அமெரிக்க உளவுத்துறை 1950களில் செய்த ரகசிய பரிசோதனையில் சிக்கிய 16 வயது பெண் என்ன ஆனார்?

- எழுதியவர், ராபின் லெவின்சன்-கிங் & ஈலோயிஸ் அலானா
- பதவி,
கனடாவின் மான்ட்ரியலில் உள்ள முன்னாள் மனநல மருத்துவமனையான ஆலன் மெமோரியல் இன்ஸ்டிட்யூட் பற்றி லானா பான்டிங் நினைவில் வைத்திருக்கும் முதல் விஷயம் அதன் வாசனை. அது கிட்டத்தட்ட மருந்து வாசனை போல் இருந்தது.
"அந்த இடம் இருந்த விதம் எனக்குப் பிடிக்கவில்லை. அதுவொரு மருத்துவமனை போலத் தெரியவில்லை," என்று மனிடோபாவில் உள்ள தனது வீட்டில் இருந்தபடி பிபிசியிடம் பேசியபோது அவர் கூறினார்.
ஸ்காட்லாந்து கப்பல் அதிபர் ஒருவரின் வீடாக ஒரு காலத்தில் இருந்த அந்த மருத்துவமனையில்தான், "கீழ்படியாமைக்காக" சிகிச்சை பெறும்படி ஒரு நீதிபதி உத்தரவிட்டதன் பேரில், அப்போது 16 வயதாக இருந்த அவர், ஏப்ரல் 1958-இல் ஒரு மாதம் தங்கியிருந்தார்.
அங்குதான், மறைமுகமாகச் செயல்பட்ட சிஐஏ-வின் (அமெரிக்க உளவுத்துறை) மனக் கட்டுப்பாடு (mind control) குறித்த உச்ச ரகசிய ஆராய்ச்சியின் ஒரு பகுதியாக சோதனைக்கு உட்படுத்தப்பட்ட ஆயிரக்கணக்கான மக்களில் ஒருவரானார் பான்டிங்.
இப்போது, இந்த சோதனைகளால் பாதிக்கப்பட்ட கனேடியர்களுக்கு நியாயம் கோரும் வழக்கில் முதன்மை வாதிகளாக உள்ள இருவரில் அவரும் ஒருவர். வியாழக்கிழமை அன்று, இந்த வழக்கை முன்னெடுத்துச் செல்ல வழி வகுக்கும் வகையில், ராயல் விக்டோரியா மருத்துவமனையின் மேல்முறையீட்டை ஒரு நீதிபதி நிராகரித்தார்.
பான்டிங் சமீபத்தில் பெற்ற மருத்துவக் கோப்புகளின்படி, ஒட்டாவாவில் இருந்து மான்ட்ரியலுக்கு குடும்பத்துடன் இடம்பெயர்ந்துள்ளார். "அந்தக் கடினமான அனுபவத்தைத் தொடர்ந்து அவர் தனது வீட்டைவிட்டு வெளியேறித் தம் பெற்றோருக்குப் பிடிக்காத நண்பர்களுடன் பழகியுள்ளார்" என்று அந்தக் கோப்புகள் கூறுகின்றன.
"நான் ஒரு சாதாரண இளம் பெண்ணாக இருந்தேன்," என்று அவர் நினைவு கூர்ந்தார். ஆனால் நீதிபதி அவரை ஆலனுக்கு (மனநல மருத்துவமனை) அனுப்பினார்.
அங்கு சென்ற பிறகு, அவர் எம்.கே-அல்ட்ரா (MK-Ultra) என்று அறியப்பட்ட சிஐஏ-வின் ரகசிய சோதனைகளில் தன்னை அறியாமலே பங்கேற்றார். பனிப்போர் தொடர்பான இந்தத் திட்டத்தில், எல்எஸ்டி (LSD) போன்ற மனதை பாதிக்கக்கூடிய மருந்துகள் (psychedelic drugs), எலக்ட்ரோஷாக் சிகிச்சைகள் மற்றும் மூளைச் சலவை நுட்பங்களின் (brainwashing techniques) விளைவுகள், மனிதர்களின் சம்மதமின்றி அவர்கள் மீது பரிசோதிக்கப்பட்டன.
அமெரிக்கா மற்றும் கனடாவில் உள்ள மருத்துவமனைகள், சிறைச் சாலைகள், பள்ளிகள் உள்பட 100க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் இதில் சம்பந்தப்பட்டிருந்தன.
ஆலன் மனநல மருத்துவமனையில், மெக்கில் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர் ஈவன் கேமரூன் நோயாளிகளுக்கு மருந்து கொடுத்து, பதிவுகளைக் கேட்கச் செய்தார். சில நேரங்களில் ஆயிரக்கணக்கான முறை திரும்பத் திரும்பக் கேட்கச் செய்தார். இதை அவர் "ஆராய்தல்" என்று அழைத்தார்.

பான்டிங்கை மருத்துவர் கேமரூன் ஒரே டேப் பதிவை நூற்றுக்கணக்கான முறை கேட்கச் செய்தார். "அது, 'நீ ஒரு நல்ல பெண், நீ ஒரு கெட்ட பெண்' என திரும்பத் திரும்ப ஓடிக்கொண்டிருந்தது," என்று பான்டிங் நினைவு கூர்ந்தார்.
இந்த நுட்பம் "உளவியல் உந்துதல் (psychic driving)" என்ற ஒரு வடிவம் என்று கேமரூனின் சோதனைகள் மற்றும் அவற்றின் நெறிமுறை தாக்கங்கள் குறித்து ஆய்வு செய்துள்ள முனைவர் பட்ட மாணவர் ஜோர்டான் டார்பே கூறுகிறார்.
"அடிப்படையில் நோயாளிகளின் மனம் வாய்மொழிக் குறிப்புகளைப் பயன்படுத்திக் கையாளப்பட்டது," என்று அவர் கூறுகிறார். மேலும், தூக்க மருந்துகள், கட்டாய உணர்ச்சி இழப்பு (forced sensory deprivation), தூண்டப்பட்ட கோமா (induced coma) ஆகியவற்றின் விளைவுகளையும் அவர் ஆய்வு செய்ததாகக் கூறுகிறார்.
பான்டிங்கிற்கு எல்எஸ்டி (LSD), அத்துடன் சோடியம் அமைட்டல் (தூக்கம் அல்லது அமைதிப்படுத்தும் மருந்து), டெசோக்ஸைன் (ஒரு தூண்டுதல் மருந்து), சிரிப்பை ஏற்படுத்தும் வாயு (laughing gas) என்று அறியப்பட்ட நைட்ரஸ் ஆக்சைடு வாயு ஆகியவை வழங்கப்பட்டதை மருத்துவப் பதிவுகள் காட்டுகின்றன.
"1958 ஏப்ரல் 30ஆம் தேதிக்குள், நோயாளி சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டார். நைட்ரஸ் ஆக்சைடு கொடுக்கப்பட்டபோது அவர் மிகவும் பதற்றமடைந்து வன்முறையான நபராக மாறினார், படுக்கையில் இருந்து வெளியே வந்து அலற ஆரம்பித்தார்," என்று கேமரூன் அவரது மருத்துவக் கோப்பு ஒன்றில் எழுதினார். அதை பான்டிங் தகவல் சுதந்திர விண்ணப்பத்தின் மூலம் பெற்றுள்ளார்.

எம்.கே-அல்ட்ரா பரிசோதனைகளைப் பற்றிய உண்மைகள் முதலில் 1970களில் வெளிச்சத்திற்கு வந்தன. அப்போதிருந்து, பாதிக்கப்பட்டவர்களில் பலர் அமெரிக்கா மற்றும் கனடா மீது வழக்குத் தொடர முயன்றனர். அமெரிக்காவில் வழக்குகள் பெரும்பாலும் தோல்வியடைந்தன. ஆனால் 1988இல், ஒன்பது பாதிக்கப்பட்டவர்களுக்கு தலா 67,000 டாலர்கள் வீதம் செலுத்த கனேடிய நீதிபதி அமெரிக்க அரசுக்கு உத்தரவிட்டார். 1992இல் கனடா அரசு 77 பாதிக்கப்பட்ட நபர்களுக்குத் தலா 100,000 கனடா டாலர்களை (அப்போது சுமார் 80,000 டாலர்கள்) செலுத்தியது. ஆனால் சட்டப் பொறுப்பை ஏற்கவில்லை.
தானும் இதில் பாதிக்கப்பட்டவர் என்று அப்போது தெரியாததால், பான்டிங் அவர்களில் ஒருவராக இருக்கவில்லை என்று அவர் கூறுகிறார்.
பல தசாப்தங்களாக, தனக்கு ஏதோ தவறு இருப்பதாக உணர்ந்ததாக பான்டிங் கூறினார். ஆனாலும் இந்தச் சோதனைகளில் தான் ஈடுபடுத்தப்பட்டது பற்றிய விவரங்களை அவர் சமீபத்தில்தான் அறிந்துகொண்டார்.
ஆலனில் என்ன நடந்தது அல்லது அதன் பிந்தைய பல ஆண்டுகள் பற்றி தனக்குச் சரியாக நினைவில் இல்லை என்கிறார் அவர்.
பான்டிங் இறுதியில் திருமணம் செய்து கொண்டு மனிடோபாவுக்கு குடிபெயர்ந்தார், அவருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். அவர்களுடன் அவர் இன்றும் நெருக்கமாக இருக்கிறார். இப்போது, அவர் நான்கு பேரக் குழந்தைகளுக்குப் பாட்டியாக இருக்கிறார். ஆனால் ஆலனில் இருந்த நேரத்தில் நடந்தவற்றின் பின்விளைவுகளை வாழ்நாள் முழுவதும் எதிர்கொண்டதாக அவர் கூறுகிறார்.
"நான் ஏன் இப்படி யோசிக்கிறேன் அல்லது எனக்கு என்ன நடந்தது என்று நான் எப்போதும் யோசித்துக் கொண்டிருந்தேன். அதனால் என் வாழ்நாள் முழுவதும் அதை உணர்ந்தபடியே இருந்தேன்," என்று அவர் கூறினார்.
தனது மனநலப் பிரச்னைகளைக் கையாள வாழ்நாள் முழுவதும் பலதரப்பட்ட மருந்துகளை அவர் எடுத்துக்கொள்ள வேண்டியிருந்ததுடன், அவருக்கு திரும்பத் திரும்ப மோசமான கனவுகளும் தோன்றக் காரணம் ஆலனில் இருந்த நேரம்தான் என அவர் கூறுகிறார்.
"நடந்தவை காரணமாக சில நேரங்களில் இரவில் அலறிக்கொண்டு எழுந்திருப்பேன்," என்று அவர் கூறினார்.

பட மூலாதாரம், Getty Images
இந்த வழக்கு நீதிமன்றத்தில் இருப்பதால் ராயல் விக்டோரியா மருத்துவமனை மற்றும் மெக்கில் பல்கலைக்கழகம் கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டன. அரசோ 1992இல் ஏற்பட்ட முந்தைய தீர்வை பிபிசிக்கு சுட்டிக்காடி, அது "மனிதாபிமான" காரணங்களுக்காகச் செய்யப்பட்டதாகவும் சட்டப் பொறுப்பை ஏற்கவில்லை என்றும் கூறியது.
பான்டிங்கை பொறுத்தவரை, இந்த வழக்கு இறுதியாக ஒரு தீர்வைப் பெறுவதற்கான வாய்ப்பு.
"சில நேரங்களில் நான் வீட்டு அறையில் அமர்ந்திருக்கும்போது, என் மனம் பின்னோக்கிச் செல்கிறது, எனக்கு நடந்த விஷயங்களைப் பற்றி நினைத்துப் பார்க்கிறது. கேமரூனின் படத்தைப் பார்க்கும்போதெல்லாம் எனக்கு மிகவும் கோபம் வருகிறது," என்று அவர் கூறுகிறார்.
கேமரூனின் பணி அப்போதிருந்து எம்.கே-அல்ட்ரா சோதனைகளுடன் ஒத்ததாக இருந்தாலும், தனக்கு சிஐஏ நிதியளிக்கிறது என்பது அப்போது அவருக்குத் தெரிந்திருக்கவில்லை என்று தனது ஆராய்ச்சி காட்டுவதாக டார்பே கூறுகிறார். அமெரிக்க உளவுத்துறையுடனான அவரது பணி 1964இல் முடிவடைந்தது, அவர் 1967இல் மாரடைப்பால் இறந்தார்.
ஆனால், பணம் எங்கிருந்து வந்தது என்று அவருக்குத் தெரிந்திருந்தாலும் தெரியாவிட்டாலும், அவர் நடத்திய பரிசோதனைகள் நெறிமுறைகளுக்கு (ethical) உட்பட்டவை அல்ல என்று அவருக்குத் தெரிந்திருக்க வேண்டும் என்று டார்பே கூறுகிறார்.
இந்த வழக்கின் விளைவாக, பாதிக்கப்பட்டவர்களுக்கு ஒரு விதத்தில் நீதி கிடைக்கும் என்றும் தான் நம்புவதாகக் கூறுகிறார் அவர்.
"இந்த வழக்கு நோயாளிகளுக்கு அவர்கள் இழந்ததை மீண்டும் கொடுப்பது பற்றியது அல்ல, ஏனென்றால் அது சாத்தியமில்லை. ஆனால் அவர்களின் துன்பம் வீண் போகவில்லை, இதிலிருந்து நாம் பாடம் கற்றுக் கொள்கிறோம் என்பதை உறுதி செய்வதைப் பற்றியது," என்கிறார் அவர்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு












