தீவிரமாகப் போர் நடக்கும் ஏமனில் இருந்து வெளியேற மறுக்கும் இந்தியர்கள்

ஏமன்

பட மூலாதாரம், Getty Images

    • எழுதியவர், சிராஜ்
    • பதவி, பிபிசி தமிழ்

'போரில் வென்றவர் என யாரும் இல்லை' என்று ஒரு கூற்று உண்டு, காரணம் உலகெங்கும் இதுவரை நடந்த, நடந்து கொண்டிருக்கும் போர்களால் அதிகம் பாதிக்கப்படுவது எளிய மக்களே. ஒரு நாட்டில் போர் நடந்தால் அதிகம் தாக்குதலுக்கு உள்ளாவது சாதாரண மக்களின் வாழ்விடங்கள் தான்.

எனவே போர் ஏற்பட்டால், மக்கள் கூட்டம் கூட்டமாக அகதிகளாக பிறநாடுகளில் தஞ்சம் புகும் சோகத்தை வரலாற்றில் கண்டதுண்டு. பல உலக நாடுகளும் போர் நடக்கும் பகுதியிலிருந்து தங்கள் நாட்டு குடிமக்களை தூதரகங்கள் மூலமாக மீட்க முயற்சிகள் எடுப்பார்கள்.

கடந்த 2015ஆம் ஆண்டில், ஏமன் நாட்டின் மேற்கு பகுதிகளில் பெரும்பான்மையான இடங்களை ஹூத்தி கிளர்ச்சியாளர்கள் தங்கள் கட்டுப்பாட்டில் எடுத்து கொண்டதால் அங்கு உள்நாட்டு போர் வெடித்தது. ஏமன் நாட்டில் நடக்கும் இந்த உள்நாட்டுப் போர் தான் உலகிலேயே மிகவும் மோசமான மனிதாபிமான நெருக்கடி என்று ஐக்கிய நாடுகள் மன்றம் கூறியது.

இந்திய அரசாங்கமும் தனது தூதரகம் மூலமாக ஏமனில் இருந்த இந்தியர்களை மீட்டது, ஆனால் அனைத்து இந்தியர்களும் அங்கிருந்து வெளியேறவில்லை. தொடர்ந்து பல வருடங்களாக உள்நாட்டு போரால் பாதிக்கப்பட்டிருக்கும் ஏமன் நாட்டிலிருந்து, இந்திய அரசாங்கம் எச்சரித்தும் கூட பல இந்தியர்கள் அங்கிருந்து வெளியேறாமல் இருக்கிறார்கள்.

ஹூத்தி கிளர்ச்சியாளர்களை இந்திய அரசு இதுவரை அங்கீகரிக்கவில்லை. இந்திய குடிமக்கள் ஏமனுக்கு செல்வது ஆபத்தானதாக இருக்கும் என இந்திய அரசு கருதுவதால், இந்தியாவிலிருந்து பிற நாடுகளுக்கு செல்வது போல ஏமனுக்கு சென்று வர இந்தியர்களுக்கு அனுமதியில்லை. ஏமன் செல்ல விரும்புவோர் இந்திய அரசிடமிருந்து தடையில்லா சான்றிதழை பெற வேண்டும். ஆனால் அது அவ்வளவு சுலபமல்ல.

இத்தனை கஷ்டங்களுக்கு இடையிலும், ஏமனை விட்டு வர இந்தியர்கள் மறுப்பதும், இங்கிருக்கும் சிலர் அங்கு செல்ல விரும்புவதும் ஏன்? அதன் காரணம் என்னவாக இருக்கும்?

ஏமன் உள்நாட்டுப் போரில் இந்தியர்களின் நிலை
படக்குறிப்பு, ஜெனரல் வி.கே.சிங்குடன் சாமுவேல் ஜெரோம்

ஆபரேஷன் ரஹாத்- 2015

2015ஆம் ஆண்டு ஏமனில் உள்நாட்டுப் போர் வெடித்தவுடன், அங்கு இருந்த ஆயிரக்கணக்கான இந்தியர்களை மீட்க இந்திய அரசாங்கம் மேற்கொண்ட நடவடிக்கையின் பெயரே ஆபரேஷன் ரஹாத். இந்திய கப்பற்படை மற்றும் விமானப்படையின் உதவியோடு இந்த மீட்பு நடவடிக்கை வெற்றிகரமாக நடைபெற்றது.

"ஆபரேஷன் ரஹாத்தின் ஒவ்வொரு நிமிடமும் எனக்கு நினைவில் இருக்கிறது. ஒரு பாலிவுட் சினிமா பார்ப்பது போல இருந்தது. அந்த ஆபரேஷன் மூலமாக சுமார் 5000 இந்தியர்களும் 41 நாடுகளைச் சேர்ந்த 960 பேரும் மீட்கப்பட்டனர்"

"ஏடன் துறைமுகத்திலிருந்து இந்திய கப்பற்படை மூலமாகவும், சனா நகர விமான நிலையத்திலிருந்து இந்திய விமானப்படை மூலமாகவும் இந்த மீட்புப் பணிகள் நடைபெற்றன" என்கிறார் ஏமன் நாட்டில் வானூர்தி ஆலோசகராக பணிபுரியும் சாமுவேல் ஜெரோம். இவர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர். ஆபரேஷன் ரஹாத்தில் முக்கிய பங்கு இவருக்கு உண்டு.

"2014 செப்டம்பர் மாதமே, உள்நாட்டுப் போர் தொடங்கிவிட்டது. அப்போது ஹூத்தி அமைப்பினர் சனா நகரத்தை அமைதியான முறையில் எந்த வன்முறையும் இன்றி ஊர்வலமாக வந்து கைப்பற்றினர். ஆனால் சில மாதங்கள் கழித்து சௌதி அரேபியா தலைமையிலான கூட்டுப் படைகள் போரில் நுழைந்தவுடன், நிலைமையின் தீவிரத்தை உணர்ந்து இந்திய அரசு ஆபரேஷன் ரஹாத்தை முன்னெடுத்தது" என்கிறார் சாமுவேல்.

மேலும், "அப்போது இருந்த கள நிலவரம் அப்படி. போரால் ஏதாவது விபரீதம் நடந்து விடுமோ என்ற அச்சம் இருந்தது. அப்போது ஏமனுக்கான இந்திய அரசின் தூதராக இருந்த அம்ரித் லுகுன் அரசுடன் பேசி ஏற்பாடுகளை செய்தார். இங்கு இருந்த இந்தியர்கள் குழுக்களாக பிரிந்து வேலை செய்தோம். யாரெல்லாம் இந்தியா செல்ல விரும்புகிறார்களோ அவர்கள் தங்கள் பெயரை பதிவு செய்தனர்" என்றார் அவர்.

இப்போது ஒரு கேள்வி எழலாம், அதென்ன விருப்பம் இருப்பவர்கள் பதிவு செய்வது. போர் என்று வந்துவிட்டால், உயிருக்கு ஆபத்து ஏற்படுமானால் அங்கிருந்து சொந்த நாட்டிற்கு செல்வது தானே புத்திசாலித்தனம். இதற்கு பதில் கூறுகிறார் சாமுவேல்,

"காரணம் அப்போது மக்கள் வாழும் பகுதிகளில் சேதம் ஏதும் ஏற்படவில்லை. இன்னும் சொல்லப்போனால் போர் மக்கள் இருக்கும் பகுதியில் நடக்கவில்லை. இராணுவ தளங்களில் மட்டுமே சண்டை நடந்தது. இன்று வரை அப்படிதான் நடக்கிறது"

"ஏமனில் பல வருடமாக இருக்கும் இந்தியர்கள், ஏமன் குடியுரிமை பெற்ற இந்தியர்கள், நல்ல வேலையில் இருந்தவர்கள் என பலர் இங்கேயே தங்கி விட்டார்கள். நானும் என் மனைவியும் உட்பட. பலரும் குழந்தைகளை, வயதானவர்களை மட்டுமே அனுப்பி வைத்தார்கள். "

"இன்னும் தெளிவாக சொல்வதென்றால், வாழ வைக்கும் நாட்டை விட்டு எங்கு போய் என்ன செய்வது என்ற கேள்வி தான் பலரையும் இங்கே இருக்க வைத்தது" என்கிறார் சாமுவேல்.

"இந்திய அரசு தன்னுடைய கடமையை மிகச்சிறப்பாக செய்தது. போர் என்ற சூழ்நிலையில் தனது குடிமக்களைக் காக்க ஒரு பொறுப்பான அரசு என்ன செய்யுமோ அதை அவர்கள் செய்தார்கள். ஏனெனில் எல்லோருக்கும் இங்கேயே இருக்க வேண்டுமென்ற எண்ணம் இருக்காது அல்லவா?"

"எனவே அவர்களை பத்திரமாக அனுப்பி வைக்க எங்களால் முடிந்ததை செய்தோம். ஆனால் மீட்பு பணிக்கு ஒரு நாள் முன்பு இந்தியாவிலிருந்து வரும் விமானத்தை ஏமனில் தரையிறக்க முடியாது என்று கூறியது எங்களுக்கு பெரும் அதிர்ச்சியாக இருந்தது" என்கிறார் சாமுவேல்.

ஏமன் உள்நாட்டுப் போரில் இந்தியர்களின் நிலை
படக்குறிப்பு, ஏமன் விமான நிலையத்தில் இந்திய அரசின் மீட்பு விமானம்

மூடப்பட்ட ஏமன் விமான நிலையம்

"அனைத்து ஏற்பாடுகளும் செய்தாகிவிட்டது. சரியாக நள்ளிரவு எனக்கு தொலைபேசி அழைப்பு வருகிறது. விமான நிலையத்தில் அளவுக்கு அதிகமான பனிமூட்டம் இருப்பதால், விமானத்தை தரையிறக்குவது முடியாத காரியம். எனவே வரவேண்டாம் என சொல்லி விடுங்கள் என ஏமனில் சொல்லி விட்டார்கள்"

"உடனே, அப்போது இந்திய வெளியுறவுத் துறை அமைச்சராக இருந்த ஜெனரல் வி.கே.சிங்கிடம் தொலைபேசியில் பேசினோம். எவ்வளவு மோசமான வானிலையாக இருந்தாலும் இந்தியர்களை மீட்டே தீருவோம் என அவர் உறுதியளித்தார். அதே போல அந்த விமானத்தில் அவரும் ஏமன் வந்து, மீட்பு நடவடிக்கைகள் முழுவதுமாக முடிந்த பின்னரே இந்தியா திரும்பினார்" என்கிறார் சாமுவேல்.

"இப்போது அடுத்த பெரும் பிரச்சனை, அன்று காலை ஆறு மணிக்கு விமான நிலையம் சென்றால், அது பூட்டப்பட்டிருந்தது. போர் காரணமாக மூடப்பட்ட விமான நிலையம், திறக்கப்படவில்லை. இந்திய அரசின் விமானம் வந்து கொண்டு இருக்கிறது, அதில் மத்திய அமைச்சரும் வருகிறார். பனி மூட்டம் வேறு, விமான நிலையத்தில் அதிகாரிகள் ஒருவரும் இல்லை. கட்டுப்பாட்டு அறையின் உதவி இல்லாமல் எப்படி விமானத்தை தரையிறக்க?"

"உடனடியாக விமான நிலைய தலைமை அதிகாரிக்கு தொடர்பு கொண்டு கேட்டால், இந்திய மீட்பு விமானம் வரும் செய்தியே எங்களுக்கு தெரியாது என்கிறார். பின் ஒருவழியாக எல்லோரிடமும் பேசி, வரவைத்து, விமான நிலையம் திறக்கப்பட்டது. இந்திய விமானிகள் மிகச் சாமர்த்தியமாக விமானத்தை தரையிறக்கினார்கள். ஆறு நாட்களில் 17 விமானங்கள் மூலமாக மீட்பு பணி நடைபெற்றது" என்று கூறிய சாமுவேலிடம் ஹூத்தி கிளர்ச்சியாளர்கள் அப்போது இடையூறு செய்யவில்லையா எனக் கேட்டதற்கு,

"இல்லை, ஹூத்தி கிளர்ச்சியாளர்கள் மிகவும் பொறுமையாக நடந்து கொண்டார்கள். அவர்கள் ஒத்துழைப்பு இல்லாமல் அந்த மீட்பு பணி அமைதியாக நடந்திருக்காது. சிலர் அவர்களுடன் செல்பி கூட எடுத்துக் கொண்டார்கள். மீட்புப் பணிகள் முடிந்த போது சனாவில் மட்டுமே 500க்கும் மேற்பட்ட இந்தியர்கள் இருந்தோம்."

"நிலைமை சரியாகிவிடும் என்ற நம்பிக்கை தான். ஆனால் இப்போது இந்தியாவுக்கு வந்து செல்வதில் தான் பெரும் சிக்கலை சந்தித்து வருகிறோம்" என்கிறார் சாமுவேல்.

ஏமன் உள்நாட்டுப் போரில் இந்தியர்களின் நிலை
படக்குறிப்பு, ஏமனில் தலைமைச் செவிலியராக பணிபுரியும் இந்தியர் ரெஜிலா

ஏமனில் வசிக்கும் இந்திய வம்சாவளியினர்

"இந்தியாவைப் பூர்வீகமாக கொண்ட பலர், பல தலைமுறைகளாக இங்கே வாழ்ந்து வருகிறார்கள். அவர்கள் ஏமன் குடியுரிமை வைத்துள்ளார்கள். இங்கு அதிகமாக இந்தியும் குஜராத்தியும் பேசப்படுகிறது என்றால் உங்களால் நம்ப முடிகிறதா?" என்கிறார் ரெஜிலா.

1996ஆம் ஆண்டு முதல் ஏமனின் சனா நகரத்தில் வசித்து வரும் ரெஜிலா, அங்குள்ள குவைத் பல்கலைக்கழக மருத்துவமனையில் தலைமைச் செவிலியராக பணிபுரிந்து வருகிறார்.

"2015ஆம் ஆண்டு நாங்கள் இருந்த பகுதியில் எந்தப் பாதிப்பும் இல்லாததால் நானும் என் கணவரும் இங்கயே தங்கிவிட முடிவு செய்தோம். ஏமனில் இருக்கும் இந்தியர்களில் மூன்று பிரிவுகள் உள்ளனர். ஒன்று எங்களைப் போல வேலைக்காக இங்கு வந்தவர்கள். மற்றொன்று பிரிட்டிஷ் ஆட்சி காலத்தில் இங்கு குடிபெயர்ந்த இந்திய வம்சாவளியினர், மூன்றாவது பிரிவினர் போரா இஸ்லாமியர்கள். இவர்கள் இந்தியாவிலும் அதிகமாக உள்ளனர்" என்கிறார் ரெஜிலா.

போரா முஸ்லிம்கள் இஸ்லாத்தின் ஷியா பிரிவைச் சேர்ந்தவர்கள். மேலும் இரானுக்கு அடுத்தபடியாக இந்தியாவில்தான் அதிக எண்ணிக்கையிலான ஷியா முஸ்லிம்கள் உள்ளனர்.

ஏமன் உள்நாட்டுப் போரில் இந்தியர்களின் நிலை

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, இந்தியாவின் போரா முஸ்லிம் சமூகத்தினர்

"இதில் இந்திய வம்சாவளியினர் மற்றும் போரா இஸ்லாமியர்களுக்கு ஏமன், இந்தியா என இரண்டுமே தாய் நாடு போல தான். இவர்களது பெரும்பாலான உறவினர்கள் இந்தியாவில் இருக்கிறார்கள். 2022ஆம் ஆண்டில் ஏமனுக்கு பயணம் செய்வதில் பல்வேறு கட்டுப்பாடுகள் இந்திய அரசால் விதிக்கப்பட்டன.

ஏமனிலிருந்து இந்தியா வந்த சிலர் கைது செய்யப்பட்டார்கள், அவர்களது பாஸ்போர்ட் முடக்கப்பட்டது என்ற செய்தி கேட்டு, இந்தியா திரும்ப முடியாமல் பலர் தவிக்கிறார்கள்" என்கிறார் ரெஜிலா.

"அப்போதிருந்த சூழ்நிலை வேறு. அன்று இந்திய அரசு மக்களை பத்திரமாக அழைத்துச் சென்றது சரியான முடிவு தான். இங்கிருந்து சென்றவர்களில் பலர் ஏமனுக்கு புதிதாக வந்தவர்கள் மற்றும் நிலையான வேலையும் இல்லாமல் இருந்தவர்கள். அவர்களையும் குறை சொல்ல முடியாது."

"இங்கு இந்திய மக்களுக்கு நல்ல மரியாதை உள்ளது. விலைவாசி மிகவும் குறைவு. மருத்துவ நிர்வாகமே தங்குமிடத்தையும் உணவையும் அளிப்பதால், இங்கு வந்து வேலை பார்க்க பல செவிலியர்கள் விரும்புகிறார்கள். எனவே இந்திய அரசு இவர்களுக்கு கருணை காட்ட வேண்டும். ஏமன் வந்து செல்வதற்கான பயண விதிகளை எளிதாக்க வேண்டும். அப்போது தான் இங்கிருப்பவர்கள் அச்சமின்றி இந்தியா வர முடியும்" என வேண்டுகோள் வைக்கிறார் ரெஜிலா.

ஏமன் உள்நாட்டுப் போரில் இந்தியர்களின் நிலை
படக்குறிப்பு, மருத்துவர் சாயா சாவந்த்

பயணக் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட வேண்டும்

"நான்கு மாதங்களுக்கு முன்பு தான் எனது மூத்த மகனை, மருத்துவத்தில் முதுகலை கல்வி கற்க ஏமன் வரவழைத்தேன். ஏமன் பாதுகாப்பில்லாத நாடு என்றால் நான் என் மகனை இங்கே அழைத்திருப்பேனா?"

"மருத்துவ மாணவர் என்பதால் அவனுக்கு ஏமன் வர அனுமதி கிடைத்தது அந்த அனுமதிக்காக அவன் பல நாட்கள் காத்திருந்தான். ஆனால் மற்றவர்களின் நிலை மிகவும் கஷ்டம் தான்" என்கிறார் மருத்துவர் சாயா சாவந்த்.

இவர் ஏமனில் உள்ள 'குவைத் பல்கலைக்கழக மருத்துவமனையில்' தலைமை மருத்துவராக பணிபுரிகிறார்.

"ஏமன் மக்கள் மிகவும் அன்பானவர்கள். இங்கே போர் நடப்பது உண்மை தான், ஆனால் செய்திகள் மூலமாக மட்டுமே அதை தெரிந்து கொள்கிறோம். இருபது வருடங்களுக்கு மேலாக இங்கே இருக்கிறேன். எனது கணவரிடம் ஏமன் குடியுரிமை கூட உள்ளது."

"இதுநாள் வரை எந்த ஆபத்தையும் நாங்கள் சந்திக்கவில்லை. காரணம், இராணுவ முகாம்கள் மீது மட்டுமே தாக்குதல் நடக்கிறது. உள்நாட்டுப் போர் உச்சத்தில் இருந்த போது கூட மக்கள் வாழ்விடங்கள் தாக்கப்படவில்லை" என்ற மருத்துவர் சாயா தொடர்ந்து பேசினார்.

"இந்த போர் சீக்கிரமாக முடிவுக்கு வந்துவிடும் என சொல்கிறார்கள். பலரும் ஏமன் வந்து பணிபுரிய ஆவலோடு இருக்கிறார்கள். அதே போல இங்கே இருப்பவர்கள் இந்தியா திரும்ப பயப்படுகிறார்கள், கடுமையான விதிகள் காரணமாக, இந்தியா சென்றால் எங்கே தாங்கள் கைது செய்யப்படுவோமோ அல்லது பாஸ்போர்ட் முடக்கப்பட்டு மீண்டும் ஏமன் வர முடியாதோ என பலர் அஞ்சுகிறார்கள்"

"எனவே அரசாங்கம் இது குறித்து பரிசீலிக்க வேண்டும், விதிகளை தளர்த்த வேண்டும்" எனக் கோரிக்கை வைக்கிறார் மருத்துவர் சாயா சாவந்த்.

"இந்த பிரச்சனைப் பற்றி பேசவும், ஏமன் சிறையில் மரண தண்டனைப் பெற்று, பொது மன்னிப்பிற்காக காத்திருக்கும் கேரளாவைச் சேர்ந்த செவிலியர் நிமிஷாவின் தாயாரை ஏமன் அழைத்துச் செல்லவும் தான் இந்தியா வந்துள்ளேன். நிமிஷாவின் தாயாருக்கும் இன்னும் விசா கிடைக்கவில்லை" என்றார் சாமுவேல்.

மேலும், "அதிகாரிகளையும் அமைச்சர்களையும் சந்தித்து பேசி வருகிறேன். கணவன் ஒரு பக்கம், மனைவி ஒரு பக்கம், தாய், தந்தை ஏமனில், பிள்ளைகள் இந்தியாவில் என பல குடும்பங்கள் பல வருடங்களாக பிரிந்து கிடக்கின்றன"

"வேலை வாய்ப்புக்காகவும் பலரும் தவித்து வருகிறார்கள். இன்னும் ஏமனில் போர் நடைபெற்று வருவதால், பயண விதிகளைத் தளர்த்துவதில் பல நடைமுறைச் சிக்கல்கள் உள்ளன. விரைவில் ஏதேனும் நல்லது நடக்கும் என நம்புகிறோம். போர் எந்த வடிவில் நிகழ்ந்தாலும் அது எளிய மனிதர்களைத் தான் அதிகம் பாதிக்கிறது" என்கிறார் சாமுவேல் ஜெரோம்.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)