மதுரையில் கிரானைட் குவாரி ஏலம் ரத்து செய்யப்பட்டதன் உண்மை காரணம் என்ன?

கிராணைட் குவாரி ஏலம் ரத்து

பட மூலாதாரம், Selvaraj

    • எழுதியவர், தங்கதுரை குமாரபாண்டியன்
    • பதவி, பிபிசி தமிழ்

மதுரை மாவட்டம் மேலூர் தாலுகாவிற்குட்பட்ட சேக்கிப்பட்டி, திருச்சுனை, அய்யாபட்டி ஆகிய மூன்று கிராமங்களில் வண்ண கல் கிரானைட் குவாரி அமைப்பதற்கான பொது ஏலம் அறிவிக்கப்பட்டது. கிரானைட் குவாரி அமைப்பதற்கு எதிர்த்து கிராம மக்கள் பல்வேறு தொடர் போராட்டங்களை முன்னெடுத்து கொண்டு இருந்த போது குவாரி அமைப்பதற்கானப் பொது ஏலம் ரத்து செய்யப்படுவதாக மாவட்ட ஆட்சியர் அறிவித்தார்.

இந்த அறிவிப்பு, போராட்டத்தில் ஈடுபட்டு வந்த கிராம மக்கள் மத்தியில் மகிழ்ச்சியையும், மன நிம்மதியையும் ஏற்படுத்தி உள்ளது. ஏலத்தை மாவட்ட நிர்வாகம் ரத்து செய்யும் அளவிற்கு பொதுமக்கள் போராட்டங்களை முன்னெடுக்க என்ன காரணம்?

அரசு கிரானைட் பொது ஏலத்தை ரத்து செய்ததன்பின்னணி என்ன? இது மக்களின் போராட்டத்திற்கு கிடைத்த வெற்றியா?

மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்திய கிரானைட் குவாரி ஏல அறிவிப்பு

கிராணைட் குவாரி ஏலம் ரத்து

பட மூலாதாரம், Nature Culture foundation/Facebook

மதுரை மாவட்டம் மேலூர் தாலுகாவிற்கு உட்பட்ட சேக்கிபட்டி, திருச்சுளை அய்யாபட்டி ஆகிய கிராமங்களில் உள்ள அரசு புறம்போக்கு நிலங்களில் பல வண்ண கிரானைட் குவாரிகள் 20 ஆண்டுகள் குத்தகை உரிமம் வழங்க இருப்பதாகவும் இதற்கான பொது ஏலம் அக்டோபர் 30 ஆம் தேதி நடைபெறும் எனவும்

கடந்த அக்டோபர் 11 ஆம் தேதி மதுரை மாவட்ட ஆட்சியர் வாயிலாக அறிக்கை வெளியிடப்பட்டது.

கடந்த 2014ம் ஆண்டு சகாயம் மதுரை மாவட்ட ஆட்சியராக இருந்த போது கிரானைட் குவாரிகளில் ஆய்வு மேற்கொண்டு கிரானைட் குவாரிகள் அரசு விதிகளை மீறி அதிக கற்களை வெட்டி எடுத்து அரசுக்கு கோடிக்கணக்கில் இழப்பீடு ஏற்படுத்தி இருந்ததை அறிக்கையாக அரசுக்கு அனுப்பினார்.

இதனைத் தொடர்ந்து மதுரையில் செயல்பட்டு வந்த 180க்கும் அதிகமான குவாரிகள் மூடப்பட்டன.

இதனால், மதுரையில் 11 ஆண்டுகளுக்கு மேலாக கிரானைட் குவாரிகள் செயல்படாமல் இருந்து வந்தது.

இந்த நிலையில், மாவட்ட ஆட்சியரின் கிரானைட் ஏல அறிவிப்பு மேலூர் பகுதியைச் சேர்ந்த கிராம மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியது. கிரானைட் குவாரிகள் கிராமங்களில் அமைக்கப்பட்டால் பல்வேறு பிரச்சனைகளை மக்கள் சந்திக்க நேரிடும் என மக்கள் இந்த ஏலத்தை எதிர்க்கத் துவங்கினர்.

கிரானைட் குவாரியால் மக்களுக்கு என்ன பாதிப்பு?

மேலூரில் கிரானைட் குவாரிகள் அமைப்பதற்காக ஏலம் அறிவிக்கப்பட்ட அரசு புறம்போக்கு இடத்திற்கு அருகில், நீர் நிலைகள், கோவில்கள், குடியிருப்பு பகுதிகள், 100 ஏக்கர் பரப்பளவிலான நஞ்சை புஞ்சை நிலங்கள், பணிமனைக் கூட்டு, கோழி முட்டை பாறை, வண்ணான் பாறை ஆகிய மலைகள் இருக்கின்றன.

எனவே, கிரானைட் குவாரி அமைந்தால் மக்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகும், சுற்றுச் சூழல் கடுமையாக பாதிக்கப்படும் என அப்பகுதி மக்கள் கருதினர்.

மூன்று கிராமங்களில் அரசு கிரானைட் குவாரிகள் அமைக்கும் முடிவை கைவிட வேண்டும் என மாவட்ட ஆட்சியரிடம் கிராம மக்கள் திரண்டு மனுக்களை அளித்தனர்.

பின்னர், அக்டோபர் 26 ஆம் தேதி முதல் சேக்கிபட்டி மந்தைத்திடல் பகுதியில் சேக்கிபட்டி, அய்யாபட்டி, திருச்சுனை, ஓட்டக்கோவில் உள்ளிட்ட 14 கிராமங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டு தங்களது பகுதியில கிரானைட் குவாரிகள் அமைக்க கூடாது என தொடர் காத்திருப்பு போராட்டத்தை அறிவித்து போராட்டத்தை நடத்தினர்.

கிராணைட் குவாரி ஏலம் ரத்து

பட மூலாதாரம், Selvaraj

கிரானைட் குவாரி ஏல தேதி ஒத்திவைப்பு

கிரானைட் குவாரி அமைப்பதற்கு எதிரான மக்களின் போராட்டத்தால் அக்டோபர் 30 ஆம் தேதி நடைபெறுவதாக இருந்த கிரானைட் குவாரிக்கான பொது ஏலம் நவம்பர் 30க்கு ஒத்தி வைக்கப்படுவதாக ஆட்சியர் அறிவித்தார். இந்த அறிவிப்பை அடுத்து மக்களும் தங்களின் போராட்டத்தை தற்காலிகமாக ஒத்தி வைத்தனர்.

சேக்கிபட்டியில் கடந்த நவம்பர் 1 ஆம் தேதி நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் சேக்கிபட்டி பகுதியில் கிரானைட் குவாரி அமைக்கக் கூடாது என ஒரு மனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதற்கு ஆதரவாக காம்பூர், அய்யாபட்டி கிராம மக்களும் கிராம சபை கூட்டத்தில் கிரானைட் குவாரிக்கு எதிரான தீர்மானங்களை நிறைவேற்றினர். இது அரசாங்கத்திற்கு மேலும் நெருக்கடியை கொடுத்தது.

கிராம மக்களுக்கு அரசு கொடுத்த அதிர்ச்சி என்ன?

கிராம மக்கள் போராட்டத்தை ஒத்தி வைத்து இருந்த நிலையில் போராட்டத்தை ஒருங்கிணைத்த காம்பூர் செல்வராஜ் மீது காவல்துறையினர் தொடர் குற்றங்களில் ஈடுபடும் நபர் மீது பதிவு செய்யும் இந்திய தண்டனைச் சட்டம் 110 கீழ் வழக்குப் பதிவு செய்தது.

இது கிரானைட் குவாரிக்கு எதிரான போராட்டத்தில் ஈடுபடும் மக்களின் குரலை நெரிக்கும் செயல் என அரசியல் கட்சியினர் மற்றும் சுற்றுச்சூழல் ஆய்வாளர்கள் எதிர்ப்பு தெரிவித்து மக்களின் போராட்டத்திற்கு தங்களின் ஆதரவை அளித்தனர்.

செல்வராஜ்மீது போடப்பட்டது வழக்கிற்கு எதிராக கிராம மக்கள் சார்பில் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் நவம்பர் 22 ஆம் தேதி வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு நீதிபதி இளங்கோவன் முன்பு நவம்பர் 27ம் தேதி விசாரணைக்கு வந்தபோது அந்த வழக்கு பொய் வழக்கு என செல்வராஜ் தரப்பில் வாதிடப்பட்டது. இரு தரப்பு வாதங்களை கேட்ட நீதிபதி, செல்வராஜ் மீது காவல்துறை பதிவு செய்த IPC110 வழக்கினை ரத்து செய்து உத்தரவிட்டார்.

கிராணைட் குவாரி ஏலம் ரத்து

பட மூலாதாரம், Selvaraj

படக்குறிப்பு, கைது செய்யப்பட்ட செல்வராஜ்

போராட தயாரான மக்களுக்கு கிடைத்த வெற்றிச் செய்தி

மாவட்ட ஆட்சியர் அறிவித்ததன்படி நவம்பர் 30ஆம் தேதி பொது ஏலம் நடத்த இருப்பதால் அதனை எதிர்த்து தீவிரமான போராட்டத்தை முன்னெடுக்க கிராம மக்கள் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டு இருந்தனர். அந்த நேரம் ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து நிர்வாக காரணத்தால் கிரானைட் குவாரியின் ஏலம் ரத்து செய்யப்படுவதாக அறிவிப்பு வெளியானது.

மதுரை மாவட்ட ஆட்சியர் சங்கீதா கிரானைட் ரத்து தொடர்பாக வெளியிட்ட அறிக்கையில் கூறியதாவது,

"மேலூர் சேக்கிபட்டி, அய்யாபட்டி மற்றும் திருச்சுனை கிராமங்களில், அரசுப் புறம்போக்கு நிலங்களில் அமைந்துள்ள தகுதிவாய்ந்த பலவண்ண கிரானைட் கற்களுக்கு குவாரி குத்தகை உரிமம் வழங்க விண்ணப்பங்கள் வரவேற்று ஏல அறிவிப்பு மதுரை மாவட்ட அரசிதழ் சிறப்பு வெளியீடு எண்.4 நாள்:03.10.2023-ல் வெளியிடப்பட்டு 31.10.2023 அன்று பொது ஏலம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

நிர்வாக காரணத்தினால் 31.10.2023 அன்று நடைபெற இருந்த பொது ஏலம், ஒரு மாத கால அளவிற்கு ஒத்திவைக்கப்பட்டு, 30.11.2023 அன்று பொது ஏலம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.

தற்போது, நிர்வாக காரணங்களால் பொது ஏலம் ரத்து செய்யப்படுகிறது என்ற விபரம் அறிவிக்கப்படுகிறது", என கூறி இருந்தார்.

கிராணைட் குவாரி ஏலம் ரத்து

பட மூலாதாரம், Selvaraj

ஏலம் ரத்து செய்யப்பட்டதை பட்டாசு வெடித்து கொண்டாடிய மக்கள்

மதுரை ஆட்சியர் கிரானைட் குவாரி ஏலத்தை ரத்து செய்து வெளியிட்ட அறிக்கையை அடுத்து சேக்கிபட்டியில் கூடி இருந்த கிராம மக்கள் பட்டாசுகளை வெடித்து, இனிப்புகளை பகிர்ந்து கொண்டாடி மகிழ்ந்தனர்.

“என் மீது IPC 110 கீழ் வழக்கு தொடர்ந்து குவாரிக்கு எதிரான மக்கள் போராட்டத்தை நீர்த்துப்போகச் செய்ய அரசு திட்டமிட்டது” என்கிறார் கிராம மக்களை ஒருங்கிணைத்த செல்வராஜ்.

“நான் தொடர்ச்சியாக கிரானைட் குவாரிக்கு எதிரான போராட்டத்தை முன்னெடுத்து பல்வேறு தளங்களில் இயங்கி வந்தேன். இதனை தடுக்கவே காவல்துறை வைத்து என் மீது இருந்த இரு சிறிய வழக்கை வைத்து சமூக விரோதிகளுக்கு பயன்படுத்தப்படும் IPC 110 விதியின் கீழ் வழக்கு பதிந்தது” எனத் தெரிவித்தார்.

கிராணைட் குவாரி ஏலம் ரத்து

பட மூலாதாரம், Selvaraj

“குவாரி ஏலம் ரத்து செய்யப்பட்டதற்கு வேறு காரணம் உள்ளது”

இதனை எதிர்த்து நாங்கள் நீதிமன்றத்திற்குச் சென்று வழக்கை தள்ளுபடி செய்துள்ளோம் எனக் கூறிய செல்வராஜ், "அரசு கிரானைட் குவாரிக்கான பொது ஏலத்தை ரத்து செய்திருப்பதை நாங்கள் மகிழ்ச்சியுடன் வரவேற்கிறோம். ஆனால், அரசு குவாரி அமைப்பதற்கான அரசாணையை ரத்து செய்யவில்லை. எனவே தொடர்ந்து விழிப்புணர்வுடன் அரசின் முடிவுகளை கவனிக்க வேண்டியது அவசியமாக உள்ளது", என்றார்

சட்டப்படி இந்த கிராமங்களில் கிரானைட் குவாரிகள் அமைக்க முடியாது என்பதாலேயே அரசு எலத்தை ரத்து செய்ததாக கூறுகிறார் சுற்றுச்சூழல் ஆர்வலர் முகிலன்.

அவர் கூறுகையில், “குவாரி ஏலம் ரத்து செய்ததற்கு பின்னால் இரு காரணம் மட்டுமே உள்ளன. ஒன்று மக்களின் வலிமையான போராட்டம், மற்றொன்று கிரானைட் குவாரி அமைப்பதற்கான சட்ட விதிகளுக்குள் இந்த 3 கிராமங்களும் இல்லை.

கிரானைட் குவாரி அமைப்பதாக இருந்தால் குவாரி இருக்கு இடத்திலிருந்து 300 மீட்டர் சுற்றளவுக்குள் வீடுகள், நிரந்தர கட்டுமானங்கள் இருக்கக் கூடாது என்பது அரசின் விதி.

ஆனால், இந்த மூன்று கிராமங்களிலும் அரசு அறிவித்த புறம்போக்கு இடங்களில் அருகே குடியிருப்புப் பகுதிகள், கோயில்கள் நீர்நிலைகள், உயர் மின் அழுத்த கோபுரங்கள் உள்ளன. இதனை அரசு அதிகாரிகள், ஆட்சியர் ஆய்வில் கண்டறிந்தனர்.” என முகிலன் கூறியுள்ளார்.

கிராணைட் குவாரி ஏலம் ரத்து

பட மூலாதாரம், Mugilan

படக்குறிப்பு, சுற்றுச்சூழல் ஆர்வலர் முகிலன்

மூன்று கிராமத்தை தேர்வு செய்தது ஏன்?

சம்பந்தப்பட்ட கிராமங்கள் எந்த அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டது என மேலூர் கோட்டாட்சியர் ஜெயந்தியிடம் பிபிசி தமிழ் கேள்வி எழுப்பியது.

இது குறித்து பேசிய கோட்டாட்சியர் ஜெயந்தி, “இந்த மூன்று கிராமங்களில் கிரானைட் குவாரிகள் அமைப்பதற்கு முன்பே ஆய்வுகள் நடத்தப்பட்டு அரசுக்கு பரிந்துரை செய்த பிறகே கிரானைட் குவாரிகள் அமைப்பதற்கான ஏலம் தொடர்பான அரசாணை கடந்த அக்டோபரில் வெளியிடப்பட்டது.” எனத் தெரிவித்தார்.

மேலும், “ஆனால் கிராம மக்கள் கிரானைட் குவாரி வந்தால் வாழ்வாதாரம் பாதிப்படையும் மேலும் சேக்கிப்பட்டி மலைப்பகுதியில் தொல்லியல் எச்சங்கள் உள்ளதாக ஆட்சியரிடம் கூறினர்.

இதனையடுத்து மாவட்ட ஆட்சியரின் உத்தரவின் அடிப்படையில் வருவாய்த்துறை, நில அளவை, மைன்ஸ் உள்ளிட்ட 5 துறைகள் இணைந்து மக்களின் கூறிய அனைத்தையும் ஆய்வு செய்து அறிக்கையாக மாவட்ட ஆட்சியரிடம் சமர்ப்பித்தோம்.

அதன் அடிப்படையில் கிரானைட் குவாரி அமைப்பது தொடர்பாக அறிவிக்கப்பட்ட பொது ஏலம் நிர்வாக காரணங்களால் ரத்து செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.” என அவர் தெரிவித்தார்.

குவாரி அமைப்பது தொடர்பான அரசாணை ரத்து செய்யப்பட்டுள்ளதா என்ற தகவல் மாவட்ட ஆட்சியருக்கு தான் தெரியும் என பிபிசியிடம் கூறினார் மேலூர் கோட்டாட்சியர் ஜெயந்தி.

"பல்லுயிர் தலமாக மலைகளை அறிவிக்க வேண்டும்"

முகிலன் மேலும் கூறுகையில், “இந்த மூன்று கிராமங்களில் உள்ள பணிமனைக்குண்டு, கோழி முட்டை பாறை, வண்ணாம் பாறை ஆகிய பகுதிகளில் வனத்துறையின் பாதுகாக்கப்பட விலங்குகள் பட்டியலில் முதல் அட்டவணையில் உள்ள தேவாங்கு அதிக அளவில் காணப்படுகிறது.

எனவே அரசு இதனை கவனத்தில் கொண்டு இந்த பகுதியை அரிட்டாப்பட்டி மலை போல் பல்லுயிர் தலமாக அறிவித்துச் சுற்றுச்சூழலை பாதுகாக்க முன்வர வேண்டும்" எனக் கூறினார்.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)