ஒரே பேராசிரியர் 32 பொறியியல் கல்லூரிகளில் பணிபுரிந்தது எப்படி? அண்ணா பல்கலைக் கழகம் கூறுவது என்ன?

- எழுதியவர், முரளிதரன் காசி விஸ்வநாதன்
- பதவி, பிபிசி தமிழ்
தமிழ்நாட்டில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரிகளில் போதுமான ஆசிரியர்கள் இல்லாத காரணத்தால், ஒருவரே பல தனியார் கல்லூரிகளில் பேராசிரியராகப் பணியாற்றியதாகக் காட்டப்பட்டு மோசடி நடந்திருப்பதாக அறப்போர் இயக்கம் குற்றம் சாட்டியுள்ளது. இவர்களுள் ஒருவரே 32 கல்லூரிகளில் பேராசிரியராக பணியாற்றியது தெரியவந்துள்ளதாக, அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் வேல்ராஜ் தெரிவித்துள்ளார். இந்த மோசடி எப்படி நடந்தது?
தமிழ்நாட்டில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரிகளில் போதுமான பேராசிரியர்கள் பணியாற்றாத நிலையில், ஒரு சிலரே பல கல்லூரிகளில் பேராசிரியராகப் பணியாற்றுவதாகக் காட்டி தகுதியற்ற நூற்றுக்கணக்கான கல்லூரிகள் அனுமதி பெற்றிருப்பதாக தமிழ்நாட்டில் இருந்து செயல்படும் தன்னார்வ அமைப்பான 'அறப்போர் இயக்கம்' குற்றம் சாட்டியிருக்கிறது.
இந்த விவகாரம் பெரிதாக வெடித்ததையடுத்து, தனியார் பொறியியல் கல்லூரிகளில் போலி ஆசிரியர் விவகாரம் குறித்து விசாரிக்க குழு அமைக்கப்பட்டுள்ளதாக அண்ணா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் ஆர். வேல்ராஜ் தெரிவித்திருக்கிறார்.
தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் பெற்ற தகவல்களின் அடிப்படையில் இந்தக் குற்றச்சாட்டுகளை அந்த அமைப்பு தெரிவித்திருக்கிறது.
இந்த அமைப்பு கூறும் குற்றச்சாட்டுகளின்படி, 'ஒரு நபரே பல கல்லூரிகளில் பணியாற்றும் மோசடி' 224 கல்லூரிகளில் நடந்திருப்பதாகவும் 353 பேராசிரியர்கள் இந்த மோசடியில் ஈடுபட்டிருப்பதாகவும் அறப்போர் இயக்கம் குற்றம் சாட்டியுள்ளது.
ஒரு தனியார் கல்லூரியில் ஒவ்வொரு பொறியியல் படிப்புக்கும் இருக்க வேண்டிய கட்டமைப்பு என்ன என்பதை தொழில்நுட்ப கல்விக்கான அனைந்திந்திய மன்றம்(All India Council for Technical Education - AICTE) வகுத்துள்ளது.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
ஏ.ஐ.சி.டி.இ வகுத்துள்ள இந்த விதிமுறைகளின் அடிப்படையில், ஒவ்வொரு கல்லூரியிலும் அண்ணா பல்கலைக்கழகம் நேரடி ஆய்வு மேற்கொள்கிறது. அந்த ஆய்வில் கல்லூரிகளில் பணியாற்றும் பேராசியர்களின் எண்ணிக்கை, அவர்களின் கல்வித்தகுதி, மாணவர்களுக்கான செய்முறை பரிசோதனைக் கூடம் போன்றவற்றின் உட்கட்டமைப்பைப் பொறுத்தே அந்தந்த கல்லூரிகளுக்கு அங்கீகாரம் வழங்கப்படும்.
ஒரு கல்லூரியில் பணிபுரியும் முழுநேரப் பேராசிரியர் மற்றும் முனைவர் பட்டம் பெற்றவர்களின் எண்ணிக்கையைப் பொறுத்தே அந்தக் கல்லூரியில் பல்வேறு பாடப் பிரிவுகளுக்கும், அந்தப் பாடப் பிரிவுகளுக்கான மாணவர்கள் சேர்க்கை எண்ணிக்கைக்கும் அனுமதி அளிக்கப்படும்.
ஒரு கல்லூரியின் முழுநேர பேராசிரியர், மற்றொரு கல்லூரியில் முழுநேர பேராசியராகப் பணிபுரிய முடியாது, அப்படிப் பணி புரிந்தால் மோசடி என்று AICTE-யின் விதிகள் கூறுகின்றன. இதை உறுதி செய்யவே அண்ணா பல்கலைக்கழகத்தின் ‘நிறுவனங்களின் இணைப்பு மையத்தின் (Centre for Affiliation of Institutions)' ஆய்வுப் பிரிவு ஆண்டுதோறும், தமிழ்நாட்டில் இருக்கும் பொறியியல் கல்லூரிகளில் நேரடியாகச் சென்று ஆய்வு நடத்துகிறது.
அப்படி நேரடியாகச் சென்று ஆய்வு நடத்தும் பிரிவு, 2023-24 கல்வியாண்டில் தகுதியற்ற நூற்றுக்கணக்கான கல்லூரிகளுக்கு அனுமதி அளித்துள்ளதாக அறப்போர் இயக்கம் குற்றம் சாட்டியுள்ளது.
‘எல்லோருக்கும் தெரிந்த விஷயம்’

பட மூலாதாரம், Getty Images
பொதுவாக, கல்லூரிகளில் பணியாற்றும் பேராசிரியர்களுக்கு ஏஐசிடிஇ தனித்துவமான அடையாள எண்களை வழங்குகிறது. அதன் மூலம் ஒரு பேராசிரியர் ஒரு கல்லூரியில் பணிபுரிவதாக உள்ளீடு செய்துவிட்டால், இன்னொரு கல்லூரியில் பணியாற்றுவதாக உள்ளீடு செய்ய முடியாது.
ஆனால், குற்றம் சாட்டப்படும் பேராசிரியர்கள் போலியான தனித்துவ எண்களை வழங்கி இந்த முறைகேடுகளைச் செய்ததாகச் சொல்லப்படுகிறது. இதுபோல தனித்துவ எண்கள் இல்லாமல் போலி எண்களை வைத்து 13,891 பேர் பணிபுரிவதாக அறப்போர் இயக்கம் கண்டறிந்துள்ளது.
இந்தப் பின்னணியில் 2023-24இல் குழு அமைத்து ஆய்வு மேற்கொண்ட அப்போதைய நிறுவனங்களின் இணைப்பு மைய இயக்குநர் ஏ. இளையபெருமாள், ஆய்வுக் குழுவின் உறுப்பினர்கள், 224 கல்லூரியின் நிர்வாகிகள், 353 பேராசிரியர்கள் ஆகிய அனைவரையும் விசாரிக்க வேண்டும் என இந்த அமைப்பு கோரியிருக்கிறது.
"இதுபோல நடக்கிறது என்பது இந்தத் துறையைக் கவனிக்கும் எல்லோருக்கும் தெரிந்த விஷயமாகத்தான் இருக்கிறது. இது குறித்து எங்களிடம் சிலர் தொடர்ந்து சொல்லி வந்த நிலையில், நாங்கள் கடந்த ஓராண்டாக இதில் பணியாற்றினோம்,” என்கிறார் அறப்போர் இயக்கத்தின் ஜெயராமன்.
தமிழ்நாட்டில் சுமார் 430 கல்லூரிகள் அண்ணா பல்கலைக்கழகத்தின் அங்கீகாரத்துடன் செயல்பட்டு வருகின்றன. “முதலில் இந்தக் கல்லூரிகளின் பட்டியலை எடுத்தோம். பிறகு அங்கு பணியாற்றிய பேராசிரியர்களின் பட்டியலை எடுத்து ஒவ்வொன்றாக ஒப்பிட்டுப் பார்த்தபோது இந்தத் தகவல்கள் தெரிய வந்தன. அண்ணா பல்கலைக்கழகத்தின் சார்பில் ஆய்வுக்குச் செல்லும் குழுவுக்குத் தெரிந்தேதான் இது நடப்பதாக நாங்கள் கருதுகிறோம்,” என்கிறார்.
மேலும், எந்தக் குழுவினர் இந்த ஆய்வுக்குச் சென்றார்கள் என்பதைப் பல்கலைக்கழகத்திடம் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கேட்டபோது, அவர்கள் தர மறுத்துவிட்டதாகவும் கூறுகிறார் அவர்.
“ஆசிரியர்களுக்கான தனித்துவம் மிக்க எண்ணை மட்டும்தான் பொறியியல் கல்லூரிகள் பேராசிரியர்களுக்குப் பயன்படுத்த வேண்டும். ஆனால், AU, AI என என்னென்னவோ எண்களைப் பயன்படுத்துகிறார்கள். சிலர் ஒவ்வொரு கல்லூரிக்கும் ஒவ்வொரு புகைப்படத்தை அளிக்கிறார்கள். தமிழ்நாட்டில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரிகளில் 47 ஆயிரம் பேர் வேலை பார்த்தால் அதில் 14 ஆயிரம் பேருக்கு தனித்துவம்மிக்க எண்களே இல்லை. இவர்கள் என்ன படித்திருக்கிறார்கள், இவர்களது தரம் என்ன என்பது யாருக்கும் தெரியாது," என்கிறார் அறப்போர் இயக்கத்தின் ஜெயராமன்.
‘15 ஆண்டுகாலப் பிரச்னை’

பட மூலாதாரம், ARAPPOR IYAKKAM
தனியார் பொறியியல் கல்லூரி சார்பில் இது குறித்து வெளிப்படையாகப் பேசத் தயங்குகிறார்கள். பெயர் தெரிவிக்க விரும்பாமல் பேசிய தனியார் பொறியியல் கல்லூரியின் முதல்வர் ஒருவர், இந்த விவகாரத்தில் இருக்கும் பல்வேறு பிரச்னைகளைப் பட்டியலிட்டார்.
"ஏ.ஐ.சி.டி.இ 60 மாணவர்களுக்கு 9 பேராசிரியர்கள் இருக்க வேண்டும் எனச் சொல்கிறது. ஆனால், அந்த அளவுக்குத் தகுதி வாய்ந்த பேராசிரியர்கள் கிடைப்பதில்லை. நிலைமை இப்படியிருக்கும்போது புதிய புதிய படிப்புகளுக்கு வேறு அனுமதி தருகிறார்கள். இந்தப் படிப்புகளைக் கற்பிக்கவெல்லாம் எங்கிருந்து பேராசிரியர்கள் கிடைப்பார்கள்?” என்கிறார்.
“ஒரு தனியார் பொறியியல் கல்லூரியில் எல்லாம் சரியாக இருக்கிறதா என்று பரிசோதிக்க வேண்டியது அண்ணா பல்கலைக்கழகத்தின் கடமை. ஆகவே தவறு அவர்கள் பக்கமும் இருக்கிறது. இதனால், ஒட்டுமொத்தமாக மாணவர்கள்தான் பாதிக்கப்படுகிறார்கள்," என்கிறார் அந்தப் பேராசிரியர்.
ஒரே பேராசிரியர் பல்வேறு கல்லூரிகளில் பணியாற்றினால் மாணவர்களுக்கு எப்படிப் பாடம் நடத்தப்படும்?
"ஆன்லைனில் இருக்கும் வீடியோக்களை வைத்துப் பாடம் நடத்துகிறார்கள். அது புரிந்தவர்கள் தேறுகிறார்கள். மற்றவர்களுக்குச் சிக்கல்தான்," என்கிறார் அவர்.
இந்தப் பிரச்னை இப்போதுதான் பெரிதாக வெடித்திருந்தாலும் 15 ஆண்டுகளுக்கும் மேலாக தனியார் பொறியியல் கல்லூரிகளில் இப்படித்தான் நடப்பதாகக் கூறுகிறார் அண்ணா பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணை வேந்தரான பாலகுருசாமி.
"இந்த விஷயம் இப்போது துவங்கியதல்லை. கடந்த 15 ஆண்டுகளாகவே இப்படித்தான் நடக்கிறது. இதில் பல பிரச்னைகள் இருக்கின்றன. அண்ணா பல்கலைக்கழகத்தின் இணைப்புக் கல்லூரிகள் தகுதி வாய்ந்தவையாக இருக்கின்றனவா என்பதைப் பார்வையிட ஒரு குழு செல்லும். அங்கிருக்கும் குறைபாடுகளைப் பதிவுசெய்து, ஒரு மாதத்திற்குள் அதைச் சரிசெய்ய வேண்டுமெனக் கடிதம் ஒன்று அனுப்பப்படும். ஆனால், அதற்குப் பிறகு அந்தக் குறைபாடு சரி செய்யப்பட்டதா என்பதை மீண்டும் சரிபார்க்க வேண்டுமல்லவா, அது நடக்காது,” என்கிறார் அவர்.
மேலும், “பேராசிரியர்களுக்கு ஏஐசிடிஇ தனித்துவமான எண்களைக் கொடுக்கிறது. அந்த எண்கள் உண்மையானவையா, அந்த எண்களைக் கொண்டவர்கள் எங்கெங்கே பணியாற்றுகிறார்கள் என்பதை எளிதில் கண்டுபிடித்துவிட முடியும். ஆனால், அதையும் செய்வதில்லை. போலி எண்கள் இருந்தாலும் கண்டுகொள்வதில்லை,” என்கிறார் அவர்.
‘பாதிக்கப்படுவது மாணவர்கள்தான்’

மேலும் பேசிய பாலகுருசாமி, “அண்ணா பல்கலைக்கழகம் ஒரு தன்னாட்சி உரிமை கொண்ட அமைப்பு. அந்தப் பல்கலைக்கழகம் நினைத்தால் இதையெல்லாம் கட்டுப்படுத்த முடியும். ஆனால், இதில் அரசியல் தலையீடு அதிகம் இருக்கும். காரணம், அரசியல்வாதிகளே பல பொறியியல் கல்லூரிகளை நடத்துகிறார்கள். இம்மாதிரி சூழலில் பல்கலைக்கழகம்தான் மிகுந்த கண்டிப்புடன் செயல்பட வேண்டும். அப்படி நடப்பதில்லை என்பது துரதிர்ஷ்டவசமானது,” என்கிறார்.
“இதனால், மிகவும் பாதிக்கப்படுவது மாணவர்கள்தான். பல தனியார் பொறியியல் கல்லூரிகளில் மாணவர் தேர்ச்சி விகிதம் 0 - 20 சதவீதம் வரைதான் இருக்கிறது. ஆசிரியர்களே இல்லாவிட்டால் யார் பாடம் நடத்துவார்கள்? எப்படி மாணவர்கள் தேர்ச்சி பெறுவார்கள்?
தமிழ்நாட்டில் பொறியியல் கல்வியின் தரம் மிகக் கீழே போய்க் கொண்டிருப்பதற்கு இதுதான் முக்கியக் காரணம்" என்கிறார் அண்ணா பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தரான பாலகுருசாமி.
இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட பேராசிரியர்கள், கல்லூரிகள் மட்டுமல்ல, அங்கீகாரம் வழங்கிய அண்ணா பல்கலைக்கழகம், கட்டமைப்புகளை ஆராயாமலே அனுமதி தரும் ஏ.ஐ.சி.டி.இ ஆகிய அனைவருக்கும் இந்தக் குளறுபடியில் பங்கிருப்பதாகக் கூறுகிறார் கல்வியாளர் ஜெயப்பிரகாஷ் காந்தி.
"இதில் ஒரு தரப்பின் மீது மட்டும் குற்றம் சுமத்த முடியாது. கல்லூரி, பல்கலைக்கழகம், ஏ.ஐ.சி.டி.இ ஆகிய மூன்றின் மீதும் தவறுகள் இருக்கின்றன. ஒரு பொறியியல் கல்லூரியில் கூடுதல் இடங்கள் கேட்டால், உடனடியாக அனுமதி தரக்கூடாது. அப்படியே அனுமதி தந்தாலும் முதல் ஆண்டில் மாணவர்கள் சேர்க்கைக்கு அனுமதி தரக்கூடாது. அந்த ஆண்டில் அவர்கள் தங்கள் கட்டமைப்பை எப்படி உருவாக்குகிறார்கள் என்பதைக் கவனிக்க வேண்டும்.
புதிதாக படிப்புகளைத் துவங்கும்போது, ஏ.ஐ.சி.டி.இ-யே பயிற்சி வழங்க வேண்டும். பேராசிரியர்கள் அந்தப் பயிற்சியில் எப்படிச் செயல்படுகிறார்கள் என்பதைக் கவனிக்க வேண்டும். இதுபோல எதையும் செய்யாமல், போலி பேராசிரியர் பிரச்னையை மட்டும் பேசுவதால் பயனில்லை" என்கிறார் ஜெயப்பிரகாஷ் காந்தி.
இந்த விவகாரம் நடந்த தருணத்தில் சி.ஏ.ஐ குழுவின் இயக்குநராக இருந்த இளையபெருமாளைத் தொடர்புகொள்ள மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் பலனளிக்கவில்லை.
நிறுவனங்களின் இணைப்பு மையத்தின் (CAI) இணையதளத்தில் மாவட்ட வாரியாக அண்ணா பல்கலைக்கழகத்துடன் இணைந்து செயல்படும் பொறியியல் கல்லூரிகளின் பட்டியல் அளிக்கப்பட்டுள்ளது. அந்தக் கல்லூரிகளின் பேராசிரியர்கள் பட்டியலை எடுத்துப் பார்த்தால், பலருக்கு ஏஐசிடிஇ-யின் தனித்துவ எண்களே இல்லை.
அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் என்ன சொல்கிறார்?

பட மூலாதாரம், Getty Images
இந்த விவகாரம் பெரிதாக வெடித்ததையடுத்து, தனியார் பொறியியல் கல்லூரிகளில் போலி ஆசிரியர் விவகாரம் குறித்து விசாரிக்க குழு அமைக்கப்பட்டுள்ளதாக அண்ணா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் ஆர். வேல்ராஜ் தெரிவித்திருக்கிறார்.
"அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் தனியார் பொறியியல் கல்லூரிகளில் 52,500 பேராசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர். ஆனால், 2 ஆயிரம் பேராசிரியர்களுக்கு பற்றாக்குறை இருந்ததால் 189 பேராசிரியர்கள் ஒன்றுக்கும் மேற்பட்ட கல்லூரிகளில் பணியாற்றுவதாக கல்லூரி நிர்வாகத்தினர் கணக்கு காட்டியுள்ளனர்.
முறைகேட்டில் ஈடுபட்டுள்ளவர்களில் ஒருவர் 5 கல்லூரிகளிலும் இன்னொருவர் 32 கல்லூரிகளிலும் பணியாற்றியிருக்கின்றனர்.
அவர்கள் வெவ்வேறு ஆதார் எண்களைக் கொடுத்துள்ளனர். இதுகுறித்து விசாரிப்பதற்காக ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது. முறைகேட்டில் ஈடுபட்ட கல்லூரி நிர்வாகத்தினர் மீதும் அதற்கு உடந்தையாக இருந்த பேராசிரியர்கள் மீதும் கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்படும்," என்கிறார் ஆர். வேல்ராஜ்.
இதற்குப் பிறகு இந்த விவகாரம் குறித்து அறிக்கை தாக்கல் செய்யும்படி தமிழக ஆளுநரும் அண்ணா பல்கலைக்கழக வேந்தருமான ஆர்.என்.ரவி அண்ணா பல்கலைக்கழகத்திற்கு உத்தரவு பிறப்பித்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)












