ஜிஎஸ்டி வரி குறைப்பு: உங்கள் மாத பட்ஜெட்டில் செலவு எவ்வளவு குறையக்கூடும்?

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், சாரதா வி
- பதவி, பிபிசி தமிழ்
மத்திய அரசு புதிய ஜி.எஸ்.டி வரிகளை அறிவித்துள்ளது. இவை செப்டம்பர் 22ம் தேதி முதல் அமலுக்கு வருகின்றன. புதிய அறிவிப்பின் படி, அன்றாடம் பயன்படுத்தும் மளிகைப் பொருட்கள் பலவற்றுக்கு ஜி.எஸ்.டி குறைக்கப்பட்டுள்ளது. இது சாதாரண மக்களுக்கான தீபாவளி பரிசு என்று மத்திய அரசு கூறுகிறது.
ஆனால், ஜி.எஸ்.டி வரி குறைப்பு உண்மையிலேயே உங்கள் மாத பட்ஜெட் செலவை குறைக்கக் கூடுமா?
13% வரை வரி குறைப்பு
நாம் தினமும் வீட்டில் பயன்படுத்தும்
- ஹேர் ஆயில்
- ஷாம்பு
- பற்பசை
- டாய்லெட் சோப் பார்
- டூத் பிரஷ்
- ஷேவிங் கிரீம்
ஆகியவற்றுக்கான ஜி.எஸ்.டி 18% லிருந்து 5% ஆக குறைக்கப்பட்டுள்ளது.

பட மூலாதாரம், Getty Images
இவை அனைத்துமே ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு வீட்டிலும் வாங்கக் கூடிய பொருட்களாகும். உதாரணமாக ஒரு பற்பசை ஜி.எஸ்.டி வரியுடன் சேர்த்து ரூ.100 விற்கப்பட்டு வந்தால், புதிய வரி விதிப்பின் அதன் விலை ரூ.13 குறைய வேண்டும். அப்போது தான் ஜி.எஸ்.டி வரி குறைப்பின் பலன் 100% பொதுமக்களுக்கு வந்து சேர்ந்ததாக அர்த்தம்.
ஆனால், "சந்தைப் பொருளாதாரத்தில் எப்போதும் அப்படி நடக்காது" என்கிறார் பொருளாதார நிபுணர் வ. நாகப்பன். "நிறுவனங்களும் சற்று லாபம் எதிர்ப்பார்ப்பார்கள். இந்த எதிர்பார்ப்பு இயல்பானதே, அரசுக்கும் இது தெரியும். இதில் கவனிக்க வேண்டிய விசயம் என்னவென்றால், 10% வரி குறைந்தால், அதை முழுவதுமாக நிறுவனங்கள் தங்கள் லாபத்துக்கு எடுத்துக் கொள்கிறார்களா அல்லது 8% குறைத்து விட்டு, 2% தங்கள் லாபத்துக்கு எடுத்துக் கொள்கிறார்களா என்பது தான். வரி குறைப்பின் பெரும்பாலான மக்களை சென்றடையும் வகையிலேயே விலைகள் நிர்ணயிக்கப்பட வேண்டும். அதை அரசு கண்காணிக்க வேண்டும். இல்லையென்றால் அரசின் நோக்கம் தோல்வியடையும்" என்று அவர் விளக்குகிறார்.
சில உணவுப் பொருட்களுக்கு 7% வரை வரி குறைப்பு
சமையலுக்கும், நேரடி பயன்பாட்டுக்கும் உபயோகிக்கப்படும்
- வெண்ணெய்
- நெய்
- சீஸ்
- டெய்ரி ஸ்ப்ரெட்
- பேக்கேஜ் செய்யப்பட்ட தின்பண்டங்கள்
- புஜியா
- மிக்சர் போன்ற நொறுக்குத் தீனிகள்
ஆகியவற்றின் மீதான ஜி.எஸ்.டி 12% லிருந்து 5% ஆக குறைக்கப்பட்டுள்ளது.

பட மூலாதாரம், Getty Images
குழந்தைகளுக்கான பொருட்களுக்கு 7% வரி குறைப்பு
ஒன்று அல்லது இரண்டு வயதுக்கு கீழ் உள்ள குழந்தைகள் இருக்கும் வீட்டில் மாத பட்ஜெட்டில் கணிசமான தொகை டயபர் வாங்க செலவிடப்படும். தற்போது அது உள்ளிட்ட சில பொருட்களின் மீது ஜி.எஸ்.டி வரி குறைக்கப்பட்டுள்ளது.
- குழந்தைகளுக்கான பாலூட்டும் பாட்டில்கள்,
- நாப்கின்கள்
- கிளினிக்கல் டயப்பர்கள்
இவற்றுக்கான ஜி.எஸ்.டி வரி 12% முதல் 5% ஆக குறைக்கப்பட்டுள்ளது.

பட மூலாதாரம், Getty Images
மத்திய தர வகுப்புக்கு செலவு குறையும்
இந்த வரி குறைப்பு குறிப்பாக மத்திய தர, கீழ் மத்திய தர வகுப்பினரை குறி வைத்து அறிவிக்கப்பட்டதாக பார்க்கப்படுகிறது. "பொதுவாக நமது சமூகத்தில், குறிப்பாக தமிழ்நாட்டில் பொருளாதாரத்தில் நலிந்தவர்களின் அடிப்படை தேவைகள் பல அரசால் கவனித்துக் கொள்ளப்படுகிறது. அதிக பணம் சம்பாதிக்கும் மேல் தட்டு மக்களுக்கும் தினசரி வாழ்க்கையை நடத்துவதில் சிக்கல் இருக்காது.
அதிக வரிகளால் சிக்கிக் கொள்வது மத்திய தர வகுப்பினராகவே இருப்பார்கள். மாத சம்பளம் வாங்கக் கூடியவர்களே இதில் அதிகம் பாதிக்கப்படுபவர்களாக இருப்பார்கள். ஆனால் சமீப காலங்களில் அறிவிக்கப்பட்டுள்ள மாற்றங்கள் அவர்களுக்கு சற்று ஆறுதல் தரக்கூடியதாக உள்ளது" என்று பொருளாதார நிபுணர் நாகப்பன் கூறுகிறார்.
ஆண்டு வருமானம் ரூ.12.75 லட்சம் வரை இருப்பவர்களுக்கு (சில நிபந்தனைகளுக்கு உட்பட்டு) வருமான வரி விலக்கு அளித்திருப்பதும், தற்போது அறிவிக்கப்பட்டிருக்கும் ஜி.எஸ்.டி வரி குறைப்பும் மத்திய தர வகுப்பினருக்கு மிகுந்த பலனளிக்கும் என்கிறார் அவர். "தோராயமாக ஆண்டுக்கு சுமார் ரூ.12 லட்சம் சம்பளம் வாங்கக் கூடியவருக்கு வருமான வரி மூலமாக 10%, ஜி.எஸ்.டி வரி குறைப்பின் மூலம் 10% என கிட்டத்தட்ட 20% மிச்சப்படுத்தும் வாய்ப்பு வழங்கப்படுகிறது. இதனால் மக்கள் அதிக செலவு செய்யலாம்" என்கிறார் வ. நாகப்பன்.

பட மூலாதாரம், Facebook
0% ஜி.எஸ்.டி
ஜி.எஸ். டி வரி இல்லாத உணவுப் பொருட்கள்:
- பதப்படுத்தப்பட்ட பால் (Ultra High Temperature Milk)
- பனீர்
- சப்பாத்தி, ரொட்டி, பராத்தா போன்ற அனைத்து ரொட்டி வகைகள்
ஆகியவற்றுக்கு விதிக்கப்பட்டிருந்த 5% ஜி.எஸ்.டி வரி நீக்கப்பட்டுள்ளது.
ஜி.எஸ்.டி வரி நீக்கப்பட்டவற்றில் முக்கியமானதாக பார்க்கப்படுவது மருத்துவ காப்பீடு ஆகும். இது வரை தனி நபர் மருத்துவ காப்பீடு மற்றும் வாழ்நாள் காப்பீடு மீது 18% ஜி.எஸ்.டி வரி விதிக்கப்பட்டிருந்தது.
"கடந்த காலங்களில் பலரும் இதை விமர்சித்து வந்தனர். தற்போது ஜி.எஸ்.டி கவுன்சிலில் ஒரு மனதாக மத்திய மாநில அரசுகள் இந்த வரியை நீக்கியிருப்பது வரவேற்கத்தக்கது. இதனால் சராசரியாக ஆண்டுக்கு ரூ.30ஆயிரம் முதல் ரூ.35 ஆயிரம் வரை ப்ரீமியம் செலுத்த வேண்டிய குடும்பங்களுக்கு தற்போது தோராயமாக ரூ.4 ஆயிரம் முதல் ரூ.5 ஆயிரம் குறையக்கூடும். இதனால் அதிக காப்பீட்டுத் தொகையை நோக்கி மக்கள் செல்வதும் ஏற்படக் கூடும்" என்கிறார் பொருளாதார நிபுணர் நாகப்பன்.

பட மூலாதாரம், Getty Images
எவையெல்லாம் விலை அதிகரிக்கும்?
- பான் மசாலா, சிகரெட், குட்கா
- சோடா போன்ற காற்றூட்டப்பட்ட நீர், காஃபினேட்டட் பானங்கள்
- பெரிய அளவு கார்
இவற்றின் மீதான ஜி.எஸ்.டி வரி 40% ஆக உயர்தப்பட்டுள்ளது. இதில் சில பொருட்களுக்கு ஏற்கனவே 28% ஜி.எஸ்.டி வரி விதிக்கப்பட்டிருந்தது.
கார் விற்பனை அதிகரிக்கலாம்

பட மூலாதாரம், Getty Images
புதிய வரி விதிப்புகளின் மூலம் ஏற்படக் கூடிய முக்கிய மாற்றம் சிறிய கார்களின் விலை குறையக்கூடும். (சொகுசு கார்களுக்கு 40% ஆக ஜி.எஸ்.டி வரி உயர்த்தப்பட்டுள்ளது). இப்படியான அறிவிப்பு வெளியாகலாம் என்ற செய்திகள் வர தொடங்கியது முதலே, அதாவது கடந்த இரண்டு மூன்று வாரங்களாக கார் விற்பனை குறைந்திருப்பதாக கோவையை சேர்ந்த கார் டீலர் ஒருவர் கூறுகிறார்.
"ஜி.எஸ்.டி வரி குறைப்பால் கார்கள் விலை குறையக்கூடும் என்ற எதிர்ப்பார்ப்பு இருந்ததால், கார் வாங்க நினைப்பவர்கள் சிறிது காலம் கழித்து வாங்கலாம் என்று காத்திருந்தனர். எனவே கடந்த சில வாரங்களாக விற்பனை மந்தமாகவே இருந்தது.
தற்போது 1200 சிசிக்கு மிகாமல் மற்றும் 4,000 மிமீக்கு மிகாமல் நீளம் கொண்ட பெட்ரோல், எல்பிஜி அல்லது சிஎன்ஜி மூலம் இயங்கும் கார்கள் மற்றும் 1500 சிசிக்கு மிகாமல் மற்றும் 4,000 மிமீக்கு மிகாமல் நீளம் கொண்ட டீசல் கார்கள் ஆகியவற்றுக்கான வரிகள் 28% முதல் 30% ஆக இருந்தது.
தற்போது இவை 18% ஜி.எஸ்.டி வரி வரம்புக்குள் கொண்டுவரப்பட்டுள்ளன. பெரும்பாலான மத்திய தர வகுப்பைச் சேர்ந்த மக்கள் வாங்கக் கூடியவை இந்த வகையிலான கார்களாகவே உள்ளன. எனவே வரும் வாரங்களில் கார்களின் விற்பனை அதிகரிக்கும் என்று எதிர்ப்பார்க்கிறோம்" என்கிறார்.

டிரம்பின் வரி விதிப்பை ஈடு கட்ட உதவுமா?
இந்தியா அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யும் பொருட்கள் மீது 50% வரியை அதிபர் டிரம்ப் விதித்துள்ளார். இதன் காரணமாக இந்தியாவில் ஆடைத் தொழில், வைர வியாபாரம், தோல் துறை போன்றவை பெரும் பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றன. "இன்னும் மூன்று மாதங்கள் இந்த நிலை தொடர்ந்தால், வேலை இழப்புகள் ஏற்பட தொடங்கும். இவை எல்லாம் கணக்கில் வைத்துக் கொண்டே ஜி.எஸ்.டி வரி மாற்றங்கள் அறிவிக்கப்பட்டிருக்கும். இந்த வரி குறைப்பு உள்ளூர் வியாபாரத்தை சற்று ஊக்குவிக்கும் என்று அரசு எதிர்ப்பார்க்கலாம்" என்று நாகப்பன் கூறுகிறார் .
இந்த ஜி.எஸ்.டி வரி மாற்றங்களால் மத்திய அரசுக்கு ரூ.93,000 கோடி வருவாய் இழப்பு ஏற்படும், மேலும் 40 சதவீத அடுக்கில் இருந்து அரசுக்கு சுமார் 45,000 கோடி ரூபாய் கூடுதல் வருவாய் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனினும் மாநில அரசுகள் மீது இதன் தாக்கம் என்னவாக இருக்கும், மாநில அரசுகளுக்கு ஏற்படும் இழப்பு எப்படி ஈடு செய்யப்படும் என்பது குறித்து முடிவு செய்யப்படவில்லை.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு












