கோவையில் வாகன ஓட்டிகளை கலங்கடிக்கும் குதிரைகள் சாலையில் சுற்றித் திரிவதன் பின்னணி

பட மூலாதாரம், X/Sathya
- எழுதியவர், சேவியர் செல்வகுமார்
- பதவி, பிபிசி தமிழ்
''நான் மிதமான வேகத்தில் சென்றதால் டூ வீலரை ஓரளவுக்கு கட்டுப்படுத்தி நிறுத்த முடிந்தது. அதனால் எனக்கும் என் வாகனத்தில் பின்னால் உட்கார்ந்து வந்த 2 குழந்தைகளுக்கும் எந்தப் பாதிப்பும் ஏற்படவில்லை. ஆனால் நான் சற்று கூடுதல் வேகத்துடன் வந்திருந்தாலும் அல்லது வேறு வாகனங்கள் பின்னால் வந்திருந்தாலும் பெரிய விபத்து நேரிட்டிருக்கலாம்.''
கோவை–மேட்டுப்பாளையம் இடையிலான தேசிய நெடுஞ்சாலையில் வேகமாக ஓடி வந்த குதிரைகள் மோதியதில் விபத்துக்குள்ளாகி நல்வாய்ப்பாக உயிர் தப்பிய தனியார் பள்ளி ஆசிரியை சத்யா, பிபிசி தமிழிடம் கூறிய தகவல் இது.
சாலையில் குறுக்கே பாய்ந்த குதிரைகள்
கோவையில் சமீபகாலமாக சாலைகளில் திரியும் குதிரைகளால் விபத்துகள் நேரிடுவதாக பொது மக்கள் கூறுகின்றனர்.
இந்த விவகாரம் குறித்து பிபிசி தமிழிடம் பேசிய கோவை மாநகராட்சியின் ஆணையாளர், "சாலைகளில் திரியும் குதிரைகளை அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்" என்று பிபிசி தமிழிடம் தெரிவித்தார்.
பிற நகரங்களில் இல்லாத அளவுக்கு, கோவையில் மட்டும் இவ்வளவு குதிரைகள் சாலைக்கு வருவதன் பின்னணியில் கோவைக்கும், குதிரைகளுக்குமான பாரம்பரிய தொடர்புகளே காரணமாக உள்ளதாக அவற்றை வளர்ப்போரும் வரலாற்று ஆய்வாளர்களும் கூறுகின்றனர்.
தனியார் பள்ளி ஆசிரியைக்கு என்ன நடந்தது?
கோவையில் இருந்து உதகை, கூடலுார், முதுமலை வழியாக கர்நாடகா மாநிலம் பந்திபூர் வரை செல்லும் தேசிய நெடுஞ்சாலையின் (NH.181) ஒரு பகுதியாக கோவை–மேட்டுப்பாளையம் சாலை அமைந்துள்ளது. இந்தச் சாலை தற்போது 4 வழிச்சாலையாக அகலப்படுத்தப்பட்டுள்ளது.
கோவை கதிர்நாயக்கன்பாளையத்தைச் சேர்ந்த தனியார் பள்ளி ஆசிரியை சத்யா, டிசம்பர் 16ஆம் தேதி மாலை 5 மணியளவில், தனது தோழி வீட்டிற்கு டூவீலரில் சென்று கொண்டிருந்தார். பள்ளி மாணவர்களான அவரது மகனும், தோழியின் மகனும் அவருடன் வாகனத்தின் பின்னால் அமர்ந்திருந்தனர்.
வெள்ளக்கிணறு பிரிவு என்ற இடத்தில் சென்று கொண்டிருந்தபோது, சாலையின் ஒருபுறத்தில் இருந்து மறுபுறத்திற்கு 3 குதிரைகள் மிக வேகமாக ஓடிச் சென்றுள்ளன.
"மிதமான வேகத்தில் சென்றதால் வாகனத்தை பிரேக் போட்டு நிறுத்தினேன். அப்போது நாங்கள் மூவரும் சரிந்து கீழே விழுந்தாலும் யாருக்கும் எந்தக் காயமும் ஏற்படவில்லை" என்று சத்யா பிபிசி தமிழிடம் தெரிவித்தார்.

பட மூலாதாரம், X/Sathya
இந்த விபத்து குறித்த படங்கள், சமூக ஊடகங்களில் பகிரப்பட்டுள்ளன. அதையொட்டி கோவையில் பல்வேறு பகுதிகளிலும் குதிரைகளால் ஏற்பட்ட பாதிப்புகளைப் பலரும் படங்களுடன் பதிவிடத் தொடங்கினர். சிலர் குதிரைகளால் தங்களுக்கும், தங்களுக்குத் தெரிந்தவர்களுக்கும் நேர்ந்த அனுபவங்களையும் பகிர்ந்தனர்.
அத்துடன், சாலையில் திரியும் குதிரைகளைக் கட்டுப்படுத்தாத மாநகராட்சி நிர்வாகத்தையும் விமர்சித்துள்ளனர்.
இதேபோல, கடந்த மாதம் கஸ்துாரி நாயக்கன்பாளையத்தில் வீதிக்குள் வேகமாக ஓடிய இரு குதிரைகள், இரு சக்கர வாகனத்தில் வந்த ஒருவர் மீது மோதி கீழே தள்ளி அவரைக் கடித்த காட்சியும் சமூக ஊடகங்களிலும் வைரலானது.
கோவை முழுவதும் இவ்வளவு குதிரைகள் இருப்பதன் பின்னணி என்ன?

கோவையின் குதிரை வண்டி நிலையம்
கோவையின் உக்கடம் பெரியகுளம் அருகில் மாநகராட்சியின் குதிரை வண்டி நிலையம் இப்போதும் செயல்பட்டு வருகிறது. இந்தக் குதிரை வண்டி நிலையத்தில் ஒரு குதிரை வண்டி தினமும் நிறுத்தப்பட்டுள்ளது. அந்த வண்டி மற்றும் 2 குதிரைகளின் உரிமையாளரான சுரேந்தர் இந்தத் தொழிலைச் செய்து வருகிறார். சமீப காலமாக அவருடைய வண்டியை கன்னுக்குட்டி என்ற கண்ணையன் ஓட்டி வருகிறார்.
பிபிசி தமிழிடம் பேசிய சுரேந்தர், ''எனக்கு இப்போது 62 வயது. பள்ளிப் படிப்பை முடிக்கும் முன்பே குதிரை வண்டி ஓட்டப் பழகி, அப்படியே இந்தத் தொழிலுக்கு வந்துவிட்டேன். அப்போது கோவை நகரம் முழுவதும் குதிரை வண்டிகள் நிறைய ஓடும். இப்போது கோவை குதிரை வண்டி நிலையத்தில் வாடகை கொடுத்து நிறுத்தப்படும் ஒரே குதிரை வண்டி என்னுடையதுதான். பழக் கடைகளுக்கு வாடகைக்கு தினமும் எனது வண்டி இயக்கப்படுகிறது'' என்றார்.
இப்போது கார்களை வைத்து ஒருவரின் பொருளாதார சூழ்நிலையைக் கணக்கிடுவது போல, முந்தைய காலகட்டத்தில் குதிரைகளின் அழகையும், குதிரை வண்டிகளின் அலங்காரம் மற்றும் ஆடம்பர வசதிளையும் வைத்து அந்தஸ்தை எடை போடும் நிலை இருந்ததாகக் கூறுகிறார் வரலாற்று ஆய்வாளரும், கோவை குறித்து அதிகளவு நூல்களை எழுதி இருப்பவருமான சி.ஆர்.இளங்கோவன்.
கால் டாக்சிகளை போன்று அப்போது ஜட்கா எனப்படும் வாடகை குதிரை வண்டிகளுக்குப் பெரும் தேவை இருந்ததாக அவர் குறிப்பிட்டார்.
''எங்கள் தாத்தா 3 குதிரை வண்டிகள் வைத்திருந்தார். அதில் ஒன்று அந்தக் காலத்தில் பிரபலமாக இருந்த நடிகை டி.ஆர்.ராஜகுமாரிக்கு இயக்கப்பட்டது. ஆர்.எஸ்.புரத்திலுள்ள அவரது வீட்டிலிருந்து திருச்சி சாலையில் சென்ட்ரல் ஸ்டூடியோவுக்கு அவரை தினமும் அழைத்துச் சென்று வரும். அதற்காக அந்த வண்டி பிரமாதமாக அலங்கரிக்கப்பட்டிருக்கும். அதைப் பார்க்கவே ஒரு கூட்டம் கூடும் என்பார்கள்'' என்றார் இளங்கோவன்.

ரேக்ளா பந்தயத்துக்காக வாங்கப்படும் குதிரைகள்
இப்போது ஆட்டோக்கள் வரிசையாக வந்து முன்னுரிமை அடிப்படையில் வாடகைக்குச் செல்வது போலவே குதிரை வண்டிகளும் இயக்கப்பட்டதாகக் கூறுகிறார் இளங்கோவன். அவரது கூற்றுப்படி, பூ மார்க்கெட்டில் குதிரைகளுக்கு அவித்த கொள்ளும், உக்கடத்தில் புல்லும் அப்போது விற்கப்பட்டன.
குதிரை வண்டிகள் பெருமளவில் குறைந்துவிட்ட நிலையில், இப்போது வரையிலும் கோவை நகருக்குள் இவ்வளவு குதிரைகள் வலம் வருவதற்கான காரணத்தை கேட்டபோது, ''தென் மாவட்டங்களில் ஜல்லிக்கட்டு எவ்வளவு சிறப்பாகப் பரவலாக நடக்கிறதோ, அதேபோல கொங்கு மண்டலப் பகுதிகளில் குதிரைகளை வைத்து ரேக்ளா பந்தயம் நடத்தப்படும். இதற்காக டெல்லியில் இருந்து குதிரைகளை வாங்கி வருவார்கள். முன்பெல்லாம் இந்தப் போட்டிகளை நடத்துவதற்குப் புரவலர்கள் இருப்பார்கள். இப்போதும் தடாகம், உடுமலை பகுதிகளில் இந்தப் பந்தயங்கள் நடத்தப்படுகின்றன. அந்தியூர் சந்தையில் இருந்து இதற்காகவே பலரும் குதிரைகளை வாங்குகிறார்கள்'' என்றார் இளங்கோவன்.

அந்தியூரிலுள்ள குருநாதர் கோவில் குதிரைச் சந்தை மிகவும் பிரபலமானதாகக் கருதப்படுகிறது. ஆனால் வசதி படைத்தவர்கள் பெரும்பாலும் வடமாநிலங்களில் குதிரை வாங்குவதாகக் கூறுகிறார் சுரேந்தர்.
''சமீபத்தில்கூட எனக்குத் தெரிந்து ஒருவர் 12 குதிரைகளை வட மாநிலங்களில் இருந்து வாங்கி வந்தார். ஒவ்வொரு குதிரையும் இரண்டில் இருந்து இரண்டரை லட்சம் வரை இருக்கும் என்கிறார்கள். அவை அனைத்துமே ரேக்ளா வண்டிகளுக்கான குதிரைகள்தான்.'' என்கிறார் அவர்.
கோவை நகரில் குறிப்பாக மேற்குப் பகுதிகளில் ரேக்ளா வண்டிகளில் குதிரைகளைப் பூட்டிக்கொண்டு சாலைகளில் செல்வதை அவ்வப்போது பார்க்க முடியும். அந்த வண்டிகளை வேறு எந்தப் பயன்பாட்டுக்கும் அவர்கள் கொடுப்பதில்லை. அவர்களும் பயன்படுத்துவதில்லை என்பதையும் இந்த வண்டிகளை வைத்துள்ள சிலரிடம் பேசியபோது தெரிய வந்தது.
இடையர்பாளையத்தைச் சேர்ந்த ஆனந்த் பாபு, இரு குதிரைகளைத் தனது வீட்டுடன் கூடிய தோட்டத்தில் வளர்த்து வருகிறார். குதிரை வண்டியும் வைத்துள்ள அவர், ''எனது தாத்தா காலத்தில் இருந்து எங்கள் வீட்டில் குதிரைகள் உள்ளன. அவர்கள் காலத்தில் இங்கே விளையும் காய்கறிகள், தானியங்களை குதிரை வண்டியில் வைத்து ஆர்.எஸ்.புரம், சாய்பாபா காலனிக்குக் கொண்டு சென்று விற்பார்கள். இப்போது அதற்காகப் பயன்படுத்தாவிட்டாலும் 2 குதிரைகளையும், வண்டியையும் வைத்திருக்கிறோம்'' என்றார்.

கோவையின் பந்தயச் சாலையும் குதிரை வண்டி கோர்ட்டும்
''பெரும்பாலும் பெண் குதிரைகளும், அடிபட்டு காயமடைந்த குதிரைகளும்தான் தெருவில் விடப்படுகின்றன. அவற்றை மாநகராட்சி அதிகாரிகள் பிடித்து, யாருடையவை என்று விசாரித்தாலும் தங்களுடையது என்று உரிமை கோரி யாரும் முன் வருவதில்லை.'' என்கிறார் சுரேந்தர்.
மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டி கோவை இருப்பதால், ஆங்கிலேயர் காலத்திலேயே இங்கு குதிரைகள் அதிகளவில் பயன்படுத்தப்பட்டதாகக் கூறுகிறார்கள் வரலாற்று ஆய்வாளர்கள்.
கோவையின் இதயப் பகுதியாகவுள்ள பந்தயச் சாலை (ரேஸ் கோர்ஸ்) பகுதியில், தற்போது தினமும் மக்கள் நடைபயிற்சி மேற்கொள்ளும் 2.6 கி.மீ. நீள்வட்டப் பாதையில்தான் ஆங்கிலேயர்கள் குதிரையேற்றப் பயிற்சி மேற்கொண்டதாகக் கூறுகிறார் வரலாற்று ஆய்வாளர் சி.ஆர்.இளங்கோவன்.
கோவையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு அருகில் குதிரை வண்டி கோர்ட் என்ற வளாகம் உள்ளது. மொத்தம் 2.6 ஏக்கர் பரப்பளவில் இருக்கும் இந்த வளாகத்தில்தான், ஆங்கிலேயர் காலத்தில் குதிரை வண்டி நீதிமன்றம் இயங்கி வந்துள்ளது. தற்போது அந்தக் கட்டடம், பழமை மாறாமல் ரூ.9 கோடி மதிப்பில் புதுப்பிக்கப்பட்டு வருகிறது.

இந்த குதிரை வண்டி கோர்ட் பற்றி விளக்கிய இளங்கோவன், ''அந்தக் காலத்தில் கழுத்துப் புண் இன்ஸ்பெக்டர் என்ற அலுவலர் ஒருவர் இருப்பார். மாட்டு வண்டிகளை அவர்கள் நிறுத்திச் சோதனையிடுவார்கள். மாடுகளின் கழுத்தில் புண் இருந்தால் அதற்கு நாலணா, எட்டணா என்று அபராதம் விதிக்கப்படும். அது இந்த நீதிமன்றத்தில்தான் வசூலிக்கப்படும். பெரிய நீதிமன்றம் செல்லும் நீதிபதி காரிலும், இங்கே வரும் நீதிபதி குதிரை வண்டியிலும் வருவார்கள். அதனால்தான் இந்தப் பெயர் வந்ததாக வரலாறு உண்டு'' என்று விளக்கினார்.
கோவை மாநகராட்சி கூறுவது என்ன?
கோவையில் சாலைகளில் திரியும் மாடுகளைப் பிடித்துக் கொண்டு அபராதம் விதிப்பது வழக்கமாக நடக்கிறது. ஆனால் குதிரைகள் பிடிக்கப்படுவதில்லை.
அதுகுறித்து பிபிசி தமிழிடம் பேசிய கோவை மாநகராட்சி ஆணையாளர் சிவகுரு பிரபாகரன், ''இப்போதுதான் இதுதொடர்பான புகார்கள் வந்துள்ளன. கண்டிப்பாக நகருக்குள் சாலைகளில் திரியும் குதிரைகளை அப்புறப்படுத்துவதற்கு உரிய அறிவிப்பு வெளியிடப்படும். உரிய காலத்திற்குள் அவற்றை யாரும் பிடித்துச் செல்லாவிட்டால் அவற்றைப் பிடிப்பதற்கும் நிச்சயம் நடவடிக்கை எடுக்கப்படும்'' என்றார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு












