நாட்டின் சிறந்த கல்வி நிறுவன பட்டியலில் ஐஐடி மெட்ராஸ் முதலிடம்- தரவரிசை எப்படி அளிக்கப்படுகிறது, விமர்சனம் என்ன?

பட மூலாதாரம், IIT Madras
- எழுதியவர், சாரதா வி
- பதவி, பிபிசி தமிழ்
இந்தியாவின் சிறந்த கல்வி நிலையங்கள் பட்டியலில் முதலிடத்தை ஐஐடி மெட்ராஸ் முதல் இடம் பிடித்துள்ளது
கல்வி நிறுவனங்களுக்கான தேசியத் தரவரிசைக் கட்டமைப்பு(NIRF) பட்டியலை சமீபத்தில் வெளியிடப்பட்டது. வரையறுக்கப்பட்ட அளவுகோல்களின் அடிப்படையில் ஒட்டுமொத்தபிரிவில் , 2019 முதல் ஆறாவது முறையாக இந்திய தொழில்நுட்பக் கழகம் (ஐஐடி), மெட்ராஸ் முதல் இடம் பிடித்துள்ளது.
மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் திங்களன்று 2024 NIRF தரவரிசை விவரங்களை வெளியிட்டார். ஐஐடி மெட்ராஸ் 2016 முதல் ஒன்பதாவது ஆண்டாக பொறியியல் கல்வி நிறுவனங்களில் முதல் இடத்தைத் தக்க வைத்துக் கொண்டுள்ளது.
பெங்களூருவில் உள்ள இந்திய அறிவியல் கழகம், பல்கலைக்கழகங்கள் மற்றும் ஆராய்ச்சி பிரிவுகளின் கீழ் சிறந்த நிறுவனமாக உள்ளது.
இந்த ஆண்டு 16 பிரிவுகளில் தரவரிசைகள் வழங்கப்பட்டுள்ளன. இது கடந்த ஆண்டை விட மூன்று பிரிவுகள் அதிகம். திறந்தவெளி பல்கலைக்கழகங்கள், திறன் பல்கலைக்கழகங்கள் மற்றும் மாநில பொதுப் பல்கலைக்கழகங்கள் ஆகிய மூன்று புதிய பிரிவுகள் உள்ளன.
இந்த தரவரிசைப் பட்டியலுக்கான மதிப்பெண்கள் வழங்கும் முறையில் வெளிப்படைத்தன்மை இல்லை என விமர்சனங்களும் முன்வைக்கப்படுகின்றன.

பட மூலாதாரம், IIT Madras
ஒட்டுமொத்த தரவரிசைப் பட்டியலில் இந்த ஆண்டு இரண்டாவது இடத்தில் பெங்களூரு ஐஐஎஸ்சி (இந்திய அறிவியல் கழகம்) உள்ளது. கடந்த ஆண்டும் இரண்டாவது இடத்தை பிடித்திருந்தது இந்திய அறிவியல் கழகம்.
இந்தப் பட்டியலில் நாட்டில் உள்ள ஐஐடி கல்வி நிறுவனங்களே முதல் பத்து இடங்களில் பெரும்பாலான இடங்களை பெற்றுள்ளன. மூன்றாவது இடத்தில் ஐஐடி பாம்பே, நான்காவது இடத்தில் ஐஐடி டெல்லி, அதற்கு அடுத்து, ஐஐடி கான்பூர், ஐஐடி கரக்பூர் இடம் பெற்றுள்ளன. ஏழாவது இடத்தை டெல்லி எய்ம்ஸ் பிடித்துள்ளது. ஐஐடி ரூர்கி எட்டாவது இடத்தையும், ஐஐடி குவஹாத்தி ஒன்பதாவது இடத்தையும், டெல்லியில் உள்ள ஜவஹர்லால் நேரு பல்கலைகழகம் பத்தாவது இடத்தையும் பிடித்துள்ளன.
ஒட்டுமொத்த தரவரிசை தவிர, பதினான்கு பிரிவுகளின் கீழ் கல்வி நிறுவனங்கள் மதிப்பீடு செய்யப்படுகின்றன. பொறியியல் கல்வி நிறுவனங்களின் பட்டியலிலும் ஐஐடி மெட்ராஸ் முதல் இடம் பிடித்துள்ளது. தொடர்ந்து ஒன்பதாவது முறையாக இந்த இடத்தை ஐஐடி மெட்ராஸ் தக்க வைத்துள்ளது.
பல்கலைகழகங்கள் பிரிவில் பெங்களூரூ இந்திய அறிவியல் கழகம் முதல் இடத்தைப் பிடித்துள்ளது. கல்லூரிகள் பிரிவில் டெல்லி இந்து கல்லூரி, நிர்வாக மேலாண்மை பிரிவில் ஐ ஐ எம் அகமதாபாத், மருந்து சார்ந்த படிப்புகளில் ஜாமியா ஹம்தராத், மருத்துவக் கல்வியில் டெல்லி எய்ம்ஸ், பல் மருத்துவக் கல்வியில் சென்னை சவிதா கல்லூரி, சட்டப்படிப்பில் பெங்களூருவில் உள்ள இந்திய தேசிய சட்டப் பள்ளி பல்கலைக்கழகம், கட்டிடக்கலை படிப்பில் ஐஐடி ரூர்க்கி, வேளாண் படிப்பில் டெல்லியில் உள்ள இந்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவனம் முதலிடத்தைப் பிடித்துள்ளன.
கல்வி நிலையங்களில் மேற்கொள்ளப்படும் புதிய முயற்சிகளுக்கான தரவரிசைப் பட்டியலில் ஐஐடி பாம்பே முதலிடம் பிடித்துள்ளது. திறந்த நிலைப் பல்கலைக் கழகங்களுக்கான தர வரிசைப் பட்டியலில் இந்திரா காந்தி தேசிய பல்கலைக்கழகமும், திறன் மேம்பாட்டு படிப்புகளை சொல்லித்தரும் கல்வி நிறுவனங்களை புனேவில் உள்ள சிம்பயோசிஸ் பல்கலைக்கழகமும், மாநில பல்கலைக் கழகங்களுக்கான தர வரிசைப் பட்டியலில் சென்னை அண்ணா பல்கலைக்கழகம் முதலிடத்தைப் பிடித்துள்ளது
ஆறு ஆண்டுகளாக தொடர்ந்து முதல் இடம்

பட மூலாதாரம், IIT Madras
ஐஐடி மெட்ராஸ், கல்வி நிறுவனங்களுக்கான ஒட்டுமொத்த தர வரிசைப் பட்டியலில் 86.42 புள்ளிகள் பெற்று, ஆறாவது ஆண்டாக தொடர்ந்து முதல் இடம் பிடித்துள்ளது. கடந்த ஆண்டு 86.69 புள்ளிகள் பெற்றிருந்தது. பொறியியல் கல்வி நிறுவனங்களுக்கான பிரிவில் இந்த ஆண்டு 89.46 புள்ளிகளும், கடந்த ஆண்டு 89.79 புள்ளிகளும் பெற்றிருந்தது ஐஐடி மெட்ராஸ். புதிய முயற்சிகளுக்கான தரவரிசைப் பட்டியலில் இரண்டாவது இடத்தையும், ஆராய்ச்சி பிரிவின் கீழ் இரண்டாவது இடத்தையும், பிடித்துள்ளது.
இது குறித்து சென்னையில் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய ஐஐடி மெட்ராஸ் இயக்குநர் வி காமகோடி, NIRF தரவரிசை உலகில் உள்ள பிற மதிப்பீட்டு முறைகளை விட சிறந்த மதிப்பீட்டு முறை என்று கூறினார்.
“ இந்த மதிப்பீட்டு முறையில் அவுட்ரீச் எனப்படும் புறசமூகத்தை பங்குக்கொள்ள வைப்பது, மற்றும் அனைவரையும் உள்ளடக்கி இயங்குவது ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது.
ஐஐடி மெட்ராஸ்-ல் 30ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் பி. எஸ். டேட்டா சையன்ஸ் (வேறு கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கும் போதே, ஆன்லைன் மூலம் இந்த படிப்பை தொடரலாம்) படிக்கிறார்கள். அதில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் வறுமைக் கோட்டுக்கு கீழ் இருப்பவர்கள், அவர்களின் கல்விக் கட்டணத்தை ஐஐடி ஏற்றுக் கொண்டுள்ளது. இது போன்ற முயற்சிகளுக்கு NIRF தரவரிசையில் மதிப்பெண்கள் (புள்ளிகள்) வழங்கப்படுகின்றன.” என்றார் காமகோடி
உயர்க்கல்விக்கான இடம் தமிழ்நாடு - ஸ்டாலின்
மத்திய அரசு வெளியிட்டுள்ள தரவுகள் படி, இந்தியாவில் உள்ள 926 தலைசிறந்த கல்வி நிறுவனங்களில், அதிகபட்சமாக 165 நிறுவனங்கள் தமிழ்நாட்டில் உள்ளன என்று தமிழ்நாடு முதல்வர் மு க ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். ஒட்டுமொத்த தரவரிசையில் முதல் 100 இடங்களில் 18 கல்வி நிறுவனங்கள், முதல் 100 பல்கலைகழகங்களில் 22 பல்கலைகழகங்களும், முதல் 100 கலைக்கல்லூரிகளில் 37 கல்லூரிகளும் தமிழ்நாட்டில் உள்ளன என்று அவர் அந்த பதிவில் தெரிவித்திருந்தார்.
“NIRF தரவரிசைப்படி தலைசிறந்த உயர்கல்வி நிறுவனங்கள் அதிகமானவற்றை கொண்டுள்ள தமிழ்நாடு, பிற மாநிலங்களை விட முன்னிலையில் உள்ளது, தரமான கல்விக்கான அளவுகோலை நிர்ணயிக்கிறது” என அவர் பதிவிட்டுள்ளார்

பட மூலாதாரம், X/@mkstalin
எனினும் ஐஐடி கல்வி நிறுவனங்களில் மாணவர் தற்கொலைகள், சாதி பாகுபாடுகள் என பல்வேறு குற்றச்சாட்டுகளும் விமர்சனங்களும் வைக்கப்பட்டு வருகின்றன.
இந்த விமர்சனங்களுக்கு பதிலளிக்கும் வகையில் செய்தியாளர் சந்திப்பில் பேசிய ஐஐடி மெட்ராஸ் இயக்குநர் காமகோடி, “கடந்த ஓராண்டில் நல்வாய்ப்பாக மாணவர் தற்கொலை ஏதும் நடைபெறவில்லை. மாணவர்கள் மன அழுத்தம் இல்லாமல் இருப்பதற்கான பல முயற்சிகள் எடுத்து வருகிறோம். எந்த பிரச்னையாக இருந்தாலும் எந்த மாணவரும் என்னை ஐந்து நிமிடங்களுக்குள் தொடர்புக் கொள்ளலாம். behappy.iitm.ac.in என்ற இணையதளத்தில் மாணவர்களுக்கு தேவையான விவரங்கள் உள்ளன, மன நல ஆலோசகருடன் மாணவர் விருப்பப்பட்டால் உடனே பேசலாம். பெற்றோர்களுக்கு குறுஞ்செய்தி அனுப்பி பிள்ளைகளுடன் வாரம் இருமுறையாவது பேசினார்களா என்று கேட்கிறோம். மாணவர்கள் பேசவில்லை என்று தெரிந்தால், அவர்களை அழைத்து பேசுகிறோம்.” என்றார்.
NIRF தரவரிசை எப்படி மதிப்பீடு செய்யப்படுகிறது?
NIRF (National Institute of Ranking Framework )என்பது மத்திய அரசின் கல்வித் துறை கல்வி நிறுவனங்களுக்கு தேசிய அளவில் வழங்கும் வருடாந்திர மதிப்பீடு ஆகும். இந்த மதிப்பீடு மத்திய மனித வள மேம்பாட்டுத் துறையினால் 2015ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது.
கற்றல், கற்பித்தல், ஆராய்ச்சி, அனைவரையும் உள்ளடக்குதல், என பல்வேறு அலகுகளின் கீழ் கல்வி நிறுவனங்களின் மதிப்பிடப்படுகின்றன.
ஆனால், கல்வி நிறுவனங்கள் தரும் தரவுகளை கொண்டுதான் மதிப்பீடு செய்யப்படுகிறது.
“கல்வி நிறுவனங்கள் கொடுக்கும் தரவுகள் சரி பார்க்கப்படும். வருடாந்திர கட்டணம் ரூ.10 லட்சம் கொண்ட கல்வி நிறுவனம், தங்களின் 80% மாணவர்கள் பொருளாதாரத்தில் நலிவடைந்தவர்கள் என்று கூறினால் அது முரண்பாடானது. இது போன்ற தரவுகளையும் பிற தரவுகளை NIRF சரி பார்க்கும்” என்ற விளக்கத்தையும் NIRF தனது அதிகாரபூர்வ இணையதளத்தில் தெரிவிக்கிறது.
அதிக மதிப்பெண்கள் கொண்ட ஆராய்ச்சி சம்பந்தப்பட்ட தரவுகள் இணையதளங்களிலிருந்து சரி பார்க்கப்படும் என்று NIRF கூறுகிறது.
முனைவர் பட்டப் படிப்புக்கான மாணவர்கள் உட்பட மாணவர்களின் எண்ணிக்கை, ஆசிரியர்- மாணவர் சதவீதம், முனைவர் பட்டம் அல்லது அதற்கு ஈடான கல்வித் தகுதி மற்றும் அனுபவம் கொண்ட ஆசிரியர்களின் எண்ணிக்கை, நிதி ஆதாரங்கள் மற்றும் அவற்றை செலவு செய்யும் விதம், வெளியாகியுள்ள ஆய்வுக் கட்டுரைகளின் எண்ணிக்கை மற்றும் அவற்றின் தரம், காப்புரிமைகள், பல்கலைகழகத் தேர்வுகளில் தேர்ச்சிப் பெறுபவர்களின் எண்ணிக்கை, பிற மாநிலங்கள் மற்றும் நாடுகளிலிருந்து படிக்கும் மாணவர்களின் சதவீதம் மாணவிகளின் சதவீதம், சமூக பொருளாதாரத்தில் நலிவடைந்த மாணவர்கள், மாற்று திறனாளி மாணவர்களுக்கான வசதிகள், கல்வியாளர்கள் மற்றும் வேலை நிறுவனங்களின் முன்னுரிமைகள் ஆகியவற்றின் அடிப்படையில் கல்வி நிறுவனங்களின் ஒட்டுமொத்த தரவரிசை வழங்கப்படுகிறது.

பட மூலாதாரம், FACEBOOK
ஐஐடியில் முதல் முறையாக ஸ்போர்ட்ஸ் கோட்டா
இந்தியாவில் உள்ள 23 ஐஐடிகளில், ஐஐடி மெட்ராஸில் மட்டுமே விளையாட்டு வீரர்களுக்கான ஒதுக்கீடு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதை குறிப்பிட்டு மத்திய கல்வி அமைச்சர் பாராட்டியதாக ஐஐடி மெட்ராஸ் இயக்குநர் காமகோடி தெரிவித்திருந்தார்.
“ஐஐடி மெட்ராஸில் 32 இடங்கள் விளையாட்டில் சிறந்து விளங்குபவர்களுக்காக உள்ளன. இதில் தற்போது ஐந்து தேசிய விளையாட்டு வீரர்கள் படித்து வருகின்றனர். தேசிய அளவில் விளையாடினால் ஐஐடியில் படிக்கலாம் என்ற உந்துதல் பிள்ளைகளுக்கு கிடைக்கும்” என்றார்.
ஐஐடி மெட்ராஸ் பொறியியல் படிப்பதற்காக மட்டுமே என்ற நிலையை மாற்றி அனைவருக்குமானதாக உருவாக்க பல்வேறு முயற்சிகளை எடுத்து வருவதாக இயக்குநர் காமகோடி சுட்டிக்காட்டினார்.
“கணக்கு, அனைத்து அறிவியல் படிப்புகளுக்கும் அடிப்படையானது. பள்ளிகளில் கணக்கு டீச்சர் தேர்ந்தவராக இருப்பது அவசியமாகும். டாடா இன்ஸ்டிடியூட் ஆஃப் சோஷியல் சையன்சஸ் உடன் இணைந்து, பி எஸ் சி கணிதவியலுடன் சேர்ந்த பி எட் ஆசிரியர் படிப்பை அறிமுகப்படுத்தவுள்ளோம். ஓராண்டுக்கு 500 நல்ல கணக்கு ஆசிரியர்களை உருவாக்க வேண்டும் என்பது இலக்காகும்.
என் ஐ டி (NIT-National Institute of Technology)-யில் ஒவ்வொரு பாடப்பிரிவிலிருந்தும் 10% மாணவர்கள், தங்கள் நான்கு வருட படிப்புக் காலத்தில் ஒரு வருடம் ஐஐடி மெட்ராஸ்-ல் படிக்கலாம். இங்கு நல்ல மதிப்பெண்கள் பெற்றால், பிஎச்டி சேர்க்கைக்கு முன்னுரிமை வழங்குகிறோம்.
தமிழ்நாட்டில் ஒரு லட்சம் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு எல்க்ட்ரானிக்ஸ் குறித்த அடிப்படை பயிற்சி வழங்குகிறோம். பிற கல்வி நிறுவனங்களுக்கு நிர்வாக ரீதியாக பயிற்சிப் பட்டறைகள் வழங்குகிறோம்.” என்றார்.
கல்வி நிறுவனங்கள் அளிக்கும் தரவுகளின் அடிப்படையில்தான் மதிப்பீடு செய்யப்படுகிறது என்றும் இந்த தரவரிசைப் பட்டியலுக்கான மதிப்பெண்கள் வழங்கும் முறை வெளிப்படையானதாக இல்லை என்றும் சென்னையில் உள்ள கல்வி ஆலோசகர் நெடுஞ்செழியன் குற்றம் சாட்டுகிறார்.
“ ஐஐடி மெட்ராஸ் மூன்றரை லட்சம் வரை கட்டணம் பெற்றுதான் டேட்டா சையன்ஸ் படிப்பை நடத்துகிறது. பிட்ஸ் பிலானியை விட பல தனியார் கல்லூரிகள் இந்த பட்டியலில் முன்னிலையில் உள்ளன, இது எப்படி உலக அளவில் ஏற்றுக் கொள்ளப்படும்? இதன் மூலம் தனியார் கல்வி நிறுவனங்கள் தங்கள் கட்டணத்தை உயர்த்திக் கொள்ள முடியும்.” என்றார் அவர்
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)












