இலங்கை தேர்தல்: முஸ்லிம் கட்சிகளின் தேர்தல் அறிக்கை?
இலங்கை நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கிவரும் நிலையில், பெரும்பாலான கட்சிகள் தங்கள் தேர்தல் அறிக்கைகளை வெளியிட்டுள்ள நிலையில், முஸ்லிம் கட்சிகள் தங்கள் தேர்தல் அறிக்கைளை வெளியிடாடது ஏன் என்ற கேள்வி எழுந்துள்ளது.

தேர்தலுக்கு இன்னமும் 18 நாட்களே உள்ள நிலையில் அக் கட்சிகளிடமிருந்து தேர்தல் அறிக்கைகள் இதுவரை வெளிவராமை குறித்து விமர்சனங்களும் குற்றச்சாட்டுக்களும் எழுந்துள்ளன.
"முஸ்லிம் அரசியல் கட்சிகளிடம் அரசியல் ரீதியான கொள்கைகள் இருந்தால்தானே தேர்தல் அறிக்கையை எதிர்பார்க்க முடியும்?" என்கிறார் சமூக ஆர்வலரான எஸ்.எல்.எம். ஹனிபா.
பிரதான முஸ்லிம் அரசியல் கட்சிகளான ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஆகிய இரு கட்சிகளும் ஐக்கிய தேசிய கட்சி தலைமையிலான ஐக்கிய தேசிய முன்னணியின் கூட்டணிக் கட்சிகளாக இருந்து வருகின்றன.
சில மாவட்டங்களில் ஐ.தே.முன்னணியுடன் இணைந்து தமது வேட்பாளர்களை இந்த தேர்தலில் நிறுத்தியுள்ளபோதிலும் ஒரிரு மாவட்டங்களில் இக்கட்சிகள் தனித்தும் போட்டியிடுகின்றன.
"இத்தகைய நிலைப்பாடு அவர்களின் இரட்டை வேடத்தை காட்டுகிறது" என்கிறார் முன்னாள் சேருவில உள்ளுராட்சி சபையின் தலைவரான ஏ.கே.எம். பௌஸி.
ஐ.தே. முன்னணியின் தேர்தல் அறிக்கையில் தங்களது யோசனைகளும் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளதால் தங்களுக்கு என தனியான தேர்தல் அறிக்கை தேவை இல்லை என இந்த முஸ்லிம் கட்சிகள் கருதுகின்றன.
ஆனால், இது முஸ்லிம் கட்சிகளின் தனித்துவத்தை இழப்பதாக அமையும் என்கிறார் புத்தளத்தை சேர்ந்த பாத்திமா ஷெரிக்கா.
தமது கட்சியினால் முன்வைக்கப்பட்டுள்ள முஸ்லிம்கள் தொடர்பான அநேகமான யோசனைகள் ஐ.தே. முன்னணியின் தேர்தல் அறிக்கையில் உள்வாங்கப்பட்டுள்ளதாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கூறுகிறது.
இதன் காரணமாக தமது கட்சி தனியான தேர்தல் அறிக்கை வெளியிட வேண்டிய தேவை இருப்பதாகத் தெரியவில்லை என அக் கட்சியின் செயலாளரான வை.எல்.எஸ். ஹமீத் தெரிவிக்கிறார்.
இதனால் முஸ்லிம் கட்சியின் தனித்துவம் இழக்கப்படும் என்ற விமர்சனத்தையும் அவர் நிராகரித்துள்ளார்.












