ஜிஎஸ்டி மாற்றத்தால் மாநில அரசுகளுக்கு வருவாய் இழப்பா? தமிழ்நாடு, கேரளா கூறுவது என்ன?

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், முரளிதரன் காசிவிஸ்வநாதன்
- பதவி, பிபிசி செய்தியாளர்
இந்தியாவில் சரக்கு மற்றும் சேவை வரி (ஜி.எஸ்.டி) இரண்டு அடுக்காக மாற்றப்பட்டிருக்கிறது. இந்த வரி சீரமைப்பு வரவேற்பைப் பெற்றிருந்தாலும் மாநிலங்களுக்கு ஏற்படும் நிதி இழப்பு குறித்த அச்சங்களும் நீடிக்கின்றன.
கேரள மாநில நிதியமைச்சர் கே.என். பாலகோபால், புதிய ஜிஎஸ்டி அமலாக்கத்தால் கேரளாவுக்கு 8 ஆயிரம் கோடி முதல் பத்தாயிரம் கோடி ரூபாய் வரை இழப்பு இருக்கலாம் என உத்தேசமாக தெரிவித்திருக்கிறார்.
அதேசமயம், இந்த வரி சீர்திருத்தத்தால் நுகர்வு அதிகரித்து, வரி வசூல் அதிகரிக்கும் என்ற பார்வையும் முன்வைக்கப்படுகிறது.
'தீபாவளி பரிசாக' வந்த அறிவிப்பு
இந்தியாவின் சுதந்திர தினத்தன்று நாட்டு மக்களிடம் உரையாற்றிய இந்தியப் பிரதமர் நரேந்திர மோதி, "தீபாவளி பரிசாக ஜி.எஸ்.டி. வரி விகிதம் மாற்றியமைக்கப்படும்" என அறிவித்தார். நான்கு அடுக்குகளாக உள்ள ஜி.எஸ்.டி வரி, திருத்தத்துக்குப் பிறகு 5 சதவிகிதம் மற்றும் 18 சதவிகிதம் என இரண்டு அடுக்குகளை மட்டுமே கொண்டிருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.
இந்த நிலையில், இது தொடர்பாக முடிவெடுப்பதற்கான ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டம் புதன்கிழமையன்று கூடியது. இந்த 56வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்துக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், இரண்டு அடுக்கு ஜிஎஸ்டி விகித முறை ஒப்புக் கொள்ளப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.
அதன்படி, 12%, 28% விகித அடுக்குகள் ரத்து செய்யப்பட்டிருப்பதாகவும் 5% மற்றும் 18% என இரண்டு அடுக்குகள் மட்டுமே இருக்கும் என்றும் அவர் தெரிவித்திருக்கிறார். பெரும்பாலான பொருட்களுக்கு இந்த புதிய வரிவிதிப்பு முறை செப்டம்பர் 22ஆம் தேதி முதல் அமலுக்கு வருமென அறிவிக்கப்பட்டிருக்கிறது. பான் மசாலா, குட்கா, சிகரெட் போன்ற பொருட்களுக்கு 28% வரியும் ஏற்கெனவே உள்ள இழப்பீட்டு மேல்வரியும் தொடரும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.

பட மூலாதாரம், Getty Images
ஜி.எஸ்.டி. அமல்படுத்தப்பட்டபோது, மாநிலங்களுக்கு இழப்பீடு வழங்குவதற்காக இழப்பீட்டு மேல்வரி விதிக்கப்பட்டது. ஆனால், மேல்வரியால் வசூலான தொகையைவிட, இழப்பீடு அதிகமாக இருந்ததால் அதற்காக மத்திய அரசு கடன் வாங்கியது. அந்தக் கடனைத் திருப்பிச் செலுத்துவதற்காக 2026 மார்ச் மாத இறுதிவரை இழப்பீட்டு மேல்வரி தொடரும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
அதற்குப் பிறகு புகையிலை மற்றும் புகையிலை சார்ந்த 5-7 பொருட்களுக்கு 40 சதவிகித வரியுடன் ஒரு புதிய அடுக்கு உருவாக்கப்படும். மேலும், 0.25%, 1%, 3% ஆகிய சிறப்பு வரிகளும் தொடரும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.
இந்தப் புதிய சீர்திருத்தத்தால் வரி வசூலில் இழப்பு இருக்கும் என்பது எதிர்பார்க்கப்பட்டதுதான் என்றாலும், அது எவ்வளவு இருக்கும் என்பதை மத்திய அரசு தெரிவிக்கவில்லை. 2023-24ஆம் ஆண்டு வரி வசூலை வைத்துப் பார்க்கும்போது புதிய வரி விதிப்பு முறையால் சுமார் 48,000 கோடி ரூபாய் அளவுக்கு பாதிப்பு ஏற்படலாம் என்றாலும், தற்போதைய நுகர்வையும் மனதில்கொண்டு இதைக் கணக்கிட வேண்டுமென சில அதிகாரிகள் கருதுகின்றனர்.
இந்தப் புதிய முறையால் நுகர்வு அதிகரிக்கும் என்றும் மேலும் பலர் புதிதாக வரி விதிப்புக்குள் வருவார்கள் என்றும் அதன் மூலம் இழப்பு குறையலாம் எனவும் மத்திய அரசு கருதுகிறது. மேலும், 5-7 பொருட்களுக்கு 40% வரி விதிக்கப்பட்டு, அந்த வரியும் மாநிலங்களுடன் பகிரப்படும் என்பதால் பெரிய இழப்பு இருக்காது என்கின்றனர்.

பட மூலாதாரம், Getty Images
மாநிலங்களுக்கு என்ன இழப்பு?
என்றாலும்கூட, மாநிலங்களின் வரி வருவாயைக் கடுமையாக பாதிக்கும் என்ற அச்சம் மாநிலங்களுக்கே அதிகம் இருக்கிறது. சில மாநிலங்கள், ஜி.எஸ்.டி. விகிதங்கள் மாற்றியமைக்கப்பட்டதால் தங்களுக்கு ஏற்படக்கூடிய உத்தேச இழப்பு குறித்து தெரிவித்திருக்கின்றன.
தில்லியில் இது குறித்துப்பேசிய கேரள மாநில நிதியமைச்சர் கே.என். பாலகோபால், புதிய ஜிஎஸ்டி அமலாக்கத்தால் கேரளாவுக்கு 8 ஆயிரம் கோடி முதல் பத்தாயிரம் கோடி ரூபாய் வரை இழப்பு இருக்கலாம் எனத் தெரிவித்திருக்கிறார். மாநிலங்கள் தங்களுக்கு ஏற்படக்கூடிய இழப்பு குறித்து ஜிஎஸ்டி கவுன்சிலில் தெரிவித்தபோதும் அந்த விவகாரம் தீவிரமாக எடுத்துக் கொள்ளப்படவில்லையென அவர் கூறியிருக்கிறார்.
2017ஆம் ஆண்டில் ஜி.எஸ்.டி. வரி அமல்படுத்தப்பட்டபோது, மாநிலங்களுக்கான வரி வருவாய் அடுத்த ஐந்தாண்டுகளுக்கு ஒவ்வொரு வருடமும் 14 சதவிகிதம் அதிகரிக்கும் என்று மத்திய அரசு கூறியது. அப்படி அதிகரிக்காதபட்சத்தில், அந்த இடைவெளியை மத்திய அரசு இழப்பீட்டின் மூலம் நிறைவுசெய்யும் என மத்திய அரசு தெரிவித்தது.
அதன்படி, 2017ஆம் ஆண்டு ஜூலை மாதம் முதல் 2022ஆம் ஆண்டு ஜூன் மாதம் வரை மாநிலங்களுக்கு இழப்பீடு வழங்கப்பட்டது. ஆடம்பரப் பொருட்களுக்கும் மதுபானங்கள், சிகரெட் போன்ற பொருட்களுக்கும் ஜி.எஸ்.டி. தவிர கூடுதலாக இழப்பீட்டு மேல்வரி விதிக்கப்பட்டு அந்தத் தொகையிலிருந்து மாநிலங்களுக்கு இழப்பீடு வழங்கப்பட்டது.
ஆனால், 2020 - 21 காலகட்டத்தில் கொரோனா பெருந்தொற்று பரவியதால் மாநிலங்களுக்கு இழப்பீடு வழங்குவதற்காக போடப்பட்ட இழப்பீட்டு மேல்வரியிலிருந்து வசூலான தொகை, இழப்பீட்டை வழங்கப் போதுமானதாக இல்லை. ஆகவே, இந்த இழப்பீட்டை அளிப்பதற்காக மத்திய அரசு கடன் வாங்கியது. இந்தக் கடனை அடைப்பதற்காக இழப்பீட்டு மேல்வரி தொடர்ந்து விதிக்கப்பட்டுவருகிறது. இந்தக் கடன் நவம்பர் - டிசம்பர் மாதங்களில் முழுமையாக அடைக்கப்பட்டுவிடும் என நம்பப்படுகிறது (54வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் இந்தக் கணக்கு தெரிவிக்கப்பட்டது).
அதற்குப் பிறகு 2026ஆம் ஆண்டு மார்ச் 31 வரை வசூலாகும் இழப்பீட்டு மேல்வரியை, மாநிலங்களுக்கு ஏற்படும் இழப்புக்கு ஏற்ப பிரித்து வழங்கலாம் என சிலர் ஆலோசனை சொல்கிறார்கள். இந்தத் தொகை சுமார் 40,500 கோடி ரூபாய் அளவுக்கு இருக்கும் என சில நிபுணர்கள் கருதுகின்றனர். ஆனால், இது தொடர்பாக மத்திய அரசு அதிகாரபூர்வமாக எதையும் அறிவிக்கவில்லை.
வருவாய் இழப்பு ஏற்படுமா?
இது தொடர்பாக, தமிழ்நாடு அரசுக்குழுவை சேர்ந்த அதிகாரி ஒருவர் பிபிசி தமிழிடம், பெயரை வெளியிட வேண்டாம் என்ற நிபந்தனையின் பேரில் பேசினார்.
அவர் கூறுகையில், "வருவாய் இழப்பு நிச்சயம் இருக்கும் என்றாலும் எவ்வளவு இருக்கும் என்பது இனிமேல்தான் தெரியவரும். ஜி.எஸ்.டி. அமலானபோது 14 சதவிகித வளர்ச்சி இருக்கும் என்றார்கள். அந்த அளவுக்கு வளர்ச்சி இருக்கவில்லை. இந்தச் சூழலில் வரியைக் குறைக்கும்போது வருவாய் இன்னும் குறையும் அது எவ்வளவு குறையும் என்பதுதான் கேள்வி." என்றார் அவர்.

பட மூலாதாரம், Getty Images
நுகர்வோருக்கு பலனா?
வரி குறைவதால், நுகர்வு அதிகரிக்கும் என்ற வாதத்தை அவர் ஏற்கவில்லை. ஏனென்றால், அதிக விற்பனையாகும் நுகர் பொருட்களுக்கு வரி குறைக்கப்பட்டிருப்பதன் பலன், நுகர்வோருக்கு பணமாக வந்துசேராது என்கிறார் அவர்.
மூலப்பொருட்களின் விலைகள் அதிகரித்தபோது, நுகர்வோருக்கு விற்கப்படும் பாக்கெட்களில் பொருட்களின் அளவு குறைத்து விற்கப்பட்டது எனக்கூறிய அவர், இப்போது வரி குறைப்பால் விலையைக் குறைக்காமல், முன்பு குறைத்த அளவை இப்போது அதிகரிப்பார்கள் என்றும் பணமாக பலன் கிடைக்காதபோது, எப்படி வாங்குவது அதிகரிக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.

பட மூலாதாரம், Getty Images
'வரி இழப்பு அதிகம் இருக்காது'
இந்த மாற்றத்தால் வரி இழப்பு அதிகம் இருக்க வாய்ப்பில்லை என்கிறார் ஜி.எஸ்.டி. வரி ஆலோசகரான ஜி. நடராஜன்.
"இழப்பு குறித்து சில மாநிலங்கள் கவலை தெரிவித்தாலும் பெரிதாக எந்த மாநிலமும் எதிர்ப்புத் தெரிவிக்கவில்லை என்பது கவனிக்கத்தக்கது. இழப்பீட்டு மேல்வரியை நீட்டித்து, அதில் மாநிலங்களுக்கு பங்களிக்க வேண்டும் என்ற கோரிக்கை ஏற்கப்படவில்லை. உடனடி இழப்பு என்பது மத்திய அரசு, மாநில அரசு ஆகிய இருவருக்குமே இருக்கும் என மத்திய அரசு சுட்டிக்காட்டியிருக்கிறது.
உடனடியாகப் பார்க்கும்போது சிறிது இழப்பு இருப்பதாகத் தோன்றினாலும், இந்த வரி சீர்திருத்தத்தால் நுகர்வு அதிகரித்து, வரி வசூல் அதிகரிக்கும் என்பது பொதுவான நம்பிக்கையாக இருக்கிறது" என்கிறார் அவர்.
மேலும், இழப்பீட்டு மேல்வரி காலம் முடிந்த பிறகு, சிகரெட் போன்ற Sin goods 40 சதவீத வரி விதிப்புக்குள் கொண்டுவரப்படும். இதற்கு முன்பாக அவற்றுக்கு 28 சதவிகித வரியும் 40 சதவிகித இழப்பீட்டு மேல்வரியும் விதிக்கப்பட்டது. அதில் 28 சதவிகித வரியில் இருந்துமட்டும்தான் மாநிலங்களுக்கு பங்கு வழங்கப்பட்டது. இழப்பீட்டு மேல்வரியின் முழுமையும் மத்திய அரசுக்குத்தான் போனது. "இப்போது இழப்பீட்டு மேல்வரி நீக்கப்பட்டு, 40 சதவிகித வரி விதிக்கப்படும்போது, அதில் பாதி அளவு - அதாவது 20 சதவிகிதம் - மாநிலங்களுக்குக் கிடைக்கும். இதுவும் மாநிலங்களில் வருவாயை அதிகரிக்கும்" என்கிறார் ஜி. நடராஜன்.

தமிழ்நாட்டைப் பொறுத்தவரை, இழப்பு எவ்வளவு இருக்கும் என்பது குறித்து வெளிப்படையாக எந்தக் கருத்தும் தெரிவிக்கப்படவில்லை. ஆனால், இந்த விவகாரம் தொடர்பாக தமிழ்நாடு நிதியமைச்சர் நிதியமைச்சர் தங்கம் தென்னரசுவின் அறிக்கையில், "அரசியலமைப்பு திருத்தம் மூலம் தற்போதைய மேல்வரியை தொடரலாம் அல்லது சரக்குகள் மற்றும் சேவைகள் வரிச்சட்டத் திருத்தம் மூலம் உடல்நலத்திற்கு தீங்கு விளைவிக்கக்கூடிய பொருட்கள் மற்றும் ஆடம்பரப் பொருட்களுக்கு மட்டும் உச்ச வரிவரம்பினை அதிகரிக்கலாம்" என்று ஜிஎஸ்டி கவுன்சிலில் மாநில அரசின் சார்பில் தெரிவிக்கப்பட்டதாகக் கூறப்பட்டுள்ளது. அதாவது, தற்போது மத்திய அரசு விதித்துவரும் இழப்பீட்டு மேல்வரியைத் தொடர்வது, அதிலிருந்து கிடைக்கும் நிதியை மாநிலங்களுக்கு பகிர்ந்தளிக்க வேண்டும் என்றும், உச்சபட்ச வரி வரம்பை அதிகரிக்க வேண்டும் என்று மாநில அரசு தெரிவித்திருக்கிறது.
2024 - 25ஆம் நிதியாண்டைப் பொறுத்தவரை தமிழ்நாட்டின் ஜி.எஸ்.டி வசூல், 1,31,000 கோடி ரூபாயாக இருந்தது. புதிய வரி விதிப்பு மாற்றத்தால் தமிழ்நாட்டிற்கு சுமார் 8 சதவீதம் வரை இழப்பு ஏற்படலாம் என ஆரம்பத்தில் கருதப்பட்டது. ஆனால், செப்டம்பர் 22ஆம் தேதியன்று புதிய முறை அமலான பிறகுதான் உண்மையிலேயே இழப்பு என்பது துல்லியமாகத் தெரியவரும்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.












