சென்னையில் மீண்டும் கொரோனா - 60 வயது நபர் பலியானது எப்படி? இன்றைய முக்கிய செய்திகள்

பட மூலாதாரம், Getty Images
இன்றைய (29/05/2025) நாளிதழ்களில் வெளிவந்துள்ள சில செய்திகள் இங்கே தொகுத்து வழங்கப்பட்டுள்ளன.
சென்னையில் கொரோனா தொற்று பாதித்த 60 வயது நபர் உயிரிழந்துள்ளார் என்று தினமணி நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
அந்த செய்தியில், " சென்னையில் கொரோனா தொற்றுக்குள்ளான 60 வயது முதியவா் ஒருவா் இணைநோய்களின் தாக்கத்தால் உயிரிழந்தாா். அவா் நாள்பட்ட சிறுநீரக செயலிழப்பு நோயாளி என்றும், தொடா் டயாலிசிஸ் சிகிச்சையில் இருந்தாா் என்றும் பொது சுகாதாரத் துறை இயக்குநா் செல்வவிநாயகம் தெரிவித்துள்ளாா். அவருக்கு தீவிர சா்க்கரை நோய் மற்றும் உயா் ரத்த அழுத்தம் இருந்ததாகவும் அவா் கூறியுள்ளாா். கவலைக்கிடமான உடல் நிலையில் இருந்த அவருக்கு எதேச்சையாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதாகவும், முதியவரின் உயிரிழப்புக்கு இணைநோய்கள்தான் காரணம் என்றும் டாக்டா் செல்வவிநாயகம் விளக்கமளித்துள்ளாா்.
இதுதொடா்பாக அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பில், "செங்கல்பட்டு மாவட்டத்தைச் சோ்ந்த 60 வயது முதியவா் ஒருவா், இரைப்பை அழற்சி மற்றும் நீா்ச்சத்து இழப்பு காரணமாக சென்னை, கே.கே.நகா் இஎஸ்ஐ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். நான்காம் நிலை சிறுநீரக செயலிழப்பு, சா்க்கரை நோய், உயா் ரத்த அழுத்த பாதிப்புகள் அவருக்கு இருந்தன. இஎஸ்ஐ மருத்துவமனையில் கடந்த 15-ஆம் தேதி அவா் அனுமதிக்கப்பட்டபோது வயிற்றுப்போக்கு இருந்தது. இதற்கு நடுவே ஒரு நாள் விட்டு ஒரு நாள் டயாலிசிஸ் சிகிச்சை அவருக்கு வழங்கப்பட்டு வந்தது.
அறிகுறிகளின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் கடந்த 26-ஆம் தேதி அவருக்கு கொரோனா இருப்பது உறுதியானது. இதையடுத்து, அவா் உயா் சிகிச்சைக்காக ராஜீவ் காந்தி மருத்துவமனைக்கு கடந்த செவ்வாய்க்கிழமை (மே 27) அனுப்பப்பட்டாா். இரவு 7.30 மணிக்கு அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது இதயத்திலிருந்து மூளைக்கு ரத்தம் செல்வதற்கான துடிப்பு (கரோடிட் பல்ஸ்) இல்லை என்பது உறுதி செய்யப்பட்டது. அதன் தொடா்ச்சியாக அவா் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டது.
இணைநோய்கள் காரணமாகவே அவா் உயிரிழந்தது மருத்துவ ரீதியாக தெரியவந்துள்ளது. கொரோனா எதேச்சையாக கண்டறியப்பட்டது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
உயிரிழந்த நபா், செங்கல்பட்டு மாவட்டம், மறைமலைநகா் பகுதியைச் சோ்ந்த மோகன் என்றும், அவா் ஜோதிடராகவும், டெய்லராகவும் பணியாற்றி வந்தவா் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா பாதுகாப்பு விதிகளுக்குட்பட்டு அவரது இறுதிச் சடங்குகள் நடைபெற்றன" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
- சாவர்க்கர் இந்தியாவில் சிலருக்கு ஹீரோவாக, சிலருக்கு வில்லனாக இருப்பது ஏன்?
- உலக அழகியை தேர்வு செய்யும் போட்டி எப்படி நடக்கும்? சர்ச்சைகள் தொடர்வது ஏன்?
- அமெரிக்காவில் வீடுகளை நோக்கிப் படையெடுக்கும் ஒலி விரியன் பாம்புகளை காக்க முயலும் தன்னார்வலர்கள்
- சென்னையில் தரையிறங்கும் விமானத்தில் பாய்ச்சப்பட்ட லேசர் ஒளி - இதன் விளைவுகள் என்ன?

தஞ்சையில் திருடு போன ஒட்டகம் திரும்ப கிடைத்தது எப்படி?

பட மூலாதாரம், தினத்தந்தி
தஞ்சையில் திருடப்பட்ட சர்க்கஸ் ஒட்டகம் 12 நாட்களுக்கு பிறகு திரும்ப கிடைத்துள்ளது, ஒட்டகத்தை கட்டி மேய்க்க முடியாது என்பதால் மரத்தில் கட்டிச்சென்ற மர்மநபரை போலீஸார் தேடி வருகின்றனர் என்று தினத்தந்தி நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
அந்த செய்தியில், "கரூர் மாவட்டம் வேட்டமலிக்களத்தி அடுத்த நத்தமேடு கிராமத்தைச் சேர்ந்தவர் அழகர். சர்க்கஸ் கலைஞரான அழகர் பல ஆண்டுகளாக தனது குடும்பத்தினருடன் ஊர் ஊராக சென்று சர்க்கஸ் கூடாரம் அமைத்து அங்கு சர்க்கஸ் நடத்துவார். சமீபத்தில் தஞ்சையை அடுத்த கீழவஸ்தாசாவடி பகுதியில் சர்க்கஸ் நிகழ்ச்சி நடத்தினார். கடந்த 15ம் தேதி இரவு சர்க்கஸ் நிகழ்ச்சி முடிந்ததும், கூடாரத்தின் ஒரு பகுதியில் வழக்கமாக கட்டி வைக்கும் இடத்தில் ஒட்டகத்தை கயிற்றால் கட்டி வைத்துள்ளார். அன்று இரவு அழகர் மற்றும் அவரது குடும்பத்தினர் அனைவரும் தூங்க சென்று விட்டனர். மறுநாள் காலையில் எழுந்து பார்த்த போது, தான் கட்டி வைத்த இடத்தில் ஒட்டகத்தை காணவில்லை. கயிற்றை அவிழ்த்துக்கொண்டு ஒட்டகம் அருகில் சென்று இருக்கலாம் என்று அழகர் அப்பகுதி முழுவதும் தேடிப் பார்த்தார். ஆனால் ஒட்டகம் கிடைக்கவில்லை. அப்போது தான் யாரோ மர்ம நபர் இரவில் அந்த ஒட்டகத்தை திருடிச் சென்றது தெரிய வந்தது." என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இது குறித்து தஞ்சை தாலுகா காவல் நிலையத்துக்கு சென்று அழகரின் குடும்பத்தினர் புகார் செய்தனர் என்றும் அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், " போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். காவல் உதவி ஆய்வாளர் முத்துக்குமார், சிறப்பு உதவி ஆய்வாளர் சுவாமிநாதன் தலைமையில் சிறப்பு குழுவினர் ஒட்டகத்தை தீவிரமாக தேடி வந்தனர். இந்நிலையில் தஞ்சை ரெட்டிப்பாளையத்தில் உள்ள புது ஆற்றங்கரை பகுதியில் ஒரு மரத்தில் ஒட்டகம் கயிற்றால் கட்டி வைக்கப்பட்டிருப்பதாக தகவல் கிடைத்தது. இதையடுத்து ஒட்டகத்தை போலீஸார் மீட்டு அழகரின் குடும்பத்தினரிடம் ஒப்படைத்தனர்.
போலீஸாரின் முதல் கட்ட விசாரணையில் ஒட்டகத்தை திருடி சென்றவர், அதனை பராமரிக்க முடியாமல் மரத்தில் கட்டி வைத்து சென்றது தெரியவந்தது. ஒட்டகத்தை திருடிய நபர் குறித்து போலீஸார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு












