மழையில் நனைவது உடலுக்கு நல்லதா? மருத்துவர்கள் சொல்வது என்ன?

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், விஷ்ணு ஸ்வரூப்
- பதவி, பிபிசி தமிழ்
சிறு குழந்தைகள் ஆனாலும் சரி, பெரியவர்களாக இருந்தாலும் சரி, மழை வரும்போது அதில் நனைய வேண்டும் என்ற ஆசை எல்லோருக்கும் இருக்கும்.
அதேபோல், எப்போதுமே இருக்கும் மற்றொரு விஷயம், மழையில் நனைவது உடலுக்கு நல்லதா கெட்டதா என்ற குழப்பம்.
மழையில் நனைந்தால் காய்ச்சல் வரும், சளி பிடிக்கும் என்று சொல்லி நம் அனைவரும் ஒருமுறையேனும் மழையில் நனைவதிலிருந்து தடுக்கப்பட்டிருப்போம்.
ஆனால், சமீப காலமாக மழையில் நனைவது நன்மை தரும், அதன் மூலம் நோய் எதிர்ப்பு சக்தி வலுப்பெறும் என்று பல்வேறு கருத்துகளும் முன்வைக்கப்படுகின்றன.
இவற்றில் எது சரி? இந்தக் கூற்றுக்களில் எவ்வளவு உண்மை இருக்கிறது?
இக்கேள்விகளுக்கு பதில் தெரிந்துகொள்ள, தொற்றுநோயியல் நிபுணர் ஒருவரிடமும், இயற்கை மருத்துவ நிபுணர் ஒருவரிடமும் பிபிசி தமிழ் பேசியது.
மழையில் நனைவதால் உடல்நலம் பாதிக்கப்படுமா?
அதிக நேரம் நனைந்துகொண்டே இருப்பது கிருமித் தொற்றுகளால் எளிதில் பாதிக்கப்படும் தன்மையை உடலில் அதிகரித்துவிடும் என்று கூறுகிறார், காவேரி மருத்துவமனையின் தொற்றுநோயியல் நிபுணர் விஜயலக்ஷ்மி பாலகிருஷ்ணன்.
“பொதுவாக மழைக்காலமும் ஃப்ளூ காய்ச்சல் பரவும் காலமும் ஒருசேர வரும். அப்போது மழையில் நனைந்தால் தொற்று ஏற்படும் வாய்ப்புகள் அதிகரிக்கும். ஆனால் மழையில் நனைவது மட்டுமே எந்தப் பாதிப்பையும் ஏற்படுத்தாது,” என்கிறார்.

பட மூலாதாரம், Dr Vijayalakshmi Balakrishnan
அதேபோல், மழைக் காலத்தில் பூஞ்சைகளால் ஏற்படும் ஒவ்வாமைகளும், மைட்ஸ்(mites) எனப்படும் ஒருவகை பூச்சியால் ஏற்படும் ஸ்க்ரப் டைஃபஸ் (scrub typhus) பரவும் வாய்ப்புகளும் உள்ளன என்றும் அவர் கூறுகிறார். இவை பரவும் வாய்ப்பு மழைக்காலத்தில் இருந்தாலும், மழையால் மட்டுமே இந்த நோய்கள் ஏற்படுவதில்லை என்றும் தெரிவித்தார் விஜயலக்ஷ்மி.
மழையில் நனைவதால் நோய் எதிர்ப்பு சக்தி வலுப்படுமா?

பட மூலாதாரம், Getty Images
மழையில் நனைவதால் நோய் எதிர்ப்பு சக்தி வலுப்படுவதற்கான எந்தத் தரவுகளும் இல்லை என்கிறார் விஜயலக்ஷ்மி. மேலும், “பொதுவாக வெறும் மழைநீரால் பாதிப்பும் இல்லை பயன்களும் இல்லை,” என்று தெரிவித்தார்.
இதே கருத்தை முன்வைத்த அரசு யோகா மற்றும் இயற்கை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் கைநுட்பத்துறை தலைவர் மருத்துவர் யோ தீபா, வெறும் மழைநீரால் மட்டும் நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்த முடியாது என்று கூறினார்.
ஆனால், "மழையிக்காலத்தின்போது நாம் எதிர்கொள்ளும் நோய்க்கிருமிகளைச் சமாளிப்பதின் மூலம் நமது உடலின் நோய் எதிர்ப்பு சக்தி வலுப்படும் வாய்ப்பு உள்ளதாகவும்" அவர் கூறுகிறார்.
மழையில் நனைவதால் உடலுக்கு ஏதேனும் நன்மைகள் உண்டா? இயற்கை மருத்துவம் என்ன சொல்கிறது?

பட மூலாதாரம், Deepa
மேலும் பேசிய மருத்துவர் தீபா, பல ஆய்வுகளின்படி இந்தியாவில் மழைநீர் காரத்தன்மை உடையதென்றும் காரத்தன்மை உள்ள நீர் (alkaline water) சருமத்திற்கும் தலைமுடிக்கும் நல்லது என்றும் கூறினார்.
இயற்கை மருத்துவத்தில் ‘நீர் சிகிச்சை’ என்ற ஒருமுறை இருப்பதாகக் கூறுகிறார் தீபா.
“இதில் வெறும் நீரை மட்டுமே வைத்து சிகிச்சை அளிக்கப்படும். குறிப்பாக மக்களை நீர்த்தொட்டிகளிலோ, ஷவர்களிலோ, குளிக்க வைப்பது மூலம் அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்படும்,” என்கிறார். மழைநீரில் நனைவதும் இதுபோன்ற ஒன்றுதான் என்கிறார் தீபா.
மேலும், குளிர்ந்த நீரில் குளிப்பதால் பொதுவாகவே நன்மைகள் உள்ளன என்கிறார்.
“குளிர்ந்த நீரில் குளிப்பதால், பொதுவாகவே சுவாசமும் ரத்த ஓட்டமும் சீராகின்றன. மழையில் நனைவதும் இதேபோன்ற விளைவை ஏற்படுத்தும்,” என்கிறார்.
மழையில் நீண்ட நேரம் நனைவதால் வரும் சிக்கல்கள்

பட மூலாதாரம், Getty Images
ஆனாலும், நீண்ட நேரம் மழையில் நனைவதும், ஈரப்பதத்திலேயே இருப்பதும் தொற்றுக்கிருமிகளால் ஏற்படும் நோய்கள் பரவு அபாயத்தை அதிகப்படுத்தும் என்பதை இரண்டு மருத்துவர்களுமே குறிப்பிடுகின்றனர்.
மழையில் சில நிமிடங்கள் நனைவதால் ஒரு பிரச்னையும் இல்லை, ஆனால் அதன்பிறகு வீட்டிற்கு வந்து குளித்து சுத்தம் செய்துகொள்ள வேண்டும் என்கிறார் மருத்துவர் விஜயலக்ஷ்மி.
மருத்துவர் தீபாவும் இதையே வலியுறுத்துகிறார். “நாம் எந்த இடத்தில் மழையில் நனைகிறோம், எவ்வளவு நேரம் நனைகிறோம், அங்கு தூசி மற்றும் பிற அசுத்தங்கள் இருக்கின்றனவா என்பதில் கவனமாக இருக்க வேண்டும்.”
மழையில் நனைந்தவுடன் வீட்டுக்கு வந்து வெதுவெதுப்பான நீரில் குளிக்க வேண்டும் என்கிறார் மருத்துவர் தீபா.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












