'சாட்டை யூடியூப் சேனலுக்கும் நாம் தமிழர் கட்சிக்கும் தொடர்பு இல்லை' - சீமான் அறிவிப்பு ஏன்? இன்றைய டாப் 5 செய்திகள்

இன்றைய (16/04/2025) நாளிதழ்கள் மற்றும் இணையதளங்களில் வெளிவந்துள்ள முக்கியச் செய்திகள் சில இங்கே தொகுத்து வழங்கப்பட்டுள்ளன.
துரைமுருகன் நடத்தும் 'சாட்டை' யூடியூப் சேனலுக்கும், நாம் தமிழர் கட்சிக்கும் எந்த தொடர்பும் இல்லை என அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார் என 'இந்து தமிழ் திசை' நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
இது தொடர்பாக சீமான் வெளியிட்ட அறிக்கையில், "துரைமுருகன் நடத்தும் சாட்டை யூடியூப் சேனலுக்கும் நாம் தமிழர் கட்சிக்கும் எந்த தொடர்பும் இல்லை. அதில் வரும் கருத்துகள், செய்திகள் அனைத்தும் அவருடைய தனிப்பட்ட கருத்தாகும். அவற்றுக்கு நாம் தமிழர் கட்சி எந்த வகையிலும் பொறுப்பாகாது" என தெரிவித்துள்ளார்.
மேலும் அந்தச் செய்தியில், 'தற்போது நாம் தமிழர் கட்சியில் சீமானுக்கு பக்க பலமாக இருந்து வருபவர்களில் ஒருவர்தான் கொள்கை பரப்புச் செயலாளர் 'சாட்டை' துரைமுருகன். சமீபத்தில் தமிழக பாஜக தலைவராக நயினார் நாகேந்திரன் தேர்ந்தெடுக்கப்பட்டதை தொடர்ந்து சாட்டை துரைமுருகன் தனது யூடியூப் சேனலில் காணொளி ஒன்றை வெளியிட்டிருந்தார்.
அந்த காணொளியில், நயினார் நாகேந்திரன் இஸ்லாமியருக்கு எதிரானவர் அல்ல என்பது போன்ற கருத்துகளை அவர் பேசியிருந்தார். ஏற்கெனவே நாம் தமிழர் கட்சி, பாஜகவின் 'பி' டீம் என விமர்சிக்கப்பட்டு வரும் நிலையில், நயினார் நாகேந்திரனை சாட்டை துரைமுருகன் பகிரங்கமாக பாராட்டி பேசியிருப்பது விமர்சனங்களை எழுப்பியுள்ளது. இந்த நிலையில்தான், துரைமுருகன் நடத்தும் 'சாட்டை' சேனலுக்கும் நாம் தமிழர் கட்சிக்கும் தொடர்பு இல்லை என கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
வரதட்சணை கொடுமை சட்டப்பிரிவை மாற்ற முடியாது- உச்ச நீதிமன்றம் உத்தரவு

பட மூலாதாரம், Getty Images
"தவறாக பயன்படுத்தப்படுகிறது என்பதற்காக வரதட்சணை கொடுமை சட்டப்பிரிவை மாற்ற முடியாது" என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாக தினத்தந்தி நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
'ஜன்ஸ்ருதி' என்ற தொண்டு நிறுவனம் பொதுநல மனு தாக்கல் செய்துள்ளது. அதில், வரதட்சணை கொடுமை, ஜீவனாம்சம் தொடர்பான சட்டப்பிரிவுகள், கணவர்களையும், அவர்களது குடும்பத்தினரையும் பழிவாங்க தவறாக பயன்படுத்தப்படுவதாக கூறியுள்ளது. எனவே, அந்த சட்டப்பிரிவுகளை ஆணுக்கும், பெண்ணுக்கும் பொதுவானதாக மாற்றக்கோரி உள்ளது.
இந்த மனு, நீதிபதிகள் சூர்யகாந்த், கோடீஸ்வர சிங் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நேற்று (ஏப்ரல் 15) விசாரணைக்கு வந்தபோது, அந்த மனுவை நீதிபதிகள் தள்ளுபடி செய்தனர் என தினத்தந்தி நாளிதழின் செய்தி கூறுகிறது.
அப்போது நீதிபதிகள், "சட்டத்தில் எந்த பிரிவுகள் தவறாக பயன்படுத்தப்படவில்லை என்று சொல்லுங்கள். தவறாக பயன்படுத்தப்படுவதற்காக எந்த சட்டத்தையும் ரத்து செய்ய முடியாது. பெண்கள் பாதுகாப்புக்காக கொண்டுவரப்பட்ட சட்டங்களை பொத்தாம்பொதுவாக குற்றம்சாட்டக்கூடாது.
எங்காவது கணவன்மார்கள் பாதிக்கப்பட்டால், சட்டம் தனது கடமையை செய்யும். அதற்காக சட்டத்தில் திருத்தம் செய்ய நீதிமன்றத்தால் முடியாது. அதை நாடாளுமன்றம் தான் செய்ய வேண்டும்." என்று தெரிவித்தார்கள் என அந்தச் செய்தி கூறுகிறது.
'பிறந்த குழந்தை கடத்தப்பட்டால் மருத்துவமனை உரிமம் உடனடியாக ரத்து'

பட மூலாதாரம், Getty Images
பிறந்த குழந்தை கடத்தப்பட்டால் மருத்துவமனை உரிமத்தை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என உச்சநீதிமன்றம் செவ்வாய்க்கிழமை அன்று (ஏப்ரல் 15) தெரிவித்துள்ளது என தினமணி நாளிதழின் செய்தி கூறுகிறது.
மேலும், மருத்துவமனையில் பிரசவத்துக்காக வரும் பெண்ணின் பாதுகாப்பை உறுதிசெய்வது சம்பந்தப்பட்ட மருத்துவமனையின் பொறுப்பு எனக்கூறி குழந்தை கடத்தலை தடுப்பதற்கான வழிமுறைகளை உச்ச நீதிமன்றம் வெளியிட்டது என்றும் அந்தச் செய்தி கூறுகிறது.
அதை பின்பற்றாவிட்டால் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்படும் என உச்சநீதிமன்றம் எச்சரித்தது.
உத்தர பிரதேச மாநிலத்தில் கடத்தல் வழக்கில் தொடர்புடைய 13 பேருக்கு அலாகாபாத் உயர்நீதிமன்றம் முன்ஜாமீன் வழங்கியதற்கு எதிராக தாக்கல்செய்யப்பட்ட மனுக்களை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஜெ.பி.பார் திவாலா மற்றும் ஆர்.மகாதேவன் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது.
அப்போது குற்றவாளிகளுக்கு வழங்கிய முன்ஜாமீனை ரத்து செய்த நீதிபதிகள் அமர்வு, "மருத்துவமனையில் பிரசவத்துக்காக வரும் பெண் மற்றும் அவருக்கு பிறக்கும் குழந்தையின் பாதுகாப்பை உறுதி செய்வது சம்பந்தப்பட்ட மருத்துவமனையின் பொறுப்பு. பிறந்த குழந்தை கடத்தப்பட்டால் மருத்துவமனை உரிமத்தை ரத்து செய்ய வேண்டும்.
குழந்தைகளை பாதுகாப்பதில் பெற்றோரும் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். ஒரு குழந்தை இறந்தால் அதனால் பெற்றோருக்கு ஏற்படும் மனக்கவலையும் துயரமும் வார்த்தைகளால் கூற இயலாதது. ஆனால் கடத்தல் கும்பலால் குழந்தை கடத்தப்படும்போது பெற்றோர் அடையும் பதற்றம் முற்றிலும் வேறுபட்டது." என்று தெரிவித்தார்கள்.
இந்த விவகாரத்தில் குற்றவாளிகளுக்கு அலாகாபாத் உயர்நீதிமன்றம் முன்ஜாமீன் வழங்கியதை ஏற்க முடியாது என்று கூறிய நீதிபதிகள், இதை எதிர்த்து உத்தர பிரதேச மாநில அரசுமேல் முறையீடு செய்யாதது கண்டிக்கத்தக்கது என்றார்கள்.
மனிதக் கடத்தல் தொடர்பாக பாரதிய ஆய்வு மற்றும் மேம்பாட்டு மையம் கடந்த 2023-இல் மேற்கொண்ட ஆய்வறிக்கையை அனைத்து மாநிலங்களும் முழுமையாக படித்து அதை அமல்படுத்த வேண்டும் என்றும், குழந்தை கடத்தல் தொடர்பான நிலுவை வழக்குகளை கிளை நீதிமன்றங்கள் 6 மாதங்களுக்குள் முடிக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் அமர்வு உத்தரவிட்டது என தினமணி நாளிதழின் செய்தி தெரிவிக்கிறது.
'இந்தியாவில் 10 லட்சம் பேருக்கு 15 நீதிபதிகள் மட்டுமே உள்ளனர்'

பட மூலாதாரம், Getty Images
இந்தியாவில் 10 லட்சம் மக்களுக்கு வெறும் 15 நீதிபதிகள் மட்டுமே உள்ளனர் என்று புள்ளிவிவரம் ஒன்று வெளியாகி உள்ளதாக தினத்தந்தி நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
இந்தியாவில் 140 கோடிக்கும் அதிகமான மக்கள் உள்ளனர். ஆனால் 21 ஆயிரத்து 285 நீதிபதிகள் மட்டுமே உள்ளனர். அதாவது 10 லட்சம் பேருக்கு 15 நீதிபதிகள் என்ற அளவிலேயே உள்ளனர். 1987 சட்ட ஆணைய பரிந்துரைப்படி 10 லட்சம் பேருக்கு 50 நீதிபதிகள் இருக்க வேண்டும் என்று அந்தச் செய்தி கூறுகிறது.
உயர்நீதிமன்றங்களில் இந்த ஆண்டில் நீதிபதி பணியிடங்களில் 21 சதவீத காலியிடங்கள் இருப்பது, அவர்கள் மீது அதிக பணிச்சுமை ஏற்பட காரணமாக உள்ளது.
மாவட்ட நீதிமன்றங்களில் உள்ள ஒரு நீதிபதி சராசரியாக 2 ஆயிரத்து 200 வழக்குகளை கவனிக்கிறார். அலகாபாத் மற்றும் மத்திய பிரதேச உயர்நீதிமன்றங்களில் ஒரு நீதிபதி தலா 15 ஆயிரம் வழக்குகளை விசாரிக்கிறார்.
மாவட்ட நீதிமன்றங்களில் பெண் நீதிபதிகளின் ஒட்டுமொத்த பங்கு, 2017ல் 30 சதவீதத்தில் இருந்து 38.3 சதவீதமாக அதிகரித்துள்ளது, 2025இல் உயர்நீதிமன்றங்களில் 11.4 சதவீதத்தில் இருந்து 14 சதவீதமாக அதிகரித்து உள்ளது.
உயர்நீதிமன்றங்கள் மற்றும் உச்ச நீதிமன்றங்களை ஒப்பிடும்போது, மாவட்ட நீதிமன்றங்களில் பெண் நீதிபதிகளின் விகிதாசாரம் அதிகமாக உள்ளது. அங்கு 6 சதவீதம் பெண் நீதிபதிகள் உள்ளனர். ஆனால் 15 நீதிமன்றங்களில் ஒரு பெண் தலைமை நீதிபதி மட்டுமே உள்ளார். இவ்வாறு தினத்தந்தி நாளிதழின் செய்தி தெரிவிக்கிறது.
'ரணில் விக்கிரமசிங்கவை கைதுசெய்ய வேண்டும்' - புபுது ஜாகொட

பட மூலாதாரம், Getty Images
பட்டலந்த விசாரணை ஆணைக்குழுவின் பரிந்துரைகளை அரசாங்கம் உண்மையாகவே செயல்படுத்துவதாக இருந்தால், கொலை குற்றச்சாட்டு தெரிவிக்கப்படும் ரணில் விக்ரமசிங்கவை உடனடியாக கைது செய்து விசாரணை செய்ய வேண்டும் என இலங்கையின் முன்னணி சோசலிச கட்சியின் கல்விப் பொதுச் செயலாளர் புபுது ஜாகொட தெரிவித்தார் என வீரகேசரி இணையதளம் செய்தி வெளியிட்டுள்ளது.
இலங்கை நாடாளுமன்றத்தில் விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ள பட்டலந்த விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கை தொடர்பில் குறிப்பிடுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இது தொடர்பில் பேசிய புபுது ஜாகொட, "நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்திருக்கும் பட்டலந்த விசாரணை அறிக்கை பூரணமான அறிக்கையல்ல. அது 280 பக்கங்களைக் கொண்ட முதற்கட்ட விசாரணை அறிக்கையாகும். சாட்சி அறிக்கைகள் உடன் மொத்தமாக அந்த விசாரணை அறிக்கை 700க்கும் அதிக பக்கங்களைக் கொண்டதாகும். அந்த முழுமையான அறிக்கையை சமர்ப்பிக்குமாறே நாங்கள் தெரிவித்திருந்தோம்.
இந்த அறிக்கை தொடர்பில் சட்டமா அதிபரின் ஆலோசனையைப் பெறுவதாக அரசாங்கம் தெரிவித்திருந்தது. ஆனால் அவ்வாறு சட்டமா அதிபரின் ஆலோசனையைப் பெற வேண்டியது இல்லை. அத்துடன் அரசாங்கம் இந்த ஆணைக் குழு தொடர்பில் பரிந்துரைகளை மேற்கொள்ள குழு ஒன்றை அமைப்பதாக தெரிவித்துள்ளது. என்றாலும் பட்டலந்த விசாரணை அறிக்கை என்பது குழு ஒன்றின் ஊடாக மிகவும் ஆழமாக சாட்சி விசாரணைகளை மேற்கொண்டு சமர்ப்பிக்கப்பட்ட முழுமையான அறிக்கையாகும். அதனால் மீண்டும் குழு அமைப்பது என்பது காலத்தை வீணடிக்கும் செயலாகும்.
அதே நேரம் பட்டலந்த ஆணை குழுவுக்கு முன்னால் சாட்சி கூறிய பலர் இன்று உயிருடன் இல்லை. அப்படி இருக்கும்போது எவ்வாறு மீண்டும் சாட்சி பதிவு செய்ய முடியும்.?" என்று கேள்வியெழுப்பியுள்ளார் என வீரகேசரியின் செய்தி கூறுகிறது.
தொடர்ந்து பேசிய அவர், "அதனால் அரசாங்கத்தின் நடவடிக்கைகளை பார்க்கும் போது குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுக் கொடுக்காமல் இதனை தொடர்ந்து இழுத்தடிப்பதற்கு முயற்சிக்கின்றது போன்றே இருக்கிறது. ஏனெனில் நாடாளுமன்றத்தில் இந்த விவாதம் இடம்பெறும் போதும் மக்கள் விடுதலை முன்னணி உறுப்பினர்கள் பலர் இதில் கலந்து கொண்டிருக்கவில்லை.
எனவே அரசாங்கத்துக்கு குற்றம் சாட்டப்பட்டிருப்பவர்களுக்கு தண்டனை பெற்றுக் கொடுக்க வேண்டும் என்ற எண்ணம் இருக்குமானால் கொலை குற்றச்சாட்டு தெரிவிக்கப்படும் ரணில் விக்ரமசிங்க உள்ளிட்ட நபர்களை உடனடியாக கைது செய்து விசாரணைகளை மேற்கொள்ள வேண்டும்" என்று தெரிவித்தார் என அந்தச் செய்தி கூறுகிறது.
- இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு












