சிறுநீரை உரமாக மாற்றும் அமெரிக்க விவசாயிகள்

பட மூலாதாரம், Rich Earth Institute
- எழுதியவர், பேக்கா வார்னர்
பழங்கால ரோம் மற்றும் சீனாவில் சிறுநீர் ஒரு சிறந்த உரமாக பயன்படுத்தப்பட்டது. அதே போல அமெரிக்காவின் வெர்மான்ட்டில் உள்ள விவசாயிகளும் இதே முயற்சியை முன்னெடுத்துள்ளனர். இதை பயன்படுத்தி விளைச்சலை அதிகரிக்கவும் அதே சமயம் சுற்றுசூழலை பாதுக்காக்கவும் அவர்கள் முயற்சி செய்கின்றனர்.
ஒவ்வொரு முறை கழிவறைக்கு செல்லும் போதும், தனது சிறுநீர் வீணாக செல்லவில்லை என்பதை நினைத்து பெட்ஸி வில்லியம்ஸ் நெகிழ்ச்சியடைகிறார். கடந்த 12 ஆண்டுகளாக அவரும் அவரது அக்கம் பக்கத்தினரும் தங்களது சிறுநீரை பாதுகாப்பாக சேகரித்து அங்கிருக்கும் விவசாயிகளுக்கு உரமாக வழங்குகின்றனர்.
"சத்துக்கள் மிகுந்த உணவுகளை நாம் உட்கொள்கிறோம், அதை நாம் சிறுநீராக வெளியேற்றி, அதை உரமாக மாற்றி மீண்டும் நாம் உண்ணும் சத்துக்கள் மிகுந்த உணவாக அதை உருவாக்குகிறோம்," என்கிறார் வில்லியம்ஸ்.
வெர்மான்ட்டைச் சேர்ந்த தொண்டு நிறுவனமான ரிச் எர்த் இன்ஸ்ட்டிட்யூட் REI நடத்தும் யூரின் நூற்றியென்ட் ரெக்லமேஷன் புரோகிராம் UNRP என்ற அமைப்பில் இணைந்து செயலாற்றி வருகிறார் வில்லியம்ஸ். வின்ட்ஹாம் மாவட்டத்தை சேர்ந்த இவரும் இவருக்கு அருகில் வசிக்கும் 250 பேரும் ஆண்டு ஒன்றுக்கு 45,400 லிட்டர் சிறுநீரை மறுசுழற்சி செய்ய வழங்குகின்றார்கள்.
இங்கிருந்து பெறப்படும் சிறுநீர், லாரிகளில் பெறப்பட்டு, ஒரு பெரிய கொள்கலன்களில் 80 டிகிரி செல்சியஸில் 90 நொடிகளுக்கு பதப்படுத்தப்படுகின்றன. பின்னர் பதப்படுத்தப்பட்ட கலனில் சேகரிக்கப் படும் இவை, நிலத்தில் உரமாக தெளிக்கப்பட தயாராகிவிடுகின்றன.
- விளைநிலத்தில் யானைகள் நுழையாமல் தடுக்கும் தேனீக்கள் - பல ஆண்டு ஆய்வில் தெரியவந்த ரகசியம்
- காமராசர் திறந்த அணையில் இருந்து மது ஆலைக்கு தண்ணீர் தர எதிர்ப்பு - கேரளாவில் என்ன நடக்கிறது? பிபிசி கள ஆய்வு
- வந்தவாசி பஞ்சமி நில சர்ச்சை: 'அரை மணிநேரத்துல மொத்தமா அழிச்சுட்டாங்க' - பிபிசி கள ஆய்வில் தெரிய வந்தது என்ன?
- சருமத்தை பொலிவூட்ட கொலாஜென் இணை மருந்துகள் உண்மையில் உதவுகிறதா? வெற்று விளம்பரமா?

பழங்கால ரோம் நாடுகளில் பயிர்கள் வளர உதவிய சிறுநீர்
பழங்கால சீனா மற்றும் ரோம் நாடுகளில் பயிர்கள் வளர சிறுநீர் உதவியாக இருந்ததாக பதிவேடுகள் உள்ளன. மற்ற உரங்களைப் பயன்படுத்துவதை விட, சிறுநீர் உரத்தை பயன்படுத்தும் போது விளைச்சல் இரட்டிப்பாக இருக்கும் என்றும், வளம் குறைந்த நிலத்தில் விளைச்சலை மெருகேற்ற முடியும் என்றும் ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
சிறுநீரில் இருக்கும் நைட்ரஜனும் பாஸ்பரஸும் தான் இதை உரமாக பயன்படுத்த வழிவகுக்கிறது. இதே கலவைகள் தான் செயற்கை உரத்திலும் கலக்கப்படும். ஆனால் செயற்கை உரத்தால் சுற்றுசூழலுக்கு பாதிப்பு ஏற்படுகிறது. ஹேபர்-போஷ் செயல்முறையைக் கொண்டு நைட்ரஜனும், சுரங்கத்தில் இருந்து எடுக்கப்படும் பாஸ்பரஸும், தீங்கு விளைவிக்கும் ஆபத்தான கழிவுகளை வெளியேற்றும். ஆனால் அதே சமயம் நாம் அனைவரும் சிறுநீர் கழிப்போம், அதுவும் விலையில்லாமல்.
REI உடன் கடந்த பத்து ஆண்டுகளாக தொடர்ந்து பணியாற்றி வருகிறார் மிச்சிகன் பல்கலைக்கழகத்தில் சிவில் மற்றும் சுற்றுச்சூழல் பொறியியல் பேராசிரியர் நான்சி லவ். செயற்கை உரத்தை பயன்படுத்துவதை விட இந்த இயற்கையான உரத்தை உபயோகிப்பதால் பசுமை இல்ல வாயுவின் வெளியேற்றம் குறைவாக இருக்கின்றது , முன்பு பயன்பட்டதை விட பாதி அளவிலான நீர் மட்டுமே செலவானது. கழிவறை ப்ளஷை பயன்படுத்துவதில் இருந்து கட்டுப்படுத்தி கடந்த 2012 ஆம் ஆண்டில் இருந்து கிட்டத்தட்ட 10.2 மில்லியன் லிட்டர் நீரை UNRP சேமித்துள்ளது.
"கிடைத்த சிறுநீரை நீர்த்து போகவைத்த பின்பு அவை ஓர் குழாய் வழியாக சுத்திகரிப்பு நிலையத்திற்கு அனுப்பப்பட்டும். அதில் இன்னும் அதிக அளவிலான ஆற்றல் உட்புகுத்தி, அதை மீண்டும் சுற்றுசூழலுக்கே அனுப்பிவைக்கின்றோம்," என்கிறார் லவ்.

பட மூலாதாரம், Rich Earth Institute
சிறுநீர் சுத்திகரிக்கப்படும் போது அதில் இருக்கும் நைட்ரஜன் மற்றும் பாஸ்பரஸ் முழுமையாக நீக்கப்படுவதில்லை. இது பின்னர் அடித்துச் செல்லப்பட்டு ஆறுகளிலும், குளங்களிலும் கலக்கும் போது இவை பாசியை உருவாக்கும். இதனால் நீரில் காற்று புகாமல் தடுக்கப்படுவதால் அதில் வாழும் உயிர்களுக்கு ஆபத்து ஏற்படும்.
"நமது உடல் நிறைய சத்துக்களை உருவாக்குகின்றது. அவை அனைத்தும் வீணாவது மட்டுமல்லாமல் சுற்றுசூழலுக்கும் ஆபத்தை ஏற்படுத்துகிறது," என்கிறார் REI உடைய செயல் இயக்குநர் ஜமீனா ஷுபக்.
இந்த ஊட்டச்சத்துகள் பாசிக்கு மட்டும் உணவில்லை, பயிர்களுக்கும் அவை தான் உணவு. "நைட்ரஜனை நீங்கள் எந்த இடத்தில் போட்டாலும் அங்கே செடிகள் வளர அது உதவியாக இருக்கும். அவை நீரில் கலக்கும் போது அங்கே பாசி வளரும், அதுவே நிலமாக இருந்தால் செடிகள் நன்றாக வளரும்," என்கிறார் ஷுபக். ஆகவே இந்த சத்துக்கள் நிறைந்த சிறுநீரை நீர்நிலைகளில் கலக்காமல் அதன் பாதையை மாற்றுவது மிகவும் அவசியம்.
சிறுநீர் நீர்நிலைகளில் கலப்பதை தடுக்க முடியுமா?
REI குழுவுடன் இணைந்து பணியாற்றும் விவாசாயிகள் எந்த அளவில் இந்த சிறுநீர், நீர்நிலைகளை அடைகிறது என்பதை கவனமாக பார்த்துக்கொள்கின்றனர். எந்த நேரத்தில் பயிர்களால் அதிக சத்துக்களை உறிய முடியுமோ அந்த நேரத்தில் தான் இவை தெளிக்கப்படுகின்றன. எவ்வளவு சிறுநீரை மண்ணால் உள்ளிழுக்கமுடியும் என்பதை அறிய மண்ணின் ஈரப்பதமும் கணக்கிடப்படுகிறது. "ஆனால் இத்தனை முயற்சிகளுக்கு பின்னரும் சிறுநீர் நீர்நிலைகளில் கலக்கப்படுவதை நம்மால் முழுமையாக தடுக்கமுடியாது," என்கிறார் ஷுபக்.
தற்பொழுது இருக்கும் பழக்கத்தில் செயற்கை உரமும் சரி, சிறுநீரும் சரி ஆறுகளில் தான் கலக்கப்படுகிறது.
வெர்மான்ட்டில் இருக்கும் UNRP அமெரிக்காவில் இத்திட்டத்தை செயல்படுத்த முயற்சி செய்துவருகிறது. பாரிஸில் இருக்கும் ஆர்வலர்கள் சிறுநீரை சேகரித்து செனே ஆற்றை பாதுகாக்க முயற்சிக்கின்றனர். ஸ்வீடன் நாட்டைச் சேர்ந்த தொழிலதிபர்கள், பாசி வளர்வதால் கோட்லாந்து தீவில் ஏற்படும் பின்விளைவுகளை பார்த்து, சிறுநீரை சேமித்து உரமாக மாற்றும் ஒரு வழிமுறையை கண்டுபிடித்துள்ளனர். இதை தொடர்ந்து தென் ஆப்பிரிக்கா, நேபாளம் ஆகிய இடங்களிலும் இத்திட்டத்திற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த திட்டத்தை விரிவுப்படுத்துவதில் நிறைய நடைமுறை சிக்கல்கள் இருக்கின்றது. சிறுநீருக்கான தேவை என்பது விநியோகத்தை விட அதிகமாக உள்ளது. உற்பத்தியை அதிகரிப்பது சற்று சவாலான பணி தான். கழிவு மேலாண்மை இதற்கு ஒரு தடையாக இருக்கலாம். நாங்கள் இவர்களிடம் இது தொடர்பாக செல்லும் பொழுது, 'சிறுநீரை தனியான கழிவு வகையாக வகைப்படுத்த எந்த வழிமுறையும் இல்லை. ஒன்று இவை பயோசோலிட்களுடனோ அல்லது கழிவு நீருடனோ தான் கலக்கப்படும்'.
ஆகையால் REI இதிலிருந்து வெளிவர வேறேதும் வாய்ப்பு அல்லது வழிமுறைகள் இருக்கின்றதா என்பது குறித்து ஆய்வு செய்து வருகின்றது.
வெர்மான்ட்டில் உள்ள சுற்றுசூழல் பாதுகாப்பு துறையின் செயல்திட்ட மேலாளரான ஈமான் டுவோஹிக் பிபிசியிடம் கூறுகையில், "தொடக்கத்தில் REI தங்களிடம் வந்த பொழுது சிறுநீரை சுத்திகரிக்கவோ அல்லது மறுசுழற்சி செய்வதற்கோ குறிப்பாக எந்தவொரு ஒழுங்குமுறையுமே இல்லை. சுற்றுசூழலை பாதுகாக்க REI மிகவும் புதிய விதமான திட்டத்தை தான் முன்னெடுத்திருந்தது. ஆனால் நாங்கள் கூட்டாக முயற்சி செய்து இதை புழக்கத்தில் கொண்டுவர வழிகளை கண்டறிந்தோம்," என்றார்.

பட மூலாதாரம், Rich Earth Institute
REI மற்றும் ஒழுங்குமறை அமைப்பு ஆகியோருக்கு இடையில் நல்ல உறவு ஏற்பட்டுள்ளது. கழிவு நீர் சுத்திகரிப்பு மற்றும் சிறுநீரை ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு மாற்றுவதற்கு தேவையான அனைத்து அனுமதியும் தங்களிடம் உள்ளதாக ஷுபக் தெரிவித்தார். "இதை மேம்படுத்த நாங்கள் இன்னும் கடுமையாக முயற்சிக்கிறோம். ஆனால் சுற்றுசூழல் ஒழுங்குமுறையில் புதுமையைக் கொண்டு வருவது அவ்வளவு எளிதான செயல் கிடையாது," என்றார் அவர். மேலும் மனிதக்கழிவுகளுக்கு இடையில் அதன் கலவைக்கு ஏற்ப அவை பிரிக்கப்படாமல் , அவை அனைத்தும் ஒரே மாதிரியே அணுகப்படுகின்றது. தொடக்கத்திலேயே சிறுநீரை தனியாக பிரித்து எடுப்பதற்கும் ஒன்றாக கலக்கப்பட்ட கழிவு நீரில் இருந்து பிரிக்கப்படும் போது கிடைப்பதற்கும் வேறுபாடுகள் நிறைய உள்ளன. அதில் சுகாதார குறைபாடும் ஏற்படலாம்.
இது அல்லாமல், சிறுநீர் மிக கனமாகவும், அதை இடம் மாற்றம் செய்வதற்கு சவாலாகவும், இதன் போக்குவரத்தில் ஈடுபடுத்தப்படும் லாரிகள் அதிகமாக மாசையும் உமிழ்கின்றன. தற்பொழுது வெர்மான்ட்டில் உள்ள சிறுநீர் 16 கிலோமீட்டர்களுக்கு அதிகமான தூரத்திற்கு எடுத்துசெல்லப்படுவதில்லை. ஆனால் இதை விரிவுபடுத்தும் போது சிறுநீரை நீண்ட தூரங்கள் கொண்டு செல்ல வேண்டிய அவசியம் உள்ளது. எனவே REI உடைய துணை நிறுவனம் சிறுநீரை உறைய வைத்து அதை ஆறு மடங்கு சுருக்கும் தொழில்நுட்பத்தை கண்டுபிடித்துள்ளது. இது தான் தற்பொழுது மிச்சிகன் பல்கலைக்கழகத்தில் பயன்படுத்தப்படுகிறது.
பிளம்பிங்கும் ஒரு சவால் தான். சிறுநீரை பிரித்தெடுக்கும் முயற்சியில் மற்ற கழிப்பிடங்களை போல நீரை ப்ளஷ் செய்யவேண்டிய அவசியமில்லை. இதனால் நீரை நம்மால் சேமிக்க முடியும், ஆனால் புழக்கத்தில் இருக்கும் பாரம்பரியமான பிளம்பிங் முறையில் இந்த திட்டத்தை அமல்படுத்துவது கடினம்.
"இந்த பிரச்னைக்கு தீர்வு உள்ளது. கட்டடங்களில் லூப் சிஸ்டம் என்ற அமைப்பை ஏற்படுத்துவது மூலம் இந்த பிரச்சனையை தீர்க்க முடியும். ஆனால் இப்பொழுது இருக்கும் அமைப்பிற்கும் நாம் புதிதாக அறிவுறுத்தும் பிளம்பிங் முறைக்கும் நிறைய வேறுபாடுகள் உள்ளன, அல்லது இரண்டும் வேறு வேறு முறைகள் என்றும் கூறலாம்," என்றார் லவ். லூப் சிஸ்டம் என்றால், ஒரு கட்டடத்தில் கிடைக்கும் சிறுநீரை அந்த இடத்திலேயே சேகரித்து அதை சுத்திகரிப்பு செய்வதாகும். இந்த முறையில் சிறுநீர் பழைய கழிவுநீர் அமைப்பில் கலக்கப்படாது
இந்த முயற்சியில் தான் லவ்வும் அவரது குழுவும் ஈடுபட்டுள்ளனர். இதன் மூலம் அமெரிக்காவில் புதிதாக கட்டப்படும் கட்டடங்களில் சிறுநீரை பிரித்தெடுக்கும் முறை அமைக்கப்படும். "இந்த நூற்றாண்டுக்குள் சுற்றுசூழலை பாதுகாப்பாக வைக்கவும் தண்ணீர் தட்டுப்பாடு இல்லாமல் பார்த்துக்கொள்ளவும் இது போன்ற புதிய கண்டுபிடிப்புகளை நாம் பயன்படுத்த ஆரம்பிக்க வேண்டும்," என்றார் லவ்.

பட மூலாதாரம், Rich Earth Institute
இத்திட்டத்தினால் உலகம் முழுவதும் சிறுநீர் தானம் செய்வது மிகவும் எளிதான முறையாகிவிடும். தன்னை இந்த முயற்சியில் ஈடுபடுத்திக்கொண்ட வில்லியம்ஸ், தொடக்கத்தில் பெரிய துணிதுவைக்கும் கலவையின் பாட்டிலில் தனது சிறுநீரை சேகரித்து, தனது காரில் வைத்துக்கொண்டு, மாதத்திற்கு ஒரு முறை சிறுநீர் சேகரிப்பு தொட்டி இருக்கும் இடத்தில் வழங்கிவிட்டு வருவார். தனது சிறுநீரை வீணாக்க அவர் விரும்பவில்லை. "ஒரு இடத்திற்கு சென்று அங்கே சிறுநீர் கழிக்கும்போது என்னிடம் அதை சேகரிக்க பாத்திரம் இல்லையென்ற பட்சத்தில் அம்மாதிரியான இடங்களுக்கு செல்வதையே நான் தவிர்க்கிறேன். இந்த சேலமுறை எனது வாழ்க்கையின் ஓர் அங்கமாகி விட்டது," என்கிறார் வில்லியம்ஸ்.
தனது இல்லத்தில் புதிதாக அமைக்கப்பட்டிருக்கும் கழிவறை அமைப்பு அவருக்கு மிகவும் பிடித்துள்ளது. இதில் சிறுநீர் கழிவும் மற்ற கழிவுகளும் தனித்தனியாக பிரிக்கப்படுகிறது. இந்த சிறுநீர் தனது அடித்தளத்தில் இருக்கும் கொள்கலன்களில் சேகரிக்கப்பட்டு ஆண்டுக்கு இருமுறை லாரி மூலம் அந்நிறுவத்திடம் ஒப்படைக்கப்படுகிறது.
சிறுநீர் மறுசுழற்சி என்று கூறும் பொழுது மக்களிடையே ஒரு அருவெறுப்பு இருக்கும். ஆனால் அந்த செயல்முறையை சுத்தமாக மேற்கொள்வதால் மக்கள் மத்தியில் சிறுநீர் மறுசுழற்சியைப் பற்றிய தவறான கண்ணோட்டம் ஏற்படுவதை குறைக்க முடியும் என்கிறார் வில்லியம்ஸ். மேற்கூறிய வெறுப்பு மக்களிடம் குறைவாகவே இருந்தது என்று REI மேற்கொண்ட ஆய்வில் தெரியவந்துள்ளது. இந்த திட்டத்தை மக்கள் ஏற்றுக்கொண்டனர் என்றும் ஷுபக் தெரிவித்தார்.
சிறுநீரில் கலக்கப்பட்டுள்ள மருந்துகளின் அளவு குறித்து மக்கள் கவலைக்கொள்கின்றனர். "இதைப் பற்றிய கேள்வி தான் எங்களிடம் அதிகம் கேட்கப்படுகிறது," என்கிறார் ஷுபக். கப்பேன் மற்றும் வலி நிவாராணிகள் போன்ற மருந்துகள் கலந்திருக்கும் சிறுநீரை உரமாகப் பயன்படுத்தும் போது அதன் மூலமாக வளர்ந்த காய்கறிகளில் இதன் தாக்கத்தின் அளவை கணக்கிடும் முயற்சியில் REI ஈடுபட்டுள்ளது. இதன் இறுதி முடிவுகள் முழுமையாக வெளிவராத போதும், இதன் முதற்கட்ட முடிவுகளில் விளைச்சலில் மிகவும் குறைவான அளவிலேயே மருந்துகள் இருப்பதாக கண்டறிந்துள்ளனர். ஒரு கப் காப்பியில் இருக்கும் கப்பேனை பெறவேண்டுமானால் மிகவும் அதிகமான அளவிலான லெட்டஸை எடுத்துக்கொள்ளவேண்டும், என்கிறார் ஷுபக்.
சுகாதாரம் பற்றிய கவலையை விட, எதையும் வீணடிக்கும் மேற்கத்திய சிந்தனையை தான் உடனடியாக மாற்ற வேண்டும். "அதுவும் குறிப்பாக அமெரிக்கர்களுக்கு தங்களது கழிவு அனைத்தும் எங்கு செல்கிறது என்பது குறித்த எந்த கவலையும் இல்லை. கழிவு மறுசுழற்சியைப் பற்றி அவர்கள் சிறிய அளவில் சிந்தித்தாலும் மனித கழிவுகளைப் பற்றி அவர்கள் சிந்திப்பதே இல்லை."
காலநிலை மாற்றம் மற்றும் நீர் மாசு ஆகியவை பெரிய பிரச்னையாக இருந்தாலும், அதை நினைத்து வில்லியம்ஸ் கவலைக் கொள்வதில்லை, மாறாக தன்னால் எது செய்ய முடியுமோ, தனது வீட்டில் இருந்தபடியே சுற்றுசூழலுக்கு உதவியாக இருந்துவருகிறார். "நாம் அனைத்தையும் சரியாக செய்வபர்கள் கிடையாது. ஆனால் நாம் வெளியேற்றும் மனித கழிவுகளுக்கான பொறுப்பை நாம் ஏற்றுக்கொண்டாக வேண்டும்," என்கிறார் வில்லியம்ஸ்.
-இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு












