அரண்மனை 4: படம் எப்படி இருக்கிறது? - ஊடக விமர்சனம்

பட மூலாதாரம், Avni Cinemax
தமிழில் வெளியாகும் பேய், அமானுஸ்யங்களைக் கதைக்களமாக கொண்ட படங்களுக்கு லாஜிக்கை எதிர்பார்த்து யாரும் செல்வதில்லை. 2 மணிநேரம் தொய்வை ஏற்படுத்தாமல், பொழுதுபோக்காக இருக்க வேண்டும் என்ற மனநிலையில் தான் பலரும் இந்த வகை படங்களைப் பார்க்கச் செல்கிறார்கள்.
அந்த வகையில் வணிகரீதியாக ஓரளவுக்காவது வெற்றியடையும் பேய்ப் படங்களை உருவாக்குவதில் முக்கியமானவர் இயக்குநர் சுந்தர்.சி. தற்போது அவர் இயக்கத்தில் வெளிவந்திருக்கும் அரண்மனை 4 என்ற படம்தான் தமிழக திரையரங்குகளில் பேசுபொருளாக உள்ளது.
சமீபகாலமாகவே பெரிதாக தமிழ்ப் படங்கள் ஏதும் வெளியாகாதாதல் மலையாளப் படங்களும், ரீ-ரிலீஸ் படங்களும் தமிழக திரையரங்குகளை நிறைத்து நிற்க, அதற்கு ஒரு இடைவேளை கொடுக்கும் வகையில் இந்தப் படம் வெளியாகியுள்ளது.
ஏற்கெனவே அரண்மனை 1, 2, 3 என இதே கதையில் சுந்தர்.சி மூன்று படங்களை எடுத்திருந்தாலும், அரண்மனை 4 படமும் ஓரளவு மக்களை ரசிக்க வைக்கும் தன்மையுடனே இருப்பதாகப் பல்வேறு ஊடக விமர்சனங்களும் தெரிவிக்கின்றன.
அரண்மனை 4 படத்தின் கதை என்ன?

பட மூலாதாரம், Avni Cinemax
இயக்குநர் சுந்தர். சி இயக்கத்தில் வெளியாகியுள்ள அரண்மனை 4 படத்தில் சுந்தர் சி, தமன்னா, ராஷி கண்ணா, விடிவி கணேஷ், யோகிபாபு, கோவை சரளா, 'மொட்டை' ராஜேந்திரன், மறைந்த நகைச்சுவை நடிகர் சேஷு ஆகியோர் நடித்துள்ளனர். இந்தப் படத்திற்கு ஹிப்ஹாப் ஆதி இசை அமைத்துள்ளார்.
வழக்கமான பேய் பழிவாங்கும் கதையில் இருந்து சற்று தடம் மாறி, ஒரு தீய எண்ணம் கொண்ட பேயின் பிடியில் எப்படி சுந்தர்.சி-யின் குடும்பம் மாட்டிக்கொள்கிறது, தனது குடும்பத்தினர் உயிரை அந்தப் பேயிடம் இருந்து காப்பாற்றினாரா, இறுதியில் அதிலிருந்து தனது குடும்பத்தை எப்படி சுந்தர்.சி காப்பாற்றுகிறார் என்பதே படத்தின் கதை.
இதில், "ஆங்காங்கே கொஞ்சம் காமெடி, திகில், இசை எனக் கோர்த்து குடும்பமாகச் சென்று பார்ப்பதற்கான ஒரு படத்தை சுந்தர்.சி உருவாக்கித் தந்துள்ளார்" என்று ஊடகங்களில் வெளியாகியுள்ள விமர்சனங்கள் கூறுகின்றன.
‘லாஜிக்கை எதிர்பார்க்கக் கூடாது’

பட மூலாதாரம், Avni Cinemax
"அரண்மனை படம் பார்க்க வந்துவிட்டு லாஜிக்கை எதிர்பார்க்கக் கூடாது. அது இல்லாமல் பார்த்தால் கொஞ்ச நேரம் சிரித்துவிட்டு வரலாம்" என்று தனது விமர்சனத்தில் தினமணி நாளிதழ் குறிப்பிட்டுள்ளது.
படத்தில் கோவை சரளாவின் காமெடியைவிட, யோகிபாபு - விடிவி கணேஷ் காம்போவின் காமெடி சில இடங்களில் சிரிக்க வைப்பதாக தினமணி கூறியுள்ளது. அதேபோல், "படத்தில் இசை பொருந்திப் போயிருந்தாலும் வழக்கமான ஹிப்ஹாப் ஆதியின் இசையைக் காண முடியவில்லை" என்றும் தனது விமர்சனத்தில் தெரிவித்துள்ளது.
மேலும், “தமன்னா அவரது கணவராக நடித்துள்ள சந்தோஷ் பிரதாப் ஆகியோர் நன்றாக நடித்துள்ளார்கள். மற்ற அரண்மனை படங்களைவிட, இதன் விஷுவல் கிராபிக்ஸில் (Visual Graphics) சற்று முன்னேற்றம் அடைந்துள்ளது” என்றும் கூறியுள்ளது தினமணி.
அரண்மனையை காப்பாற்றிய கிளைமேக்ஸ்

பட மூலாதாரம், Avni Cinemax
முதல் 3 அரண்மனை படங்களில் இருந்து எந்தவிதமான மாற்றமும் இல்லாமல், "அதே கதை மற்றும் அதே பாணியைக் கொண்டு எடுக்கப்பட்டுள்ள படம்தான் அரண்மனை 4" என்று விமர்சித்துள்ளது இந்தியா டுடே.
இந்தப் படத்திற்கு 5இல் 2 மதிப்பெண்கள் மட்டுமே வழங்கியுள்ள இந்தியா டுடே, "என்னதான் படத்தில் கலை இயக்கத்தின் கடின உழைப்பு தெரிந்தாலும்கூட, சரியான திரைக்கதை இல்லையென்றால் என்ன பயன்" என்றும் விமர்சித்துள்ளது.
அதேபோல் நகைச்சுவை காட்சிகளில் பலவும் பழைய காமெடிகளாக இருப்பதால் அவை படத்திற்கு நன்மை சேர்ப்பதைவிட, அதிகமாக தீமையையே ஏற்படுத்துவதாகவும் கூறியுள்ளது இந்தியா டுடே.
‘எதிர்பார்ப்போடு செல்ல வேண்டாம்’

பட மூலாதாரம், Avni Cinemax
எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் அரண்மனை 4 படத்தைப் பார்க்க போனால், எந்தக் கசப்பும் இல்லாமல், ஏமாற்றமும் இல்லாமல் வெளியே வரலாம் என்று தனது விமர்சனத்தில் தெரிவித்துள்ளது ஹிந்துஸ்தான் டைம்ஸ் நாளிதழ்.
“மற்ற மூன்று அரண்மனை படங்களைப் போலவே அதே கதையுடன் உருவாக்கப்பட்டுள்ள அரண்மனை 4 திரைப்படம், வணிகரீதியாகவும், குடும்பங்களுக்கான பொழுதுபோக்கு நோக்கத்திலும்தான் உருவாக்கப்பட்டுள்ளது. அதைச் சரியாகச் செயல்படுத்தியுள்ள சுந்தர்.சி இந்த நான்காம் பாகத்தையும் ஒரு டைம்பாஸ் படமாக எடுத்துள்ளார்,” என்றும் தனது விமர்சனத்தில் தெரிவித்துள்ளது.
மேலும், குஷ்பு மற்றும் சிம்ரனின் சிறப்புத் தோற்றம் படத்திற்குக் கொஞ்சம் உதவியுள்ளதாகவும் ஹிந்துஸ்தான் டைம்ஸ் தெரிவித்துள்ளது.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)












