிடைக்கின்றன.

நாம் சிந்திக்க வேண்டிய அவசியம் குறைகிறது.

செயற்கை நுண்ணறிவு ஏற்கெனவே முடிவுகளை எடுத்துக் கொடுத்து விடுவதால், வெவ்வேறு ஆதாரங்களை ஆராய வேண்டிய தேவையும் குறைகிறது அல்லவா?.

ஆனால், கூகுள் தவறு செய்து வலைத்தளங்கள் மறையத் தொடங்கினால், அது நாம் தவறான இணைப்பை கிளிக் செய்ததால் இருக்காது. நாம் தேடுவதை முற்றிலும் நிறுத்தியதால் தான் இருக்கும்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு