நெல்லை பொறியாளர் கவின் உடல் ஒப்படைப்பு - 5 நாள் போராட்டம் முடிவுக்கு வந்தது எப்படி?

- எழுதியவர், பிரபுராவ் ஆனந்தன்
- பதவி, பிபிசி தமிழுக்காக
திருநெல்வேலி பாளையங்கோட்டையில் தலித் சமூகத்தை சேர்ந்த கவின் செல்வ கணேஷ் படுகொலை செய்யப்பட்ட விவகாரத்தில் குற்றஞ்சாட்டப்பட்ட சுர்ஜித் மீது குண்டர் தடுப்பு சட்டத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்ட நிலையில் அவரது பெற்றோர் இருவரும் காவல்துறையில் இருந்து பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள சுர்ஜித்தின் தந்தையான உதவி ஆய்வாளர் சரவணன் புதன் கிழமை இரவு கைது செய்யப்பட்டார்.
இனையடுத்து 5 நாட்களாக போராட்டம் நடத்தி வந்த கவினின் உறவினர்கள், அவரது உடலை பெற்றுக் கொள்ள சம்மதம் தெரிவித்தனர்.
அதன்படி கவினின் தந்தை சந்திரசேகர், சகோதரர் பிரவீன், தாய்மாமா இசக்கிமுத்து மற்றும் உறவினர்கள் பாளையங்கோட்டையில் உள்ள பிரேத பரிசோதனை கூடத்திற்கு இன்று காலையில் வந்தனர். அங்கு உடலை ஒப்படைக்க ஏற்பாடுகள் நடைபெற்றது.
இந்நிலையில் காலை 10:30 மணி அளவில் அமைச்சர் நேரு மாவட்ட ஆட்சியர் சுகுமார் பாளையங்கோட்டை தாசில்தார் முன்னிலையில் கவிஞன் உடலை அவர்களது உறவினிடம் ஒப்படைக்கப்பட்டது தொடர்ந்து அவரது உடலுக்கு மாலை அணிவித்தனர் தொடர்ந்து வாகனம் மூலம் போலீஸ் பாதுகாப்புடன் அவரது சொந்த ஊரான தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகமங்கலத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டது.
பிபிசி தமிழிடம் பேசிய கவினின் தாய் மாமா இசக்கி முத்து,"சுர்ஜித்தின் மீது குண்டர் சட்டம் போட்டப்பட்டுள்ளது, அவரது தந்தை கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் சிபிசிஐடி வழக்கை முன்னெடுக்கிறது. இது எங்களுக்கு நம்பிக்கை அளிக்கிறது. எனவே தான் உடலைப் பெற்றுக் கொள்ள சம்மதித்தோம் " என்றார்.
இதனிடையே சி.பி.சி.ஐ.டி. போலீசார் இந்த வழக்கு தொடர்பான ஆவணங்கள் சரிபார்ப்பு, ஆவணங்கள் எழுதும் பணிகளை மேற்கொள்ள உள்ளதாகவும், கவின் உடலுக்கு இறுதிச்சடங்குகள் முடிவடைந்த பின்னர் மேற்கொண்டு விசாரணைகள் தொடங்கும் எனவும் சி.பி.சி.ஐ.டி. வட்டாரங்கள் தெரிவித்தன.
வழக்கில் இதுவரை நடந்தது என்ன?
தூத்துக்குடி மாவட்டம், ஏரல் அருகே உள்ள ஆறுமுகமங்கலம் பகுதியை சேர்ந்த விவசாயி சந்திரசேகர் மகன் கவின் செல்வகணேஷ். இவர் சென்னையில் உள்ள மென்பொருள் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார்.
இந்தநிலையில் அவர் கொலை செய்யப்பட்ட சம்பவம், நெல்லை மற்றும் தூத்துக்குடியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த கொலை சம்பவத்தில் இளம்பெண்ணின் பெற்றோர், சார்பு ஆய்வாளராக பணியாற்றி வரும் சரவணனுக்கும், கிருஷ்ணகுமாரிக்கும் தொடர்பு இருப்பதாக உயிரிழந்த கவின் குடும்பத்தினர் குற்றம்சாட்டி வந்தனர்.
இதையடுத்து குற்றம் சாட்டப்பட்ட சுர்ஜித் மற்றும் அவரது பெற்றோர் சார்பு ஆய்வாளர்கள் சரவணன், மற்றும் கிருஷ்ணகுமாரி மீது காவல்துறையினர் சாதிய வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட 6 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்தனர்.
இதனை தொடர்ந்து சரவணன், மற்றும் கிருஷ்ணகுமாரியை பணியிடை நீக்கம் செய்து தமிழ்நாடு சிறப்பு காவல்படை டிஐஜி விஜயலட்சுமி உத்தரவிட்டார்.
ஆனால், இருவரையும் கைது செய்தால் மட்டுமே, கவினின் உடலை வாங்கி அடக்கம் செய்வோம் என உயிரிழந்த இளைஞரின் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டடனர்.

இதையடுத்து, நெல்லை மாநகர காவல் ஆணையர் சந்தோஷ் ஹதிமணி முன்னிலையில், நேற்று முன்தினம் இரவு 8 மணி வரை கவினின் பெற்றோர் மற்றும் உறவினர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.
ஆனால், முதல் தகவல் அறிக்கையில் இடம்பெற்றுள்ள சுர்ஜித் பெற்றோர் இருவரையும் கைது செய்தால் மட்டுமே, கவினின் உடலை பெறுவோம் என அவர்கள் திட்டவட்டமாக தெரிவித்ததால் போலீசார் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது.
மேலும், நேற்று 5வது நாளாக கவின் சொந்த ஊரான ஆறுமுகமங்கலத்தில் அவரது உறவினர்கள் போராட்டம் நடத்தினார்கள்.
போராட்டங்களுக்கு நடுவே அமைச்சர்கள் கேஎன் நேரு, அனிதா ராதாகிருஷ்ணன் மாவட்ட ஆட்சித் தலைவர் இளம் பகவத் மற்றும் தென் மண்டல ஐஜி பிரேம் ஆனந்த் சின்ஹா மற்றும் நெல்லை சரக டிஐஜி சந்தோஷ் ஆகியோர் கவினின் பெற்றோரை சந்தித்து பேசினர்.

இதனிடையே சுர்ஜித்தை போலீசார் கைது செய்து, அவர் மீது கொலை மற்றும் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்த நிலையில், சுர்ஜித்தை திருநெல்வேலியில் உள்ள இரண்டாவது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் போலீசார் ஆஜர்படுத்தினர். நீதிபதி ஹேமா, சுர்ஜித்தை 14 நாள் காவலில் வைக்க உத்தரவிட்டார்.
இதுகுறித்து பிபிசி தமிழிடம் பேசிய கவினின் பெற்றோர் தரப்பு வழக்கறிஞர் செல்வம், "காவல்துறை பதிவு செய்துள்ள முதல் தகவல் அறிக்கை அடிப்படையில் சுர்ஜித்தின் பெற்றோராரான உதவி ஆய்வாளர்கள் இருவரையும் கைது செய்ய வேண்டும் இதுவரை காவல்துறையினர் அவர்களை கைது செய்யவில்லை, இருவரும் போலீசார் என்பதால் காவல்துறை கைது செய்யாமல் இருக்கலாம் என்ற சந்தேகம் எழுகிறது." என தெரிவித்தார்.
"இருவரையும் உடனடியாக காவல்துறை கைது செய்ய வேண்டும் என்பது எங்களது ஒரே கோரிக்கை. ஆனால், கொலையில் அவர்களுக்கு தொடர்பு இருப்பதற்கான ஆதாரம் இருந்தால்தான் கைது செய்ய முடியும் என போலீசார் தரப்பில் சொல்கிறார்கள். ஆதாரத்தை நாங்கள் எப்படி உருவாக்க முடியும்? சட்டப்படி முதல் தகவல் அறிக்கையில் பெயர் சேர்த்தால் கைது செய்யலாம். ஆனால், பெயர்கள் சேர்க்கப்பட்டும், கைது செய்ய மறுக்கிறார்கள். இதனால் பேச்சுவார்த்தையில் எங்களுக்கு திருப்தி இல்லை", என வழக்கறிஞர் செல்வம் தெரிவித்தார்.

சுர்ஜித் மீது குண்டர் தடுப்பு சட்டம் பாய்ந்தது
இந்நிலையில், சுர்ஜித் மீது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது.
இது தொடர்பாக நெல்லை மாநகர காவல்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ''கடந்த 27ம் தேதி கவின் செல்வகணேஷ் (27) என்பவர் கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக பாளையங்கோட்டை காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு அந்த வழக்கில் தொடர்புடைய பாளையங்கோட்டை, கே.டி.சி.நகர், மங்கம்மாள் சாலையைச் சேர்ந்த சுர்ஜித்(23) கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்பட்டார்.
இந்த நிலையில் மேற்சொன்ன வழக்கில் சம்பந்தப்பட்ட, பொது ஒழுங்கு பராமரிப்பிற்கு குந்தகம் விளைவிக்கும் செயல்களில் ஈடுபட்ட சுர்ஜித்தை, திருநெல்வேலி மாநகர போலீஸ் கமிஷனர் சந்தோஷ் ஹதிமணி குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் தடுப்புக் காவலில் அடைக்க உத்தரவிட்டுள்ளார்'' என குறிப்பிடப்பட்டுள்ளது.
குற்றம்சாட்டப்பட்டவரின் தந்தை மற்றும் தாய் சார்பு ஆய்வாளர் என்பதால் விசாரணை பாரபட்சமின்றி நடக்க இருவரும் பணி இடை நீக்கச் செய்யப்பட்டுள்ளனர் என்றும் இந்த வழக்கு சிபிசிஐடிக்கு விசாரணைக்கு மாற்றப்படுவதாகவும் தமிழ்நாடு காவல்துறை டிஜிபி சங்கர் ஜிவால் அலுவலகத்திலிருந்து வெளியான செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திரைப் பிரபலங்கள் கண்டனம்
இதனிடையே திரைப் பிரபலங்கள் கண்டனங்கள் தெரிவிக்க தொடங்கியுள்ளனர்.
கமல்ஹாசன், இயக்குனர் மாரி செல்வராஜ், ஜி.வி.பிரகாஷ் தங்களது எக்ஸ் சமூக வலைதள பக்கம் வாயிலாக கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.
மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தனது எக்ஸ் சமூக வலைதள பக்கத்தில், பாளையங்கோட்டையில் கவின் செல்வ கணேஷ் எனும் 27 வயது ஐடி ஊழியர் ஆணவப் படுகொலை செய்யப்பட்டது அதிர்ச்சியளிப்பதாக குறிப்பிட்டு உள்ளார்.
''இந்தக் குற்றத்தைச் செய்த குற்றவாளிகளை சட்டத்தின் முன் நிறுத்தி கடுமையான தண்டனை பெற்றுத்தர வேண்டும். கவினை இழந்து வாடும் குடும்பத்தார் மற்றும் நண்பர்களுக்கு என் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன். சாதிய வன்கொடுமை எனும் சமூக இழிவிற்கு எதிராக அனைத்து அரசியல் இயக்கங்களும் ஒன்று திரள வேண்டும். சாதி தான் நம்முடைய முதல் எதிரி என்பதை உணர வேண்டும். முற்றுப்புள்ளி எட்டும் வரை போராட வேண்டும்'' என அறிக்கையில் கமல்ஹாசன் கூறியுள்ளார்
இயக்குநர் பா.ரஞ்சித், அவர் நடத்தி வரும் நீலம் பண்பாட்டு மையம் சார்பில் கண்டன அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அந்த அறிக்கையில், ''சுர்ஜித்தின் பெற்றோர்கள் குற்றவாளியாகத் சேர்க்கப்பட்டிருந்தாலும், இன்னும் கைது செய்யப்படவில்லை. வன்கொடுமை தடுப்புச் சட்ட விதிகளின் படி, வன்கொடுமை சம்பவம் நடந்த உடன் மாவட்ட ஆட்சித்தலைவர் சம்பந்தப்பட்டவர்களை சந்திக்க வேண்டும் என்கிறது. இதுவரை ஆட்சித் தலைவர் நேரில் சென்று பாதிக்கப்பட்டவர்களை சந்திக்கவில்லை. உடனடி ஊடக வெளிச்சம் கிடைக்கும் நவீன காலத்திலும் ஒவ்வொரு முறை இத்தகைய சம்பவங்கள் நிகழும் போது, பட்டியலின மக்கள் போராடித்தான் குறைந்தபட்ச நீதியை பெற வேண்டியிருக்கிறது, அப்படித்தான் கவினின் பெற்றோர்கள் நீதிக்காகப் போராடிக்கொண்டிருக்கிறார்கள்.'' என தெரிவித்துள்ளார்.

இசையமைப்பாளர் மற்றும் நடிகர் ஜி.வி. பிரகாஷ் தனது எக்ஸ் சமூக வலைதள பக்கத்தில், ''தீண்டாமை ஒரு பாவச்செயல் தீண்டாமை ஒரு பெருங்குற்றம் தீண்டாமை ஒரு மனிதத்தன்மையற்ற செயல்'' என குறிப்பிட்டுள்ளார்
இயக்குனர் மாரி செல்வராஜ் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் பக்கத்தில், ''நீளும் சாதிய அருவருப்பின் அட்டூழியம். சாதிய பெருமை வாதத்திற்கு எதிரான நடவடிக்கைகளை அரசு இன்னும் துரிதமானதாகவும் கடுமையானதாகவும் நிச்சயம் செயல்படுத்தியே ஆகவேண்டும்'' என்று பதிவிட்டுள்ளார்.
திருமாவளவன் கண்டனம்
விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,'' தென் மாவட்டங்களில் குறிப்பாக திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் ஆதிக்க சாதி கொலைகள், சாதி வெறி தாக்குதல்கள் தொடர்ந்து நிகழ்வது வேதனையளிக்கிறது. கெளரவம் என்ற பெயரில் நடக்கும் கொலைகளை தடுப்பதற்கான சட்டத்தை இந்திய சட்ட ஆணையம் வடிவமைத்து பல ஆண்டுகளாகியும் இன்னும் நிறைவேற்றப்படாமல் உள்ளது. இதுபோன்ற கொலைகளைத் தடுப்பதற்கான சட்டத்தை உடனடியாக மாநில அரசு உருவாக்க வேண்டும்'' என தெரிவித்திருந்தார்.
மேலும் உயிரிழந்த கவின் குடும்பத்தினரை திருமாவளவன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு ஆறுதல் கூறினார்.
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் எஸ்சி பிரிவு தலைவர் ரஞ்சன் குமார், ''கவின் படுகொலை வழக்கை முதல்வரின் நேரடி பார்வையில் நடத்தினால் மட்டுமே நீதி கிடைக்கும். தென் மாவட்டங்களில் தொடரும் இதுபோன்ற படுகொலைகளை கண்டித்து விரைவில் ஆர்ப்பாட்டம் நடைபெறும்'' என்று அறிவித்துள்ளார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு








