அங்குல இடைவெளியில் பறிபோன இந்திய அணியின் வெற்றி

ஹர்மன்ப்ரீத் கவுர்

பட மூலாதாரம், Getty Images

அந்த ரன் அவுட் இந்திய ரசிகர்களின் மனதை மீண்டும் ஒருமுறை உடைத்துவிட்டது என்றுதான் சொல்ல வேண்டும். இப்படியொரு ரன் அவுட்டையும், தோல்வியையும் இந்திய ரசிகர்கள் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள்.

ரன் அவுட் ஆகி வெளியேறும்போது மட்டையைத் தூக்கி எறிந்து தனது ஏமாற்றத்தை வெளிப்படுத்தினார் ஹர்மன்ப்ரீத் கவுர். இது அவரது வாழ்நாளில் மிகவும் மோசமான நாள்களில் ஒன்றாக அமைந்துவிட்டது. தன்மீதே அவர் கோபம் கொள்ள நேர்ந்தது.

“இதைவிட துரதிருஷ்டசாலிகளாக நாங்கள் இருக்க முடியாது” என ஹர்மன்ப்ரீத் சிங் தனது பேட்டியின்போது குறிப்பிட்டார். தேவையே இல்லாமல் தாம் ரன் அவுட் ஆன விதத்தைத்தான் அவர் ‘கெடுவாய்ப்பு’ என்ற வகையில் பேசினார்.

ஆட்டம் முடிந்த பிறகு நடந்த செய்தியாளர் சந்திப்புக்கு கறுப்புக் கண்ணாடி அணிந்து வந்த அவர், “எனது அழுகையை நாடு பார்க்க வேண்டாம் என்பதற்காக” கண்ணாடி அணிந்து வந்ததாகக் குறிப்பிட்டார்.

சமூக வலைத்தளங்களிலும் இந்திய ரசிகர்கள் அவரைப் போலவே தங்களது துயரத்தை வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள்.

ஆயினும் இந்திய பெண்கள் கிரிக்கெட் வரலாற்றில் இது மிகமுக்கியமான நாள்தான். வெல்வதற்கு வாய்ப்புக் குறைவு என்று கருதப்பட்ட ஆஸ்திரேலிய அணிக்கு தோல்விபயத்தைக் காட்டிவிட்டுத்தான் இந்தியப் பெண்கள் ஆடுகளத்தை விட்டு வெளியேறி இருக்கிறார்கள்.

173 ரன்கள் என்ற மிகப்பெரிய இலக்கைத் துரத்துவதற்கு வேகத்தை ஜெமிமாவும் ஹர்மன்ப்ரீத்தும் இந்திய அணிக்குக் கொடுத்தார்கள். 28 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்திருந்த இந்திய அணிக்கு நம்பிக்கை அளிப்பதாக இருந்தது அவர்களது பேட்டிங்.

ஹர்மன்ப்ரீத் 52 ரன்கள் எடுத்திருந்தபோது, ரன்அவுட் ஆனதால் இந்திய அணியின் வெற்றி வாய்ப்பு மங்கத் தொடங்கியது. இரண்டாவது ரன்னை எடுப்பதற்கு ஹர்மன்ப்ரீத் ஓடியபோது க்ரீஸுக்கு வெளியே பேட் சிக்கிக் கொண்டதால் அவர் ரன் அவுட் ஆனார்.

அங்குல இடைவெளியில் பறிபோன இந்திய அணியின் வெற்றி

பட மூலாதாரம், Getty Images

இந்திய அணி வீராங்கனைகள் முக்கியமான கேட்ச்களை தவறவிட்டது, மோசமான பீல்டிங் எனத் தொடங்கி ஒரு ரன் அவுட்டில் வாய்ப்பை படிப்படியாக இழந்தார்கள்.

கடைசி 2 ஓவர்களில் 12 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கு இருந்தபோதுகூட கடைசி வரிசை வீராங்கனைகளால் அந்த ரன்களை எடுக்க முடியவில்லை. ஆஸ்திரேலிய வீராங்கனைகளின் வியக்கவைத்த பீல்டிங்கும் இதற்கு முக்கியமான காரணமாக அமைந்தது.

X பதிவை கடந்து செல்ல
X பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

X பதிவின் முடிவு

கடைசியில் 5 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்றது. டி20 உலகக் கோப்பை போட்டியின் இறுதி ஆட்டத்துக்குச் செல்வது ஆஸ்திரேலிய அணிக்கு இது ஏழாவது முறை. கடந்த டி20 உலகக் கோப்பை போட்டியின் இறுதி ஆட்டத்தில் இந்தியாவைத் தோற்கடித்து கோப்பை வென்றது ஆஸ்திரேலியா.

“இது சிறந்த வெற்றிகளுள் ஒன்று” என்று ஆஸ்திரேலிய கேப்டன் லேன்னிங் கூறினார்.

என்ன நடந்தது?

அரையிறுதிக்கு முன்னதாக, ஆஸ்திரேலியா விளையாடிய கடைசியாக ஆடிய 21 டி20 ஆட்டங்களில் ஒன்றை தவிர்த்து அனைத்திலுமே வெற்றி கண்டிருக்கிறது. அந்த ஒரு ஆட்டம் இந்தியாவிடம் தோல்வியைத் தழுவியது. அதுவும் சூப்பர் ஓவரில்தான்.

கடைசியாக 2020-ஆம் ஆண்டு நடந்த டி20 உலகக் கோப்பை இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியாவிடம் வீழ்ந்தது இந்தியா. அந்த கசப்பான சம்பவத்திற்கு மாற்று மருந்தை தேட இந்தியாவுக்கு இது ஒரு நல்ல வாய்ப்பு என்றே கிரிக்கெட் வர்ணனையாளர்கள் விவரித்தனர்.

5 முறை டி20 உலக கோப்பையை வென்றது மட்டுமின்றி, 2018ல் இருந்து இதுவரை ஆஸ்திரேலியா 63 டி20-ல் 54 ஆட்டங்களில் வெற்றி பெற்றிருக்கிறது. இப்படி ஒரு பலம் வாய்ந்த அணியாக வலம் ஆஸ்திரேலியாவை அரையிறுதி ஆட்டத்தில் எதிர்கொண்டது.

டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பேட்டிங்கை தேர்வு செய்தது. ஆனாலும் அது ஒன்றும் இந்திய அணிக்கு பெரிய ஏமாற்றமாக அமையவில்லை.

அங்குல இடைவெளியில் பறிபோன இந்திய அணியின் வெற்றி

பட மூலாதாரம், Getty Images

பவர் பிளேயில் விக்கெட் இழப்பின்றி 43 ரன்களை ஆஸ்திரேலிய அணி சேர்த்தது. ராதா யாதவ் வீசிய 8-ஆவது ஓவரில் ஹீலே 25 ரன்களில் ஆட்டமிழந்தார். ஆஸ்திரேலியாவின் முதல் விக்கெட் பார்ட்னர்ஷிப் 52 ரன்களில் முடிவுக்கு வந்தது.

பின்னர் வந்த கேப்டன் லேன்னிங் மூனேவுடன் இணைந்து பொறுப்புடன் ஆடினார். இருவரும் இந்திய அணி பந்துவீச்சை நிதானமாக எதிர்கொண்டனர். மூனே 54 ரன்களில் விடைபெற, அடுத்து வந்த கார்டனர் தனது பங்கிற்கு 18 பந்துகளில் 31 ரன்கள் சேர்த்து விடைபெற்றார். கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்த கேப்டன் லேன்னிங் 49 ரன்கள் எடுத்தார்.

இந்தியாவின் சுமார் பவுலிங், மோசமான பீல்டிங்

அங்குல இடைவெளியில் பறிபோன இந்திய அணியின் வெற்றி

பட மூலாதாரம், Getty Images

இந்திய அணியின் பந்துவீச்சு அவ்வளவாக எடுபடவில்லை. கடைசி 10 ஓவர்களில் ஆஸ்திரேலியா 103 ரன்கள் சேர்த்தது. கடைசி 5 ஓவர்களில் இந்தியா 61 ரன்களை வாரி வழங்கியது. குறிப்பாக டெத் ஓவர்களில் இந்தியா கடுமையாக சொதப்பியது.

கடைசி ஓவரை வீசிய ரேனுகா, முதல் பந்தில் யார்கர் போட முயற்சிக்க, அது ஃபுல்டாசாக மாறியது. லேனிங் எந்தவித பொறுமையும் காட்டாமல் சிக்சருக்கு பறக்கவிட்டார். கடைசி பந்தும் ஃபுல்டாசாக மாற, அதையும் சிக்சருக்கு தட்டிவிட லேனிங் தயங்கவில்லை.

அந்த ஓவரில் மட்டும் ஆஸ்திரேலியா 18 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக இந்திய வீராங்கனை ரேனுகா 4 ஓவர்கள் வீசி 41 ரன்கள் விட்டுக்கொடுத்திருந்தார்.

இதேபோல ஃபீல்டிங்கில் இந்தியா கணிசமான ரன்களை இழந்தது. லேன்னிங் 1 ரன் எடுத்திருந்தபோது அவர் வழங்கிய கேட்சையும் இந்தியா நழுவவிட்டது. இதேபோல மூனே 36 ரன்கள் எடுத்திருந்தபோதும் கேட்ச் வாய்ப்பை நழுவிப்போனது. இந்தியாவின் மோசமான ஃபீல்டிங்கால் இருவருமே ஆஸ்திரேலியாவுக்கு கூடுதல் ரன்களை சேர்க்க உதவினர்.

அங்குல இடைவெளியில் பறிபோன இந்திய அணியின் வெற்றி

பட மூலாதாரம், Getty Images

ஆஸ்திரேலியாவை திணறவைத்த இந்திய ஜோடி

173 ரன்கள் எடுத்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி தொடக்கத்திலேயே அடுத்தடுத்த விக்கெட்களை இழந்தது.

ஷஃபாலி வர்மா 9, பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஸ்மிரிதி மந்தனா 2, யாஷ்டிகா பாடியா 4 என ஒற்றை இலக்க ரன்களில் டாப் ஆர்டர்கள் சரிந்தன. இந்தியா 28 ரன்களில் 3 விக்கெட்களை பறிகொடுத்தது.

ஜெமிமா - கேப்டன் ஹர்மன் ப்ரீத் ஜோடி ஆஸ்திரேலியாவை துணிச்சலுடன் எதிர்கொண்டது. 10 ஓவர்கள் முடிவில் ஆஸ்திரேலியா 61 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது. ஆனால் இந்தியா 3 விக்கெட்களை இழந்து 93 ரன்கள் சேர்த்திருந்தது. களத்தில் ரோட்ரிகசும் ஹர்மன் ப்ரீத் கவுரும் பொறுப்புடன் ஆடிக் கொண்டிருந்தனர்.

ஆட்டம் இப்படியே நகர்ந்தால் இந்தியா வென்றுவிடும். இதில் யாரேனும் ஒருவர் கடைசி வரை நின்று ஆட வேண்டும் என வர்ணனையாளர் குறிப்பிட்டிருந்தார். அடுத்த சில நிமிடங்களிலேயே 43 ரன்கள் எடுத்திருந்தபோது ஜெமிமா ஆட்டமிழந்தார்.

அங்குல இடைவெளியில் பறிபோன இந்திய அணியின் வெற்றி

பட மூலாதாரம், Getty Images

இந்தியர்களின் மனதை உடைத்த ‘ரன் அவுட்’

32 பந்துகளில் அரைசதம் விளாசிய ஹர்மன் ப்ரீத், 52 ரன்கள் எடுத்திருந்தபோது ரன் அவுட்டானார். 2019 50 ஓவர் உலகக் கோப்பையில் நியூசிலாந்துக்கு எதிரான தோனி ரன் அவுட்டானது பலருக்கும் நினைவில் இருக்கும்.

அதே பாணியில் இரண்டாவது ரன்னை ஓடினார் ஹர்மன்ப்ரீத், கிரீஸுக்குள் பேட்டை வைக்க முயன்றபோது அதற்கு சில அங்குலங்கள் முன்னதாகவே பேட் தரையில் இடித்துவிட்டு முன்னோக்கி நகரவில்லை. இதனால் கிரீஸுக்குள் செல்வதற்கு முன்பாகவே ரன் அவுட் ஆனார்.

ஹர்மன் ப்ரீத் மட்டுமின்றி இதனை யாருமே துளியும் எதிர்பார்க்கவில்லை. ஒரு நொடியில் இந்தியாவின் ஆட்டம் தலைகீழாக மாறியது. அதிருப்தியடைந்த

ஹர்மன் ப்ரீத், தனது பேட்டை கீழே வீசி, களத்தில் இருந்து ஏமாற்றத்துடன் விடைபெற்றார்.

அதன் பிறகு வெற்றி பெறுவதற்கான வாய்ப்பு இருந்தாலும் கடைசி நிலை ஆட்டக்காரர்களால் அதை வெற்றியாக மாற்ற முடியவில்லை.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: