இலங்கை ஜனாதிபதி பதவி விலக தயார்: பிரதமர் அலுவலகம்; சபாநாயகர் மூலமே அறிவிப்போம்: ஜனாதிபதி செயலகம்

ராஜபக்ஷ

பட மூலாதாரம், Getty Images

தான் முன்பு அறிவித்ததைப் போன்று பதவி விலகத் தயார் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கு அறிவித்துள்ளார் என பிரதமர் ஊடகப் பிரிவு இன்று (ஜூலை 11) காலை தெரிவித்தது.

ஆனால், அதே நேரம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ வெளியிடும் எல்லாத் தகவல்களும் சபாநாயகர் யாப்பா அபேவர்த்தன ஊடகவே வெளியிடப்படும் என்று ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இன்று காலை பிரதமர் ஊடகப் பிரிவு வெளியிட்ட செய்தியோடு முரண்படும் நோக்கிலேயே ஜனாதிபதி செயலகம் தகவல் வெளியிட்டுள்ளதோ என்று எண்ணத் தோன்றும் வகையில் இது அமைந்துள்ளது.

கொழும்பில் கடந்த 9ம் தேதி நடந்த போராட்டத்துக்குப் பின்னர், "ஜனாதிபதி எதிர்வரும் 13ம் தேதி பதவி விலகத் தயார் என தனக்கு அறிவித்ததாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன" தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

'அனைத்து அமைச்சர்களும் பதவி விலகத் தயார்'

இலங்கை பழைய நாடாளுமன்றக் கட்டடம்.

பட மூலாதாரம், Craig Pershouse/Getty

படக்குறிப்பு, இலங்கை பழைய நாடாளுமன்றக் கட்டடம்.

சர்வகட்சி அரசாங்கத்தை அமைப்பதற்கு வழிவகை ஏற்படுத்தும் நோக்கில், அனைத்து அமைச்சர்களும் பதவி விலக தீர்மானித்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் விஜேதாஸ ராஜபக்ஷ தெரிவிக்கின்றார்.

பிரதமர் அலுவலகத்தில் இன்று (ஜூலை 11) இடம்பெற்ற கலந்துரையாடலை அடுத்து, ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

எதிர்வரும் 13ம் தேதி தனது பதவியை ராஜினாமா செய்ய தயார் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அறிவித்துள்ள நிலையில், சர்வகட்சி அரசாங்கமொன்றை அமைக்க வேண்டும் என பல தரப்பினரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

''புதிதாக அமைக்கப்படவுள்ள சர்வகட்சி அரசாங்கத்தற்கு இடமளிக்கும் நோக்கில், நாம் அனைவரும் பதவிகளை ராஜினாமா செய்கிறோம். அதேபோன்று, புதிதாக உருவாக்கப்படவுள்ள சர்வகட்சி அரசாங்கத்திற்கு நாம் ஆதரவை வழங்குவோம். ஜனாதிபதி அழைப்பு விடுக்காமல், அதிகாரபூர்வமாக அமைச்சரவை கூட இயலாது. இது நாம் சுயாதீனமாக ஒன்று கூடி, நடத்திய கலந்துரையாடல். நாடாளுமன்றத்தினால் உருவாக்கப்படவுள்ள சர்வகட்சி அரசாங்கம் எவ்வாறு அமைக்கப்பட வேண்டும், அதன் தன்மை ஆகியன குறித்து, இன்று மாலை நடைபெறவுள்ள அனைத்து கட்சி தலைவர்கள் கூட்டத்தில் தீர்மானிக்கப்படும்" என நாடாளுமன்ற உறுப்பினர் விஜேதாஸ ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

ராணுவம் மறுப்பு

ஜனாதிபதி மாளிகையை அண்மித்து நேற்று ராணுவ உறுப்பினர்கள் கடமைகளுக்காக ஈடுபடுத்தப்பட்டிருந்தார்கள்.

போராட்டகாரர்கள் மீது தாக்குதல் நடத்தும் நோக்கிலேயே, ராணுவ உறுப்பினர்கள் கடமைகளுக்காக ஈடுபடுத்தப்பட்டதாக சமூக வலைத் தளங்களில் செய்திகள் பகிரப்பட்டன.

எனினும், இந்த தகவல் உண்மைக்கு புறம்பானது என ராணுவம் நேற்றிரவு அறிவித்திருந்தது.

இவ்வாறான பின்னணியிலேயே, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, தனது ராஜினாமா தொடர்பில், பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கு அறிவித்துள்ளார்.

தான் ஜூலை மாதம் 13ம் தேதி பதவி விலகுவதாக கோட்டாபய ராஜபக்ஷ, அறிவித்ததாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்திருந்தார்.

ஜனாதிபதியை பதவி விலக வலியுறுத்தி, கொழும்பு ஜனாதிபதி மாளிகையை முற்றுகையிட்டு, கடந்த 9ம் தேதி லட்சக்கணக்கான மக்கள் போராட்டத்தை நடத்தி, ஜனாதிபதி மாளிகை மற்றும் ஜனாதிபதி செயலகத்தை தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இலங்கையில் என்ன நடக்கிறது?

இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டு மக்கள் கடும் சிரமத்தை எதிர்கொண்டு வருகின்றனர். எரிபொருள் வாங்க மிக நீண்ட வரிசையில் அவர்கள் காத்து கிடக்கும் சூழல் ஏற்பட்டது.

Sri lanka

இதனால் இலங்கையில் 100 நாட்களுக்கும் மேலாக ஜனாதிபதி பதவி விலக வேண்டும் என்ற போராட்டங்கள் நடைபெற்று வந்தன. பின்பு அந்த போராட்டம் வன்முறையாக மாறியது. அதன்பின் நாட்டின் பிரதமர் பதவியிலிருந்து மஹிந்த ராஜபக்ஷ விலகினார்.

நாட்டின் முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க பிரமராக பதவியேற்றார். நாட்டை பொருளாதார நெருக்கடியில் இருந்து மீட்க பல்வேறு நடவடிக்கைகளை தான் மேற்கொண்டு வருவதாக அவர் தெரிவித்தார்.

இந்நிலையில் மூன்று தினங்களுக்கு முன்பு நாட்டின் அதிபர் பதவி விலக வேண்டும் என்று கோரும் போராட்டம் மீண்டும் தீவிரமடையவுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

நேற்றைய முன் தினம் போராட்டக்காரர்கள் காவல்துறையின் பாதுகாப்பை மீறி ஜனாதிபதியின் இல்லத்திற்குள் நுழைந்தனர்.

இதுகுறித்த பல்வேறு புகைப்படங்களும் வீடியோக்களும் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டன.

ஜனாதிபதி மாளிகையில் உள்ள நீச்சல் குளத்தில் மக்கள் குளித்து விளையாடினர். சமையலறையில் உள்ள உணவுகளை உண்டனர். தொடர்ந்து இரண்டாவது நாளாக இன்றும் மக்கள் ஜனாதிபதி மாளிகையை பார்வையிட்டு வருகின்றனர்.

இதற்கிடையே பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் வீட்டுக்கு தீ வைக்கப்பட்டது. அதுகுறித்து சில சந்தேக நபர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.

அந்த வீட்டில் இருந்த புத்தகங்கள் எரிந்தது குறித்து ரணில் பெரும் வருத்தம் தெரிவித்திருந்தார்.

YouTube பதிவை கடந்து செல்ல
Google YouTube பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் Google YouTube வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Google YouTube குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

YouTube பதிவின் முடிவு

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: