நியூயார்க் மேயராக மம்தானி தேர்வு பற்றி அரபு மற்றும் இஸ்ரேலிய ஊடகங்கள் கூறுவது என்ன?

பட மூலாதாரம், EPA/Shutterstock
நியூயார்க் நகர மேயர் தேர்தலில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த, முஸ்லிமான ஸோஹ்ரான் மம்தானி வெற்றி பெற்றுள்ளார்.
மம்தானியின் இந்த வெற்றி அரபு மற்றும் இஸ்ரேலிய ஊடகங்களில் பரவலாக விவாதிக்கப்பட்டு வருகிறது.
ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த ஸோஹ்ரான் மம்தானியின் வெற்றியை 'வரலாற்றுச் சிறப்புமிக்கது மற்றும் அசாதாரணமானது' என்று அரபு ஊடகங்கள் கூறுகின்றன.
நியூயார்க் நகரத்தின் 'முதல் முஸ்லிம் மேயர்' என்று அவரது வெற்றி அரபு ஊடகங்களில் குறிப்பிடப்படுகிறது.
பல சேனல்கள் மம்தானி ஆதரவாளர்களின் கொண்டாட்டங்களை மையப்படுத்தி, அதை ஒரு சிறப்பான வெற்றி என்று வர்ணிக்கின்றன.
"இஸ்லாமிய மதத்தைச் சேர்ந்த, அதேசமயம் கம்யூனிஸ்டாக அறியப்படும் மம்தானி, நியூயார்க்கில் சரித்திரம் படைத்துள்ளார்" என்று கத்தாரின் அல்-ஜசீரா வலைத்தளம் தெரிவித்தது.
அல்-ஜசீரா சேனல், மம்தானியின் வெற்றியை அவரது ஆதரவாளர்கள் கொண்டாடும் காட்சிகளை ஒளிபரப்பி, "இது ஒரு அசாதாரணமான மற்றும் வரலாற்று சிறப்புமிக்க தேர்தல்" என்று விவரித்தது.
அந்த சேனலின் செய்தியாளர், "இந்தத் தேர்தலில் 2 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் வாக்களித்துள்ளனர். இது நியூயார்க் மேயர் தேர்தலில் கடந்த பல்லாண்டுகளில் இல்லாத அளவுக்கு மிகப்பெரிய அளவிலான வாக்குப்பதிவு ஆகும்." என்று கூறினார்.
அல்-அரேபியா சேனல் வாக்குப்பதிவை நேரடியாக ஒளிபரப்பியது.

பட மூலாதாரம், Getty Images
அல்-அரேபியா சேனலின் கூற்றுப்படி, சுமார் 60 சதவீத வாக்காளர்கள் இந்தத் தேர்தலில் வாக்களித்துள்ளனர், இது நியூயார்க் நகரத்தைப் பொருத்தவரை குறிப்பிடத்தக்க எண்ணிக்கையாகும்.
அந்த சேனல், "மம்தானி இளைஞர்களை அதிகளவில் ஈர்த்துள்ளார். அவர்கள் பெரும் எண்ணிக்கையில் வாக்களித்துள்ளனர்" என்று கூறியது.
லண்டனைச் சேர்ந்த அல்-குட்ஸ் அல்-அரபி வலைத்தளம், மம்தானியின் வெற்றி "நியூயார்க் நகரத்தில், முற்போக்கு கொள்கைகளுக்கான புதிய அத்தியாயத்திற்கு வழிவகுக்கும்" என்று தெரிவித்தது.
டிரம்புடனான முரண்பாடு

பட மூலாதாரம், Getty Images
சௌதி அரேபியாவின், அல்-அரேபியா தொலைக்காட்சி அதிகாலை 4 மணி முதல் தனது ஒளிபரப்பில் இந்தச் செய்தியை பிரதானமாக காட்டத் தொடங்கியது. மம்தானிக்கும் டிரம்பிற்கும் இடையிலான 'வார்த்தைப் போர்' பற்றியும் அது குறிப்பிட்டது.
அல்-அரேபியா மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸின் ஸ்கை நியூஸ் அரேபியா வலைத்தளங்கள் மம்தானியை "டிரம்பின் தீவிர எதிர்ப்பாளர்" என்று விவரித்தன.
"நாட்டிற்கு துரோகம் இழைத்த டொனால்ட் டிரம்பை எப்படி தோற்கடிப்பது என்பதற்கு யாராவது உதாரணம் காட்ட வேண்டுமென்றால், நியூயார்க் நகரத்தை தான் காட்ட வேண்டும்" என்று மம்தானி தனது உரையில் கூறியதாக, ஸ்கை நியூஸ் அரேபியா மேற்கோள் காட்டியது.
மம்தானி தனது உரையில் டிரம்பிற்கு 'சவால் விடுத்தார்' என்றும், அவரைத் 'விமர்சித்துப் பேசினார்' என்றும் அல்-ஜசீரா தெரிவித்துள்ளது.
ரஷ்யாவின் ஆர்டி அரபிக் மற்றும் இரானின் அல்-ஆலம் தொலைக்காட்சியும் மம்தானி தனது உரையில் டிரம்ப் மற்றும் இஸ்ரேலை விமர்சித்ததை எடுத்துக்காட்டின.
ஆர்டி அரபிக் மம்தானியை, "நெதன்யாகுவைக் கைது செய்யக் கோரியவர் என்றும், இஸ்ரேல் மீதான டிரம்பின் கொள்கைகளை விமர்சித்தவர்" என்றும் விவரித்தது.
"சமீபத்திய அமெரிக்க வரலாற்றில் மிகப்பெரிய அரசியல் அதிர்ச்சி ஒன்றை மம்தானி தந்துள்ளார்" என்று அமெரிக்க செனட்டர் பெர்னி சாண்டர்ஸ் கூறியதை மேற்கோள் காட்டி எகிப்தின் அல்-காட் தொலைக்காட்சி செய்தி வெளியிட்டுள்ளது.
சமூக ஊடக தளமான ட்ரூத் சோஷியலில் டிரம்ப் வெளியிட்ட அறிக்கையையும் சாண்டர்ஸ் குறிப்பிட்டார். அதில், "குடியரசுக் கட்சியினரின் தோல்விக்கு இரண்டு காரணங்கள் இருப்பதாக டிரம்ப் கூறியுள்ளார். அதில் முதலாவதாக, அவர்களின் பெயர்கள் வாக்குச்சீட்டில் இல்லை, இரண்டாவதாக, அரசாங்க முடக்கம் (Shutdown)."
'அமெரிக்காவில் சியோனிஸ்டுகளின் தோல்வி'

பட மூலாதாரம், Getty Images
அரபு நாடுகளில் உள்ள சமூக ஊடக பயனர்கள் மம்தானியின் வெற்றியை அவரது இஸ்ரேல் எதிர்ப்பு மற்றும் பாலத்தீன ஆதரவு நிலைப்பாட்டின் வெற்றியாகப் பார்க்கின்றனர்.
'ப்ரோ முஸ்லிம் பிரதர்ஹுட்' ஆதரவு பத்திரிகையாளர் ஹம்சா சவ்பா தனது ஃபேஸ்புக் பக்கத்தில், "மம்தானியின் வெற்றி வெள்ளை மாளிகையில் 8 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தை போன்ற ஒரு தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இது அமெரிக்க அரசியலின் பழைய, வேரூன்றிய விதிகளை அசைத்துப் பார்க்கும்." என்று பதிவிட்டுள்ளார்.
அல்-வசத் கட்சித் தலைவர் அபு அலீலா மடி, மம்தானியின் வெற்றி "வரலாற்றுச் சிறப்பு வாய்ந்தது" என்றும், "அவர் இஸ்ரேலிய லாபிக்கு சவால் விடுகிறார்" என்றும் கூறினார்.
பாலத்தீன-அமெரிக்க எழுத்தாளர் சமர் ஜரா, "மம்தானி உலகின் மிகவும் பிரபலமான நகரமான நியூயார்க்கில் வெற்றி பெற்றுள்ளார். சியோனிஸ்டுகள் அவருக்கு எதிராக இருந்த போதிலும் இந்த வெற்றி கிடைத்துள்ளது" என்று கூறினார்.
மம்தானியின் வெற்றி 'இஸ்ரேலிய லாபிக்கு ஒரு மாபெரும் தோல்வி' என்று அல்-ஜசீரா பத்திரிகையாளர் அகமது மன்சூர் கூறியுள்ளார்.
இஸ்ரேலிய ஊடகங்கள் கூறுவது என்ன?

பட மூலாதாரம், CHANNEL 12
மறுபுறம், இஸ்ரேலிய ஊடகங்கள் ஸோஹ்ரான் மம்தானியின் முஸ்லிம் அடையாளத்தையும், அவரது 'இஸ்ரேலிய எதிர்ப்புக் கொள்கைகளையும்' குறிப்பிட்டன.
ஒரு வலதுசாரி சேனல் அவரை 'பாலத்தீன ஆதரவாளர்' என்று குறிப்பிட்டது.
'இஸ்ரேல் ஹயோம்' செய்தித்தாள் மம்தானியை மிக முக்கியமான சியோனிச எதிர்ப்பாளர்களில் ஒருவர் என்று வர்ணித்தது.
பெரும்பாலான இஸ்ரேலிய செய்தி சேனல்கள் மம்தானியின் முஸ்லிம் அடையாளத்தை குறிப்பிட்டன.
'பாலத்தீன ஆதரவாளர் மம்தானி தனது வெற்றி உரையை அரபிக் மொழியில் தொடங்குகிறார்' என்று 'சேனல் 14'-இன் தலைப்புச் செய்தியில் கூறப்பட்டுள்ளது.
"கடந்த 20 ஆண்டுகளில் அமெரிக்காவில் 'இஸ்ரேல் மீதான வெறுப்பு' அதிகரித்துள்ளதாகவும், அதன் விளைவாகவே மம்தானி வெற்றி பெற்றதாகவும்" அந்த சேனல் தனது நேரடி ஒளிபரப்பில் கூறியது.
நியூயார்க்கின் யூத வாக்காளர்களில் 16 முதல் 30 சதவீதம் பேர் மம்தானிக்கு வாக்களித்ததாக 'சேனல் 12' செய்தியாளர் ஒருவர் தெரிவித்தார். இது அந்த சேனலின் ஸ்டுடியோவில் இருந்த குழு உறுப்பினர்களை ஆச்சரியப்படுத்தியது.
ஒரு தொகுப்பாளர், "யூதர்கள் இப்போது நியூயார்க்கை விட்டு வெளியேறும் நிலை வருமா?" என்று கேட்டார்.
'சேனல் 12' தனது காலை செய்தி ஒளிபரப்பில், ட்ரூத் சோஷியல் தளத்தில் டொனால்ட் டிரம்ப் வெளியிட்ட பதிவை குறிப்பிட்டுக் காட்டியது.
அதில், "ஸோஹ்ரான் மம்தானிக்கு வாக்களிக்கும் எந்தவொரு யூதரும் யூத எதிர்ப்பாளராகவும் முட்டாளாகவும் இருப்பார்" என்று எழுதப்பட்டிருந்தது.
'பாலத்தீன ஆதரவு மற்றும் சியோனிச எதிர்ப்பு'

பட மூலாதாரம், Getty Images
மம்தானியின் வெற்றியைத் தொடர்ந்து, நியூயார்க்கில் உள்ள அவரது பிரசார தலைமையகத்திற்கு வெளியே நூற்றுக்கணக்கான ஆதரவாளர்கள் கூடி, 'சுதந்திர பாலத்தீனம்' என்று கோஷமிட்டனர் என்று பாதுகாப்பு செய்தித்தாளான மாரிவ் செய்தி வெளியிட்டுள்ளது.
மம்தானி இஸ்ரேலை வெளிப்படையாக எதிர்க்கிறார் என்றும், 'இஸ்ரேலை ஒரு யூத நாடாக தான் கருதவில்லை என்றும், பாலத்தீனர்களின் உரிமையை ஆதரிப்பதாகவும்' அவர் முன்னர் கூறியதாக மாரிவ் தெரிவித்துள்ளது.
'இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு நியூயார்க்கிற்கு வரும்போது அவரைக் கைது செய்வேன்' என்று அவர் கூறியிருந்தார்.
மாரிவ் செய்தித்தாள் மம்தானியின் 2023-ஆம் ஆண்டு கருத்தை மேற்கோள் காட்டி, அது ஏறக்குறைய யூத-விரோதத்தை ஒட்டியே இருந்தது என்று கூறியது. 2023இல் மம்தானி, "நியூயார்க் காவல்துறை மக்களை வன்முறை மூலம் அடக்குகிறது, அது இஸ்ரேலிய ராணுவத்தால் கட்டுப்படுத்தப்படுகிறது" என்று கூறியிருந்தார்.
பல இஸ்ரேலிய ஊடகங்களும் மம்தானியின் "இன்டிஃபதாவை (Intifada- அரபு மொழியில் 'எழுச்சி') உலகமயமாக்க வேண்டும்" என்ற முழக்கத்தைக் குறிப்பிட்டன.
பாலத்தீன ஆதரவாளர்கள் இதை பாலத்தீனத்துடன் உலகம் துணை நிற்பதற்கான அழைப்பு என்று விவரிக்கின்றனர்.
ஆனால் பலர் அதை யூதர்களுக்கு எதிரான வன்முறையைத் தூண்டும் ஒரு முழக்கமாகக் கருதுகின்றனர்.
"இந்த மனிதர் தனது முழு தேர்தல் பிரசாரத்தையும் இஸ்ரேல் மீதான கடுமையான விமர்சனத்திலும், 'இன்டிஃபதாவை உலகமயமாக்க வேண்டும்' போன்ற முழக்கங்களை பரவலாக்குவதிலும் கவனம் செலுத்தினார்" என்று Ynet வலைத்தளம் குறிப்பிட்டுள்ளது.
மம்தானியின் வெற்றி 'நியூயார்க்கின் அரசியல் மற்றும் பொருளாதார அமைதியின்மையைக் குறிக்கிறது' என்றும் 'இஸ்ரேலுக்கு ஒரு எச்சரிக்கை மணி' என்றும் Ynet விவரித்துள்ளது.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு












