உங்கள் சான்றிதழில் பெயர் சரியாக உள்ளதா? - சிக்கல் ஏற்படாமல் இருப்பதற்கான வழிமுறைகள்

சான்றிதழ், ஆவணங்களில் பெயரால் ஏற்படும் சிக்கலை தவிர்ப்பது எப்படி?

பட மூலாதாரம், Getty Images

    • எழுதியவர், சேவியர் செல்வகுமார்
    • பதவி, பிபிசி தமிழ்

கோவையிலுள்ள தனியார் பல்கலைக்கழகத்தில் பொறியியல் பயிலும் இறுதியாண்டு மாணவிகளின் பெயர்களை தந்தை பெயருடன் சேர்த்து அச்சிட்டு செமஸ்டர் மதிப்பெண் சான்றிதழ்கள் தயார் செய்யப்பட்டுள்ளன.

இதைத் திருத்தம் செய்வதற்கு, மாணவிகளிடம் தலா ரூ.4,000 வீதம் வசூல் செய்யப்பட்டுள்ளது. இது மாணவிகள் செய்த தவறு என்று கூறும் பல்கலைக்கழக நிர்வாகம், அரசிதழில் பெயர் மாற்றுவது பெற்றோரின் பொறுப்பு என்றும் தெரிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் கல்விச்சான்றிதழ்கள் மற்றும் ஆவணங்களில் பெயர்களையும், எழுத்துகளையும் மாற்றி எழுதுவதால் மேல்படிப்பு, வேலைவாய்ப்பு, பாஸ்போர்ட் எடுப்பது, சொத்துக்களை விற்பது, வாங்குவது என பலவிதமான சிக்கல்கள் ஏற்படுகின்றன. இதனால் பிறப்புச் சான்றிதழ், கல்விச்சான்றிதழ், அரசு தரும் ஆவணங்கள் அனைத்திலும் ஒரே மாதிரியாக பெயர், இனிஷியல், எழுத்துக்களைப் பயன்படுத்த வேண்டுமென்று அரசு அதிகாரிகள் மற்றும் சட்டநிபுணர்கள் வலியுறுத்துகின்றனர்.

பெயருக்கு பின்னால் இனிஷியலுக்கு பதிலாக தந்தை பெயர்

கோவையிலுள்ள அவினாசிலிங்கம் மகளிர் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் பொறியியல் இறுதியாண்டு பயிலும் மாணவிகள் சிலர், இறுதியாண்டுக்கான முதல் செமஸ்டர் தேர்வை எழுதத் தயாரான நிலையில், இதுவரை அவர்கள் பெற்றுள்ள 6 செமஸ்டர்களுக்கான மதிப்பெண் சான்றிதழை டிஜிலாக்கரில் பதிவேற்றியபோது, பெயர் மாற்றத்தால் ஏற்கப்படவில்லை என்று தெரிகிறது.

பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 சான்றிதழ்களில் பெயருக்குப் பின்னால் இனிஷியல் இருந்த நிலையில், இதுவரை நடந்த 6 செமஸ்டர் மதிப்பெண் சான்றிதழ்களில் மாணவிகளின் பெயர்களுடன் இனிஷியல் இடம் பெறுவதற்குப் பதிலாக, பெயருக்குப் பின்னால் தந்தையின் பெயரும் முழுமையாகச் சேர்த்து அச்சிட்டுத்தரப்பட்டுள்ளது.

உதாரணமாக, மாதவனின் மகள் காவ்யா என்பதை காவ்யா.எம் என்று எழுதுவதற்குப் பதிலாக காவ்யா மாதவன் என்று சான்றிதழில் உள்ளது. இறுதியாண்டுக்குப்பின், இவர்கள் மேல்படிப்புக்கு விண்ணப்பிக்கும் பட்சத்தில், இந்த மதிப்பெண் சான்றிதழ்களைப் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதை முதலில் சில மாணவிகள் கண்டுபிடித்து, கல்லுாரி நிர்வாகத்திடம் தெரிவித்துள்ளனர்.

பெயர் கூற விரும்பாத ஒரு மாணவியின் தந்தை கூறுகையில், ''ஒருவரின் பிறப்புச்சான்றிதழில் உள்ளபடியே பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 மற்றும் பட்டப்படிப்பு சான்றிதழிலும் பெயர் இருக்க வேண்டும். அப்போதுதான் மேல் படிப்பு, வேலை வாய்ப்புக்கு விண்ணப்பிக்க முடியும். ஆனால் இதில் தந்தையின் பெயர் பின்னால் சேர்க்கப்பட்டுள்ளது. கல்லுாரி நிர்வாகத்தின் தவறு பற்றி கல்லுாரியில் தெரிவித்தபோது, அதைத் திருத்துவதற்கு ஒரு மாணவிக்கு ரூ.4,000 வீதம் பணம் வசூலிக்கப்பட்டுள்ளது.'' என்றார்.

சான்றிதழ், ஆவணங்களில் பெயரால் ஏற்படும் சிக்கலை தவிர்ப்பது எப்படி?

பட மூலாதாரம், Getty Images

இதேபோன்று, நுாற்றுக்கும் மேற்பட்ட மாணவிகளின் சான்றிதழ்களில் திருத்தம் மேற்கொள்ள, அவர்களிடம் இருந்து பணம் வசூலிக்கப்பட்டுள்ளதாக மாணவிகளின் பெற்றோர் சிலர் தெரிவித்தனர். அரசிதழில் திருத்தம் செய்ய வேண்டுமென்று இந்தத் தொகை வசூலிக்கப்பட்டதாக பெற்றோர் தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டது. ஆனால், இதை சம்பந்தப்பட்ட பல்கலைக்கழக நிர்வாகம் தரப்பில் மறுத்துள்ளனர்.

பல்கலைக்கழகத்தின் மக்கள் தொடர்பு அலுவலர் சுபாஷினியிடம் இதுபற்றி பிபிசி தமிழ் கேட்டபோது, ''நுாற்றுக்கும் மேற்பட்ட மாணவிகள் பெயர்களில் இந்தத் தவறு நடக்கவில்லை. இறுதியாண்டு மற்றும் மூன்றாம் ஆண்டு மாணவிகள் சிலருடைய பெயர்கள் மட்டும், இதுவரை நடந்த 6 செமஸ்டர் மதிப்பெண் சான்றிதழ்களில் இப்படி மாறியுள்ளன. இதற்குக் காரணம் கல்லுாரி நிர்வாகமில்லை.'' என்றார்.

இதுபற்றி மேலும் விளக்கிய அவர், ''மாணவிகள் கல்லுாரியில் சேரும்போது, சேர்க்கைப் பிரிவில் முந்தைய கல்வி சான்றிதழ்கள் சரி பார்க்கப்படும். அங்கு மாணவிகள்தான் படிவங்களில் (excel sheet) விபரங்களைப் பூர்த்தி செய்வார்கள். அதைத்தான் இ.கேம்பஸில் பதிவேற்றி, தேர்வு கட்டுப்பாட்டுத்துறையில் சான்றிதழ் தயார் செய்வார்கள். தற்போது டிஜிலாக்கரில் இதைச் சேர்க்கும் போது சிக்கல் ஏற்பட்டதால் மாணவிகள்தான் தங்கள் தவறைக் கண்டறிந்து பெயர் மாற்ற விண்ணப்பித்துள்ளனர்.'' என்றார்.

"பல்கலைக்கழகம் நிர்ணயித்துள்ளபடி, சான்றிதழ் மாற்றுவதற்கான கட்டணமாக 500 ரூபாய், காகிதம், பிரிண்டிங் செலவு 150 ரூபாய் வீதமாக ஒவ்வொரு மாணவியிடமும் ரூ.4 ஆயிரம் வரை பணம் பெறப்பட்டுள்ளது. இந்தத் தொகைக்கு பழைய மதிப்பெண் சான்றிதழ்களை மட்டுமே பல்கலைக்கழகம் மாற்றித் தருமென்றும், அரசிதழில் மாற்றுவது அவரவர் பெற்றோரின் பொறுப்பு" என்றும் சுபாஷினி விளக்கம் அளித்துள்ளார்.

இதுபோன்று, கல்விச்சான்றிதழ்களில் பெயர் மாறியிருந்தால், மேல் படிப்புக்கு விண்ணப்பிக்க முடியாது என்பதுடன், வேலைவாய்ப்பிலும் ஏற்கப்படாது என்று சட்ட நிபுணர்கள் கூறுகின்றனர். இதுபோன்று பெயர்களை எழுதுவதில் ஏற்படும் தவறுகள் மற்றும் குழப்பங்களால் பல நேரங்களில் பல்வேறு பாதிப்புகளைச் சந்திக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது என்பதால் பிறப்புச்சான்றிதழ் துவங்கி, எல்லா ஆவணங்களிலும் ஒரே மாதிரியாக பெயரை எழுத வேண்டுமென்பதும் வலியுறுத்தப்படுகிறது.

பாஸ்போர்ட் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படுவதற்கான காரணம்

சான்றிதழ், ஆவணங்களில் பெயரால் ஏற்படும் சிக்கலை தவிர்ப்பது எப்படி?

பட மூலாதாரம், Getty Images

இந்தியாவில் பாஸ்போர்ட்களில் மட்டுமே எல்லா மாநிலங்களிலும் ஒரே மாதிரியாக பெயர்களுக்குப் பின்னால் தந்தையின் பெயர் முழுமையாக அச்சிட்டுத்தரப்படுகிறது. மற்றபடி பிற ஆவணங்களில், மாநிலத்துக்கு மாநிலம் வெவ்வேறு விதங்களில் பெயர்கள் குறிப்பிடப்படுவது வழக்கமாகவுள்ளது. இதுவும் பல சிக்கல்களுக்குக் காரணம் என்கின்றனர் அரசு அதிகாரிகள்.

ஆதார் விண்ணப்பங்களைக் கையாளும் எல்காட் அலுவலர் சந்தோஷ், ''இந்தியாவில் இதுவரை எப்படிப் பெயர் எழுத வேண்டுமென்பதற்கு ஒரே மாதிரியான ஒரு வடிவம் (Format) தரப்படவில்லை. தமிழகத்தில் சான்றிதழில் உள்ளபடியே பெயர்கள் எழுதப்படுகின்றன. கடந்த 1990 ஆம் ஆண்டுக்குப் பின்பு பிறந்தவர்களுக்கு பெயருக்குப் பின்னால் இனிஷியல் இருக்கும். அதற்கு முன்பு பிறந்தவர்களுக்குப் பெரும்பாலும் பெயருக்கு முன்னால் மட்டுமே இன்ஷியல் இடம் பெற்றிருக்கும்.'' என்றார்.

இதைத் தவிர்த்து, தனியார் பல்கலைக்கழகத்தில் எழுதியது போல, பெயருக்குப் பின்னால் தந்தையின் பெயரை முழுமையாகச் சேர்த்து எழுதினால் அவை ஏற்கப்படுவதில்லை என்பதையும் எல்காட் அலுவலர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். இந்திய பாஸ்போர்ட்களில் மட்டுமே இப்படி பெயர் குறிப்பிடப்படும் நிலையில், அந்த பாஸ்போர்ட் விண்ணப்பத்திலும் பெயர் மாற்றத்தால் பல விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படுகின்றன.

இதுபற்றி பிபிசி தமிழிடம் விளக்கிய கோவை மண்டல பாஸ்போர்ட் அலுவலர் சதீஷ்குமார், ''ஒரு சிலர் பெயரை இனிஷியலுடன் சேர்த்து ஆவணங்களில் எழுதுவதில்லை. உதாரணமாக கருப்பையா மகன் ஆறுமுகம் என்பதை கே.ஆறுமுகம் அல்லது ஆறுமுகம்.கே என எழுதவேண்டும். ஆனால் ஆறுமுகம், த/பெ கருப்பையா என்று மட்டும் எழுதுவார்கள். இப்படியிருந்தால் பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பிக்கும்போது அது நிராகரிக்கப்படும் வாய்ப்புள்ளது.'' என்றார்.

பொதுவாக பெயருக்கு முன்னால் அல்லது பின்னால் இனிஷியல் இருந்தாலும் அது எந்த ஆவணத்துக்கும் ஏற்கப்படும் என்பதை விளக்கும் அரசுத்துறை அதிகாரிகள், வெறும் பெயர் மட்டும் குறிப்பிடும் ஆவணங்களை எதற்கும் ஏற்பதற்கு வாய்ப்பில்லை என்கின்றனர். அதேபோன்று இனிஷியலைக் குறிப்பிடாமல் துணைப்பெயர் (sur name) பகுதியில் தந்தை பெயர் குறிப்பிடச்சொல்வதையும் ஏற்க முடியாது என்கிறார் பாஸ்போர்ட் மண்டல அலுவலர் சதீஷ்குமார்.

''ஏனெனில் கேரளாவில் துணைப்பெயர் (Surname) பகுதியில் ஊர்ப்பெயரும், ஆந்திரா மற்றும் வட மாநிலங்களில் சாதிப்பெயரும் இடம் பெறுவது வழக்கமாகவுள்ளதால் அதை ஏற்க முடியாது. அதனால் ஒவ்வொருவரும் பெயருடன் தந்தை பெயரின் முதல் எழுத்தைக் குறிப்பிடுவது அவசியம். அதேபோன்று, பாஸ்போர்ட்களில் தந்தையின் பெயரும் முழுமையாக இடம் பெறுவதால் அந்தப் பெயரையும் விண்ணப்பத்தில் சரியாகக் குறிப்பிடுவதும் மிக அவசியம் என்பதையும் அவர் வலியுறுத்துகிறார்.

ஆதார் அட்டைகளில் எப்படி பெயர் மாற்றப்படுகிறது?

சான்றிதழ், ஆவணங்களில் பெயரால் ஏற்படும் சிக்கலை தவிர்ப்பது எப்படி?

பட மூலாதாரம், Getty Images

சமீபகாலமாக பெரும்பாலான அரசு சேவைகளுக்கும், அடையாள ஆவணமாகவும் ஆதார் அட்டை கேட்கப்படுகிறது. இதிலும் பலருடைய பெயர்கள், புகைப்படங்கள் மாறியுள்ளன.

பலர் ஆதார் விண்ணப்பப் படிவத்தைப் பூர்த்தி செய்து தருவது காரணமாயிருந்தாலும், சரியாகப் பூர்த்தி செய்யும் பெயர்களும் தவறாக அச்சிடப்படுவதும் அடிக்கடி நடக்கிறது. அதேபோன்று, புகைப்படங்கள் மாறுவதும் வழக்கமாகவுள்ளது. இதனால் ஆதார் அட்டையில் பெயர் மாற்றத்துக்காக வரும் விண்ணப்பங்களும் அதிகரித்து வருகின்றன.

''அரசு ஊழியர்கள் பலருக்கும் வருங்கால வைப்பு நிதி விண்ணப்பிப்பதில் (பிஎஃப்) பிரச்னை வரும். ஆதாரில் ஒரு விதமாகவும், சான்றிதழில் ஒரு விதமாகவும் அவர்கள் பெயர் இருக்கும். ஆனால் சான்றிதழில் உள்ள பெயரே எடுத்துக் கொள்ளப்படும். அதனால் பிறப்புச்சான்றிதழ் மற்றும் கல்விச்சான்றிதழில் உள்ளபடி பெயர்களை எல்லா ஆவணங்களிலும் குறிப்பிடுவதுதான் நல்லது.'' என்கிறார் எல்காட் அலுவலர் சந்தோஷ்.

இதுபற்றி மேலும் விளக்கிய அவர், ''நீட், ஜேஇஇ போன்றவற்றுக்கும் விண்ணப்பிப்போர், அவர்களின் கல்விச் சான்றிதழ்களில் பெயருக்குப் பின்னால் இனிஷியல் இருந்தால் அதேபோல ஆதாரிலும் பெயருக்குப் பின்னால் இனிஷியலை மாற்றிக்கொள்ள வேண்டும். தற்போது எல்லாமே டிஜிட்டல்மயமாகிவிட்டதால் சான்றிதழில் இனிஷியல் முன்பாகவும், ஆதாரில் பின்பாகவும் இருந்தால் தொழில்நுட்பரீதியாகவே அந்த விண்ணப்பம் நிராகரிக்கப்படும் வாய்ப்புள்ளது.'' என்றார்.

பொதுவாக, ஆதார் பெயர் மாற்றத்துக்கு வருபவர்கள், தங்களுடைய தேவையின் பொருட்டு அதற்கேற்ப ஆதாரில் பெயரை மாற்ற விண்ணப்பிக்கிறார்கள் என்கிறார்கள், இ சேவை மையம் நடத்துவோர். உதாரணமாக வருமான வரி தாக்கல் செய்பவர்கள், பான்கார்டில் இருப்பது போன்று ஆதாரிலும் பெயர் மாற்ற வேண்டுமென்று விண்ணப்பிப்பதும் அதிகமாக நடப்பதாகச் சொல்கிறார்கள் இவர்கள்.

ஆதார் அட்டையில் பெயர் மாற்றுவதற்கு வாக்காளர் அடையாள அட்டை, பான்கார்டு, பாஸ்போர்ட், ஓட்டுநர் உரிமம், மதிப்பெண் சான்றிதழ் ஆகியவை ஏற்கப்படுவதாகக் கூறும் இ சேவை மைய ஊழியர்கள், பெயர் மாற்றத்துக்கு ஆதாரமாகத் தரப்படும் எந்த ஆவணமாக இருந்தாலும் அதிலும் விண்ணப்பதாரரின் புகைப்படம் இருப்பது அவசியமென்பதையும் சுட்டிக்காட்டுகின்றனர்.

நாடு முழுவதிலும் இருந்து, இதற்கான விண்ணப்பங்களை UIDAI (https://uidai.gov.in/) கையாள்வதால், பெயர் மாற்றப்படுவதற்கான அவகாசத்தை வரையறுத்துச் சொல்ல முடியாது என்கின்றனர். குறைந்தபட்சம் 3 நாட்களிலும், அதிகபட்சமாக ஒரு மாதமும் கூட ஆவதாகச் சொல்லும் இவர்கள், இதற்கான ஆதார ஆவணமே முக்கியம் என்கின்றனர்.

சான்றிதழ், ஆவணங்களில் பெயரால் ஏற்படும் சிக்கலை தவிர்ப்பது எப்படி?

பட மூலாதாரம், Getty Images

தமிழ்நாட்டில் ஆவணங்களில் பெயர்கள் மாறியிருப்பதால், ஏராளமான சொத்து விவகாரங்களும் வழக்கில் இருப்பதாகச் சொல்கிறார் வழக்கறிஞர் சோஜன். பத்திரப்பதிவு உள்ளிட்ட பதிவுத்துறை விவகாரங்களைக் கையாளும் இவர், பழங்கால உயில்கள் மற்றும் தானப்பத்திரங்களில் சின்னச்சின்ன பெயர் மாற்றங்களால் 'அந்த நபர் இவரில்லை' என்று நிறைய மனுக்கள் தாக்கல் செய்யப்படுவது வழக்கமாகவுள்ளது என்கிறார்.

''முன்பெல்லாம் நிலஅளவை செய்யவரும்போது, இது சின்னான் காடு என்பார்கள். ஆனால் அவரின் பெயர் சின்னாக்கவுண்டர் என்றிருக்கும். உயிலில் ஒரு விதமாகவும், வருவாய்த்துறை ஆவணத்தில் வேறு விதமாகவும் இருக்கும்பட்சத்தில் அதனால் சிக்கல் ஏற்படும். சில ஆவணங்களில் தந்தையின் பெயரும் இதுபோல மாறிவிடும். அத்தகைய நேரங்களில் வருவாய்த்துறை அதாவது வட்டாட்சியரிடம், உயிலில் குறிப்பிட்டுள்ள நபரும், இவரும் ஒன்றுதான் என்று ஒரு சான்று வாங்கச்சொல்வார்கள். இல்லாவிட்டால் அரசிதழில் மாற்றிக் கொண்டுவரச்சொல்வார்கள்.'' என்று விளக்குகிறார் வழக்கறிஞர் சோஜன்.

பத்திரங்களில் பெயர் மாறியிருந்தால் என்ன செய்ய வேண்டும்?

பத்திர ஆவணங்களில் பெயர்களில் எழுத்துப் பிழை இருந்தால் அதையும் உடனுக்குடன் திருத்திவிடுவது நல்லது என்கிறார்கள் வழக்கறிஞர்களும், பத்திர எழுத்தர்களும். உதாரணமாக ராஜேஷ் என்ற பெயரை ஆங்கிலத்தில் எழுதும்போது Rajesh என்பதற்குப் பதிலாக Rejesh என்று எழுதிவிட்டால் அது டைப் செய்யும் போது ஏற்பட்ட பிழை என்பதைக் குறிப்பிட்டு, சம்பந்தப்பட்ட நபர், ஓர் அறிவிப்புப் பத்திரம் (Declaration Deed) தர வேண்டும். அதை வைத்து பத்திரத்தில் திருத்தம் செய்து தரப்படும் அல்லது அந்தப் பத்திரத்துடன் அந்த உறுதிமொழிப் பத்திரத்தை இணைத்து, அதற்கு பதிவுத்துறை அலுவலர் ஒப்புதல் தருவார்கள்.

சிலருடைய பெயர்கள் பாதிவிடுபடும்போது செய்யப்படும் ஏற்பாட்டை விளக்கிய வழக்கறிஞர் சோஜன், ''உதாரணமாக ஒருவருடைய முழுப்பெயர் பிரகாஷ்குமார் ஆக இருக்கும். ஆனால் கூப்பிடுவதை வைத்து பிரகாஷ் என்று பத்திரம் எழுதிவிடுவார்கள். அந்த நேரங்களில் பிரகாஷ் என்கிற பிரகாஷ் குமார் என்ற ஒரு வார்த்தையைச் சேர்த்து பத்திரம் எழுதுவோம். பெரும்பாலான சார்பதிவாளர்கள் ஏற்பார்கள். சிலர் ஏற்கமாட்டார்கள். அதனால் எழுதும்போதே பெயரை முழுமையாக, சரியாக எழுதுவது நல்லது.'' என்றார்.

சான்றிதழ், ஆவணங்களில் பெயரால் ஏற்படும் சிக்கலை தவிர்ப்பது எப்படி?

பட மூலாதாரம், Getty Images

இதுபோன்று சிலர், நியூமராலஜிக்காகவும், மதமாற்றத்துக்காகவும், கொள்கை காரணமாகவும் தங்களின் பெயர்களை மாற்றுவதும் வழக்கமாகவுள்ளது. இத்தகைய பெயர் மாற்றத்தை சட்டப்பூர்வமாக எப்படி ஏற்பார்கள் என்பதை விளக்குகிறார் மூத்த வழக்கறிஞர் லோகநாதன்.

''பெயர் முற்றிலும் மாறாமல் எழுத்துப்பிழை மட்டும் இருந்தால், அதற்கு ஓர்உறுதிமொழிப் பத்திரம் (Affidavit) எழுதிக்கொடுத்து மாஜிஸ்திரேட் அல்லது நோட்டரி பப்ளிக்கிடம் ஒப்புதல் வாங்கித்தந்தால் அது ஏற்கப்படுகிறது. ஒரு வேலைக்கு விண்ணப்பிக்கும்போது, ஏற்கெனவே உள்ள கல்விச்சான்றிதழுடன் இந்த ஒப்புதல் படிவத்தை இணைத்துத் தந்தால் போதுமானது. ரேஷன் கார்டு, எரிவாயு இணைப்பு பெயர் மாற்றம், வாக்காளர் அடையாள அட்டை இவற்றுக்கும் இந்த முறையில் விண்ணப்பிக்கலாம்.'' என்கிறார் அவர்.

''ஆனால் மதமாற்றம், எண் கணிதம் உள்ளிட்ட சுய விருப்பத்தின் பெயரில் பெயரை முற்றிலும் மாற்றும்போது, அதற்கு அரசிதழில் அறிவிக்கை வெளியிட்டு, அதற்கான நகலையும் சேர்த்து இணைக்க வேண்டியது அவசியம். இவ்வாறு பெயர் மாற்றுவது குறித்து, நாளிதழில் விளம்பரம் வெளியிட்டு, அதை இணைத்து, மாற்ற வேண்டிய பெயருடன் தமிழக அரசின் எழுதுபொருள் மற்றும் அச்சுத்துறைக்கு அதற்குரிய கட்டணத்துடன் விண்ணப்பிக்க வேண்டும்.'' என்கிறார் வழக்கறிஞர் லோகநாதன்.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

திருமணத்துக்கு பின்பு பெண்கள் இனிஷியலை மாற்றலாமா?

தமிழ்நாடு அரசின் எழுதுபொருள் மற்றும் அச்சுத்துறையின் ஆணையர் சார்பில்தான், ஒவ்வொரு நபரின் பெயர் மாற்றத்துக்கான அறிவிக்கை அரசிதழில் வெளியிடப்படுகிறது. ஆனால் அதற்கு சட்டப்பொறுப்பை ஏற்பதில்லை என்பதும் அத்துறையின் ஆணையரால் தெரிவிக்கப்பட்டே இந்த விளம்பரங்கள் பிரசுரிக்கப்படுகின்றன. இந்த இணையத்தில் இதற்கான வழிமுறைகளும் விவரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொருவரின் பெயர் மாற்ற அறிவிப்பிலும், சம்பந்தப்பட்டவரின் பெயர், பிறந்த தேதி, ஊர், விலாசம் ஆகியவற்றுடன் பழைய பெயர், புதிய பெயர் ஆகிய விபரங்கள் இடம் பெற்றுள்ளன. பெயர் மாற்றப்படுபவர் அல்லது அவர்களின் தந்தை பெயர்களில் இதற்கான அறிவிக்கைகள் வெளியிடப்படுகின்றன.

அதேபோன்று, பெண்கள் பலரும், திருமணத்திற்குப் பின்பு, தங்கள் கணவரின் பெயரின் முதல் எழுத்தை இனிஷியலாக மாற்றிக்கொள்வதும் தவறு என்கிறார் வழக்கறிஞர் லோகநாதன். ஒவ்வொருவரின் கல்விச்சான்றிதழிலும், பிறப்புச்சான்றிதழிலும் உள்ளபடியே இறுதிவரையிலும் பெயர்களை எழுதுவதே எந்தவிதமான சிக்கலும் ஏற்படாமலிருக்க ஒரே வழி என்கிறார் அவர்.

''கணவர் பெயரை இனிஷியலாக மாற்றுவதாக இருந்தாலும் அதையும் அரசிதழில் வெளியிட்டே மாற்ற வேண்டும். அரசிதழில் பெயர் மாற்றினாலும் கல்விச்சான்றிதழ்களில் பெயர் மாற்ற முடியாது. ஒவ்வொரு விண்ணப்பத்திலும் கல்விச்சான்றிதழ், பிறப்புச்சான்றிதழுடன் அரசிதழ் நகலையும் இணைத்து, இந்த தேதிக்குப் பின்னால் பெயர் மாற்றப்பட்டுள்ளது என்பதைத் தெரிவிக்க வேண்டும்.'' என்றார் லோகநாதன்.

சில குற்றவாளிகள், சிறை வாழ்க்கைக்குப் பின்பு இதுபோன்று பெயர் மாற்றிக்கொண்டு வாழ்ந்தாலும், தற்போதுள்ள தொழில்நுட்பத்தில் மாற்றுப் பெயருள்ள நபர்களையும் காவல்துறையால் கண்டுபிடிக்க முடியும் என்பதையும் வழக்கறிஞர்கள் விளக்குகின்றனர்.

''நாம் செய்கிற தவறு, நமது குழந்தைகளை பாதிக்காமல் இருக்க பிறப்புச்சான்றிதழ், கல்விச்சான்றிதழ் எல்லாவற்றிலும் தமிழ், ஆங்கிலத்தில் சரியாகப் பெயரை எழுதித்தர வேண்டும். ஆங்கிலத்தில் எழுதத் தெரியாதவர்களாக இருந்தாலும் தெரிந்தவர்களை வைத்து சரியாக எழுதிக்கொள்வது நல்லது. இல்லாவிட்டால் பலவித சிக்கல்களை எதிர்கொள்ள வேண்டும்.'' என்கிறார் வழக்கறிஞர் லோகநாதன்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு